என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

(07) இராமலிங்கம் (திரு).இ. -ஈசனக்குடி


தோற்றம்:


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில் கிராம அதிகாரியாகப் பணி புரிந்த  (பட்டாமணியார்)  திரு.கா.இருளப்பதேவர்திருமதி இராஜம் அம்மையாரின் இரண்டாவது புதல்வராகத் தோன்றியவர் ஈசனக்குடி திரு. .இராமலிங்கம் !

 

1958 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்   23 – ஆம் நாள் பிறந்த திரு.இராமலிங்கம் இரண்டாவது  குழந்தை  என்றால், முதற் குழந்தை யாரென்று தெரிந்துகொள்ளும் ஆவல் உங்களிடம் இந்நேரம் பற்றிக்கொண்டிருக்கும். அதையும் சொல்லிவிடுதல் தான் ஞாயம் !

 

பெற்றோர்:


கடிநெல்வயல்   திரு.சி.காசிநாத தேவர்திருமதி. மாரிமுத்து அம்மையாரின்  தலைமகன் திரு.கா.இருளப்ப தேவர். இவர் ஆயக்காரன்புலம்-3-ஆம் சேத்தி திரு.கு. சுப்பையாத் தேவர்திருமதி அமிர்தவல்லி அம்மையாரின் இளைய மகள் செல்வி.இராஜம் என்னும் மங்கை நல்லாளை 1954 –ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் !

 

மூத்த பிள்ளை காசிநாதன்:


இவர்களின் மூத்தபிள்ளை  பெயர்  காசிநாதன். சற்றேறக்குறைய  இரண்டரை  அல்லது மூன்று அகவை இருக்கும்.  ஒரு வாரம் அவனுக்குக் கடுங்காய்ச்சல். ஆயக்காரன்புலம் (ஆசிரியர்)  நடேச அய்யர் என்னும் ஓமியோபதி/ஆங்கில முறை  மருத்துவர் அன்றாடம் வந்து உடல்நிலையைக் கணித்து மருந்து மாத்திரைகள் கொடுத்துச் செல்வார் !

 

ஒருநாள் மாலை நடேச அய்யர் வந்திருந்தார். மூன்று அகவைக் குழந்தைக்கு என்ன தோன்றியதோ, தெரியவில்லை, தன் வலக்கையை உயர்த்திக் காட்டினான். ஊசி போடச் சொல்லி விடுத்த சைகை அது. அதைப் பார்த்துவிட்டு அவன் பெற்றோரும், சுற்றி நின்ற பங்காளிகளும் கலங்கிப் போய்விட்டோம். நடேச அய்யர் ஊசி போட்டுவிட்டு கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிச் சென்றார் !

 

மறுநாள் காலை நடப்பா திரு. சாம்பசிவ தேவரின் இரண்டாவது மகள் பாலசுந்தரிக்குப் பஞ்சநதிக்குளம் கீழ்ச் சேத்தியில் திருமணம். (கூழையன்காடு) திரு.இரத்தின தேவர் தான் மணமகன். காலையில் மணப்பெண்ணுடன் பங்காளிகள் எல்லாம் திருமணத்திற்குச் சென்றுவிட்டு, மாலையில் பத்துப் பன்னிரண்டு  கூண்டு வண்டிகளில், மணமக்களுடன் கடிநெல்வயல் திரும்பிக் கொண்டிருந்தோம் !

 

மாடுகளின் கழுத்துச் சதங்கை சலசலக்க , முட்டகம்  வழியாக வண்டிகள் வந்துகொண்டிருந்தன.  யாரோ ஒருவர் வந்து என்னவோ சேதி சொன்னார். அவ்வளவுதான்; வண்டியிலிருந்த  பெரியவர்கள் முகத்தில் சோகக் கீற்று நெளிந்தோடியது ! மாடுகளின் சதங்கையொலியைத் தவிர அங்கு குருவிகளின் கூச்சல் கூடக் கேட்கவில்லை. வண்டிகள் நடப்பா வீட்டு வாசலில் வந்து நின்றன . மாலை  நேரம்; எங்கும் இருள் சூழத் தொடங்கியது !

 

புதுமணப்பெண் பாலசுந்தரி, ஆலத்தி எடுக்கக் கூடக் காத்திராமல் வீட்டுக்குள் ஓடினார்.  அவருக்குக் காசிநாதன் மீது அளவிடமுடியாத   அன்பு ;  காசிநாதனுக்கும்  அத்தை தான்  உயிர்மூச்சு. பெற்றோரிடம் அவன் இருந்த நேரத்தைவிட அத்தையிடம் ஒட்டிக்கொண்டிருந்த நேரம்தான் அதிகம் !

 

உள்ளே ஓடிய   பாலசுந்தரி மாற்றுப் புடவையை உடுத்திக் கொண்டு, தெற்குப் பண்ணைக்கு ஓடினார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது எனக்கு அகவை  12  இருக்கும்.  நானும் ஓடினேன். “ஐயோ  காசிநாதா ! என்னை விட்டுவிட்டுப் போய்விட்டாயாஎன்று பாலசுந்தரி அலரும் குரல் இருளைக் கிழித்துக்கொண்டு எங்கும் புயலாய்ப் புறப்பட்டது  ! அப்பொழுது தான் எனக்கும் உறைத்தது ! காசிநாதன்  காலவெள்ளத்தில் கரைந்துவிட்டான் ! பாலசுந்தரியின் மடியில் குழந்தை காசிநாதனின் துவண்ட உடல். 1956 –ஆம் ஆண்டு வாக்கில் நிகழ்ந்த அந்தச் சோக நிகழ்வு இன்றும் என் மனத்தில் சுவரொட்டி  போல் ஒட்டிக்கொண்டிருக்கிறது !

 

இளைய பிள்ளை இராமலிங்கம்:


காசிநாதன் மறைவையடுத்து   -  1958 -ஆம் ஆண்டு -  பிறந்த இரண்டாவது குழந்தைக்கு  இராமேசுவரம்  இறைவனின் நினைவாகஇராமலிங்கம்என்று பெயர் வைத்தனர். இராமலிங்கம் பிறந்த சில மாதங்களில் நான் திருத்துறைப்பூண்டிக்குச் சென்றுவிட்டேன்பள்ளியிறுதி வகுப்பில் படிக்க . அப்போது பள்ளியிறுதி வகுப்பினை நிறைவு செய்ய  11 ஆண்டுகள் படிக்க வேண்டும் !

 

தொடக்கக்கல்வி:


1964 –ஆம் ஆண்டு விசயதசமி  நாளன்று  கையில்  ஓலைச்சுவடியுடன் புத்தாடை மணம் கமழ, பள்ளிக்குச்  சென்ற இராமலிங்கத்தை கடிநெல்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி வரவேற்று,   ஒன்றாம் வகுப்பு வருகைப் பதிவேட்டில் பதியவைத்துக்   கொண்டது. தலைமையாசிரியரும், வகுப்பாசிரியரும்   நல்வாழ்த்துக் கூற, பள்ளியில் அனைவருக்கும்  இனிப்பு (மிட்டாய்) வழங்கினார் தந்தை கா.இருளப்ப தேவர் !

 

இடைநிகழ்வுகள்:


இருளப்ப தேவரின் ஒரே தங்கையான செல்வி செகதாம்பாளின் திருமணம் 1952 –ஆம் ஆண்டு  முற்பகுதியில் நடந்ததாக  நினைவு. திருமணத்திற்குப் பின்  திருமதி செகதாம்பாள்குழந்தைவேல் பிள்ளை இணையர், கோட்டூருக்கு  அருகிலுள்ள கோமளப்பேட்டையில் குடியிருந்தனர் !

 

1952 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 –ஆம் நாள். வீட்டில் நானும், அக்காளும் பெரியம்மாவும் மட்டுமே இருந்தோம். அத்தான் வேறு வேலையாக ஈசனக்குடி சென்றிருந்தார். மெல்லத் தொடங்கிய மழை கடுமையாகப் பொழியத் தொடங்கியது. சிறிது நேரத்தில் காற்றும் பலமாக வீசத் தொடங்கியது. சீறிய காற்று சுழன்றடிக்கும் புயலாகியது !

 

புயலும் மழையுமாகச்  சேர்ந்து எங்களை அச்சத்திற்கு ஆளாக்கின. மாலை 5-00 மணிக்குத் தொடங்கிய புயல் மறுநாள் பிற்பகலில்தான் ஓய்ந்தது. இந்தப் புயலின்போது எட்டு அகவை நிறையாத  நான் அக்காள் திருமதி செகதாம்பாளின் கோமளப்பேட்டை இல்லத்தில்  சிக்கிக் கொண்டதும், என்னைப் பாதுகாக்க அக்காளும் பெரியம்மா மாரிமுத்து அம்மையாரும்  எடுத்துக்கொண்ட முயற்சிகளும் பட்ட இன்னல்களும் என்றுமே மறக்கமுடியாத  அனுபவங்கள்!

 

இதையடுத்து 1955 –ஆம் ஆண்டு நம்பர் மாதம் 30 –ஆம் நாள் இரண்டாவது புயலை நான் சந்திக்க நேர்ந்தது. இந்தப் புயலின்போது  கடிநெல்வயலில் நான் இருந்தேன். அப்போது அண்ணன் இருளப்ப தேவர் தான் கடிநெல்வயல் கிராம அதிகாரி (பட்டாமணியார்). ஊரெங்கும் கடலாகக் காட்சியளித்தது.  புயலால் வீடு வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  உண்ண உணவில்லை. வீட்டு உடைமைகள் எல்லாம் புயலோடு போயிற்று !

 

அண்ணனும் அவரது உதவியாளர்கள் சுப்ரமணிய தேவர், அஞ்சான் ஆகியோர், வெள்ளத்தில் நீந்தி வேதாரணியம் சென்று, மேலதிகாரிகளிடம் பேசி  அரிசி, பாற்பொடி (பால் பவுடர்) ஆகியவற்றை வாங்கித் தோணிமூலம் கடிநெல்வயல் வரைக் கொண்டுவந்து  இறக்கி, நடுக்காடு மூனா ஆவன்னா வீட்டு மாட்டுக் கொட்டிலில் வைத்து சோறாக்கி, பால் காய்ச்சி  ஊர் மக்களின் பசி தீர்த்த  தீரமிக்க அந்த அருஞ்செயலை இன்று நினைத்தாலும் எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துப் போகிறது !

 

பள்ளிக்கல்வி:

 

ஐந்தாம் வகுப்பு வரைக் கடிநெல்வயலில் பயின்ற திரு.இராமலிங்கம், கருப்பம்புலத்தில் உள்ள பி.வி.தேவர் நடுநிலைப்பள்ளியில்  1970 –ஆம் ஆண்டு சூன் மாதம்  6 –ஆம் வகுப்பில் சேர்ந்தார். 6 –ஆம் வகுப்பு முதல்  8 –ஆம் வகுப்பு  வரை அங்கு கல்வி பயின்ற அவர் பின்பு வேதாரணியத்திலுள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு இடம்பெயர்ந்தார் !

 

1973 –ஆம் ஆண்டு சூன் மாதம்  அங்கு   9 –ஆம் வகுப்பில் சேர்ந்தார்.  பள்ளியிறுதி வகுப்பு எனப்படும்  11 –ஆம் வகுப்பு வரை அங்கேயே தனது கல்விப் பயணத்தைத் தொடர்ந்து,   நிறைவு செய்த அவர்  1976 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் பள்ளி இறுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றார் !

 

புகுமுகவகுப்பு:


பள்ளிக் கல்வியை அடுத்து  கல்லூரியில் மேற்படிப்பைத் தொடர விரும்பிய அவர் மன்னார்குடி  அருள்மிகு இராசகோபாலசாமி அரசினர் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் 1976 –ஆம் ஆண்டு சூன் மாதம் சேர்ந்தார் !

 

புகுமுகவகுப்பை 1977 ஏப்ரலில் நிறைவு செய்த பின்பு, வேறு சில சூழல்களால் பட்டப்படிப்பில் உடனடியாகச் சேர முடியவில்லை. ஈராண்டுகள் வேளாண் தொழிலில் கவனம் செலுத்தினார் !  ஆனால் பட்டப் படிப்பில் சேரவேண்டும் என்னும் விருப்பத்திற்கு அவரால் தடைபோட முடியவில்லை ! இறுதியில் விருப்பம் வென்றது !

 

பட்டப் படிப்பு:


புகுமுக வகுப்புப் பயின்ற அதே கல்லூரியில் 1979 –ஆம் ஆண்டு சூன் மாதம் அறிவியல் வாலை (B.Sc) வகுப்பில் சேந்தார். பயிரியலை (BOTONY) முதன்மைப் பாடமாக எடுத்துப் பயின்ற அவர்  1982 ,மார்ச் மாதம் படிப்பை நிறைவு செய்து பட்டமும் பெற்றார் !

 

திருமணம்:

 

பட்டதாரியாகிவிட்ட தங்கள் மகனுக்குத் திருமணம் செய்து வைத்துவிட  அவரது பெற்றோர்  விரும்பினர். பல தேடல்களுக்குப்  பிறகு திருத்துறைப்பூண்டி, பாமணி அருகிலுள்ள ஆய்மூரைச் சேர்ந்த ஆசிரியர் திரு. ஜெ.முத்தையன் - திருமதி.மு.சேதுலட்சுமி இணையரின் செல்வத் திருமகள் செல்வி திலகவதி, திரு.இராமலிங்கத்தின் வாழ்க்கைத் துணைவியானார் !

 

1982 –ஆம் ஆண்டு, சூலை மாதம், 2 –ஆம் நாள் இவர்கள் திருமணம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீசுவரர் திருமண மண்டபத்தில் இனிது நடைபெற்றது !

 

ஆசிரியர் பயிற்சி:

 

ஈராண்டுகள்  கடந்தன. திரு.இராமலிங்கம்திருமதி திலகவதி இருவரின் பெற்றோரும் கலந்து பேசி, இருவரையும் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கச் செய்தார்கள்.  நல்வாய்ப்பாக இருவருக்குமே இடம் கிடைத்தது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் குடியிலுள்ள தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் 1984 ஆம் ஆண்டு இருவரும் இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்குச் சேர்ந்தனர் ! பயிற்சியை 1986 –ஆம் ஆண்டு நிறைவு செய்தனர் !

 

இடைநிலை ஆசிரியராகப் பணியமர்வு:


படிக்கின்ற காலத்தில் இடைக்காத்திருப்பு  இருந்தாலும், ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன், நெடுநாள் காத்திராமல்  திரு. இராமலிங்கத்துக்கு  பணிவாய்ப்பு  கிட்டியது. 1988 ஆம் ஆண்டு சூலை மாதம் 21 –ஆம் நாள் மதுக்கூர் அருகிலுள்ள மதுரபாஷானிபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார் !

 

பணியிடமாற்றங்கள்:

 

(01)மதுரபாஷானிபுரத்தில் குறுகிய காலமே பணிபுரிந்தார். பின்பு திருத்துறைப்பூண்டியை அடுத்த ஆண்டாங் கரைக்கு 1989 –ஆம் ஆண்டு இடமாற்றலானார்.

 

(02)மூன்றாண்டுகளுக்குப் பின்  (திருத்துறைப்பூண்டி,) மடப்புரம் அருகிலுள்ள தீவாம்பாள்புரத்திற்கு 1992 –ஆம் ஆண்டு இடம் மாறினார். 

 

(03)அடுத்ததாக திருத்துறைப்பூண்டி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு (சத்திரம் பள்ளி) 1995 –ஆம் ஆண்டு இடம் மாறினார். இங்கு இடைநிலை ஆசிரியராகவும், பட்டதாரி ஆசிரியராகவும், நடுநிலைப்பள்ளித்  தலைமை ஆசிரியராகவும் பல்லாண்டுகள் பணியாற்றினார்.

 

(04)இதையடுத்து  எழிலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குத் தலைமையாசிரியராக  2005 –ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்..

 

(05)எழிலூரிலிருந்து மீண்டும் சத்திரம் பள்ளிக்கு   2007 –ஆம் ஆண்டு வந்து பணியேற்ற  திரு.இராமலிங்கம் , 28 ஆண்டுகள், 09 மாதம், 09 நாள் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய பின்  2017 –ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 –ஆம் நாள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றார் !


கூடுதல் கல்வித் தகுதிகள்:


(01) கல்வியியல் வாலை (B.Ed)  பட்டம்:-  அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து  1989 –ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கல்வியியல் வாலை, பட்டம் பெற்றார்.

 

(02)கல்வியியல் மேதை (M.Ed) பட்டம்:-   அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தொலைநிலைக் கல்வித் திட்டத்தில் சேர்ந்து  1992 –ஆம் ஆண்டு மே மாதம் கல்வியியல் மேதை,  பட்டம் பெற்றார்.

 

குடும்பம்:


(01)திரு.இராமலிங்கத்தின் மனைவி திருமதி திலகவதி 1965 –ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 10 –ஆம் நாள் பிறந்தவர். D.T.Ed., M.A., B.Ed. பட்டதாரி. இப்பொழுது திருத்துறைப்பூண்டி அருகில் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு உதவிபெறும்  தனியார் தொடக்கப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசியையாகப் பணி புரிந்து வருகிறார்.

 

(02)இவரது முதற் பெண் பெயர் கலையரசி. 11-05-1983 அன்று பிறந்த இவர் பொறியியல் பட்டதாரி.  இவர் திருமணமாகி, தனது கணவர் கண்ணன் மற்றும்  இரு பெண் குழந்தைகளுடன் வளைகுடா நாடான குவைத்தில் வாழ்ந்து வருகிறார்.

 

(03)இரண்டாவது பெண் பெயர் சங்கீதா. 20-02-1985 அன்று பிறந்த இவரும் பொறியியல் பட்டதாரி. திருமணமாகி, தனது கணவர் தியாகராஜன் மற்றும் குழந்தைகளுடன்     ( 1 + 1 ) சவூதி அரேபியாவில் வாழ்ந்து வருகிறார்.

 

(04)மூன்றாவதாகப் பிறந்த   மகன் பெயர் கனியமுதன். 1986 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 -ஆம் நாள் பிறந்த இந்த பிள்ளை பிறந்தது முதல்  உடல்நலப் பிரச்சனைகள்  இருந்தமையால்,  10-01-2013 அன்று தனது 26 –ஆம் அகவையில் காலமானான்.

 

(05)நான்காவதாகப் பிறந்த ஆண்குழந்தையின் பெயர் ஸ்ரீநாத். பொறியியல் பட்டதாரியான இவர் 1994 –ஆம் ஆண்டு, சனவரி மாதம், 29 –ஆம் நாள் பிறந்தவர். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

(06)திரு.இராமலிங்கத்தின் தந்தை திரு.கா.இருளப்ப தேவர் அவர்கள் கடந்த 30-09-2016 அன்று தனது  86 –ஆம் அகவையில் காலமானார். தாயார், திருமதி இராஜம் அம்மையார், இப்பொழுது திரு.இராமலிங்கத்துடன் அவரது  இல்லத்தில் வாழ்ந்து வருகிறார். அவருக்கு இப்போது அகவை 84.

 

(07)திரு.இராமலிங்கத்தின் அத்தை கணவர், ஈசனக்குடி திரு.குழந்தைவேல் பிள்ளை அவர்கள் 25-08-1974 அன்று காலமானார். அத்தை திருமதி செகதாம்பாள் அவர்கள் (அகவை 86) திரு.இராமலிங்கத்துடன் ஈசனக்குடியில் வாழ்ந்து வருகிறார்.

 

முடிவுரை:


வாழ்க்கையில் பல நேரங்களில் சோதனைகளைச் சந்தித்து மனத் துன்பம் அடைந்த திரு.இராமலிங்கம், தன் வாழ்வில் சில சாதனைகளையும்  நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். இரண்டு மகள்களையும்  பொறியியல் பட்டதாரியாக்கி, நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்து, இருவருக்கும் வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் !

 

தன் மகனையும் பொறியியல் பட்டதாரியாக்கி, சென்னையில் நல்ல நிறுவனத்தில் பணி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் ! திரு.இராமலிங்கத்தின் சாதனைகளில் அவர் மனைவி திருமதி திலகவதிக்கும் பெரும் பங்கு உண்டு.

 

திட்டமிட்டுச் செயல்பட்டால் வாழ்வில் உச்சத்தை அடையலாம் என்பதற்கு திரு.இராமலிங்கம்திருமதி திலகவதி இருவருமே சிற ந்த எடுத்துக்காட்டுகள் ! இருவரும் வாழ்வில் மேன்மேலும் உயர்வடைக, நலம் பெறுக, என அன்புடன் வாழ்த்துவோம் !

 

*********************************************************************

இவரது வாழ்க்கை நிகழ்வுகள் ஆண்டு வாரியாக !

(01) 00-00-1952.செகதாம்பாள்குழந்தைவேலர் திருமணம்.

(02) 29-11-1952. முதலாவது புயல்.

(03) 00-00-1953. இருளப்ப தேவர்இராஜம் திருமணம்.

(04) 30-11-1955. இரண்டாவது  புயல்

(05) 00-00-1956. முதற் பிள்ளை காசிநாதன் மறைவு.

(06) 23-10-1958. இராமலிங்கம் பிறப்பு.

(07) 00-00-1964. இராமலிங்கம் 1 –ஆம் வகுப்பில் சேர்வு

(08) 00-06-1970. இராமலிங்கம் 6 –ஆம் வகுப்பில் சேர்வு

(09) 00-06-1973. இராமலிங்கம் 9 –ஆம் வகுப்பில் சேர்வு

(10) 25-08-1974. குழந்தைவேல் பிள்ளை மறைவு

(11) 00-03-1976. இராமலிங்கம் S.S.L.C. தேர்ச்சி

(12) 00-06-1976. புகுமுக வகுப்பில் சேர்வு

(13) 00-06-1979. B.S.c. பட்டப் படிப்பில் சேர்வு

(14) 02-07-1982. இராமலிங்கம்திலகவதி திருமணம்

(15) 11-05-1983. கலையரசி பிறப்பு

(16) 00-00-1984. ஆசிரியர் பயிற்சியில் சேர்வு

(17) 20-02-1985. சங்கீதா பிறப்பு

(18) 00-00-1986. D.T.Ed. தேர்ச்சி

(19) 15-12-1986. கனியமுதன் பிறப்பு.

(20) 21-07-1988. மதுரபாஷானிபுரத்தில் பணியேற்பு

(21) 00-00-1989. ஆண்டாங்கரைக்கு இட மாற்றல்

(22) 00-12-1989. B.Ed. தேர்ச்சி

(23) 00-00-1992. தீவாம்பாள்புரத்திற்கு இடமாற்றல்

(24) 00-05-1992. M.Ed. தேர்ச்சி

(25) 00-00-1994. ஸ்ரீநாத் பிறப்பு.

(26) 00-00-1995. சத்திரம் பள்ளிக்கு இடமாற்றல்

(27) 00-00-1999. பட்டதாரி ஆசிரியராகப் பதவி உயர்வு.

(28) 00-00-2005. எழிலூர் நடுநிலைபள்ளித் தலைமையாசிரியர்

(29) 00-00-2007. சத்திரம் நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர்.

(30) 10-01-2013. கனியமுதன் மறைவு.

(31) 30-09-2016. இருளப்ப தேவர் மறைவு.

(32) 30-04-2017. பணியிலிருந்து ஓய்வுபெறல்.

*******************************************************************************

 


.இராமலிங்கம் அவர்களின் தொடர்பு முகவரி

**************************

.இராமலிங்கம், B.Sc., D.T.Ed., B.Ed, M.Ed.,

ஓய்வுபெற்ற பட்டதாரித் தலைமையாசிரியர்

ஈசனக்குடி,

இராயநல்லூர் (.நி)

மன்னார்குடி (வட்டம்)

அடையெண்: 614 715

எழினி எண்

79045-86512

*************************************************************

 

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, கன்னி (புரட்டாசி) 15]

{01-09-2021}

*************************************************************


திருமதி.திலகவதி - திரு.இராமலிங்கம்.இராமலிங்கம் B.Sc., B.Ed., M.Ed., D.T.Ed.


இராமலிங்கம் B.Sc., B.Ed., M.Ed., D.T.Ed.

திலகவதி M.A., B.Ed., D.T.Ed.
கலையரசி B.E.

திலகவதி M.A., B.Ed., D.T.Ed.

சங்கீதா  B.E.

ஸ்ரீநாத் B.E.

ஸ்ரீநாத் B.E.

[நி/வா] கா.இருளப்ப தேவர்.

இ.இராஜம் அம்மையார்.

[நி/வா] கா.இருளப்ப தேவர்
இ.இராஜம் அம்மையார்.

கு.செகதாம்பாள் அம்மையார்

கு.செகதாம்பாள் அம்மையார்

[நி/வா] S.குழந்தைவேல் பிள்ளை.

[நி/வா] மாரிமுத்து அம்மையார்