தமிழ் நட்பு வலைப்பூ !

என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

(09) சிங்காரவேலு (திரு) மு - கருப்பம்புலம் .

 

கருப்பம்புலம் தெற்கு திரு.மு.சிங்காரவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு !

 

தோற்றம்:

 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், அகத்தியன் பள்ளியை அடுத்த பயத்தவரன்காடு என்னும் ரில்  வாழ்ந்து வந்த திரு.K.P.முருகையாத் தேவர்திருமதி.செல்லமணி அம்மையார் இணையரின் இரண்டாவது புதல்வராகத் தோன்றியவர் திரு.   மு.   சிங்காரவேலு.  1947 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 – ஆம் நாள்   (விய ஆண்டு, மாசி மாதம், 3 – ஆம் நாள் சனிக்கிழமை) இவர் பிறந்தார் !

 

பெற்றோர்:

 

கடிநெல்வயல் கீழக்காட்டில்  வாழ்ந்து வந்தவர்கள் திரு..பிச்சையாத் தேவர் திருமதி சீதா இணையர். பின்னாளில் இவர்கள் பயத்தவரன் காட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.  இவர்களது தலைமகனான திரு.முருகையன்  தொடக்கத்தில் காவல் துறையில் பணி புரிந்து, பின்பு இந்தப் பணியை விட்டு விலகி வேதாரணியம் தேவஸ்தான அலுவலகத்தில் பணிபுரியலானார். அடுத்து அரசுப் பணி வாய்ப்பு வந்த போது அதை ஏற்று வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளி அலுவலகத்தில் எழுத்தராக (CLERK) பணியில் சேர்ந்தார். அரசுப் பணி ஏற்ற பிறகு இவர் கருப்பம்புலம் தெற்குக் காட்டைச் சேர்ந்த திரு. கலிதீர்த்தா தேவர் அவர்களின் புதல்வி செல்வி செல்லமணியைத் திருமணம் செய்து கொண்டார் !

 

பிள்ளைகள்:

 

திரு.முருகையாத் தேவர்திருமதி செல்லமணி இணையருக்கு நான்கு ஆண் மகவும், இரண்டு பெண் மகவும் பிறந்தன. இவர்களில் மூத்தபிள்ளை  பெயர்  திரு.ருணாநிதி.  இரண்டாவது பிள்ளை திரு.சிங்காரவேலு; மூன்றாவது பிள்ளை திரு.சுந்தரமூர்த்தி; நான்காவது பிள்ளை திரு.குமரப்பா ! இரண்டு பெண் மக்களில் மூத்தவர் பெயர் மல்லிகா; இளையவர் பெயர் மலர்விழி !

 

தொடக்கக் கல்வி:


1952 – ஆம் ஆண்டு விசய தசமி நாளன்று கைகளில் ஓலைச் சுவடிகளுடன் புத்தாடை மணம் கமழ கருப்பம்புலம் நடுக்காட்டிலுள்ள திரு.P.V.தேவர் தொடக்கப்பள்ளியில் பெயர்ப் பதிவு செய்யப்பெற்று திரு.சிங்காரவேலு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார். தாய்வழிப் பெரியப்பா வீட்டிற்கு அருகிலேயே பள்ளிக்கூடம் இருந்தமையால், பள்ளி செல்வதற்கும் படிப்பில் முன்னணி பெறுவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தது !

 

பள்ளிக்கல்வி:

 

எட்டாம் வகுப்பு வரைத் தன் கல்வியுலாவைக் கருப்பம்புலத்தில் தொடர்ந்த திரு சிங்காரவேலு, சரியான ஆசிரியர் இன்மையால் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாமற் போயிற்று. ஆகையால் அவரது தந்தை, திரு.சிங்காரவேலுவை, வேதாரணியத்தில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து அவரது படிப்பைத் தொடரச் செய்தார்.  8 – ஆம் வகுப்பிலிருந்து 11 – ஆம் வகுப்பு வரை வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து தனது படிப்பை நிறைவு செய்த அவர், பள்ளி இறுதி வகுப்பான 11 –ஆம் வகுப்புத் தேர்வை 1965 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றார். அந்தக் காலத்தில் பள்ளிக் கல்வியானது 11 ஆண்டுப் படிப்பு உடையதாக இருந்தது. 11 ஆண்டுகள் படித்துத் தேர்ச்சி பெறுவோர்க்கு பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி (S.S.L.C. PASS) என்று சான்றிதழ் வழங்கப்படும். SECONDARY SCHOOL LEAVING CERTIFICATE  என்பதன் சுருக்கமே S.S,L.C என்பது !


கல்லூரிக் கல்வி:


திரு. சிங்காரவேலு இளமையிலிருந்தே கருப்பம்புலம் தெற்குக் காட்டிலிருந்த தாய்வழித் தாத்தா திரு.கலிதீர்த்தா தேவருக்கு வளர்ப்புப் பிள்ளை போலவே வாழ்ந்து வந்தார். வேதாரணியத்தில் பள்ளியிறுதி வகுப்புப் படிப்பை நிறைவு செய்ததும், தன் பெயரனைக் கல்லூரியில் படிக்கவைக்க வேண்டும் என்று அவரது தாத்தா ஆசைப்பட்டார் !

 

வரது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தை திரு.K.P.முருகையாத் தேவர் அவர்கள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (PRE-UNIVERSITY COURSE) திரு. சிங்காரவேலுவைச் சேர்த்துவிட்டார்.  கல்லூரிக்கான படிப்புக் கட்டணம், விடுதிக்கான கட்டண முன்பணம்  ஆகியவற்றைச் செலுத்தி, மகனைக் கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார் !

 

கல்லூரிப் படிப்பு இடைநிறுத்தம்:

 

திரு.சிங்காரவேலு 10 நாள் அளவுக்குத் தான் கல்லூரிக்குச் சென்றிருப்பார்; அந்த நிலையில் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாமல் படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். பெயரனைக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்னும் தாத்தாவின் கனவு அத்துடன் கலைந்து போயிற்று !

 

தாத்தாவும் பெயரனும்:

 

கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிய திரு. சிங்காரவேலு கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தன் தாத்தாவுடனேயே அடிக்கடித் தங்கத் தொடங்கினார்.  அங்கிருந்த வேளாண் நிலங்களில் சாகுபடி வேலைகளையும், புகையிலைக் கொல்லையில் புகையிலை மற்றும் மிளகாய் சாகுபடியையும் கவனிப்பதில் தாத்தாவுக்கு உதவி செய்யலானார்.!

 

பெற்றோர் இடப்பெயர்வு:

 

திரு.சிங்காரவேலுவின் தந்தை வழித் தாத்தா திரு.பிச்சையாத் தேவர் தன் மனைவி மக்களுடன் தொடக்கத்தில் கடிநெல்வயலில் குடியிருந்ததாக முன்பத்தி ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அவருக்கு இரண்டு ஆண் மகவும் இரண்டு பெண் மகவும் பிறந்தன. அதன் பிறகே அவர்கள் அகத்தியன் பள்ளியை அடுத்த பயத்தவரன் காட்டில் குடியேறியதாக நினைக்கிறேன். அவரது இரு பிள்ளைகளில் மூத்தவரான திரு.முருகையாத் தேவர் திருமணம் செய்து கொண்டு பயத்த வரன் காட்டிலும், இளையவரான திரு.கந்தசாமி தகட்டூர், ஆதியன் காட்டிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர் !

 

பெண் மக்களில் மூத்தவரான செல்வி முல்லையம்பாள், தகட்டூர் ஆதியன்காடு ஆசிரியர் திரு.வெங்கடாசலத் தேவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். இளையவரான செல்வி பஞ்சவர்ணம் கடிநெல்வயல் திரு.சீ.சண்முக தேவரின் வாழ்க்கைத் துணைவியானார் !

 

கருணா ஆர்ட்ஸ் திரு.கருணாநிதி:


திரு.சிங்காரவேலு 1965 – ஆம் ஆண்டு தன் படிப்பை நிறுத்திய பிறகு கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தன் தாத்தாவுடன் அடிக்கடித் தங்கி வேளாண் பணிகளைக் கவனித்து வந்ததை முன்பத்தியொன்றில் சொல்லியிருக்கிறேன். அவரது அண்ணன் திரு.கருணாநிதிகருணா ஆர்ட்ஸ்என்னும் பெயரில் வேதாரணியத்தில் தனியாக வரைகலைத் தொழில் செய்து வந்தார். அவரது கைவிரல்களில் ஓவிய வரைகலையும், ஈர்ம (PAINTING) வரைகலையும் வாடகையின்றிக் குடியிருந்து வந்தன. ஃதன்றி சிறு அளவில் விளம்பரப் பலகைகள் தயாரித்து நிறுவும் ஒப்பந்தப் பணிகளையும் அவர் ஏற்று நடத்தி வந்தார்!

 

திருமண ஆயத்தப் பணி:


திரு.கருணாநிதி, திரு.சிங்காரவேலு இருவருக்கும் திருமணம் செய்து வைத்திட அவர்கள் தந்தை முயன்று வந்தார். திரு.கருணாநிதிக்கு, கருப்பம்புலம் திரு.சந்திரசேகரன் என்பவரது மகள் செல்வி இராஜத்தைப் பெண் கேட்டுச் சென்று, திருமணமும் முடிவாகியது. இந்த நிலையில் திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நான் பணிபுரிந்து வந்த காலத்தில், திருவெறும்பூர்  இருப்பூர்தி நிலையம் அருகில் குடியிருந்து வந்த என் வீட்டிற்கு திரு முருகையாத் தேவரும் அவரது மருமகன் திரு. சதாசிவ தேவரும் ஒருநாள் வருகை தந்து, திரு.சிங்காரவேலுக்கு என் தங்கை செல்வி சுமதியைப் பெண் கேட்டனர் !

 

திருமணம் முடிவாகியது:


முன்னறிவிப்பு ஏதுமின்றித் திடீரென்று வருகை தந்து பெண் கேட்டதால் நான் திணறிப் போனேன். இது நிகழ்ந்தது 1974 – ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். வீட்டில் அம்மா, தங்கை, என் மனைவி மூவரையும் கலந்து பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று தெரிவித்து அவர்களை வழியனுப்பி வைத்தேன். பின்பு இரண்டொரு நாளில் மூவருடனும் கலந்து பேசி, திருமணத்திற்கு என் இசைவைக் கடிதம் மூலம் தெரிவித்தேன். திருமண நிச்சயதார்த்தம் 1974 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 – ஆம் நாள், நெடும்பலத்தில் என் மாமா வீட்டில் இனிது நடைபெற்றது !

 

சிங்காரவேலு – சுமதி திருமணம்:

 

நிச்சயதார்த்தம் நடந்து அடுத்த பத்தாம் நாள், அதாவது 1974-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒன்றாம் தேதி திரு.சிங்காரவேலுசெல்வி சுமதி திருமணம் கருப்பம்புலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதே நாளில் திரு.சிங்காரவேலுவின் அண்ணன் திரு.மு.கருணாநிதிசெல்வி இராஜம் ஆகியோரின் திருமணமும் அதே மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையர் இருவரும் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தாத்தா திரு.கலிதீர்த்தா தேவர் பாதுகாப்பில் வாழ்ந்து வரலாயினர் !

 

சிங்காரவேலு – சுமதி இணையரின் குழந்தைகள்:

 

திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையருக்கு 1978 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 – ஆம் நாள் ( பிங்கள ஆண்டு, மாசி மாதம், 25 – ஆம் நாள், வியாழக்கிழமை) பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு என் விருப்பப்படி கயல்விழி என்று பெயர் சூட்டப்பட்டது !

 

அடுத்ததாக இரண்டாண்டு இடைவெளியில், அதாவது, 1980 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 – ஆம் நாள் நள்ளிரவு 1-00 மணிக்கு (ரௌத்திரி ஆண்டு, ஆடி மாதம், 25 – ஆம் நாள், சனிக்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நெடுமாறன் என்று நான் பெயர் சூட்டினேன். ஆனால் பள்ளிப் பதிவுகளில் மணிமாறன் என்று பதிவாகியதால்மணிமாறன்என்னும் பெயரே நிலைபெற்று வழங்கி வருகிறது !

 

பெண் கயல்விழியின் திருமணம்:


பெண் குழந்தையான கயல்விழி வளர்ந்து 12 – ஆம் வகுப்பு வரைப் படித்த பின் மேற்படிப்புக்கு வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால், படித்தவரைப் போதும் என்று பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் பஞ்சநதிக் குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த திரு.இளவழகன் என்பவரது மகன் திரு.குலோத்துங்கன் என்பவருக்கு செல்வி கயல்வியை மணம் செய்து வைக்க பெற்றோரும், தந்தை வழித் தாத்தா குடும்பத்தினரும், தாய்மாமா என்ற முறையில் நானும் கலந்து முடிவு செய்தோம். இவர்கள் திருமணம் 2003 – ஆம் ஆண்டு சனவரி மாதம், 20 – ஆம் நாள் ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி, வள்ளுவர் சாலை  காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது !

 

திரு.குலோத்துங்கன் அரியானா மாநிலத்தில் அம்பாலா என்னுமிடத்தில் ஒன்றிய அரசின் படைத்துறைக் காவல் பணியில் (MILITARY POLICE) பணி புரிந்து வருகிறார். திரு.குலோத்துங்கன்திருமதி கயல்விழி இணையருக்கு ஆகாஷ், அஜய்ராஜ் என இரு ஆண் மகவுகள் உள்ளனர். இவர்களில் திரு. ஆகாஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியொன்றில் நுட்பவியல் வாலை (B.TECH) படிப்பில் சேர்ந்து இரண்டாமாண்டுக் கல்வியைத் தொடர்ந்து வருகிறார். திரு.அஜய்ராஜ், நுட்பவியல் வாலை (B.TECH) படிப்பில் சேர ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறார் !

 

பிள்ளை மணிமாறன் படிப்பும் பணியும்:

 

திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையரின் மகன் திரு.மணிமாறன், கருப்பம்புலம் வெங்கடசல தேவர் நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று பள்ளியிறுதி வகுப்பான 10 ஆம் வகுப்புத் தேர்வில் 500 –க்கு 405 மதிப்பெண்கள் (81%) பெற்று  பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார் ! அடுத்து நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பல்தொழிற் பயிற்சிக் கல்லூரியில் குளிர்பதனம் மற்று காற்றுப் பதனம் பட்டயப் படிப்பில் (DIPLOMA IN REFRIGERATION & AIR CONDITIONING) சேர்ந்து பயின்றார் !

 

பட்டயப் படிப்பு நிறைவடைந்த பின்பு, ஓசூரில் ஓரிரு நிறுவனங்களில்  ஓராண்டு காலம் அளவுக்குப் பணி புரிந்தார். அடுத்து கர்நாடக மாநிலம் அத்திப் பள்ளியை அடுத்த ஒரு இடத்தில் அமைந்துள்ள உடுவிடுதி (STAR HOTEL) ஒன்றில் பணி புரிந்து நிறைந்த அனுபவம் பெற்றார். இந்த அனுபவம் அவருக்கு  கோவா மாநிலத்தில் CLUB MAHENDRA என்னும் ஐயுடு விடுதியில் (5 STAR HOTEL) நல்ல பணியில் அமர உதவியது.!

 

ஓசூரில் இருக்கையில் வெளிநாடு செல்வதற்கான கடவுச் சீட்டினை திரு.மணிமாறனுக்கு வாங்கித் தந்திருந்தேன். கடவுச் சீட்டு இருந்தமையால், வளைகுடா நாடுகளில் அவருக்குப் பணி வாய்ப்புக் கிட்டியது. சவுதி, தமாம், துபாய் என அவரது பணியிடங்கள் மாறி மாறி அமைந்து இப்போது அபுதாபியில் THE RITZ-CARLTON என்னும் நிறுவனத்தில் முதன்மைப் பொறியாளராக (CHIEF ENGINEER)  பணி புரிந்து வருகிறார் !

 

மணிமாறன் – அமுதா திருமணம்:


திரு.மணிமாறனின் திருமணம் 2010 –ஆம் ஆண்டு மே மாதம், 23 – ஆம் நாள் நடைபெற்றது. கருப்பம்புலத்தைச் சேர்ந்த திரு. பன்னீர்ச்செல்வம், திருமதி சரோஜா இணையரின் மகள் அமுதா இவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். அமுதா  1985 –ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 9 –ஆம் நாள், வெள்ளிக்கிழமை (குரோதன ஆண்டு, ஆடிமாதம், 25 – ஆம் தேதி) பிறந்தவர் ! இவர்  இப்போது ஆயக்காரன்புலம் அரசு ஆடவர் மேனிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார் !

 

மணிமாறன்- அமுதா இணையரின் குழந்தைகள்:

 

திரு. மணிமாறன்திருமதி அமுதா இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவருள் மூத்த பெண்ணின் பெயர் வேதிகா. இவர் 2011 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 13 – ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை (விக்ருதி ஆண்டு, மாசி மாதம், 1- ஆம் நாள்) பிறந்தார் !

 

இரண்டாவது பெண் இலக்ஷனா, 2014 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 23 – ஆம் நாள் திங்கள் கிழமை (ஜய ஆண்டு, ஆனி மாதம், 9 – ஆம் நாள்) இவர் பிறந்தார். இருவரும், கருப்பம்புலத்தை அடுத்த குரவப் புலத்தில் இயங்கி வரும் POINT CALIMERE INTERNATIONAL SCHOOl என்னும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டப் பள்ளியில் பயின்று வருகின்றனர் !

 

வேதிகா 7 – ஆம் வகுப்பிலும், இலக்‌ஷனா 3 – ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகின்றனர். படிப்பில் இருவரும் படுசுட்டி என்பது இப்போதே நன்கு தெரிகிறது ! இருவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது !


இன்பத்தைத் தொடர்ந்து வந்த  துன்பம்:


திரு.சிங்காரவேலு அவர்களின்  அண்ணன் திரு. மு.கருணாநிதி தனது 60 -ஆம் அகவையில் (01-03-1945 - 29-09-2004) 2004 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29 -ஆம் நாள்  மறைந்து போனார். அவர் மனைவி திருமதி இராஜமும் கடந்த ஆண்டு தனது 67 -ஆம் அகவையில் (10-05-1954 - 22-12-2020) மறைந்தார். திரு.சிங்காரவேலுவின்  தந்தையார் திரு.K.P.முருகையாத் தேவர் 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 20 –ஆம் நாள்  அன்று அகவை முதிர்வின் காரணமாக இப்பூவுலக வாழ்வை நீத்தார்!

 

தாயார் திருமதி செல்லமணி அம்மையாரும் கணவர் மறைந்த ஓராண்டுக் காலத்தில் அதாவது 2008 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 -ஆம் நாள் (வைகாசி, 11) கண்களை மூடி நிரந்தரமாக உறங்கிப் போனார். திரு.சிங்காரவேலு அவர்களின் தம்பி,  திரு.குமரப்பா, ஓய்வு பெற்ற ஆசிரியர் 2019 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24- ஆம் நாள் மீளாத் துயிலில் ஆழ்ந்தார் ! நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் பெருமை படைத்தது அல்லவா இவ்வுலகு !

 

திரு.சிங்காரவேலு அவர்களின் உடன்பிறப்புகள்:


திரு.சிங்காரவேலு அவர்களின் தம்பி திரு,சுந்தரமூர்த்தி மன்னார்குடியில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். மூத்த தங்கை திருமதி மல்லிகா, கடிநெல்வயலில் தன் கணவர் திரு. சதாசிவ தேவர், அத்தை திருமதி பஞ்சவர்ணம் அம்மையார், மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இளைய தங்கை மலர்விழி, பஞ்சநதிக் குளத்தில் தன் கணவர் திரு. சிவராமன் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் !

 

முடிவுரை:

 

தன் மகன் திரு.மணிமாறன் அபுதாபியில் பணிபுரிவதால், திரு.சிங்காரவேலு அவர்கள் தன் மனைவி திருமதி சுமதி, மருமகள் திருமதி அமுதா, பெயர்த்திகள் செல்வி வேதிகா, செல்வி இலக்ஷனா ஆகியோருடன் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் நலமுடன் அமைதியாக  வாழ்ந்து வருகிறார். அவரும் அவர் இல்லத்தினரும் அனைத்து வளங்களும் பெற்று நீடூழி  வாழ உளமார வாழ்த்துவோம் !


-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 29]

{14-08-2022}

-------------------------------------------------------------------------------------

சிங்காரவேலு - சுமதி.

தாத்தாவும் பெயர்த்தியும்.
(22-6-2011-ல் எடுத்த படம்)

முசிங்காரவேலுத் தேவர்
(9-7-2022 அன்று எடுத்த படம்)



சுமதி 
(22-6-2011 அன்று எடுத்த படம்)

சுமதி
(8-1-2018 அன்று எடுத்த படம்)

சுமதி
(9-7-2022 அன்று எடுத்த படம்)




மணிமாறன்




அமுதா
(8-1-2018 அன்று எடுத்த படம்)



அமுதா
(9-7-2022 அன்று எடுத்த படம்)



வேதிகா
(9-7-2022 அன்று எடுத்த படம்)



இலக்‌ஷனா
(9-7-2022 அன்று எடுத்த படம்)




கயல்விழி



K.P.முருகையாத் தேவர்.
(மறைவு நாள்:20-4-2007)



மணிமாறன், அமுதா, வேதிகா, இலக்‌ஷனா




மணிமாறன் குடும்பத்தினர்