என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

மீனாட்சிசுந்தரம்.அ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மீனாட்சிசுந்தரம்.அ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 பிப்ரவரி, 2020

(02) மீனாட்சிசுந்தரம் (திரு.) அ - கடிநெல்வயல்.


அ . மீனாட்சி சுந்தரம் 

கடிநெல்வயல் அ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு 

தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில் 1927 –ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், 10 ஆம் நாள் பிறந்தவர் திரு.மீனாட்சி சுந்தரம். இவரது தந்தையார் பெயர் சீ.அருணாச்சல தேவர். தாயார் மீனாட்சியம்மை. பிறந்து சில மாதங்களிலேயே, தாயாரைப் பறிகொடுத்த திரு. மீனாட்சிசுந்தரம், தனது தாய்வழிப் பாட்டி மற்றும் தாய்வழிச் சிற்றன்னையின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார் !

தொடக்கக் கல்வி:

தனது பிறந்த ஊரான கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில் 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விசயதசமியன்று ஒன்றாம் வகுப்பில் திரு.மீனாட்சிசுந்தரம் சேர்க்கப்பட்டார்.. இளமையிலேயே படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்த திரு.மீனாட்சிசுந்தரம், ஐந்தாம் வகுப்பு வரை அப்பள்ளியிலேயே பயின்றார் !

பள்ளிக் கல்வி:

கடிநெல்வயலிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள ஆயக்காரன்புலத்தில் இயங்கி வந்த இரா. நடேச தேவர் நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் 1938 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 –ஆம் வகுப்பில் சேர்ந்தார்.  7 –ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்து வந்த திரு. மீனாட்சி சுந்தரம், தனது 8 –ஆம் வகுப்புப் படிப்பை திருத்துறைப் பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் தொடந்தார். கடுமையான உணவுத் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் நிலவி வந்த அந்தக் காலச் சூழ்நிலையானது பள்ளிப் பிள்ளைகளுக்கு மிகவும் இன்னல் விளைவித்துப் படிப்பைப் பாதியில் நிறுத்தச் செய்துவந்தது. அந்தச் சூழ்நிலையிலும் கூட , விடாமுயற்சியுடன் தனது படிப்பைத் தொடர்ந்த அவர், 11 ஆம் வகுப்பு (OLD S.S.L.C) வரை அங்கேயே படித்து, தனது பள்ளிக் கல்வியை 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்தார் !

ஆசிரியர் பயிற்சி:

பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்திருந்த இவர், ஆசிரியப் பணியை விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடலானார். இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER) பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு, தஞ்சை இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் (SECONDARY GRADE TEACHER TRAINING SCHOOL) இடம் கிடைத்து 1943 ஆம் ஆண்டு சூன் மாதம் பயிற்சியில் சேர்ந்தார். போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவாகவே இருந்த அந்தக் காலத்தில், 130 கி.மீ தொலைவுக்கு அப்பால் உள்ள முற்றிலும் அறிமுகமில்லா ஊரில்  இரண்டு ஆண்டுகள் தங்கிப் பயிற்சிப் பெற வேண்டிய சூழ்நிலை நிலவியது. எனினும், தனது மன உறுதியால் எதிர்கொண்ட இன்னல்களை எல்லாம் வென்று, வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து ஊர் திரும்பினார் !

பணி ஏற்பு:

பயிற்சி முடித்த சில ஆண்டுகளிலேயே தான் படித்த திருத்துறைப் பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே இவருக்கு இடைநிலை ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைத்தது. பிறந்த ஊரில் தந்தையும், தம்பி ஒருவரும் தனியாக வாழ்ந்து வந்த அந்தச் சூழலிலும், திருத்துறைப் பூண்டியில் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொண்டார் !

திருமணம்:

தன் தாயைக் குழந்தைப் பருவத்திலேயே இவர் இழந்தமையால், இவரது தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதன் விளைவாகத் தன் தாயின் தங்கையே இவருக்குச் சிற்றன்னையாக அமைந்தார். சிற்றன்னையாரும்  சில ஆண்டுகள் கழித்து, ஒரு ஆண் மகவைப் தந்து விட்டு விரைவில் இறந்து போனார். இவரும், இவரது தம்பி சீனிவாசன் என்பவரும் தாயில்லாப் பிள்ளைகளாக வாழ வேண்டிய துன்பச் சூழ்நிலை நிலவியதால், உறவினர்களின் வலியுறுத்தலால் இவர் திருமணம் செய்து கொள்ள  இசைய வேண்டியதாயிற்று

வேதாரணியம் வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரின் ஒரு பகுதியான கல்யாணச்சேரி இராசகோபால் தேவர்அரங்கம்மாள் இணையரின் ஒரே மகளான பார்வதி என்னும் மங்கையை இவர் 1945 ஆம் ஆண்டு, தனது 18 –ஆம் அகவையில் மணந்துகொண்டார் ! இவர் தனது ஒரே மைத்துனரான சிவநேசன் என்பவரையும் சில ஆண்டுகளியே இழக்க நேர்ந்தது, பட்ட காலிலேயே படும் என்னும் பழமொழியை நினைவு படுத்துவதாக  அமைந்திருந்தது !

குடும்பம்:

திரு.மீனாட்சி சுந்தரம்பார்வதி அம்மையார் இணையருக்கு கோவிந்தராசு, இராசேந்திரன், அருட்செல்வன் ஆகிய 3 ஆண் மகவினரும், விசயலட்சுமி, வசந்த கோகிலம், செந்தமிழ்ச் செல்வி, இந்திராணி, பத்மசுந்தரி  ஆகிய ஐந்து பெண் மகவினரும் உள்ளனர் ! இந்த எண்மருள் அறுவர் தாத்தா, பாட்டிகளாக  வாழ்வில் உயர்வடைந்து விட்டனர் என்பது மகிழ்ச்சிக் குரிய செய்தி !

பணியிட மாறுதல்கள்:

திருத்துறைப்பூண்டியில் தனது ஆசிரியப் பணியை 1947 ஆம் ஆண்டு தொடங்கிய இவர், அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் இயங்கிவந்த பல பள்ளிகளிலும் தனது கால் தடத்தைப் பதித்துக் கற்பிக்கும் பணியிலும் முத்திரை பதித்து வந்திருக்கிறார்.. தலைஞாயிறு, ஆயக்காரன்புலம், வேதாரணியம், மகாதேவபட்டினம் எனப் பல ஊர்களிலுமாக  மொத்தம் 38 ஆண்டுகளை மாணாக்கர்களின் அறிவுக் கண்களைத் திறந்து வைக்கும் மேன்மையான பணியில் நல்கி தனது பணிக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் !

பணியிடைக்கால முத்திரைகள்:

வேதாரணியம் அரசு மேனிலைப் பள்ளியில் பணிபுரிகையில், அங்கு அரசு ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கூட்டுறவுச் சங்கத்தை ஏற்படுத்தி, நயப்பு விலையில் மளிகைப் பொருள்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார். மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுதுபொருள்கள் ஆகியவையும் நயப்பு விலையில் கிடைக்கப் பெற்றன ! பள்ளி ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை முன்னின்று நடத்துவதும், விழாவுக்கு முதன்மை விருந்தினரை அழைத்து வந்து அவர்கள் மூலம் பள்ளி மேம்பாட்டுக்கான ஆக்கச்சார்பான உதவிகள் கிடைக்கச் செய்வதிலும் முனைப்பாக  ஈடுபட்டு வந்தார் !

உருவாக்கிய சிற்பங்கள்:

இவர் தனது பணிக்காலத்தில் பல முதல்நிலை மாணாக்கர்களை உருவாக்கி இருக்கிறார். பிற்காலத்தில் புகழ் பெற்ற மருத்துவர்களாகத் திகழ்ந்த சீனிவாசன், விநோதகன், இந்திரசித் ஆகியோர் இவரது மாணவர்களே ! அரசியல் வானில் ஒளிர்ந்த விண்மீன்களான வேதாரணியம் தொகுதி மேனாள்  சட்ட மன்ற உறுப்பினர்களான திரு.மா.மீனாட்சி சுந்தரம், திரு.மா.மாணிக்கம், திரு.எஸ்.காமராசு, திரு.வேதரத்தினம ஆகியோர் இவரது வார்ப்புகளே ! இக்கட்டுரையை வடித்திருக்கும் தமிழ்ப்பணி மன்ற ஆட்சியரும், அவரது சிறிய தந்தை மகனுமாகிய வேதரெத்தினம் எனும் நானும் அவருடைய வார்ப்புதான் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன் !

பொதுப்பணி:

உள்ளூரில் இருக்கும் சிவன் கோயில், மாரியம்மன் கோயில், வேம்படி ஐயனார் கோயில் ஆகிய கோயில்களின் திருப்பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு, இக்கோயிகளில் வளர்ச்சிக்கு இவர் அரிய தொண்டாற்றி இருக்கிறார். இக்கோயில்களின் தக்காராகவும் பொறுப்பேற்றுச் சிறப்புறப் பணியாற்றி இருக்கிறார் !

பணி ஓய்வு:

ஆசிரியப் பணியில் 38 ஆண்டுகளை மகிழ்வுடன் ஒப்படைத்துக் கொண்ட இவர் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் நாள் தனது கற்பிக்கும் உலாவை நிறைவு செய்தார். குமுகாயப் பணியான கற்பிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட இவர், அத்துணை எளிதாகக் குமுகாயத்திலிருந்து   விலகி இருக்க முடியுமா என்ன ?

ஓய்வூதியர் சங்கம்:

வேதாரணியம் வட்டத்தில் 1985 வாக்கில் இயங்கி வந்த ஓய்வூதியர் சங்கத்துடன் இவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. இத்தொடர்பு சில மாதங்களில் இவரை அச்சங்கத்தின் செயலாளராகப் பொறுப்பு ஏற்கச் செய்தது. சங்கத் தலைவராக இருந்த நினைவில் வாழும் திரு..பி.முருகையாத் தேவர் அவர்களுடன் இணைந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்குக் கிடைக்க வேண்டிய பணப் பயன்களைக் கணக்கிட்டு, விண்ணப்பங்களைத் தயாரித்து அளித்தல், உரிய காலத்தில் அவை கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தல் ஆகிய பணிகளில் தம்மை முழு நேர ஊழியராக ஒப்படைத்துக் கொண்டார். ஓய்வூதியர்களின் கோரிக்கைகள் தொடர்பாகப் பல போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார் !

சங்கத் தலைவராக இருந்த திரு க.பி.முருகையாத் தேவர் உடல் நலிவுற்ற பிறகு, தலைவர் பொறுப்பு இவரை வந்தடைந்தது. தன் சொந்த ஊரான கடிநெல்வயலிலிருந்து  காலையில் 9-00 மணி வாக்கில் புறப்படும் இவர், 5 கி.மீ தொலைவில் உள்ள வேதாரணியத்திற்கு சிற்றுந்து மூலம் சென்று சங்கப் பணிகளைக் கவனித்து விட்டு மாலை 6-00 மணிக்கு வீடு திரும்புவதை தனது அன்றாடக் கடமையாக்கிக் கொண்டார். 58 ஆம் அகவையில் தொடங்கிய இப்பணி இவருக்கு 92 அகவை நிறையும் வரைத் தொடர்ந்து கொண்டிருந்தது. மனம் தளராவிட்டாலும், உடல் தளர்ந்து விட்டமையால் கடந்த ஓராண்டாகச் சங்கப் பணிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார் !

சாதனைகள் பல படைத்த சரித்திர நாயகன்  அண்ணன் மீனாட்சி சுந்தரம் அவர்கள் நிறைந்த உடல் நலத்துடன் நீடு வாழ வாழ்த்துவோம் ! வாழ்த்துவதற்கு அகவை ஒரு தடையாகாது ! வாழ்த்துவோம் ! அண்ணன் அ.மீனாட்சிசுந்தரம் – பார்வதி அம்மையார் இணையர் இருவரும் வாழ்க ! வாழ்க ! பல்லாண்டு !  வாழ்க ! வாழ்க ! வாழ்கவே !
*****************************************************************************

தொடர்பு முகவரி:

அ.மீனாட்சிசுந்தரம்,
ஓய்வு பெற்ற ஆசிரியர்,
கடிநெல்வயல் (கிழக்கு) அ.நி.
ஆயக்காரன்புலம் III. (வழி),
வேதாரணியம் வட்டம்,
நாகை மாவட்டம்.
அடையெண்: 613 707.

(திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் 31-05-2020 அன்று கலை 8-20 மணியளவில் இயற்கை எய்தினார்)

-----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),02]
{14-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------




அ.மீனாட்சிசுந்தரம் - பார்வதி அம்மையார்


சீ.அருணாச்சல தேவர்.(தந்தை)

அ.மீனாட்சிசுந்தரம்.
மீ.பார்வதி அம்மையார் (மனைவி)
அ.சீனிவாசன் (தம்பி)
மீ.கோவிந்தராசு (மகன்)





















மீ.பத்மசுந்தரி.