என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

(09) சிங்காரவேலு (திரு) மு - கருப்பம்புலம் .

 

கருப்பம்புலம் தெற்கு திரு.மு.சிங்காரவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு !

 

தோற்றம்:

 

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், அகத்தியன் பள்ளியை அடுத்த பயத்தவரன்காடு என்னும் ரில்  வாழ்ந்து வந்த திரு.K.P.முருகையாத் தேவர்திருமதி.செல்லமணி அம்மையார் இணையரின் இரண்டாவது புதல்வராகத் தோன்றியவர் திரு.   மு.   சிங்காரவேலு.  1947 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 – ஆம் நாள்   (விய ஆண்டு, மாசி மாதம், 3 – ஆம் நாள் சனிக்கிழமை) இவர் பிறந்தார் !

 

பெற்றோர்:

 

கடிநெல்வயல் கீழக்காட்டில்  வாழ்ந்து வந்தவர்கள் திரு..பிச்சையாத் தேவர் திருமதி சீதா இணையர். பின்னாளில் இவர்கள் பயத்தவரன் காட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.  இவர்களது தலைமகனான திரு.முருகையன்  தொடக்கத்தில் காவல் துறையில் பணி புரிந்து, பின்பு இந்தப் பணியை விட்டு விலகி வேதாரணியம் தேவஸ்தான அலுவலகத்தில் பணிபுரியலானார். அடுத்து அரசுப் பணி வாய்ப்பு வந்த போது அதை ஏற்று வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளி அலுவலகத்தில் எழுத்தராக (CLERK) பணியில் சேர்ந்தார். அரசுப் பணி ஏற்ற பிறகு இவர் கருப்பம்புலம் தெற்குக் காட்டைச் சேர்ந்த திரு. கலிதீர்த்தா தேவர் அவர்களின் புதல்வி செல்வி செல்லமணியைத் திருமணம் செய்து கொண்டார் !

 

பிள்ளைகள்:

 

திரு.முருகையாத் தேவர்திருமதி செல்லமணி இணையருக்கு நான்கு ஆண் மகவும், இரண்டு பெண் மகவும் பிறந்தன. இவர்களில் மூத்தபிள்ளை  பெயர்  திரு.ருணாநிதி.  இரண்டாவது பிள்ளை திரு.சிங்காரவேலு; மூன்றாவது பிள்ளை திரு.சுந்தரமூர்த்தி; நான்காவது பிள்ளை திரு.குமரப்பா ! இரண்டு பெண் மக்களில் மூத்தவர் பெயர் மல்லிகா; இளையவர் பெயர் மலர்விழி !

 

தொடக்கக் கல்வி:


1952 – ஆம் ஆண்டு விசய தசமி நாளன்று கைகளில் ஓலைச் சுவடிகளுடன் புத்தாடை மணம் கமழ கருப்பம்புலம் நடுக்காட்டிலுள்ள திரு.P.V.தேவர் தொடக்கப்பள்ளியில் பெயர்ப் பதிவு செய்யப்பெற்று திரு.சிங்காரவேலு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார். தாய்வழிப் பெரியப்பா வீட்டிற்கு அருகிலேயே பள்ளிக்கூடம் இருந்தமையால், பள்ளி செல்வதற்கும் படிப்பில் முன்னணி பெறுவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தது !

 

பள்ளிக்கல்வி:

 

எட்டாம் வகுப்பு வரைத் தன் கல்வியுலாவைக் கருப்பம்புலத்தில் தொடர்ந்த திரு சிங்காரவேலு, சரியான ஆசிரியர் இன்மையால் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாமற் போயிற்று. ஆகையால் அவரது தந்தை, திரு.சிங்காரவேலுவை, வேதாரணியத்தில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து அவரது படிப்பைத் தொடரச் செய்தார்.  8 – ஆம் வகுப்பிலிருந்து 11 – ஆம் வகுப்பு வரை வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து தனது படிப்பை நிறைவு செய்த அவர், பள்ளி இறுதி வகுப்பான 11 –ஆம் வகுப்புத் தேர்வை 1965 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றார். அந்தக் காலத்தில் பள்ளிக் கல்வியானது 11 ஆண்டுப் படிப்பு உடையதாக இருந்தது. 11 ஆண்டுகள் படித்துத் தேர்ச்சி பெறுவோர்க்கு பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி (S.S.L.C. PASS) என்று சான்றிதழ் வழங்கப்படும். SECONDARY SCHOOL LEAVING CERTIFICATE  என்பதன் சுருக்கமே S.S,L.C என்பது !


கல்லூரிக் கல்வி:


திரு. சிங்காரவேலு இளமையிலிருந்தே கருப்பம்புலம் தெற்குக் காட்டிலிருந்த தாய்வழித் தாத்தா திரு.கலிதீர்த்தா தேவருக்கு வளர்ப்புப் பிள்ளை போலவே வாழ்ந்து வந்தார். வேதாரணியத்தில் பள்ளியிறுதி வகுப்புப் படிப்பை நிறைவு செய்ததும், தன் பெயரனைக் கல்லூரியில் படிக்கவைக்க வேண்டும் என்று அவரது தாத்தா ஆசைப்பட்டார் !

 

வரது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தை திரு.K.P.முருகையாத் தேவர் அவர்கள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (PRE-UNIVERSITY COURSE) திரு. சிங்காரவேலுவைச் சேர்த்துவிட்டார்.  கல்லூரிக்கான படிப்புக் கட்டணம், விடுதிக்கான கட்டண முன்பணம்  ஆகியவற்றைச் செலுத்தி, மகனைக் கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார் !

 

கல்லூரிப் படிப்பு இடைநிறுத்தம்:

 

திரு.சிங்காரவேலு 10 நாள் அளவுக்குத் தான் கல்லூரிக்குச் சென்றிருப்பார்; அந்த நிலையில் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாமல் படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். பெயரனைக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்னும் தாத்தாவின் கனவு அத்துடன் கலைந்து போயிற்று !

 

தாத்தாவும் பெயரனும்:

 

கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிய திரு. சிங்காரவேலு கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தன் தாத்தாவுடனேயே அடிக்கடித் தங்கத் தொடங்கினார்.  அங்கிருந்த வேளாண் நிலங்களில் சாகுபடி வேலைகளையும், புகையிலைக் கொல்லையில் புகையிலை மற்றும் மிளகாய் சாகுபடியையும் கவனிப்பதில் தாத்தாவுக்கு உதவி செய்யலானார்.!

 

பெற்றோர் இடப்பெயர்வு:

 

திரு.சிங்காரவேலுவின் தந்தை வழித் தாத்தா திரு.பிச்சையாத் தேவர் தன் மனைவி மக்களுடன் தொடக்கத்தில் கடிநெல்வயலில் குடியிருந்ததாக முன்பத்தி ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அவருக்கு இரண்டு ஆண் மகவும் இரண்டு பெண் மகவும் பிறந்தன. அதன் பிறகே அவர்கள் அகத்தியன் பள்ளியை அடுத்த பயத்தவரன் காட்டில் குடியேறியதாக நினைக்கிறேன். அவரது இரு பிள்ளைகளில் மூத்தவரான திரு.முருகையாத் தேவர் திருமணம் செய்து கொண்டு பயத்த வரன் காட்டிலும், இளையவரான திரு.கந்தசாமி தகட்டூர், ஆதியன் காட்டிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர் !

 

பெண் மக்களில் மூத்தவரான செல்வி முல்லையம்பாள், தகட்டூர் ஆதியன்காடு ஆசிரியர் திரு.வெங்கடாசலத் தேவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். இளையவரான செல்வி பஞ்சவர்ணம் கடிநெல்வயல் திரு.சீ.சண்முக தேவரின் வாழ்க்கைத் துணைவியானார் !

 

கருணா ஆர்ட்ஸ் திரு.கருணாநிதி:


திரு.சிங்காரவேலு 1965 – ஆம் ஆண்டு தன் படிப்பை நிறுத்திய பிறகு கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தன் தாத்தாவுடன் அடிக்கடித் தங்கி வேளாண் பணிகளைக் கவனித்து வந்ததை முன்பத்தியொன்றில் சொல்லியிருக்கிறேன். அவரது அண்ணன் திரு.கருணாநிதிகருணா ஆர்ட்ஸ்என்னும் பெயரில் வேதாரணியத்தில் தனியாக வரைகலைத் தொழில் செய்து வந்தார். அவரது கைவிரல்களில் ஓவிய வரைகலையும், ஈர்ம (PAINTING) வரைகலையும் வாடகையின்றிக் குடியிருந்து வந்தன. ஃதன்றி சிறு அளவில் விளம்பரப் பலகைகள் தயாரித்து நிறுவும் ஒப்பந்தப் பணிகளையும் அவர் ஏற்று நடத்தி வந்தார்!

 

திருமண ஆயத்தப் பணி:


திரு.கருணாநிதி, திரு.சிங்காரவேலு இருவருக்கும் திருமணம் செய்து வைத்திட அவர்கள் தந்தை முயன்று வந்தார். திரு.கருணாநிதிக்கு, கருப்பம்புலம் திரு.சந்திரசேகரன் என்பவரது மகள் செல்வி இராஜத்தைப் பெண் கேட்டுச் சென்று, திருமணமும் முடிவாகியது. இந்த நிலையில் திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நான் பணிபுரிந்து வந்த காலத்தில், திருவெறும்பூர்  இருப்பூர்தி நிலையம் அருகில் குடியிருந்து வந்த என் வீட்டிற்கு திரு முருகையாத் தேவரும் அவரது மருமகன் திரு. சதாசிவ தேவரும் ஒருநாள் வருகை தந்து, திரு.சிங்காரவேலுக்கு என் தங்கை செல்வி சுமதியைப் பெண் கேட்டனர் !

 

திருமணம் முடிவாகியது:


முன்னறிவிப்பு ஏதுமின்றித் திடீரென்று வருகை தந்து பெண் கேட்டதால் நான் திணறிப் போனேன். இது நிகழ்ந்தது 1974 – ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். வீட்டில் அம்மா, தங்கை, என் மனைவி மூவரையும் கலந்து பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று தெரிவித்து அவர்களை வழியனுப்பி வைத்தேன். பின்பு இரண்டொரு நாளில் மூவருடனும் கலந்து பேசி, திருமணத்திற்கு என் இசைவைக் கடிதம் மூலம் தெரிவித்தேன். திருமண நிச்சயதார்த்தம் 1974 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 – ஆம் நாள், நெடும்பலத்தில் என் மாமா வீட்டில் இனிது நடைபெற்றது !

 

சிங்காரவேலு – சுமதி திருமணம்:

 

நிச்சயதார்த்தம் நடந்து அடுத்த பத்தாம் நாள், அதாவது 1974-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒன்றாம் தேதி திரு.சிங்காரவேலுசெல்வி சுமதி திருமணம் கருப்பம்புலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதே நாளில் திரு.சிங்காரவேலுவின் அண்ணன் திரு.மு.கருணாநிதிசெல்வி இராஜம் ஆகியோரின் திருமணமும் அதே மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையர் இருவரும் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தாத்தா திரு.கலிதீர்த்தா தேவர் பாதுகாப்பில் வாழ்ந்து வரலாயினர் !

 

சிங்காரவேலு – சுமதி இணையரின் குழந்தைகள்:

 

திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையருக்கு 1978 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 – ஆம் நாள் ( பிங்கள ஆண்டு, மாசி மாதம், 25 – ஆம் நாள், வியாழக்கிழமை) பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு என் விருப்பப்படி கயல்விழி என்று பெயர் சூட்டப்பட்டது !

 

அடுத்ததாக இரண்டாண்டு இடைவெளியில், அதாவது, 1980 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 – ஆம் நாள் நள்ளிரவு 1-00 மணிக்கு (ரௌத்திரி ஆண்டு, ஆடி மாதம், 25 – ஆம் நாள், சனிக்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நெடுமாறன் என்று நான் பெயர் சூட்டினேன். ஆனால் பள்ளிப் பதிவுகளில் மணிமாறன் என்று பதிவாகியதால்மணிமாறன்என்னும் பெயரே நிலைபெற்று வழங்கி வருகிறது !

 

பெண் கயல்விழியின் திருமணம்:


பெண் குழந்தையான கயல்விழி வளர்ந்து 12 – ஆம் வகுப்பு வரைப் படித்த பின் மேற்படிப்புக்கு வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால், படித்தவரைப் போதும் என்று பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் பஞ்சநதிக் குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த திரு.இளவழகன் என்பவரது மகன் திரு.குலோத்துங்கன் என்பவருக்கு செல்வி கயல்வியை மணம் செய்து வைக்க பெற்றோரும், தந்தை வழித் தாத்தா குடும்பத்தினரும், தாய்மாமா என்ற முறையில் நானும் கலந்து முடிவு செய்தோம். இவர்கள் திருமணம் 2003 – ஆம் ஆண்டு சனவரி மாதம், 20 – ஆம் நாள் ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி, வள்ளுவர் சாலை  காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது !

 

திரு.குலோத்துங்கன் அரியானா மாநிலத்தில் அம்பாலா என்னுமிடத்தில் ஒன்றிய அரசின் படைத்துறைக் காவல் பணியில் (MILITARY POLICE) பணி புரிந்து வருகிறார். திரு.குலோத்துங்கன்திருமதி கயல்விழி இணையருக்கு ஆகாஷ், அஜய்ராஜ் என இரு ஆண் மகவுகள் உள்ளனர். இவர்களில் திரு. ஆகாஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியொன்றில் நுட்பவியல் வாலை (B.TECH) படிப்பில் சேர்ந்து இரண்டாமாண்டுக் கல்வியைத் தொடர்ந்து வருகிறார். திரு.அஜய்ராஜ், நுட்பவியல் வாலை (B.TECH) படிப்பில் சேர ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறார் !

 

பிள்ளை மணிமாறன் படிப்பும் பணியும்:

 

திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையரின் மகன் திரு.மணிமாறன், கருப்பம்புலம் வெங்கடசல தேவர் நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று பள்ளியிறுதி வகுப்பான 10 ஆம் வகுப்புத் தேர்வில் 500 –க்கு 405 மதிப்பெண்கள் (81%) பெற்று  பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார் ! அடுத்து நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பல்தொழிற் பயிற்சிக் கல்லூரியில் குளிர்பதனம் மற்று காற்றுப் பதனம் பட்டயப் படிப்பில் (DIPLOMA IN REFRIGERATION & AIR CONDITIONING) சேர்ந்து பயின்றார் !

 

பட்டயப் படிப்பு நிறைவடைந்த பின்பு, ஓசூரில் ஓரிரு நிறுவனங்களில்  ஓராண்டு காலம் அளவுக்குப் பணி புரிந்தார். அடுத்து கர்நாடக மாநிலம் அத்திப் பள்ளியை அடுத்த ஒரு இடத்தில் அமைந்துள்ள உடுவிடுதி (STAR HOTEL) ஒன்றில் பணி புரிந்து நிறைந்த அனுபவம் பெற்றார். இந்த அனுபவம் அவருக்கு  கோவா மாநிலத்தில் CLUB MAHENDRA என்னும் ஐயுடு விடுதியில் (5 STAR HOTEL) நல்ல பணியில் அமர உதவியது.!

 

ஓசூரில் இருக்கையில் வெளிநாடு செல்வதற்கான கடவுச் சீட்டினை திரு.மணிமாறனுக்கு வாங்கித் தந்திருந்தேன். கடவுச் சீட்டு இருந்தமையால், வளைகுடா நாடுகளில் அவருக்குப் பணி வாய்ப்புக் கிட்டியது. சவுதி, தமாம், துபாய் என அவரது பணியிடங்கள் மாறி மாறி அமைந்து இப்போது அபுதாபியில் THE RITZ-CARLTON என்னும் நிறுவனத்தில் முதன்மைப் பொறியாளராக (CHIEF ENGINEER)  பணி புரிந்து வருகிறார் !

 

மணிமாறன் – அமுதா திருமணம்:


திரு.மணிமாறனின் திருமணம் 2010 –ஆம் ஆண்டு மே மாதம், 23 – ஆம் நாள் நடைபெற்றது. கருப்பம்புலத்தைச் சேர்ந்த திரு. பன்னீர்ச்செல்வம், திருமதி சரோஜா இணையரின் மகள் அமுதா இவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். அமுதா  1985 –ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 9 –ஆம் நாள், வெள்ளிக்கிழமை (குரோதன ஆண்டு, ஆடிமாதம், 25 – ஆம் தேதி) பிறந்தவர் ! இவர்  இப்போது ஆயக்காரன்புலம் அரசு ஆடவர் மேனிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார் !

 

மணிமாறன்- அமுதா இணையரின் குழந்தைகள்:

 

திரு. மணிமாறன்திருமதி அமுதா இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவருள் மூத்த பெண்ணின் பெயர் வேதிகா. இவர் 2011 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 13 – ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை (விக்ருதி ஆண்டு, மாசி மாதம், 1- ஆம் நாள்) பிறந்தார் !

 

இரண்டாவது பெண் இலக்ஷனா, 2014 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 23 – ஆம் நாள் திங்கள் கிழமை (ஜய ஆண்டு, ஆனி மாதம், 9 – ஆம் நாள்) இவர் பிறந்தார். இருவரும், கருப்பம்புலத்தை அடுத்த குரவப் புலத்தில் இயங்கி வரும் POINT CALIMERE INTERNATIONAL SCHOOl என்னும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டப் பள்ளியில் பயின்று வருகின்றனர் !

 

வேதிகா 7 – ஆம் வகுப்பிலும், இலக்‌ஷனா 3 – ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகின்றனர். படிப்பில் இருவரும் படுசுட்டி என்பது இப்போதே நன்கு தெரிகிறது ! இருவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது !


இன்பத்தைத் தொடர்ந்து வந்த  துன்பம்:


திரு.சிங்காரவேலு அவர்களின்  அண்ணன் திரு. மு.கருணாநிதி தனது 60 -ஆம் அகவையில் (01-03-1945 - 29-09-2004) 2004 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29 -ஆம் நாள்  மறைந்து போனார். அவர் மனைவி திருமதி இராஜமும் கடந்த ஆண்டு தனது 67 -ஆம் அகவையில் (10-05-1954 - 22-12-2020) மறைந்தார். திரு.சிங்காரவேலுவின்  தந்தையார் திரு.K.P.முருகையாத் தேவர் 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 20 –ஆம் நாள்  அன்று அகவை முதிர்வின் காரணமாக இப்பூவுலக வாழ்வை நீத்தார்!

 

தாயார் திருமதி செல்லமணி அம்மையாரும் கணவர் மறைந்த ஓராண்டுக் காலத்தில் அதாவது 2008 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 -ஆம் நாள் (வைகாசி, 11) கண்களை மூடி நிரந்தரமாக உறங்கிப் போனார். திரு.சிங்காரவேலு அவர்களின் தம்பி,  திரு.குமரப்பா, ஓய்வு பெற்ற ஆசிரியர் 2019 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24- ஆம் நாள் மீளாத் துயிலில் ஆழ்ந்தார் ! நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் பெருமை படைத்தது அல்லவா இவ்வுலகு !

 

திரு.சிங்காரவேலு அவர்களின் உடன்பிறப்புகள்:


திரு.சிங்காரவேலு அவர்களின் தம்பி திரு,சுந்தரமூர்த்தி மன்னார்குடியில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். மூத்த தங்கை திருமதி மல்லிகா, கடிநெல்வயலில் தன் கணவர் திரு. சதாசிவ தேவர், அத்தை திருமதி பஞ்சவர்ணம் அம்மையார், மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இளைய தங்கை மலர்விழி, பஞ்சநதிக் குளத்தில் தன் கணவர் திரு. சிவராமன் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் !

 

முடிவுரை:

 

தன் மகன் திரு.மணிமாறன் அபுதாபியில் பணிபுரிவதால், திரு.சிங்காரவேலு அவர்கள் தன் மனைவி திருமதி சுமதி, மருமகள் திருமதி அமுதா, பெயர்த்திகள் செல்வி வேதிகா, செல்வி இலக்ஷனா ஆகியோருடன் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் நலமுடன் அமைதியாக  வாழ்ந்து வருகிறார். அவரும் அவர் இல்லத்தினரும் அனைத்து வளங்களும் பெற்று நீடூழி  வாழ உளமார வாழ்த்துவோம் !


-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 29]

{14-08-2022}

-------------------------------------------------------------------------------------

சிங்காரவேலு - சுமதி.

தாத்தாவும் பெயர்த்தியும்.
(22-6-2011-ல் எடுத்த படம்)

முசிங்காரவேலுத் தேவர்
(9-7-2022 அன்று எடுத்த படம்)



சுமதி 
(22-6-2011 அன்று எடுத்த படம்)

சுமதி
(8-1-2018 அன்று எடுத்த படம்)

சுமதி
(9-7-2022 அன்று எடுத்த படம்)




மணிமாறன்




அமுதா
(8-1-2018 அன்று எடுத்த படம்)



அமுதா
(9-7-2022 அன்று எடுத்த படம்)



வேதிகா
(9-7-2022 அன்று எடுத்த படம்)



இலக்‌ஷனா
(9-7-2022 அன்று எடுத்த படம்)




கயல்விழி



K.P.முருகையாத் தேவர்.
(மறைவு நாள்:20-4-2007)



மணிமாறன், அமுதா, வேதிகா, இலக்‌ஷனா




மணிமாறன் குடும்பத்தினர்

















வியாழன், 11 ஆகஸ்ட், 2022

(08) இருளப்ப தேவர் (திரு) கா - கடிநெல்வயல்.

தோற்றம்:

 

நாகப்பட்டினம் மாவட்டம்வேதாரணியம் வட்டம்கடிநெல்யல் என்னும் சிற்றூரில் 1930 –ஆம் ஆண்டுமார்ச்சு மாதம், 23 –ஆம் நாள் (சுக்கில  ஆண்டு, பங்குனி மாதம், 10 –ஆம் நாள்) ஞாயிற்றுகிழமை பிறந்தவர் திரு.கா.இருளப்ப தேவர்அவருடன் நான் உரையாடிப் பதிவு செய்த போது தனது பிறந்த நாள் சுக்கில ஆண்டு, பங்குனி மாதம், 10 –ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை என்பதைத் தெரிவித்ததுடன் ஆங்கிலத் தேதி 18-04-1930 என்றும் தெரிவித்திருந்தார் !

 

பிறந்த நாளில் சிறு மாற்றம்:

 

சுக்கில ஆண்டு பங்குனி மாதம் 10 –ஆம் நாளுக்குச் சமமான ஆங்கிலத் தேதி 23-03-1930 என்பதே சரி. அவர் என்னிடம் தெரிவித்த 18-04-1930 என்பது அவரது பள்ளிச் சான்றுகளின்படி இருந்திருக்கலாம் என்று கருதுகிறேன் !

 

பெற்றோர்:

 

இவரது தந்தை பெயர் சி.காசிநாத தேவர்; இவரது முன்னோர் பிறந்த ஊரும் கடிநெல்வயலே !  தாயார் பெயர் திருமதி மாரிமுத்து அம்மையார்; இவரது முன்னோர் பிறந்த ஊர் திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள வேப்பஞ்சேரி என்னும் சிற்றூராகும் !

 

பெற்றோர் வரலாறு:

 

டிநெல்வயலில் பிறந்துவளர்ந்து வாழ்ந்து மறைந்த,  திரு.நல்லபொதிய தேவரின் மகன் திரு.சிங்காருத் தேவர்இவருக்குப் பிறந்த ஆண்மக்கள் இருவர்மூத்தவர் திரு.காசிநாத தேவர்இளையவர் திரு. வைத்தியநாத தேவர்திருத்துறைப் பூண்டி அருகிலுள்ள வேப்பஞ் சேரியில்  வாழ்ந்து வந்த திரு.இராமசாமித் தேவரின் மகள் செல்வி மாரிமுத்துவை திரு.காசிநாத தேவர் மணந்துகொண்டார் !

 

உடன்பிறப்புகள்:

 

திரு.காசிநாத தேவர் – திருமதி மாரிமுத்து அம்மையார் இணையருக்கு  இரு ஆண்மக்களும் ஒரு பெண் மகவும் பிறந்தனர்மூவரில் மூத்த குழந்தையின் பெயர் இருளப்பன்பஞ்சநதிக்குளம் இருளப்பசாமியின் நினைவாக வைத்த பெயர்இவர் 1930 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 23 - ஆம் நாள் பிறந்தார். (சுக்கில ஆண்டு  பங்குனி மாதம், 10 –ஆம் நாள்) !

 

அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் செகதாம்பாள்இவர் 1934 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 – ஆம் நாள் பிறந்தார் (ஸ்ரீமுக ஆண்டு, மாசி மாதம், 16-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை) திருமதி ஜெகதாம்பாள் அவர்களிடம் நான் நேரில் கேட்டுச் செய்யப் பெற்ற பதிவு இது !

 

மூன்றாவது குழந்தையின் பெயர் நடராசன்இவர் 1938 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 – ஆம் நாள் பிறந்தார். (ஈஸ்வர ஆண்டு, தை, மாதம் 06 -ஆம் நாள் புதன்கிழமை) !

 

தொடக்கக் கல்வி:

 

திரு.இருளப்பன் தனது  5 - ஆம் அகவையில் கடிநெல்வயலில் உள்ள அரசினர் தொடக்கப் பள்ளியில் தன் கல்வியுலாவைத் தொடங்கினார். 1935 –ஆம் ஆண்டு விசயதசமி நாளன்று கைகளில் ஓலைச் சுவடியுடன் ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த இவர்  5 –ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் பயின்று தன் தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார்  !

 

பள்ளிக் கல்வி:

 

தொடக்கக் கல்வியை அடுத்து  திரு.இருளப்பன்  1940 ஆம் ஆண்டு சூன் மாதம் திருத்துறைப்பூண்டியில்   உள் மாவட்டக் கழக (அரசினர்) உயர்நிலைப் பள்ளியில்  6 –ஆம் வகுப்பில் சேர்ந்தார் .  வேப்பஞ்சேரியில் இருந்த தன் தாய் வழித் தாத்தா வீட்டில் தங்கிக்கொண்டு  6    மற்றும் 7 –ஆம் வகுப்புகளை அங்கேயே படித்த திரு இருளப்பன், 8 –ஆம் வகுப்பு படிக்கும் போது திருத்துறைப் பூண்டி, தச்சன் குளம் தென்கரையில் இருந்த தகட்டூர் தாயுமானவ தேவர் வளமனையில் (BUNGALOW)  தங்கிப் படித்து வந்தார் !

 

அப்போது ஆசிரியர் பணியிலிருந்து திரு.மீனாட்சிசுந்தரம் அவர்களும் திரு.இருளப்பனுடன் தங்கிப் பள்ளிக்குச் சென்று வந்தார். தென்னடார் திரு சண்முக தேவர் அவர்கள் தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் இதே வளமனையில் தன் பிள்ளைகளின் படிப்பை முன்னிட்டுத் தங்கியிருந்தார் !


பள்ளிக் கல்வி நிறைவு:

 

திரு.இருளப்பன் அவர்களும் திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களும் திருத்துறைப் பூண்டியில் தங்கிப் படித்து வந்த / பணி புரிந்து வந்த அக்காலத்தில் தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் கடுமையாக இருந்தது. உணவுப் பொருள் வழங்கல் கடையில் (RATION SHOP) வழங்கப் பெற்று வந்த தரமற்ற அரியை வாங்கி அவர்கள் சமைத்து உண்ண வேண்டியதாயிற்று. அவர்களுக்குச் சமையல் செய்துகொடுக்கும் உதவியை தென்னடார் திரு சண்முகதேவர் அவர்களின் மனைவி திருமதி தெய்வயானை அம்மையார் நல்கிவந்தார் !

 

சரியான சாப்பாடு கிடைக்காததாலும், பெற்றோர்களைப் பிரிந்து வெளியூரில் தங்கிப் படித்ததாலும் திரு.இருளப்பன் அவர்களுக்கு உடல்நலச் சோர்வு ஏற்பட்டு இன்னற்பட்டு வந்தார். படித்தவரைபோதும் உடல் நலம் தான் முக்கியம் என்று பெற்றோர் கருதியதால், எட்டாம் வகுப்புத் தேர்வு எழுதிய பின்பு, மேற்படிப்பைத் தொடராமல்  அவர் கடிநெல்வயலுக்கு வந்துவிட்டார். அப்போது எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்களுக்கு E.S.L.C (ELEMENTARY SCHOOL LEAVING CERTIFICATE) தேர்ச்சி எனச் சான்று வழங்கி வந்தனர். இவ்வாறு 1943 –ஆம் ஆண்டுடன் திரு இருளப்பன் அவர்களின் படிப்பு முடிவுக்கு வந்தது !

 

இடைநிகழ்வு - தந்தை மறைவு:

 

திரு.இருளப்பன் அவர்கள் தனது தந்தையுடன் இணைந்து கடிநெல்வயலில் இருந்த தங்கள் நிலத்தில் வேளாண்மைப் பணிகளைத் கவனித்து வந்தார். 1948 –ஆம் ஆண்டு இறுதி வாக்கில் திரு.இருளப்பன் அவர்களின் தந்தை திரு.காசிநாத தேவர்,  வேப்பஞ் சேரியில் இருந்த தனது நிலத்தின் அறுவடைப் பணியின்   நிமித்தம்  அங்கு சென்றிருந்தார்.   அந்த   நேரத்தில் அவருக்கு வாந்தி பேதி  (CHOLERA) ஏற்பட்டு, முதலுதவி  மருத்துவம் பார்த்துக் கொண்டு, திருத்துறைப்பூண்டி சென்று அங்கிருந்து தொடர்வண்டி  (TRAIN)  மூலம் அகத்தியன் பள்ளி நிலையத்தில்  வந்து இறங்கினார்  !

 

வாந்திபேதி அவரது உடல்நிலையை நலிவடையச் செய்தது. அகத்தியன் பள்ளியிலிருந்து மாட்டுவண்டி மூலம், அவரைக் கடிநெல்வயல் அழைத்து வந்தனர். கடிநெல்வயலை நெருங்க நெருங்க அவர் உயிர் ஊசலாடத் தொடங்கியது. ஆலடிக் குளத்திற்கு வடக்கில்  பின்னாளில் நாவிதர் வடிவேலு குடியிருந்த மனைவரை வந்த மாட்டுவண்டி,  அங்கிருந்து வீடு வரை வருவதற்கு வண்டிச்சாலை இல்லாததால் அங்கேயே நின்றுவிட்டது !

 

ஒரு கயிற்றுக் கட்டிலில்  அவரைப்  படுக்க வைத்து அங்கிருந்து  கட்டிலுடன் தூக்கிவந்தனர். இப்போது பெரிய பண்ணை வீடு என்று சொல்லப்படும் திரு.அருணாச்சல தேவர் வாழ்ந்த வீட்டில் தான் அவரது தம்பியர் சாம்பசிவ தேவர், சண்முகவேல் தேவர் ஆகியோரும், திரு.காசிநாத தேவர், அவரது தம்பி வைத்தியநாத தேவர் ஆகியோரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். திரு.காசிநாத தேவர்  வீட்டிற்கு வந்து சேரும் வரை இருந்த உயிர்,  இரண்டொரு நாழிகைகளில் அவரை விட்டுப் பிரிந்துவிட்டது. 1948 –ஆம் ஆண்டு இறுதியில் திரு.காசிநாத தேவர் எனப்படும் என் பெரியப்பா மறைந்த போது  எனக்கு அகவை நான்கு. அவரது இறப்பு நிகழ்வு அனைத்தும் மெல்லிய   னிப்படலக்   காட்சிகளாக என் மனத்தில் இன்றும் நிலைத்திருக்கிறது !

 

 திரு.இருளப்பன் அவர்கள் சந்தித்த சோதனைகள்;

 

மூத்தவரான திரு.இருளப்பதேவருக்கு  18 அகவை ஆகும்போது அவரது தந்தை திரு. காசிநாத தேவர் 1948 –ஆம் ஆண்டு மறைந்து போனார்குடும்பம் என்னும் தேரினை இழுத்துச் செல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் திரு.இருளப்ப தேவர் அவர்களின் தோள்களில் வந்து இறங்கியதுதலைவனை இழந்த  குடும்பத்திற்காக  அந்த இளம் அகவையிலேயே   அவர் தனியாகப் போராட வேண்டியிருந்தது !

 

அந்த முகைப் பருவத்திலேயே (TEEN-AGE) அகவை முதிர்ச்சி பெற்ற மனிதனைப் போல் தங்கள் குடும்பத்திற்காக புதிதாக   ஒரு ஓட்டு வீடு கட்டிக் கொள்ளும் பணிகளில் திரு. இருளப்ப தேவர் இறங்கினார். 1950 –ஆம் ஆண்டு இந்த வீடு கட்டப்பட்டதாக எனக்கு நினைவு. வீட்டிற்காக  வேப்ப முளையடித்து, நூற்கயிறு கட்டி  மனை போட்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது, ஆனால், வீடு கட்டப்பட்டதும் பெரிய பண்ணை வீட்டிலிருந்து திரு. இருளப்பன் அவர்கள் தன் தாயார், தம்பி, தங்கையுடன் இடம்பெயர்ந்து புதிய வீட்டில் குடியேறியது இப்போது எனக்கு நினைவில் இல்லை. [இந்த வீடு 70 ஆண்டுகளுக்குப் பிறகு 2020 – ஆம் ஆண்டு இடிக்கப் பெற்று, அந்த இடத்தில்  இப்போது ஒட்டுக் கட்ட்டம் (R.C.C.BUILDING) கட்டப்பெற்று வருகிறது]

 

புதிய வீட்டிற்கு நீராதாரத்திற்கு கிணறு வேண்டுமே ! அந்தப் பணியையும் திரு.இருளப்ப தேவர் செய்து முடித்தார். திரு.எறும்பன் என்பவரது தலைமையில் ஏறத்தாழ முப்பது பேர் ஈடுபட்டு, கிணறு தோண்டிய நிகழ்வு இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது ! வீட்டைக் கட்டியாயிற்று, அடுத்து செய்ய வேண்டியது திருமணம் தானே !

 

ஆம் ! தன் தங்கை செல்வி செகதாம்பாளை ஈசனக்குடி திரு.எஸ். குழந்தைவேல் பிள்ளையின் வாழ்க்கைத் துணைவியாக இணைத்து வைக்கும் திருமண விழாவை திரு.இருளப்ப தேவர் 1951 –ஆம் ஆண்டு பிற்பகுதியில் நடத்திக் காட்டினார். 21 அகவையாகும் ஒரு ஆடவன் தன் தங்கைக்குத் திருமணம் நடத்தி வைப்பதென்பது இக்காலத்தில் நினைத்துக் கூடப் பார்க்கமுடியாத செயல் !

 

திரு.இருளப்ப தேவர்திருநடராச தேவர் ஆகியோரின்  ஒரே பெண்பால் உடன்பிறப்பான செல்வி செகதாம்பாள்ஈசனக்குடி திரு.குழந்தைவேல் பிள்ளையின் வாழ்க்கைத் துணைவியானார். இப்போது நிகழும் 2022 – ஆம் ஆண்டில் திருமதி செகதாம்பாளுக்கு அகவை  88  ஆகிறதுதிரு குழந்தைவேல் பிள்ளை   அவர்கள்   25-08-1974  அன்று காலமாகிவிட்டதால், திருமதி செகதாம்பாள்  அவர்கள் தன் அண்ணன் மகன் திரு.இராமலிங்கம் குடும்பத்தினருடன்    மன்னார்குடி  வட்டம்   ஈசனக்குடியில் இப்போது வாழ்ந்து வருகிறார் !

 

திருமதி செகதாம்பாள் திரு.குழந்தைவேல் பிள்ளை இணையர் 1952 –ஆம் ஆண்டு கோட்டூர் அருகிலுள்ள கோமாளப்பேட்டை என்னும் ஊரில் வாழ்ந்து வருகையில் அந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 –ஆம் நாள் கடுமையான புயல் ஒன்று தோன்றியது.. மாலை 5-00 மணிக்குத் தொடங்கிய அந்தப் புயல் மறுநாள் மதியம் தான் ஓய்ந்தது. அந்தப் புயலின் போது  எட்டு அகவையான நான் கோமாளப்பேட்டையில்  அக்காள் வீட்டில் மாட்டிக் கொண்டது இப்போதும் கூடப் பசுமையாக நினைவிலிருக்கிறது !

 

தங்கையின் திருமணத்தை நடத்திய திரு. இருளப்பதேவர், அடுத்து தன் திருமணத்தை நிறைவேற்ற வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். பெரியப்பா திரு.சீ.அருணாச்சல தேவர், என் தந்தை திரு.சி.வைத்தியநாத தேவர் ஆகியோர் எடுத்த முன் முயற்சியின் விளைவாக, ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தி, திரு.சுப்பையாத் தேவர், திருமதி அமிர்தவல்லி இணையரின் நான்காவது மகளான செல்வி. இராஜம் என்பவர்  திரு.இருளப்ப தேவரின் வாழ்க்கைத் துணைவியானார் !

 

இவர்கள் திருமணம் 1954 –ஆம் ஆண்டு சூன் மாதம் 20 –ஆம் நாள் நடைபெற்றது. (ஜய ஆண்டு, ஆனி மாதம், 5 –ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை) அப்போது திரு.இருளப்ப தேவரின் அகவை இருபத்து நான்கு !

 

பட்டாமணியார் பணி:

 

கடிநெல்வயல் கிராம அதிகாரியாக (பட்டாமணியார்) (VILLAGE HEAD MUNSIFF)  பணியாற்றி வந்த திரு.K.S.நடேச தேவர் என்பவர் அகவை முதிர்வு காரணமாக உடல் தளர்ச்சியுற்று இருந்தார். அவர் மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பே காலமாகி இருந்தார். அவர்களுக்குப் பிள்ளைகளும் இல்லை. ஆதரிப்பார் யாருமில்லாத  நிலையில், திரு.இருளப்ப தேவர் அவர்கள், அவரைத் தன் வீட்டில் தங்க வைத்துப் பேணிவர முன்வந்தார். திரு.இருளப்ப தேவர் வீட்டில் அடைக்கலம் புகுந்த திரு.K.S.நடேச தேவர், தான் வகித்து வந்த கிராம அதிகாரி (பட்டாமணியார்) (V.H.M)  பதவியை திரு.இருளப்ப தேவருக்கு விட்டுக்  கொடுக்க முன்வந்தார் !

 

அந்தக் காலத்தில் கிராம அதிகாரி (பட்டாமணியார்) (V.H.M)  பதவிக்கு அகவை மேல்வரம்பு கிடையாது. இறக்கும் வரை ஒருவர் அப்பதவியில் தொடரலாம். இந்த நிலையில் திரு.K.S.நடேச தேவர், தான் வகித்து வந்த கிராம அதிகாரி (பட்டாமணியார்) (V.H.M)  பதவியை திரு.இருளப்ப தேவருக்கு விட்டுக் கொடுக்க விரும்புவதாகவும் தனக்குப் பதில் அவரை அந்தப் பதவியில் அமர்வு செய்து ஆணை வழங்குமாறும் நாகப்பட்டினம் வருவாய்க் கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தார் !

 

திரு.நடேச தேவரின் கோரிக்கையை ஏற்று, அவரை அந்தப் பதவியிலிருந்து விடுவித்தும், திரு.இருளப்ப தேவரை கடிநெல்வயல் கிராம அதிகாரியாக (V.H.M) தற்காலிகமாக அமர்வு செய்தும் 1955 –ஆம் ஆண்டு நாகை வருவாய்க் கோட்டாட்சியர் ஆணை வழங்கினார். அவரது ஆணைக்கிணங்க 01-02-1955 முதல் தற்காலிக நிலையில் திரு.இருளப்ப தேவர் அவர்கள் கடிநெல்வயலின் கிராம அதிகாரியாக  (பட்டாமணியார்) (V.H.M)  பணிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டார் !

 

அப்போது திரு. V.சுவாமிநாத ஐயர் என்பவர் கர்ணம் (கணக்கப்பிள்ளை). திரு.தர்மலிங்க தேவர் (வெட்டி), திரு,அஞ்சான் (தலையாரி) இருவரும் கிராம உதவியாளர்களாகப் பணி புரிந்து வந்தனர். அடுத்த ஓரிரு ஆண்டுகளில் திரு.தர்மலிங்க தேவர் சிங்கப்பூர் சென்றுவிட, அவரது இடத்தில் திரு.சுப்ரமணிய தேவர் கிராம  உதவியாளர் (வெட்டி) பணிப் பொறுப்பில் அமர்வு பெற்றார். திரு.இருளப்ப தேவரின் தற்காலிகப் பதவி 24-10-1957 முதல் நிலைப்பணியாக (REGULAR) மாற்றப்பட்டது !

 

தற்காலிகப் பணிப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் 1955 –ஆம் ஆண்டு ஏற்பட்ட (இரண்டாவது) புயலினால் பெரும் இழப்புகளைச் சந்தித்து உண்பதற்குக் கூட உணவுப் பொருள் இல்லாமல் தவித்த கடிநெல்வயல் மக்களுக்கு, வெள்ளத்தில் தன் உதவியாளர்களுடன் நீந்திச் சென்று வேதாரணியம் வட்டார வளர்ச்சி அலுவலரைச் சந்தித்து, அரிசி மூட்டைகளையும், பாற் பொடிப் பொதிகளையும் பெற்று, படகில் ஏற்றிக்கொண்டு சாயும்புலத்தை (சாம்பலம்)  கடந்து வந்து தச்சன்சாலை வழியாக மு..தனசாமிப் பிள்ளையின் மாட்டுக் கொட்டிலில் கொண்டு வந்து இறக்கி, அங்கேயே சோறாக்கிக் கொடுத்து மக்களின் பசி தீர்த்த அந்தக் காட்சி இன்றும் என் நினைவில் பசுமையாக நிழலாடுகிறது. அப்போது எனக்கு அகவை பதினொன்று !

 

கூட்டுக் குடும்பம்:

 

திரு.இருளப்ப தேவர் திருமதி இராசம்மாள், தம்பி  திரு.நடராச தேவர், தாயார் திருமதி மாரிமுத்து அம்மையார் நால்வரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தனர். வீட்டிலேயே மளிகைக் கடை ஒன்றையும் திரு.இருளப்ப தேவர் தொடங்கினார். தாயார் திருமதி மாரிமுத்து அம்மையார், கடையை முழுநேரமும் கவனித்துக் கொண்டார் !

 

திரு.இருளப்ப தேவர் திருமதி இராசம் அம்மையாருக்கு தலைமகனாகப் பிறந்த காசிநாதன் இளமையிலேயே மரித்துப் போனான். அப்போது அவனுக்கு இரண்டு அகவை இருக்கலாம். நடப்பா திரு.சாம்பசிவ தேவரின் இரண்டாவது மகள் செல்வி பாலசுந்தரியின் திருமணம் பஞ்சநதிக்குளம் கீழக் காட்டில் காலையில் நடைபெற்றது. மாலையில் கடிநெல்வயலில் குழந்தை காசிநாதன் தன் வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டான் ! இந்த நிகழ்வு நடைபெற்றது 1957 –ஆம் ஆண்டின் முற்பகுதியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன் !

 

இந்தத் துன்ப நிகழ்வு திரு.இருளப்ப தேவரின் குடும்பத்தில் ஆறாத புண்ணாக அமைந்துவிட்டது. துன்பம் நீடித்தால் எந்தக் குடும்பமும் நொறுங்கிப் போகுமல்லவா ? குடும்பத்தில் நிலவி வந்த வந்த துன்ப உணர்வைத் துடைத்து மகிழ்ச்சியை நிலைநிறுத்த திரு.இருளப்ப தேவர் திருமதி இராசம் அம்மையார் இணையருக்கு  இரண்டாவதாக ஒரு ஆண்  குழந்தை 1958 –ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23 –ஆம் நாள் பிறந்தது. இராமலிங்கம் என்று பெயர் சூட்டி வளர்த்த இந்தக் குழந்தை தான்  இவர்களின் ஒரே வாரிசாக அமைந்தது !

 

தம்பியின் திருமணம்:

 

இந்த நிலையில், 1960 –ஆம் ஆண்டு சூன் மாதம் முதல் இடைநிலை ஆசிரியராகப் பணி புரிந்து வந்த தன் தம்பி திரு.கா.நடராச தேவரின் திருமணத்தை 1962 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தினார்  திரு.இருளப்ப தேவர். தன் மனைவியின் தங்கையான செல்வி அலர்மேல் மங்கையை தன் தம்பிக்கு வாழ்க்கைத் துணைவியாக்கினார் ! இவர்களுக்கு இரண்டு ஆண் மகவும் ஒரு பெண் மகவும் பிறந்தன. இவர்கள் அனைவருக்கும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் !

 

தன்  திருமணத்தைச் சிறப்புடன்  நடத்திக் காட்டியதுதங்கையின் திருமணம், தம்பியின் திருமணம் ஆகியவற்றைக் காலாகாலத்தில் செய்து  காட்டியதுபோன்ற செயல்களைத் துணிவுடன் நிகழ்த்திக் காட்டிய திரு.இருளப்ப தேவர் கடிநெல்வயல் கிராம  அதிகாரியாக  (பட்டாமணியார் – VILLAGE MUNSIFF ) நெடுங்காலம் பணிபுரிந்தார்.  தனது பணிக்காலத்தில் ஊர்ப் மக்களுடன் நல்லுறவை பேணி வந்த திரு இருளப்ப தேவர், ஊர் மக்களின் அன்புக்குரிய செல்லப்பிள்ளையாகத் திகழ்ந்தார் !

 

தனது பணிக்காலத்தில் கருப்பம்புலம் திரு வெங்கடாசல தேவர் அவர்கள் முன்னிலையில் பொன்னையன் காடு திரு.கணபதித் தேவ்ர்  வீட்டின் அருகிலிருந்து ஆலடிக் குளம் வரை வண்டிகள் செல்லும் வகையில்  சாலை வசதியை ஏற்படுத்தித் தந்தார். கோடைக் காலத்தில் உப்பளத்தில் மண் கெட்டியாக இல்லாமல் பொருமலாக இருக்கும். ஆடி மாதம் அடிக்கும் காற்றினால் அந்த உப்பு மண் காற்றுடன் கலந்து கடிநெல்வயல் ஊர் முழுதும் படிந்து வயல்வெளிகளைப் பாழ்படுத்தி வந்தது. ஊர் முழுதும் புகை மண்டலமாகக்தான்  காட்சியளிக்கும். !

 

இதிலிருந்து ஊரினைக் காப்பாற்ற, அப்போது வேதாரணியம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகப் பணி புரிந்து வந்த சந்திரசேகரன் என்பவருடன் கலந்து ஆலோசனை செய்து, ஆஸ்திரேலியாவிலிருந்து வேலிக் கருவை விதைகளை இறக்குமதி செய்து, கடிநெல்வலின் தென்பகுதியான முட்டகம் முழுவதும், விதைகளை ஊன்றி, செடிகளை வளர்த்து, பெரிய வனம் போல உருவாக்கச் செய்தார். இந்த வேலிக்கருவைச் செடிகள் வேகமாக வளர்ந்து, உப்பு மண் ஊருக்குள் வந்து படியாமல் தடுப்பு அரணாக விளங்கியது !

 

1952 மற்றும் 1955ஆம் ஆண்டுகளில் மூன்றாண்டு இடைவெளியில் ஏற்பட்ட இரண்டு புயல்களினால் கடிநெல்வயலில் இருந்த மரங்களில் 75% அளவுக்கு வேரோடு சாய்ந்து விட்டமையால், அடுத்து வந்த ஆண்டுகளில் விறகுப் பஞ்சம் ஏற்பட்டது.. முட்டகத்தில் வளர்ந்திருந்த வேலிக் கருவைமரங்கள், கடிநெல்வயல் மக்களின் விறகுப் பஞ்சத்தைப் பெருமளவு போக்கியது !

 

 பதவிப் பறிப்பு:

 

கிராம  அதிகாரிகளாகப் பணியாற்றி வந்த பட்டாமணியார், கணக்கப் பிள்ளை ஆகியோருக்கு அரசுச் சம்பளம் என்பது பெயரளவுக்கே அக்காலத்தில் இருந்து வந்தது. இந்தப் பதவிகள் மதிப்புறு பதவிகளாகக் கருதப் பெற்றனவே தவிர வருமானம் தரும் பதவிகளாகக் கருதப் பெறவில்லை. தமிழ்நாட்டில் திரு..கோ.இரா (M.G.R) ஆட்சி நடந்துவந்த போது 13-11-1980 அன்று ஒரு அவசரச் சட்டம் மூலம் இந்தப் பதவிகளை ஒழித்தார். திரு ம.கோ.இரா. ஒரேயொரு உத்தரவின் மூலம் ஏறத்தாழ 5000 பேரின் பதவிகளை பறித்து, அவர்கள் குடும்பங்களைத் துன்பத்தில் தவிக்க விட்ட கொடுமையான ஒரு செயலை நிறைவேற்றினார். இந்த உத்தரவின் மூலம் தான் வகித்து வந்த பட்டாமணியார் பதவியை திரு.இருளப்பதேவர் இழந்தார் !

 

தாயார் மறைவு:

 

அகவை 18 நடைபெறுகையில் தன் தந்தையை இழந்த திரு.இருளப்பத்தேவர் அகவை 65 நடைபெறுகையில்  –  அதாவது  27-02-1995 அன்று - தனது அன்னை திருமதி மாரிமுத்து அம்மையாரை  இழந்தார். நடைபயிலும் பருவம் முதல் தனது தலைப்பிள்ளையை விரல் பற்றி வழிநடத்தி வந்த மாரிமுத்து அம்மையார்  65 ஆண்டுகளுக்குப் பின் விழிகளை மூடி நித்திரையில் ஆழ்ந்தார் !

 

வீரன் கோயில் திருவிழா:


கடிநெல்வயலில் அம்பலத்தாடியார் காடு என்னுமிடத்தில் ஊரின் காவல் தெய்வமான வீரன் கோயில் ஒன்று மிகவும் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. திரு.இருளப்ப தேவர் அவர்கள் பெரு முயற்சிசெய்து, மக்களிடம் நன்கொடை திரட்டி, இந்தக் கோயிலை எடுத்துக்கட்டி, குடமுழுக்குச் செய்ததுடன், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் முதல் நாளன்று இந்தக் கோயிலில் திருவிழாவையும் நடத்தி வந்தார் !

 

இருளப்ப தேவர் மறைவு;


ஊருக்காக உழைத்த உன்னத மனிதர், அவைவரிடமும் அன்பு பாராட்டிய அருளாளர், தன் இறுதிக் காலத்தில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கிப் போனார். நோயுடனேயே போராடிப் போராடி  இளைப்புற்ற அவர்  இறுதியில் 2016 – ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30- ஆம் நாள்  தனது  87 –ஆம் அகவையில் காலமானார் !

 

முடிவுரை:

 

இயல்பாகவே அனைவரிடமும் அன்புள்ளமும் பிறருக்கு உதவும் பரிவு மனமும் கொண்டவர்வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட துன்பங்களைப் போல் வேறு யாருக்கும் வரலாகாது என்று எண்ணுபவர்நல்லுள்ளம் படைத்த அவர் மறைந்தாலும் அவரது புகழும் புன்னகை பூத்திருக்கும் அவரது முகமும் என்றென்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும் !  

-------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmal.com)

ஆட்சியர்,

தமிழ் நட்புவலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 26]

{11-08-2022}

--------------------------------------------------------------------------------------------

கா.இருளப்ப தேவர் (பிறந்த  நாள்: 23-03-1930)


கா.இருளப்ப தேவர் (மறைந்த  நாள்: 30-09-2016)


கா.இருளப்ப தேவர்

கா.மாரிமுத்து அம்மையார் (மறைவு நாள்: 27-02-1995)

இராஜம் இருளப்ப தேவர்.

இராஜம் இருளப்ப தேவர்.


இராஜம்மாள் இருளப்ப தேவர் (படம் எடுத்த நாள் 9-7-2022)


அலர்மேல்மங்கை (மறைவு நாள்; 08-02-2022)

S.குழந்தைவேல் பிள்ளை (மறைவு நாள்: 25-08-1974)



       
ஜெகதாம்பாள் (படம் எடுத்த ஆண்டு: 1953)



ஜெகதாம்பாள் (படம் எடுத்த நாள் 6-8-2015)



ஜெகதாம்பாள் (படம் எடுத்த நாள் 9-7-2022)


இ.இராமலிங்கம் (படம் எடுத்த நாள் 9-7-2022)


திலகவதி  இராமலிங்கம் (படம் எடுத்த நாள் 9-7-2022)