என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வியாழன், 2 ஏப்ரல், 2020

(05) பழனியப்பன் (திரு).அ - தஞ்சாவூர்.

தோற்றம்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த தேவகோட்டையில் 1941 –ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 –ஆம் நாள் திரு.பழனியப்பன் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர் அமிர்தலிங்கம் பிள்ளை. தாயார் சிவகாமி அம்மையார் !

உடன் பிறந்தோர்:

திரு.பழனியப்பனுடன் உடன் பிறந்தோர் மூவர். (01) திரு. சோலையப்பன் (02) திரு.சுப்ரமணியன் (03) திருமதி.இலட்சுமி அம்மையார். தமையனார் திரு.சோலைப்பன், தம்பி திரு.சுப்ரமணியன் இருவரும் காலமாகிவிட்டனர். தங்கை திருமதி.இலட்சுமி அம்மையார் தன் கணவர் திரு.சோலையனுடன் கரந்தையில் வாழ்ந்து வருகிறார் !

பள்ளிப் படிப்பு:

திரு.பழனியப்பன் தனது தொடக்கக் கல்வியைத் தேவகோட்டையிலும், உயர்கல்வியைத் தஞ்சாவூரில் உள்ள கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பள்ளியிறுதி வகுப்பினை (OLD S.S.L.C.) 1958 ஆம் ஆண்டில் நிறைவு செய்தார் !

தொழில்:

பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததும், அடுத்து என்ன செய்வதென்று சிந்தனை செய்து கொண்டிருக்கையில், இவரது தந்தையார் திரு.பழனியப்பனை ஒரு தையலகத்தில் (TAILORING MART) தொழில் பழகுவதற்குச் சேர்த்து விட்டார். சட்டைக்குப் பொத்தான் தைத்தலில் தொடங்கி, மெல்ல மெல்லத் தையல் எந்திரத்தை இயக்கவும் கற்றுக் கொண்டார் !

நான்கு ஆண்டுகள் தையல் பணியில் (SEWING) மட்டுமே கவனம் செலுத்தி வந்த திரு.பழனியப்பன், பிறகு காற்சட்டை மேற்சட்டைகளுக்கு  ஏற்றவாறு துணிகளை வடிவமைத்து நறுக்குவதிலும் (CUTTING) ஈடுபட்டு அதில் வல்லமை பெறலானார் !

தொடக்கத்தில் ஆடவர்களுக்கான ஆடைகள் தைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த திரு.பழனியப்பன், பின்பு மகளிருக்கான ஆடைகள் தைப்பதிலும் ஈடுபட்டுச் சில ஆண்டுகளில் இருபாலருக்குமான ஆடைகளை வடிவமைத்துத் தைப்பதில் சிறந்து விளங்கினார் !

சொந்தத் தொழில்:

ஆறு ஆண்டுகள் இன்னொருவர் தையலகத்தில் பணியாற்றி வந்த திரு.பழனியப்பன், பின்பு தேவையான தையல் எந்திரங்கள் சிலவற்றைச் சொந்தமாக வாங்கினார். வேறு வசதியான ஒரு இடத்தை வாடகைக்கு ஏற்பாடு செய்து கொண்டு, சில தையல் கலைஞர்களையும் வேலைக்கு அமர்த்திக் கொண்டு தனியாகத் தொழில் செய்யலானார் !

ஆடவர், மகளிர், குழந்தைகள் என அனைவருக்கும் உரிய ஆடைகளை வடிவமைத்துத் தைப்பதில் திரு.பழனியப்பன் சிறந்து விளங்கியதால், நிரம்ப வாடிக்கையாளர்கள் வரலாயினர். தஞ்சையில் புகழ் பெற்ற தையலகமாக இவரதுமஹா தையலகம்விளங்கியது !

கூட்டுக் குடும்பம்:

தந்தை, தாயார், தமையன், தம்பி, தங்கை என அனைவருடனும் கூட்டுக் குடும்பமாக திரு.பழனியப்பன் வாழ்ந்து வந்தார்.  இவரது  தமையனார் திரு.சோலைப்பன் சேவப்பநாயக்கன் வாரியைச் சேர்ந்த திரு.சிதம்பரம் பிள்ளைதிருமதி.காமாட்சி அம்மையாரின் மகள் செல்வி.சுலோச்சனாவைத் திருமணம் செய்து கொண்டு தனியாக வாழலானார்.  திரு.சோலையப்பன் சவர்க்காரம் (WASHING SOAP) தயாரித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபடலானார் !

தந்தை, தாயார், தம்பி, தங்கையுடன் தனியாக  ஒரு வீட்டில் வாழ்ந்து வந்த திரு பழனியப்பன், தனது தையலக வருமானம் மூலம் வசதியுடன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் திரு.அமிர்தலிங்கம் பிள்ளை, தனது பெண் இலட்சுமிக்குத் திருமணம் செய்து வைத்திட முயன்று வந்தார் !

தங்கை திருமணம்:

கரந்தையைச் சேர்ந்த திரு. சோலையன் என்பவர் நெடுஞ்சாலைத் துறையில்  சாலை ஆய்வாளராகப் (OVERSEER) பணியில் சேர்ந்திருந்தார். அவருக்குச் செல்வி இலட்சுமியைத் திருமணம் செய்து வைத்திடலாம் என இரு வீட்டாரும் கலந்து பேசி முடிவு செய்தனர். திரு.பழனியப்பன், அவரது தமையனார் இருவரும் சேர்ந்து திருமணச் செலவுகளை ஏற்று, திருமணத்தைச் சிறப்பாக நடத்தி வைத்தனர் !

பழனியப்பன் திருமணம்:

சில ஆண்டுகள் கழித்து, திரு.அமிர்தலிங்கம் பிள்ளை தன் மகன் பழனியப்பனுக்குத் திருமணம் செய்ய எண்ணிப் பெண் பார்க்கலானார். இதை அறிந்த அவரது உறவினர்கள், கரந்தை திரு.சிதம்பரம் பிள்ளையின் இரண்டாவது மகள் செல்வி இராசேசுவரியைப் பெண் கேட்கலாம் என்று கருத்துத் தெரிவித்தனர் !

திரு.பழனியப்பனின் அண்ணியார் திருமதி சுலோச்சனாவும் இதற்குத் தன் ஆதரவைத் தெரிவித்தார். செல்வி இராசேசுவரி அப்பொழுது பள்ளி இறுதி வகுப்புப் படிப்பை முடித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்த நேரம். திரு.அமிர்தலிங்கம் பிள்ளை, திரு.சிதம்பரம் பிள்ளை இருவரும் கலந்து பேசி திரு.பழனியப்பன்செல்வி.இராசேசுவரி திருமணத்தை நடத்திடலாம் என முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் 1969 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 –ஆம் நாள் தஞ்சாவூரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. !

தமையனார் குடும்பம்:

திரு.பழனியப்பனின் தமையனார் திரு.சோலையப்பன் செல்வி.சுலோச்சனாவை மணந்து குடும்பம் நடத்தி வந்த நிலையில், அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு அரங்கநாதன் என்று பெயர் சூட்டி  வளர்த்து வந்தனர். அரங்கநாதன் குழந்தைப் பருவத்தில் இருந்த நிலையில், திருமதி சுலோச்சனா அம்மையார் காலமானார் !

திரு.சோலையப்பன், தனது மனைவி திருமதி.சுலோச்சனாவை இழந்து, குழந்தை அரங்கநாதனை வைத்துக்கொண்டு இன்னற்பட்டு வந்த நிலையில், சில ஆண்டுகள் கழித்து, திருமதி.சுலோச்சனா அம்மையாரின் மூன்றாவது தங்கையான செல்வி.அமுதாவைத் திருமணம் செய்து கொண்டார் !

திரு.சோலையப்பன்திருமதி.அமுதா இணையருக்கு வசந்த் என்னும் ஆண் குழந்தையும், சுதா என்னும் பெண் குழந்தையும் பிறந்தன. இருவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். திரு. சோலையப்பன்  பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு காலமாகி விட்டார் !

தம்பி குடும்பம்:

திரு.பழனியப்பனின் தம்பி திரு.சுப்ரமணியன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். அவர் செல்வி.ஜெயலட்சுமி என்பவரை மணந்து கொண்டுத் தனியாக வாழ்ந்து வந்தார். இவ்விணையருக்கு ஜெயந்தி, உருக்குமணி, வசந்தா என்னும் மூன்று பெண் குழந்தைகளும், சிவக்குமார் என்னும் ஆண் குழந்தையும் பிறந்தன. அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். திரு.சுப்ரமணியன் பத்தாண்டுகளுக்கு முன்பு காலமாகிவிட்டார் !

திரு.பழனியப்பனின் குடும்பம்:

திரு.பழனியப்பன் திருமதி இராசேசுவரி இணையருக்கு திரு.சிவக்குமார், திரு.இரவிக்குமார், திரு.செந்தில்குமார் ஆகிய மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தன. மூவருக்கும் திருமணம் ஆகி மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகின்றனர் !

திரு.சிவகுமார் குடும்பம்:

திரு.சிவக்குமார் 1971 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 2 ஆம் நாள் தஞ்சை சேவப்பநாயக்கன் வாரி என்னுமிடத்தில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை சுப்பையா நாயுடு தொடக்கப் பள்ளியில் பயின்றார். அடுத்து 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைக் கல்வியைக் கல்யாணசுந்தரம் உயர்நிலைப் பள்ளியிலும். மேனிலைக் கல்வியை தஞ்சாவூர் வீரராகவ மேனிலைப் பள்ளியிலும் பயின்றார் !

மேனிலைக் கல்வியான 12 ஆம் வகுப்பில் படித்து வருகையில், ஓசூர் டைட்டான் கடிகாரத் தயாரிப்பு நிறுவன உயர் அலுவலர்கள் தஞ்சைக்கு வந்து பள்ளி வளாகத்தில்  நேர்காணல் நடத்தினர். அதில் பங்கேற்ற திரு.சிவகுமார் டைட்டான் நிறுவனத்தில் பணியில் சேரத் தேர்ந்தெடுக்கப் பெற்றார். இதனைத் தொடர்ந்து பணி அமர்வு ஆணை பெற்று 1989 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3 –ஆம் நாள் பணியில் சேர்ந்தார் !

டைட்டான் நிறுவனம் தனது ஊழியர்களுக்காக  அமைத்துக் கொடுத்த டைட்டான் நகரிய வளாகத்தில் திரு.சிவக்குமார் 2000 -ஆம் ஆண்டு சொந்தமாக  ஒரு வீடு கட்டிக் கொண்டு  அதில் வாழ்ந்து வரலானார் !

பின்பு, 2003 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6 ஆம் நாள் இவருக்குத் திருமணமாயிற்று. தஞ்சாவூர் கண்ணம்மாள் நகர் திரு.வேதரெத்தினம்- திருமதி கலைச்செல்வி இணையரின் மகளான செல்வி. கவிக்குயிலை மணந்தார். இவர்களுக்கு கீர்த்திவாசன் என்னும் ஒரு ஆண் மகவு பிறந்தது !

இப்போது, (2020) கீர்த்திவாசன் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். திருமதி கவிக்குயில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளமின் பொறியாளராகப் பணி புரிந்து வருகிறார் !

திரு.இரவிக்குமார் குடும்பம்:

இரண்டாவது பிள்ளையான திரு.இரவிக்குமார் 1972 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 30 ஆம் நாள் தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன் வாரியில் பிறந்தார். இவர் தனது தொடக்கக் கல்வியை சீனிவாசபுரத்தில் உள்ள பள்ளியிலும், உயர்நிலைக் கல்வியை வீரராகவ மேனிலைப் பள்ளியிலும்  பயின்றார் !

கர்நாடக மாநிலம் மைசூரில் ஒரு தொழிலகத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்து வந்த இவர், பின்பு தஞ்சாவூரில் உள்ள கமலா ஞெகிழிப் பொருள் தயாரிப்புத் தொழிலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இவர் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையை அடுத்த தியாகராஜபுரத்தைச் சேர்ந்த திரு.முனுசாமி என்பவரின் மகள் செல்வி.இராதாவை மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் 2007 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் நாள் சுவாமிமலை முருகன் கோயிலில் நடைபெற்றது. இவர்களுக்கு நிவேதா என்ற பெண்குழந்தை இருக்கிறது !

திரு.செந்தில்குமார் குடும்பம்:

திரு செந்தில்குமார், தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த பிறகு தனது தந்தையின் தையலகத்தில் சேர்ந்து தையற் பயிற்சிப் பெறலானார். சில ஆண்டுகளில் நன்கு பயிற்சி பெற்று, ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான ஆடைகள் வடிவமைப்பிலும் தேர்ச்சி பெற்றுத் தனியாகத் தொழில் நடத்தலானர் ! இவர் தற்போது தனியார் வங்கி ஒன்றில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார் !

இவர் தஞ்சாவூர் சிவாஜி நகரைச் சேர்ந்த திரு.வெங்கடேசு என்பவரின்  மகள் பிரியாவை 2013 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் நாள் மணந்தார்.  இவர்கள் திருமணம் தஞ்சாவூர், புன்னைநால்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது. இவர்களுக்கு ஹரி என்று ஒரு ஆண்குழந்தை இருக்கிறது !

திருமதி.இராசேசுவரி:

திரு.சிதம்பரம் பிள்ளைகாமாட்சி அம்மையார் இணையருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் இரு ஆண் குழந்தைகளும் பிறந்தன.  முதாலாவது பெண்ணான செல்வி. சுலோச்சனா திரு.பழனியப்பனின் அண்ணன் திரு.சோலையப்பனை மணந்தவர். திருமணமான சில ஆண்டுகளில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்த  இவர் பின்னர் இறந்து போனார் !

இரண்டாவது  பெண் தான் செல்வி இராசேசுவரி. பள்ளியிறுதி வகுப்பு வரைப் படித்திருக்கும் இவர் திரு.பழனியப்பனை மணந்து கொண்டார். ஏறத்தாழ 35 ஆண்டுகள் இல்லற வாழ்வில் இணைந்து இருந்த பிறகு இவரது கணவர் மறைந்து போனார். கணவரின் மறைவுக்குப் பின் சேவப்ப நாயக்கன் வாரியில் வாழ்ந்து வரும் தன் இரண்டாவது மூன்றாவது பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார்.

மூன்றாவதாகப் பிறந்தவர் திரு.உலகநாதன். இவர் மனைவி பெயர் திருமதி.கற்பகம். திருமணமாகி சில ஆண்டுகளில் திரு.உலகநாதான் இறந்து போனார். இவ்விணையருக்குக் குழந்தைகள் ஏதுமில்லை. திருமதி கற்பகம் தற்போது வைத்தீசுவரன் கோவிலில் வாழ்ந்து வருகிறார் !

நான்காவதாகப் பிறந்தவர் செல்வி குமுதா. இவர் திருமணமாகி, தனது கணவர் திரு.முருகேசனுடன் ஆவூரில் வாழ்ந்து வருகிறார். இவ்விணையருக்கு விஜயகுமார், பாபு என்று இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி மனைவி மக்களுடன் வாழ்ந்து வருகின்றனர் !

ஐந்தாவதாகப் பிறந்தவர் செல்வி அமுதா. இவர் கணவர் திரு.சோலையப்பன். இவ்விணையருக்கு வசந்த் என்று ஒரு ஆண் குழந்தையும், சுதா என்று ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. திரு வசந்த் இப்போது தஞ்சாவூரில் மின்பணியாளராகப் (ELECTRICIAN)  பணிபுரிகிறார். திருமதி சுதா கும்பகோனம் அருகில் உள்ளா பட்டீசுவரத்தில் தன் கணவர் திரு.கார்த்தியுடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது !

ஆறாவதாகப் பிறந்தவர் திரு.பாஸ்கர். இவர் ஏனோ தனது உறவினர்களுடன் தொடர்பு ஏதும்  வைத்துக் கொள்ளாமல், வெளியூரில் வாழ்ந்து வருகிறார் !

ஏழாவதாகப் பிறந்தவர் செல்வி இராணி.  இவர் கணவர் பெயர் திரு.அன்பழகன். திரு.அன்பழகன் ஏறத்தாழப் பத்து  ஆண்டுகளுக்கு முன்பு (05-01-2010) காலமாகி விட்டார். இவ்விணையருக்கு கலையரசன் என்ற மகனும் மஞ்சுளா என்ற மகளும் இருக்கின்றனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது !

திரு.பழனியப்பன் மறைவு :

திரு.பழனியப்பன் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுப்போனார். உணவுக் கட்டுப்பாடுகளை முனைப்பாகக் கடைப்பிடித்து வந்தாலும், தொழிலின் நிமித்தம் சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக் கொள்ள முடியவில்லை.  நீரிழிவுடன் உயர் இரத்த அழுத்தமும் சேர்ந்து கொண்டது !

மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் தெரிந்தால் அவர்கள் கவலைப் படுவார்கள் என்று எண்ணி, தன் உடல்நிலையின் தன்மை பற்றி  அவர்களிடம் மறைத்து வந்தார். இதுவே அவருக்குப் பாதகமாக அமைந்தது !

நீரிழிவும், இரத்த அழுத்தமும் சேர்ந்து அவரது வாழ்நாளின் அளவைச் சுருக்கிக் கொண்டே  வந்தது. தனது மூத்த பிள்ளை திரு.சிவக்குமருக்குத் திருமணம் செய்து வைத்து, பெயரனைக் கைகளில் தூக்கிக் கொஞ்சும் வாய்ப்பை அனுபவித்து வருகையில் திடீரென்று ஒருநாள் உடல் நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்ந்து, சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார் !

வாழ்ந்தது போதும் என்று அவருக்குத் தோன்றியதோ என்னவோ, 2004 ஆம் ஆண்டு, மே மாதம், 12 ஆம் நாள் அவர் தனது பூதவுடலை நீத்துப் புகழுடம்பு எய்தினார் !

முடிவுரை:

திரு.பழனியப்பன், தன் சொந்த முயற்சியில் முன்னுக்கு வந்தவர். கடுமையான உழைப்பாளி. அவர் மறைந்து விட்டாலும் அவரது நினைவு என்றும் மறையாது. தந்தையின் உழைப்பையும் அன்பையும் மனதில் இருத்தி, அவரது பிள்ளைகள் தம் வாழ்வில் மேலும் மேலும் முன்னேற்றம் அடைவார்கள் என்பது உற்றார் உறவினர்களின்  கணிப்பு !

-----------------------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam76@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,மீனம்(பங்குனி)20]
{02-04-2020}
---------------------------------------------------------------------------------------------------------------------------
                       
திரு.அ.பழனியப்பன்
திருமதி.இராஜேஸ்வரி.

திரு.ப.சிவகுமார்
திருமதி.சி.கவிக்குயில்
                                         


திரு.இரவிக்குமார் & திருமதி,இராதா                                                                                                                 


S.K.கீர்த்திவாசன்
ஆர்.நிவேதா


எஸ்.ஹரிஹரன்