என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வேதரெத்தினம்.வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதரெத்தினம்.வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

(01) கடிநெல்வயல் (திரு) வை.வேதரெத்தினம் - வாழ்க்கை வரலாறு !



வை . வேதரெத்தினம் 

கடிநெல்வயல்

வை. வேதரெத்தினம்  அவர்களின்  வாழ்க்கை வரலாறு !

 

முகவுரை.

கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, பின்பு சிலகாலம் திருத்துறைப்பூண்டியில் மாமா வீட்டில் வாழ்ந்து,  அதன் பின் அரசுப் பணியேற்றுப் பல ஊர்களிலும் பணிபுரிந்து, பணி ஓய்வுக்குப் பின் தஞ்சாவூரில் சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு வாழ்ந்து,  இறுதியில் 2019 – ஆம் ஆண்டு மே மாதம் 20 – ஆம் நாள்  (20-05-2019) ஓசூருக்கு நிலையாகக் குடிபெயர்ந்து, இப்போது ஓசூரில்  வாழ்ந்து வரும் எனது வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ,  திருத்தம் செய்யவோ, எதையும் புதிதாகக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாதது. நிரம்ப வரலாற்றுச் செய்திகள் அடங்கியுள்ள  இந்தப் பக்கத்தை திறந்து பார்க்க கூகுளில்  https://thamizhnatpu.blogspot.com   என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான்!   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம்" திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !

 

தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில் 1944 ஆம் ஆண்டு,  ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் (29-04-1944) சனிக்கிழமை  திரு.வேதரெத்தினம் என்னும் நான் பிறந்தேன்.  என்  தந்தையார் பெயர் திரு.சி.வைத்தியநாதன். தாயார் பெயர் சாரதா அம்மையார் !

 

முன்னோரின் கொடிவழி: 

என் முன்னோரின் கொடிவழி அட்டவணை விவரம் அடியில் தரப்பட்டுள்ளது. 

=====================================================

                                      மாரியப்ப தேவர் 

                                                     ↧↧↧

                                   நல்லபொதிய  தேவர்

                            ↧↧↧                                                ↧↧↧ 

   சீனிவாச தேவர் /                                     சிங்காருத் தேவர் /

    (மனைவி) நீலாம்பாள்                          (மனைவி) பிரகதாம்பாள் 

                     ↧↧↧                                                                            ↧↧↧      

(கிளை-01) அருணாச்சலம்  /                  (கிளை- (01) காசிநாத தேவர்  /

 (மனைவி) மீனாட்சி                                  (மனைவி) மாரிமுத்து                          

                           ↧↧↧                                                              ↧↧↧

 (01) (மீனாட்சிசுந்தரம் /                           (01) (இருளப்ப தேவர்  /

 (மனைவி) பார்வதி அம்மையார் )   (மனைவி) இராஜம் அம்மையார்)


 (02) (சீனிவாசன் /                                          (02) (நடராசன்/

(மனைவி) ஆனந்தி)                                    (மனைவி) அலர்மேல் மங்கை)


(கிளை-(02) சாம்பசிவ தேவர் /              (கிளை-(02) வைத்தியநாதன்  /

 (மனைவி)  வீரம்மாள்                                (மனைவி) சாரதா

                        ↧↧↧                                                                  ↧↧↧

 (சிங்காரவேல் /                                              (வேதரெத்தினம் / 

 (மனைவி) தையல்நாயகி)                       (மனைவி)   கலைச்செல்வி)


(கிளை-(03)சண்முகவேல் தேவர்/          **************************                  (மனைவி) பஞ்சரத்தினம்                       *************************                 (01) (சதாசிவம் / மல்லிகா)                         ***************************               (02) (செயராமன் / மஞ்சுளா)                       **************************              (03) (கனகராசன் / சுமதி                               **************************

 ======================================================  

 தந்தையாரின் கொடிவழி: 

என்  தந்தையாரின் கொடிவழி விவரம் வருமாறு :-

மாரியப்ப தேவர் > நல்லபொதிய தேவர்  >  சிங்காருத் தேவர் / பிரகதாம்பாள் > வைத்தியநாத தேவர்/ சாரதாம்பாள்     வை.வேதரெத்தினம்   / கலைச்செல்வி.

========================================================

தாயாரின் கொடிவழி:

என்  தாயாரின் கொடிவழி விவரம் வருமாறு :-

வேளூர்  சிவப்பிரகாச தேவர் / கல்யாணி அம்மையார்

                                ↧↧↧                                     ↧↧↧             

(01) ஞானசேகர்  ---- (இடைநிலை  அகவையில்  இறந்து போனார்.)

(02) வரதராசன் ----------(இடைநிலை அகவையில்  இறந்து போனார்.)

(03) மீனாட்சி ---------------(அருணாச்சல தேவரை மணந்தவர்) 

(04) சுந்தராம்பாள் (அருணாச்சல தேவரின் 2-ஆவது மனைவி)

(05) சாரதா --------------------(வைத்தியநாத தேவரை மணந்தவர்) 

(06) கருணாநிதி / தங்கையம்மாள் ----(வாரிசுகள் இருக்கின்றனர்)

(07) பண்டரிநாதன் / சிந்தாமணி ---(வாரிசுகள் இருக்கின்றனர்) 

======================================================

உடன்பிறப்பு வரிசை:

என்னுடன் உடன் பிறந்தோர் எண்ணிக்கை (என்னையும் சேர்த்து)  மொத்தம் ஏழு பேர். இவர்களுள் இருவர் இறந்து போயினர். எஞ்சிய நால்வர் விவரம் வருமாறு:-(01) தமக்கையார் சிந்தாமணி (02) அண்ணன் சிவப்பிரகாசம் -- பிறந்து சில ஆண்டுகளில் இறந்து போனார். (03) தமக்கை ஜானகி --- பிறந்து சில ஆண்டுகளில் இறந்து போனார். (04) வேதரெத்தினம் (நான்) (05) தங்கை கல்யாணி.    (06) தங்கை கனகாம்புஜம்  (07)  தங்கை ஞானசுந்தரி (எ) சுமதி !

 

தொடக்கப் பள்ளிக் கல்வி:

எனது தொடக்கப்பள்ளிப் பயணம் 1949 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், விசயதசமி நாளன்று தொடங்கியது. கடிநெல்வயலில் இயங்கி வந்த  அரசுத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் நான்  சேர்க்கப்பட்டேன்.  ஐந்தாம் வகுப்பு வரை அங்கேயே  எனது பயணம் தொடர்ந்தது !

 

உயர்நிலைப் பள்ளிக் கல்வி:

அடுத்து  ஆயக்காரன்புலத்தில் உள்ள இரா.நடேசனார் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 1954 -ஆம் ஆண்டு சூன் மாதம் 6 -ஆம் வகுப்பில் சேர்ந்த நான், 10 ஆம் வகுப்பு வரை அங்கேயே தொடர்ந்து  பயின்றேன்.  பின்னர் அங்கிருந்து விலகி  பள்ளியிறுதி வகுப்பான 11 ஆம் வகுப்பினைத் திருத்துறைப்பூண்டி கழக (DISTRICT BOARD)  உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தேன்!

 

பள்ளியிறுதி  வகுப்பு (OLD  S.S.L.C) 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பானது அந்தக் காலத்தில் 11-ஆம் வகுப்புடன் நிறைவடையும். இப்போது உள்ளது போன்று 10 -அம் வகுப்புடன் நிறைவு பெறுவதில்லை. S.S.L.C எனப்படும் 11- ஆம்  வகுப்பினை (பள்ளி இறுதி வகுப்பினை)  திருத்துறைப் பூண்டியில் இயங்கி வந்த  கழக உயர்நிலைப்பள்ளியில் (BOARD HIGH SCOOL) மேற்கொண்டேன்.  பிற்காலத்தில் தமிழக அரசு  மாநிலத் திட்டக்குழு உறுப்பினராக இருந்த திரு. குரும்பல் வெ.பழனித்துரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு.இரகுபதி, புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்த திரு.வி.விநோதகன் (திருமதி சசிகலாவின் தமையனார்) கால்நடைத் துறை துணை இயக்குநராக இருந்த திரு.இரத்தின . இராசேந்திரன் ஆகியோர் எனது வகுப்புத் தோழர்கள். 1960 ஆம் ஆண்டு மார்ச்சு  மாதம் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி  600 -க்கு 359 மதிப்பெண்கள் பெற்று  சாதனை செய்தேன். அந்தக் காலத்தில் 60% மதிப்பெண் எடுப்பதென்பது  அரிதாக ஒரு சிலரால் நிகழ்த்தக் கூடிய சாதனையாகவே இருந்தது ! 

 

அன்னபூரணி மாணவர் விடுதி:

பள்ளியிறுதி வகுப்புப் படிக்கையில்  திருத்துறைப் பூண்டி பெரிய கோயில் சந்நிதித் தெருவில் இயங்கி வந்த "அன்னபூரணி இலவய மாணவர் விடுதி"யில் தங்கிப் படித்தேன்.  பஞ்சநதிக்குளம் இலட்சுமணத் தேவர் விடுதிக் காப்பாளராக இருந்து விடுதியை ஆளுமை செய்து வந்தார்.  அப்[போது என்னுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் (01) பஞ்சநதிக்குளம் வை.பழனிச்சாமி (02) வாய்மேடு மு.இராதாகிருட்டினன் (03) வாய்மேடு சிவசுப்ரமணியன் (04) தாணிக் கோட்டகம் இரெ.இராசேந்திரன் (05) கருப்பம்புலம் ச.கோதண்டராமன்  (06) வெள்ளப்பள்ளம் அ.செல்வராசு  மற்றும் சிலர்.

 

பள்ளியிறுதி வகுப்புக்குப் பிந்திய காலம்:

பள்ளியிறுதி வகுப்பில் படிக்கும் காலத்திலேயே என்னுடைய பெற்றோர், கடிநெல்வயலில் இருந்த நிலம், வீடு ஆகியவற்றை விற்றுவிட்டு ஆற்றுப் பாசனம் உள்ள திருத்துறைப்பூண்டி அருகில்,  நிலம் வாங்கும் எண்ணத்தில் நெடும்பலத்திற்கு வந்து, மாமா திரு சி.பண்டரிநாதன் வீட்டில் தங்கியிருந்தனர் ! நிலம் வாங்குவதில் பல காரணங்களால்  காலத்தாழ்வு ஏற்பட்டுக் கொண்டே போனது. இதன் விளைவாக நிலம் விற்ற பணமும்  முற்றிலுமாகக் கரைந்து  போயிற்று !

 

தந்தையார் மறைவு:

பள்ளியிறுதி வகுப்பில்  1960 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தேர்ச்சி பெற்ற பிறகு  மாமா திரு.சி.பண்டரி நாதன் அவர்கள் வீட்டிலேயே என்  தாயார், தங்கைகள் ஆகியோருடன் நானும் தங்கியிருந்தேன்.  அப்போது எனது  தந்தையார் திரு.சி.வைத்தியநாத தேவர், வயிற்றுப் போக்கினால் அவதிப்பட்டு, சில நாள் கழித்து இறந்தும் போனார்.  அவர் காலமான நாள்  விவரம் எனக்கு  இப்போது நினைவில்லை.  பெரும்பாலும் அது (மார்கழி மாதம் அமாவாசைக்கு அடுத்த 3-ஆம் நாள்) 1960 -ஆம் ஆண்டு  என்பதை உறுதியாக நம்புகிறேன் !

 

கல்லூரிக் கல்வி:

ஈராண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தஞ்சை, மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில்  1962-ஆம்ஆண்டு  புகுமுக வகுப்பில் (PRE-UNIVERSITY COURSE)  சேர்ந்தேன்.   இப்படிப்பை  1963  ஏப்ரலில் நிறைவு செய்தேன். இவ்வகுப்பில் நான் பெற்றிருந்த மிக அதிக மதிப்பெண்களைக் கண்ட கல்லூரி முதல்வர் கேப்டன், முருகையன் அவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வலியுறுத்தினார். விண்ணப்பித்தால், உடனே இடம் கிடைக்கக் கூடிய  வாய்ப்பும் நிரம்ப இருந்தது;  எனினும் குடும்பத்தின் செல்வ வளம்  நிறைவாக இல்லாததால்,  மருத்துவப் படிப்பில் நான்  சேரமுடியவில்லை அரசுப் பணியில் சேர்ந்த பிறகு நான்  மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து வணிகவியல் வாலை  (B.Com)  பட்டம் பெற்றேன் !

 

கூடுறவுத் துறையில் அரசுப் பணி:

1960 -ஆம் ஆண்டு எனது  16 ஆம் அகவையில் தந்தையை இழந்த நான்,  குடும்பச் சுமையைத் எனது தோள்களில் ஏற்க  வேண்டி இருந்ததால்,  பணிக்குச் செல்ல விரும்பினேன்.  எனக்கு அரசுப் பணி கிடைக்கவே கிடைக்காது என்று என் பிறப்பியத்தை (ஜாதகம்) பார்த்துவிட்டு  ஓங்கி  உறுதியாகச் சொன்ன நீர்முளை என்னும் ஊரைச் சேர்ந்த  கணியன்   (சோதிடர்)  ஒருவரின்  தடைச்  சொற்களையும் மீறி 1964 –ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் கூட்டுறவுத் துறையில், தணிக்கைப் பிரிவில் இளநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தேன். கூட்டுறவுத் துறையில் பணியை ஏற்று ஒன்றரை ஆண்டுகள்,  தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தங்கியிருந்த காலம் தான் எனக்கு உலகம் என்றால் இன்னதென்று உணர்ந்து கொள்ள உதவியது. தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் இல்லத்திற்குச் சென்று வந்தது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவுத் தெளிவு பெற்றது,  கலைஞரைச் சாலையில் சந்தித்துப் பேசியது உள்பட பல இனிய துய்ப்புகள்  (EXPERIENCES)  எனக்கு  இங்கே கிடைத்தன !

 

காவல் துறையில் அரசுப்பணி:

கூட்டுறவுத் துறையில் ஒன்றரை ஆண்டுகள் அன்னிலைப் பணியிடத்தில் (TEMPORARY APPOINTMENT) பணிபுரிந்த பிறகு, அதிலிருந்து விடுபட்டு 1965 -ஆம் ஆண்டு  பிப்ரவரித் திங்களில் கடலூர் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிலைப் பணியிடத்தில்  (REGULAR APPOINTMENT)  எழுத்தராக  (LOWER DIVISION CLERK) பணியில் சேர்ந்தேன்.  காவலர்கள் மட்டுமன்றி,  உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வரை வந்து ஒரு எழுத்தருக்கு வணக்கம் சொல்லும்  நம்பமுடியாக் காட்சியை அங்குதான் நான் காண நேர்ந்தது. வாழ்க்கை தான் எத்துணை வியப்புகளை ஒரு மனிதனுக்கு வாரி வழங்குகிறது !

 

அரசினர் தொழிற்பயிற்சி நிலையப் பணி:

காவல் துறைப் பணியைவிடக் கூடுதல் ஊதியத்தில், நிலையான பணி வாய்ப்பு தமிழ்நாடு தேர்வாணைக் கழகம் மூலம்  கிடைத்ததால் (REGULAR JOB) புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1966 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 அன்று நான் பண்டகக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தேன். இங்குப் பணி புரிகையில் புலவர்கள் தி.சு.மலையப்பன், புலவர் அன்பு கணபதி, வித்வான் கந்தசாமி ஆகியோரது நேர்முகத்  தொடர்பு கிடைத்தது. குன்றக்குடி அடிகளார், புலவர் கா.கோவிந்தன், இராய சொக்கலிங்கனார், அ.வ.இராசாகோபாலன், க.நமசிவாயம், சோ. சத்திய சீலன்   உள்பட பல தமிழறிஞர்கள் பங்கேற்ற வள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழா  1969 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் மூன்று நாள்கள் நடைபெற்றது. விழா அமைப்பாளர்களில் ஒருவராக நானும் இருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது;  தமிழ்ப் பணி மீதான ஈர்ப்பும் இங்குதான்  எனக்கு ஏற்பட்டது !

 

தங்கை கல்யாணி திருமணம்: 

நான் புதுக்கோட்டையில் பணியாற்றுகையில் தான், தங்கை கல்யாணிக்குத் திருமணம் செயது வைக்க வேண்டிய கடமை  என் தோள்களில் வந்து இறங்கியது. திருத்துறைப்பூண்டி வட்டம், இடும்பாவனம் என்னும் ஊரைச் சேர்ந்த  திரு. கந்தசாமித் தேவர் மகன் திரு. இராமமூர்த்தி என்பவருக்கு, தங்கை கல்யாணி வாழ்க்கைப்பட்டார். 23 அகவையிலேயே இந்தப் பெரும் பொறுப்பை நான் துணிவுடன் எதிர்கொண்டதை இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. திருமணம் நடைபெற்ற ஆண்டு, மாதம், நாள் ஆகியவை எனக்கு இப்போது நினைவுக்கு வரவில்லை ! இருந்தாலும் திருமணம் நடைபெற்ற ஆண்டு 1967 -ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன் !

 

வேதரெத்தினம் – கலைச்செல்வி திருமணம்:

தங்கை கல்யாணியின் திருமணத்தை அடுத்து இன்னொரு தங்கை கனகாம்புசத்தின் திருமணத்தை நடத்த வேண்டிய பெரும் பொறுப்பினை எதிர்கொண்டேன். இத்திருமணம் பெண் கொடுத்து பெண் எடுத்தல் என்னும் முறையில் அமைந்தது. என் தங்கையைக் கொடுத்த இடத்திலிருந்து என் மனைவியை நான் தேர்வு செய்து கொண்டேன்.   எனது  திருமணம் 1972 ஆம் ஆண்டு சூலை 2 ஆம் நாள் (02-07-1972)  ஞாயிற்றுக் மிழமை நிகழ்வுற்றது. மன்னை மு.அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இத் திருமணம் ஐயர் இல்லாமல், மந்திரம் ஓதாமல், சீர்திருத்த முறையில் நடைபெற்றது. மணலி கந்தசாமி என்னும் பொதுவுடைமைக் கட்சித் தலைவரின் உறவினரான இரகுநாத பிள்ளையின் இளைய மகள் செல்வி. கலைச்செல்வி எனது வாழ்க்கைத் துணையாக அமைந்தார். என் திருமணம் நடைபெற்ற அதே நாளில் என் மாமனார் திரு இரகுநாத பிள்ளையின்  தலைமகன் திரு. இரகு. செல்வராசுக்கும்  என் தங்கை கனகாம்புசத்திற்கும், மன்னை  அருகிலுள்ள   சேரன்குளம் திரு இரகுநாத பிள்ளை வீட்டு முற்றத்தில் போடப்பட்ட திருமணப் பந்தல்   அரங்கில் நிறைவேறியது !

 

பணிபுரிந்த இடங்கள் பல:

21-04-1966 -ல்  தொடங்கிய என் அரசுப் பணிக் காலம்  30-04-2001 -ல் நிறைவு பெற்றது. 35 ஆண்டுகள், 9 நாள் பணியிலிருந்த எனது அரசுப் பணிப் பயணம், புதுக்கோட்டை, திருவெறும்பூர், நாகப்பட்டினம், சேலம்,  தாராபுரம், நாகப்பட்டினம், சேலம், ஈரோடு, ஓசூர் என ஒரு பெரிய வட்டப் பாதையில் அமைந்திருந்தது.  இவற்றுள் திருவெறும்பூரில் பணிபுரிகையில் தான்  என் திருமணம் நடைபெற்றது !

 

தங்கை ஞானசௌந்தரி (எ) சுமதி திருமணம் :

என்னுடைய  3-ஆவது தங்கையின் பெயர்   ஞானசௌந்தரி. இடைநிலை அகவையில்  இறந்து போன என் தாய் மாமாவான "ஞானசேகரின்" நினைவாக என் தாயார் வைத்த பெயர். இந்தப் பெயர் திருமணக் காலம் தொடங்கி "சுமதி" என்று புதுப் பிறப்பு எடுத்தது.  நான் திருவெறும்பூரில் பணியாற்றும் போதுதான் வேதாரணியத்தை அடுத்த பயத்தவரங்காடு திரு. க.பி. முருருகையாத் தேவரின் இரண்டாவது மகன் திரு. மு.சிங்காரவேலு -  சுமதி,  திருமணம் நடைபெற்றது. 1974 -ஆம் ஆண்டு  திசம்பர் மாதம், ஒன்றாம் நாள் கருப்பம்புலம் பி.வி.தேவர் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.  இதே நாளில் இதே மண்டபத்தில் திரு.  முருகையாத் தேவரின் முதல் மகன் திரு.மு.கருணாநிதி - கருப்பம்புலம் திரு கோதண்டராமனின் தங்கை செல்வி இராஜம்   திருமணமும்  நடைபெற்றது !

 

நான் பணியாற்றிய நிலையங்களும்  காலப் பகுதியும் வருமாறு :-

 பண்டகக் காப்பாளர்:

(பணியில் சேர்ந்த நாள்; 21-04-1966)

(01).அ.தொ.ப. நிலையம், புதுக்கோட்டை: 21-04-66   -  31-10-71 

(02) அ.தொ.ப. நிலையம், திருச்சி:..................01-11-71  -  03-05-75

(03) அ.தொ.ப. நிலையம், நாகை:...................04-05-75   -  14-07-81

(04) அ.தொ.ப. நிலையம், சேலம்: ...................15-07-81  -  10-05-84

அலுவலக மேலாளர்:

(05) அ.தொ.ப. நிலையம், தாராபுரம்:.............11-05-84  -  11-07-84

(06) அ.தொ.ப. நிலையம், நாகை:.....................12-07-84  -  07-04-87

(07) அ.தொ.ப. நிலையம், சேலம்:......................08-04-87  - 05-05-92

(08) அ.தொ.ப. நிலையம், ஈரோடு:....................06-05-92  -  10-06-93

(09) அ.தொ.ப நிலையம், சேலம்:.......................11-06-93  -  26-11-96

ஆட்சி அலுவலர்:

(10) அ.தொ.ப. நிலையம், ஓசூர்:........................27-11-96  -  30-04-2001

---------------------------------------------------------------------------------------------------

(ஆட்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள்: 30-04-2001)

 -------------------------------------------------------------------------------------------------

அத்தான் திரு செல்வராசு மறைவு:

சேரன்குளம், அத்தான் திரு செல்வராசு அவர்கள்  சிறுநீரகச் செயலிழப்பின் காரணமாக 1991-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 29 -ஆம் நாள்  (29-08-1991)  இவ்வுலக வாழ்வை நீத்தார். 19 ஆண்டுகள் என் தங்கை கனகாம்புசத்துடன் நடத்திய இல்லற வாழ்வின் விளைவாக இரு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளையை விட்டுவிட்டு எதிர்பாராமல் அவர் மறைந்து போனார் !

 

தமிழ்ச் சொல்லாக்கம்:

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த எந்திரங்கள்,  கருவிகள்,  நுகர்பொருள்கள்,  அறைகலன்கள்,  மூலப் பொருள்கள் அனைத்துக்கும் புதிய தமிழ்ச் சொல் உருவாக்கும் பணியை இங்குதான் நான் தொடங்கினேன். 1966 –ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி, கடந்த  54  ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றால், அதற்குத் தமிழ் மீது எனக்கு உள்ள அளப்பரிய ஈடுபாடே காரணம் என்றால் அது மிகையில்லை !

 

பணியிலிருந்து  ஓய்வு:

அரசுப் பணியில், இறுதியாக ஆட்சி அலுவலர் (ADMINISTRATIVE OFFICER) என்னும் உயர் பணியில் நான்கரை ஆண்டுகள் (27-11-96 - 30-04-2001) பணியாற்றினேன். உதவி இயக்குநர் (ASSISTANT DIRECTOR) சார் ஆட்சியர் (SUB-COLLECTOR) போன்ற பணியிடங்களுக்கு இணையானது ஆட்சி அலுவலர் பணியிடம். 2001 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 ஆம் நாள் (30-04-2001) அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நான், பணியில் இருக்கும் போது, அரசு அலுவலர் ஒன்றியம், துறை சார்ந்த அமைச்சுப் பணியாளர் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம் ஆகிவற்றில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டிருக்கிறேன் !

 

பொதுப்பணி:

பணி ஓய்வுக்குப் பிறகு, தஞ்சாவூரில், நான்  வாழ்ந்து வந்த பகுதி மக்களை ஒன்றிணைத்து 650 குடும்பங்களை உள்ளடக்கி திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம் எனச் சேவை அமைப்பு ஒன்றை நிறுவி  அதன் தலைவராகவும் இருமுறை பணியாற்றியிருக்கிறேன்.  2006-ல் அமைக்கப்பட்ட இச்சங்கம் கடந்த 20 ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது !

 

முகநூல் பணி:

2015 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம் தமிழ்ப் பணி மன்றம் என்னும் பெயரில் முகநூற் குழு ஒன்று தொடங்கி. அதன் ஆட்சியராக இன்று வரைச் செயல்பட்டு வருகிறேன். தமிழ் வளர்ச்சிப் பணி ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு  இயங்கி  வரும் இக்குழுவில் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும், பற்றும், நாட்டமும் உடைய 2350 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.  ஏறத்தாழ 450 கட்டுரைகளைத் தமிழ்ப் பணி மன்றத்தில் எழுதியுள்ள அதன் ஆட்சியரான வேதரெத்தினம் எனப்படும் நான், தமிழ் உணர்வாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருந்து வருகிறேன் ! தமிழ்ப் பணி மன்றம் அல்லாது, “தமிழ்ப் பொழில்”, “கலைச் சொற் களஞ்சியம்”, “அகரமுதலி”, ஆகிய மேலும் 35 முகநூற் குழுக்களையும் இயக்கி வரும் நான்,  தமிழ் வளர்ச்சியில் முனைப்பாக இருப்பவர்களை ஒன்றிணைத்து,  சிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறேன் ! 

 

கவிக்குயில் - சிவக்குமார் திருமணம்:

பணியிலிருந்து  ஓய்வு பெற்ற பிறகு  சிலமாதங்ககள் இராயக்கோட்டை சாலை வீட்டு வசதி வாரிய அடுக்கு மாடிக்  குடியிருப்பில் பி-12 (B-12) வீட்டில்  தொடர்ந்து குடியிருந்து வந்தோம். அதன்பிறகு அருகிலிருந்த நஞ்சுண்டேசுவரர் நகரில் நாகபூசணம் என்பவரது வீட்டிற்குக் குடியிருப்பை மாற்றிக்கொண்டு வாழ்ந்து வந்தோம்.   அப்போது என் மகள் கவிக்குயிலுக்குத் திருமணம்  முடிவாயிற்று. தஞ்சாவூர் சேவப்ப நாயக்கன்வாரி திரு அ.பழனியப்பன்  என்பவரது மகன் திரு சிவக்குமார் டைட்டான் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் கவிக்குயிலுக்கும் திருமணம் முடிவாகி 2003 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 06- ஆம் நாள் (06-02-2003) திருத்துறைப்பூண்டி மங்கை திருமண மண்டபத்தில்  திருமணம்  இனிது நிறைவேறியது !

 

ஓசூரிலிருந்து தஞ்சாவூருக்குக்  குடிபெயர்வு:

அரசுப் பணியில் இறுதியாக ஓசூரில்  பணியாற்றிய நான், 2001 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 30 -ஆம் நாள் (30-04-2001) பணி ஓய்வுக்குப் பிறகு தஞ்சாவூருக்கு இடம் பெயர்ந்தேன்.  ஓசூரிலேயே   நிலையாக வாழ விரும்பி, வீடோ அல்லது வீட்டு மனையோ வாங்கிட  முயன்ற எனக்கு இரண்டில்  எந்தவொரு     வாய்ப்பும் அமையவில்லை. ஆகையால் 2003 -ஆம் ஆண்டு  சூன் மாதம், 10 -ஆம் நாள்  (10-06-2003) ஓசூரிலிருந்து விடை பெற்று குடும்பத்துடன் தஞ்சையை நோக்கிப் பயணமானேன் !

 

தாயார் சாரதா அம்மையார் மறைவு:

ஓசூரில் நான் வாழ்கையில் என் தாயார் திருமதி சாரதா அம்மையார், கருப்பம்புலத்தில் தங்கை சுமதி வீட்டில் தங்கியிருந்தார். ஓசூரிலிருந்து தஞ்சாவூருக்கு நான் குடிபெயர்ந்த  (10-06-2003)  மறுமாதம் - அதாவது 2003 -ஆம் ஆண்டு, சூலை மாதம், 09-ஆம் நாள் (09-07-2003) என் தாயார் தனது 93 -ஆவது அகவையில் மறைந்து போனார் ! படிக்கும் கலம் முழுவதும், தந்தை, தாய் இருவரில் தாயாரே எனக்கு முழு ஆதரவும் தந்து படிப்புச் செலவுகளையும் முகம் சுளிக்காமல் எனக்குத் தந்து, என் படிப்புத் தடைபடாமல் பார்த்துக்கொண்டார். தாயார் எனக்கு நிரம்பச் செய்திருக்கிறார்; ஆனால் நான் தான் அவரை இறுதிக் காலம் வரை என்னுடன் வைத்துக் கவனிக்க முடியாமல் போயிற்று !

 

தஞ்சாவூரில் வீடு  கட்டுதல் :

தஞ்சாவூருக்கு வந்த பிறகு, நான் 2001 -ஆம் ஆண்டில் வாங்கிப் போட்டிருந்த கண்ணம்மாள் நகர் மனை எண் 26 -ல்   வீடு கட்ட அணியமானேன்.  வீடு கட்டும் வரைக் குடியிருப்பதற்கு, அருகிலிருந்த இராசீவ் நகரில்  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகப் பேராசிரியர் முனைவர் வ.குருநாதன் என்பவரது வீட்டு மாடியை உருபா 1400 வாடகைக்கு அமர்த்திக்கொண்டேன்.  10-06-2023 அன்று குடி வந்த பின்பு பொறியாளர் பேச்சிமுத்து என்பவர் மூலம் ஒரு சதுரம் உருபா 42,000 என்னும் ஒப்பந்தக் கட்டண அளவில் ஆறு  சதுரம்  பரப்பளவில் வீடுகட்டி, 2004 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 04 -ஆம் நாள் (04-02-2004) புது வீட்டிற்குப் புதுமனை புகு விழாவையும்  நடத்தினேன் !

 

இளவரசி - பிரபு திருமணம்:

தஞ்சாவூர் கண்ணம்மாள் நகர்  26 - ஆம் இலக்க வீட்டில் 2004 -ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 31-ஆம் நாள் (31-03-2004) குடியேறிய பிறகு, என் இரண்டாவது மகள் இளவரசியின் திருமணம் முடிவாயிற்று. ஓசூர் இராசகணபதி நகர் அருகில் (RAYAKKOTTAI OLD HUDCO) வாழ்ந்து வந்த திரு செயராமன் என்பவரது மகன் திரு பிரபுவுக்கும் - இளவரசிக்கும் ஓசூர் ஆர்.கே. திருமண அரங்கத்தில்  2004 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 03-ஆம் நாள் (03-09-2004) திருமணம் இனிது நிறைவேறியது !

 

மாமனார், சம்பந்தி இருவரும் மறைவு:

என் மனைவியின் தந்தையும் மாமனாருமாகிய  திரு இரெ.இரகுநாத பிள்ளை 2004 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 30 -ஆம் நாள் (30-04-2004) தனது 85 -ஆம் அகவையில் மறைந்து போனார். இதே நாளில் தான் என் 60 -ஆம் ஆண்டு மணிவிழாவும் பஞ்சநதிக்குளம் அங்காளம்மன் கோயிலில் நடைபெற்றது ! நிகழ்ச்சி முடிந்து மூடுந்தில் (VAN)  தஞ்சாவூர் திரும்பிக் கொண்டிருக்கையில், மாமனார் இறந்த செய்தி எழினி மூலம் கிடைத்தது. உறவு சரியில்லாத அந்த நிலையிலும், உடனடியாக மன்னை சென்று  மாலை வாங்கிக்கொண்டு சேரங்குளம் சென்று மாமனாருக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, அங்குத் தங்காமல் தஞ்சாவூர் திரும்பினோம். மாமனாரை  அடுத்து கவிக்குயிலின் மாமனாரும், மருமகன் திரு சிவக்குமாரின் தந்தையும், என் சம்பதியுமான சேவப்பநாயக்கன் வாரி திரு அ.பழனியப்பன் அவர்கள்  2004 - ஆம் ஆண்டு, மே மாதம், 12 - ஆம் நாள் (12-05-2004 ) அன்று மறைந்து போனார் !

 

ஆழிப் பேரலை (சுனாமி) 

இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற பல நாடுகளில் பல்லாயிரக் கணக்கில் மக்களையும்,  வீடு மனை, ஆடு, மாடுகளையும் பலிவாங்கிய ஆழிப் பேரலை (சுனாமி) 2004 -ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 26 -ஆம் நாள்  (26-12-2004)  ஊழித் தாண்டவம் ஆடி  வரலாற்றில் ஒரு கருப்புப் பக்கமாக அமைந்தது. எங்குப் பார்த்தாலும் இறப்பு ஓலம் காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. பல்லாயிரக்கணக்கான மக்களையும், கடற்கரையோர வீடுகளையும், படகுகளையும் ஆடு மாடுகளையும் அறுபது அடி உயரத்திற்கு அடுத்தடுத்து எழுந்து வந்த ஆழிப் பேரலை  வாரிச் சுருட்டி விழுங்கி, தன் கடும் பசியைத் தீர்த்துக்கொண்டது ! தொலிக்காட்சி மூலமாக நான் பார்த்த முதல் ஆழிப் பேரலை இதுதான். இதற்கு முன் நான் ஆழிப்பேரலை பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை !

 

திருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம்:

நான்  வீடு கட்டிக்கொண்டு  குயிருந்து வந்த கண்ணம்மாள் நகர் உள்பட   18 நகர்களை ஒன்றிணைத்து 2006 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 18 -ஆம் நாள் (18-02-2006) திருவள்ளுவர் பெயரில் குடிருப்போர் நலச்சங்கம் ஒன்றை உருவாக்கி அதன் தலைவராக ஓராண்டு காலம் பணியாற்றினேன்.  இந்த ஓராண்டில்,  நீலகிரி  ஊராட்சித் தலைவரை  அணுகி, சங்க ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு வசதி, தார்ச்சாலை வசதி, கூடுதல்  மேனிலைக் குடிநீர்த் தொட்டி வசதி  ஆகியவைகளை ஏற்படுத்தினேன்.  நகர்களின் பெயர்களைத் தாங்கிய பெயர்ப் பலகைகளை நிறுவினேன்.  தெருக்களுக்குத் தமிழ்ப் புலவர்களின் பெயர்களைச் சூட்டி, தெரு முனைகளில் எழுதி வைக்கச் செய்தேன் ! சில ஆண்டுகள் இடைவெளியில் குடியிருப்புவாசிகளின் பெயர், முகவரி, எழினி எண்  போன்றவற்றை உள்ளடக்கி "முகவரிக் கையேடு" ஒன்று உருவாக்கி அச்சிட்டு, ஒவ்வொரு வீட்டாருக்கும் இலவயமாக வழங்கினேன் !

 

தாய்மாமா சி.பண்டரிநாதன் மறைவு:

என் அக்காள் திருமதி சிந்தாமணி அம்மையாரின் கணவரும், என் தாயாரின் தம்பியுமான, என் தாய்மாமா திரு சி.பண்டரிநாதன் 2007 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 06 -ஆம் நாள் தன் 82 -ஆம் அகவையில் (அக்டோபர் -1926  -  ஆகஸ்டு 2006) முதுமையின் காரணமாக மறைந்து போனார் !

 

செண்பகலட்சுமி அம்மையார் மறைவு:

என் மனைவி கலைச்செல்வியின் தாயாரும், என் மாமியாருமான திருமதி செண்பகலட்சுமி அம்மையார் 2013 ஆம் - ஆண்டு, நவம்பர் மாதம், 16 -ஆம் நாள் (16-11-2013) அகவை முதிர்வினால் காலமானார் !

 

கண் புரை அறுவைப் பண்டுவம்:

என் இடது கண்ணில் ஏற்பட்ட கண் புரை காரணமாக 2013 -ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 22-ஆம் நாள் (22-11-2013) மதுரை அரவிந்த கண் மருத்துவ மனையில் அறுவைப் பண்டுவம் செய்துகொண்டேன். இதே நாளில் என் இணைமான் திருத்துறைப் பூண்டி திரு ப.மா.சுப்ரமணியனும் அறுவைப் பண்டுவம் செய்துகொண்டார் !

 

அக்காள் திருமதி சிந்தாமணி மறைவு:

என் அக்காளும் தாய் மாமனைத் திருமணம் செய்து கொண்டவருமான  திருமதி சிந்தாமணி பண்டரிநாதன் அவர்கள்  2015 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 08-ஆம் நாள் (08-09-2015) தனது 77 -ஆவது அகவையில் (00-00-1939 - 8-9-2015) அகவை முதிர்வினால் கீவளூர்  அருகிலுள்ள தேவூரில் காலமானார் !

 

மைத்துனர்கள் ஜீவானந்தம், மகாதேவன் இருவரும் மறைவு:

என் மனைவி கலைச்செல்வியின் தம்பி திரு ஜீவானந்தம் 2019 -ஆம் ஆண்டு, சூன் மாதம் 24-ஆம் நாள் (24-06-2019) உடல் நலக் குறைவால் காலமானார்.  அதுபோல் அவரது அண்ணன் திரு இரகு.மகாதேவன் 2019 -ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 29 -ஆம் நாள் (29-09-2019) சிறுநீரகச் செயலிழப்பின் காரணமாகக் காலமானார் !

 

ஓசூருக்கு குடியிருப்பு மாற்றம்: 

பணி ஓய்வுக்குப் பிறகு  தஞ்சாவூரில் வீடு கட்டிக்கொண்டு வாழ்வதற்காக  ஓசூரிலிருந்து  எனது குயிருப்பை 10-06-2003 அன்று தஞ்சாவூருக்கு மாற்றிய நான் 15 ஆண்டு, 11 மாதம், 14 நாள்களுக்குப் பின் 2019 -ஆம் ஆண்டு, மே மாதம், 20 -ஆம் நாள் (20-05-2019) மீண்டும்  ஓசூரில் குடியேறினேன்.  இப்பொழுது நிலையாக என் வாழ்விடம் ஓசூர் என்று ஆகிப் போனது !

 

தங்கை கல்யாணி மறைவு: 

திருத்துறைப்பூண்டி வட்டம், இடும்பாவனம் என்னும் ஊரைச் சேர்ந்த ஆசிரியர் திரு.க.இராமமூர்த்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, வாழ்ந்து வந்த என் தங்கை கல்யாணி  2019 -ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 13 -ஆம் நாள் (13-10-2019) தனது 72-ஆவது அகவையில் (00-00-1947 - 13-10-2019)  காலமானார் !

 

தமிழ்நாடு புலவர் பேரவை அமைப்பு

தமிழ்நாடு புலவர் பேரவை என்னும் அமைப்பினை  2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத வாக்கில் நான் தொடங்கினாலும், 2023 -ஆம் ஆண்டு சனவரி மாதம், 26, ஆம் நாள்  (26-01-2023)  தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில்  பொதுக்குழுவைக் கூட்டி, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.திருவள்ளுவன் அவர்கள் வாழ்த்துரை வழங்க,  முறைப்படித் தொடக்க விழாவை நடத்தி முடித்தேன். தொடக்கம் முதல் தமிழ்நாடு புலவர் பேரவையின் தலைவராக நான் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பெற்று, தமிழ்ப்பணியாற்றி வருகிறேன் !

 

நிறைவுரை:

இயன்ற வழியிலெல்லாம் தமிழ்ப் பணியாற்றி வரும் நான் இதுவரை 12 நூல்களை எழுதி வெளியிட்டிருக்கிறேன். அவை :-


(01) காலச்சுவடுகள் (என் வாழ்க்கை வரலாறு) (344 பக்கம்) (விலை உருபா 500)

 

(02) மலரும் நினைவுகள் (என் அரசுப் பணிக்காலத் துய்ப்புகள்) (280 பக்கம்) (விலை உருபா 300)

 

(03) நான்மணிக் கடிகை (மூலமும் என் உரையும்) (120 பக்கம்) (விலை உருபா 200)

 

(04) ஔவையாரின் நல்வழி & மூதுரை (மூலமும் என் உரையும்) (120 பக்கம்)  (விலை உருபா 120)

 

(05) புதுச்சொல் புனைவோம் (655 புதிய சொற்கள்  அறிமுகம்) (168 பக்கம்)  (விலை உருபா 200)

 

(06) குழந்தைகளுக்கான தூய தமிழ்ப் பெயர்கள் (2500 பெயர்கள் அறிமுகம்) (48 பக்கம்) (விலை உருபா 120)

 

(07)  புழக்கத்திலிருக்கும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான  தமிழ்ச் சொற்கள்  (84 பக்கம்)  (விலை உருபா 120)

(08) மணக்கும் மல்லிகைத் தோட்டம் (22 பாவலர்களின் பாக்கள் தொகுப்பு நூல்)  (விலை உருபா 300)

(09) முகவரிக் கையேடு (தமிழ்நாடு புலவர் பேரவை உறுப்பினர்களின் முகவரி முதலிய விவரங்கள்)  (விலை உருபா 75)

(10) மூலிகை மருத்துவம் (157 மூலிகைகள்) (424 பக்கம்) (விலை உருபா 500)

(11)  ஆங்கிலம் - தூய தமிழ் அகரமுதலி (192 பக்கம்) (விலை உருபா 200)

(12) புணர்ச்சி இலக்கணம் (வல்லெழுத்து மிகுமிடங்களும் மிகா விடங்களும்) (112 பக்கம்) (விலை உருபா 120)

 

என் தமிழ்ப்பணிக்கு முடிவில்லை; இன்னும் தொடரும்;  தொடர்ந்து கொண்டே இருக்கும் !

=======================================================

வை.வேதரெத்தினம் வாழ்வில் நடைபெற்ற முகாமையான நிகழ்வுகள்.

 =======================================================

29-04-1944. திரு வை.வேதரெத்தினம் பிறப்பு.

21-05-1946. திரு. சீனிவாசன் பிறப்பு.

00-10-1949. கடிநெல்வயல் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் சேரல்

00-06-1954. ஆயக்காரன்புலத்தில் 6-ஆம் வகுப்பு சேரல்

00-00-1954. கடிநெல்வயல் செல்வி விசயா பிறப்பு.

00-06-1959. திருத்துறைப் பண்டியில் 11-ஆம் வகுப்பில் சேரல்

00-03-1960. பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி.

00-06-1962. தஞ்சையில் புகுமுக வகுப்பில் சேரல்.

00-04-1963. புகுமுக வகுப்பில் தேர்ச்சி.

00-08-1964. பாபநாசத்தில் தணிக்கையராகப் பணியேற்பு.

08-02-1966. தணிக்கையர் பணியிலிருந்து விடுவிப்பு.

20-02-1966. கடலூரில் காவல்துறை அலுவலகத்தில் பணியேற்பு.

25-03-1966. காவல் துறை பணியிலிருந்து விலகல்.

21-04-1966. புதுக்கோட்டை ஐ.டி.ஐ-யில் பணியேற்பு.

00-08-1967. திரு. சீனிவாசனை ஐ.டி.ஐ-யில் சேர்ப்பு.

00-00-1967. அய்யர் வீட்டுத் திண்ணை அறையில் குடியேறல்

00-08-1968. திரு.சிவசுந்தரத்தை ஐ.டி.ஐயில் சேர்த்தல்

03-02-1969. பேரறிஞர் அண்ணா மறைவு

01-09-1971. புதுகையிலிருந்து விடுவிப்பு

01-11-1971. திருச்சியில் பணியேற்பு

02-07-1972. திரு. வேதா- கலைச்செல்வி திருமணம்

18-04-1974. திரு. சீ.அருணாச்சல தேவர் மறைவு.

10-06-1974. திரு. சீனிவாசன் – ஆனந்தி திருமணம்.

25-08-1974. திரு. குழந்தைவேல் பிள்ளை மறைவு.

20-11-1974. செல்வி சுமதி – திரு. சிங்காரவேலு நிச்சயதார்த்தம்.

01-12-1974. செல்வி சுமதி – திரு. சிங்காரவேலு திருமணம்.

25-04-1975. திருச்சியிலிருந்து விடுவிப்பு.

04-05-1975. நாகையில் பணியேற்பு.

09-01-1976. திரு. இளம்பரிதி பிறப்பு.

28-07-1976. திரு. சீனிவாசன் O.F.T-யில் சேரல்.

02-06-1976. சேரன்குளம் இராசா தேள் கடியால் மறைவு.

27-08-1976. கடிநெல்வயல் செல்வி விசயா – திரு. முருகேசன் திருமணம்.

19-06-1977. திரு.சிங்காரவேலு – செல்வி தையல்நாயகி திருமணம்

09-03-1978. செல்வி. கயல்விழி பிறப்பு.

11-12-1978. செல்வி சீ.கவிதா பிறப்பு.

01-08-1979. திரு. சூரியமூர்த்தி ஐ.டி.ஐ-யில் சேரல்

14-08-1979. செல்வி கவிக்குயில் பிறப்பு.

14-11-1979. திரு.மகாதேவன் – செல்வி அன்புச்செல்வி திருமணம்

18-12-1979. திரு.சீ.சம்பத் பிறப்பு.

26-01-1980. சென்னை சுற்றுலா- குடும்பத்துடன் புறப்படல்.

20-02-1980. திரு.இரகுநாதபிள்ளை 60 -ஆம் ஆண்டு நிறைவு மணி விழா.

09-08-1980. திரு.மணிமாறன் பிறப்பு.

25-05-1981. திரு. பாஸ்கரன் – செல்வி பிரேமா திருமணம்.

25-06-1981. நாகையிலிருந்து விடுவிப்பு.

24-08-1981. சேலம், பள்ளக்காடு திரு.சீனிவாசன் வீடு அமர்த்தல்.

25-06-1983. சேலம் A.K.B--யில் பொறியுரல் வாங்குதல்

14-08-1983. செல்வி இளவரசி பிறப்பு.

11-05-1984. மேலாளராகத் தாராபுரத்தில் பணியேற்பு.

12-07-1984. மேலாளராக நாகையில் பணியேற்பு.

31-08-1986. திரு. சிவானந்தம் – தமிழ்ச்செல்வி  திருமணம்.

30-03-1986. நாகையிலிருந்து விடுவிப்பு.

12-10-1986. ஆக்கவாரீர் அறிவியல் தமிழ் – இராணியில் வரல்.

17-02-1988. அய்யந்திருமளிகை வீடு – 246-ல் குடியேறல்

18-03-1991. திரு. இரவி – செல்வி இராசவல்லி திருமணம்.

29-08-1991. சேரங்குளம் அத்தான் திரு.செல்வராசு மறைவு.(16-5-1948 - 29-8-1991) 44 அகவை

05-05-1992. ஈரோட்டுக்கு இடமாற்றல்.

27-11-1996. ஆட்சி அலுவலராக ஓசூரில் பணியேற்பு.

02-06-1997. பரிதி டைட்டானில் பயிற்சிக்கு சேரல்.

03-09-1998. பரிதி ஹுண்டாயில் பணியேற்பு.

19-02-1999. திரு. கோபு – செல்வி இந்திரா திருமணம்.

15-11-1999. செல்வி மகேசுவரி – திரு. தமிழ்ச்செல்வன் திருமணம்.

30-04-2001. பணியிலிருந்து ஓய்வு பெறல்.

26-06-2001. கண்ணம்மாள் நகர் மனை பதிவு செய்தல்.

04-04-2002. செல்வி உமா-திரு. இராசரெத்தினம் திருமணம்.

26-08-2002. செல்வி சங்கீதா- திரு. செல்லத்துரை திருமணம்.

20-10-2002. கவி – சிவகுமார் நிச்சயதார்த்தம்.

06-02-2003. கவி – சிவகுமார் திருமணம்.

10-06-2003. ஓசூரிலிருந்து தஞ்சைக்கு இடப்பெயர்வு.

02-07-2003. அருமை – வள்ளி திருமணம்.

09-07-2003. தாயார் சாரதா அம்மையார் மறைவு. (00-00-1911 - 9-7-2003) (93 அகவை) 

22-08-2003. ஓசூர் திரு. செயராமன் மறைவு.

01-11.2003. திரு.கீர்த்திவாசன் பிறப்பு.

04-02-2004. கண்ணம்மாள் நகர் வீடு புதுமனை புகுவிழா

31-03-2004. புதிய வீட்டில் குடியேறல்.

29-04-2004. ஓசூர் லலிதா – இரமேஷ் திருமணம்.

30-04-2004.. வேதா – கலா 60- ஆம் ஆண்டு நிறைவு விழா

30-04-2004. சேரன்குளம் R.R.மறைவு. (00-00-1920 - 30-4-2004) (85 அகவை)

12-05-2004. சம்பந்தி பழனியப்பன் மறைவு. (2-10-1941 - 12-5-2004) (63 அகவை)

03-09-2004. இளவரசி – பிரபு திருமணம்.

26-12-2004. ஆழிப் பேரலை.

31-01-2005. சீனிவாசன் பணி ஓய்வு.

27-03-2005. ச.அன்பழகன் -ஈசுவரி திருமணம்.

18-02-2006. திருவள்ளுவர் குடியிருப்போர் நலச்சங்கம் அமைப்பு.

13-07-2006. திருச்சி கவிதா – கோ.கண்ணன் திருமணம்

09-09-2006. கடிநெல்வயல் சீதா – சந்திரசேகர் திருமணம்.

03-08-2006. நேகா பிரபு பிறப்பு.

22-01-2007. அருணா இராசேந்திரன் – குகன் திருமணம்

20-04-2007. K.P.முருகையாத் தேவர் மறைவு.

21-05-2007. காசிநாதன் – சுதா திருமணம்.

06-08-2007. மாமா சி.பண்டரிநாதன் மறைவு. (00-00-1926 - 6-8-2007)  (82 வயது)

24-10-2007. சேப்பனாவாரி இரவி – இராதா திருமணம்.

05-05-2008. ,மீனாட்சிசுந்தரம் – பார்வதி 80 -ஆம்  ஆண்டு திருமுழுக்கு.

31-08-2008. பரிதி ஹுண்டாயிலிருந்து விலகல்.

05-01-2009. பரிதி நிசானில் உதவி மேலாளராக சேரல்.

03-09-2009. கவி தொழில்நுட்ப உதவியாளராக ஓசூர் மின்வாரியத்தில் சேரல்

05-01-2010. சேப்பனாவாரி அன்பழகன் (சிவா சிற்றப்பா) மறைவு..

23-05-2010. மணிமாறன் – அமுதா திருமணம்.

01-08-2010. அபிஷேக் பிரபு பிறப்பு.

10-09-2010. கலையரசி இராமலிங்கம் – கண்ணன் திருமணம்.

07-02-2011. புனிதா குணசேகரன் – சிவக்குமார் திருமணம்.

03-06-2011. கிருத்திகா கோவிந்தராசு – யோகேஷ் திருமணம்.

15-09-2011. இராகுல் மகாதேவன் – உமா திருமணம்.

20-11-2011. சம்பத் சீனிவாசன் – கீர்த்திகா திருமணம்.

31-05-2012. சரவணன் சதாசிவம் – ஸ்ரீபிரியா திருமணம்.

22-01-2013. செ.பாலதண்டாயுதம் மறைவு (26-7-1973 - 22-1-22-13) 40 அகவை

15-05-2013. கவி, இளவரசி,நேகா,அபியுடன் பழனி உலா

29-05-2013. செந்தில்குமார் பழனியப்பன் – பிரியா திருமணம்

16-11-2013. செண்பகலட்சுமி இரகுநாதன் மறைவு (00-00-1929 - 16-10-2013) 85 வயது)

22-11-2013. வேதரெத்தினம் இடக் கண்ணில் கண்புரை அறுவைப் பண்டுவம்.

18-04-2014. கவி, கீர்த்தியுடன்,இராமேசுவரம், உலா.

10-05-2014. கலா,கீர்த்தியுடன் மருதமலை உலா.

11-05-2014. கலா,கீர்த்தியுடன் ஊட்டி, குன்னூர் உலா.

00-06-2014. கவி பர்கூரில் பகுதி நேரப் பொறியியல் படிப்பில் சேரல்.

09-06-2014. திலீபன் சிவானந்தம் - பவித்திரா திருமணம்.

23-06-2014. ஆ.இராசேந்திரன் (அ.மீ.மருமகன்) மறைவு.

03-09-2014. கருப்பம்புலம் ந.சிவானந்தம்,மறைவு.

25-02-2015. சீரடி சுற்றுலா தொடக்கம்.

28-02-2015. சீரடி சாய்பாபா திருக்கோயில் பார்வையிடல்

28-02-2015. எல்லோரா குடைவரைக் கோயில்களைப் பார்வையிடல்.

03-03-2015. சீரடி சுற்றுலா நிறைவு.

30-03-2015. பிரசாத் செயராமன் – பிரியவதனா திருமணம்.

08-04-2015. பேபி.ப.மா.சு-வுடன் நானும் கலாவும் பழனி உலா.

15-05-2015. கலா, நான்  இளவரசி, ப.மா.சு. இராமேசுவரம் - குமரி, சுற்றுலா.

05-06-2015. புதுச்சேரி ஆரோவில் சுற்றுலா

12-06-2015. அரவிந்த் கோவிந்தராசு – வினோதினி திருமணம்.

05-07-2015. ஏசர் மடிக்கணி பரிதி எனக்குப் பரிசளிப்பு.

08-09-2015. தமக்கை சிந்தாமணி பண்டரிநாதன் மறைவு.(அகவை 75)

18-11-2015 கவி இளநிலைப் பொறியாளராகப் பதவி உயர்வு அடைவு.

30-11-2015. சென்னை வெள்ளமும் பேரழிவும்.

01-12-1015. சென்னை வெள்ளமும் பேரழிவும்.

00-12-2017. கவி பகுதி நேரப் பொறியியல் படிப்பு நிறைவு.

21-05-2016. பரிதி ஆல்ட்டோ மகிழுந்து எனக்குப் பரிசளிப்பு.

31-08-2016. பார்வதி வையாபுரி அம்மையார் மறைவு.

15-09-2016. பரிதி சாண்ரோ  மகிழுந்தை தருதல்

30-09-2016. கா.இருளப்ப தேவர் (அகவை 86) மறைவு.(23-3-1930 - 30-9-2016) 87 வயது

06-02-2017. பகத்சிங் மகாதேவன் – பூங்கோதை திருமணம்.

02-03-2017. வீணா இரவி – சோழராசன் திருமணம்.

29-05-2017. வீரபாண்டியன் சிங்காரவேலு – சாலினி திருமணம்.

07-08-2018. கலைஞர் மு.கருணாநிதி மறைவு.

11-12-2018. அருண்மொழித் தேவன் – அன்புத் தாமரை திருமணம்.

17-09-2018. சேரன்குளம் கணபதி இராமசாமி மறைவு.

24-02-2019. பயத்தவரங்காடு மு.குமரப்பா மறைவு.

24-06-2019. இரகு. ஜீவானந்தம் இன்று மதியம் மறைவு.                   

29-09-2019. இரகு.மகாதேவன் காலை 9-15 அளவில் மறைவு.                            

20-05-2019. தஞ்சையிலிருந்து ஓசூருக்கு நிரந்தரக் குடிப்பெயர்வு.

13-10-2019. தங்கை கல்யாணி  மதியம் 2-15 மணியளவில்  மறைவு.  

31-05-2020. அண்ணன் .மீனாட்சிசுந்தரம் காலை 8-20 மணியளவில் மறைவு.  

14-10-2020. சேவப்பநாயக்கன் ஏரி, சோ.அமுதா மறைவு.

09-04-2021. பஞ்சநதிக்குளம் இரெ.பாலசுந்தரி அம்மையார் மறைவு.

31-05-2021: ஆதியங்காடு திரு  க.பி.கந்தசாமி மறைவு.

08-02-2022. அண்ணி .அலர்மேல்மங்கை மாலை 4-00 மணியளவில் மறைவு.  

26-02-2023. இடும்பாவனம் க.இராமமூர்த்தி  இன்று  ஓசூரில் மறைவு.  

26-05-2023. ஈசனக்குடி அக்காள் செகதாம்பாள் மறைவு.(27-2-1934 - 26-5-2023) 90 வயது.

20-08-2023. சுனில் நந்தா – பொன்மொழி திருமணம்

19-10-2023. கடிநெல்வயல் மீ.பார்வதி அம்மையார் இன்று மறைவு.

25-10-2023. அர்ச்சனா அருட்செல்வன் – சிவக்குமார் திருமணம்

04-01-2024. கடிநெல்வயல் ச. பஞ்சரத்தினம் அம்மையார் மறைவு.

24-12-2024. செட்டியார் குத்தகை சீ.பசுபதி மறைவு.

19-01-2025. சூர்யராஜ் – நவீனா திருமணம்.

21-07-2025. சேவப்பநாயக்கன்வாரி ப.இரவி மறைவு.

01-12-2025. கடிநெல்வயல் விஜயா இன்று மறைவு.

19-01-2026. ஈசனக்குடி அண்ணி இ.இராசாம்பாள் மறைவு

******************************************************************

தொடர்பு முகவரி:

வை.வேதரெத்தினம்

28/25.டைட்டான் நகரியம்,
மத்திகிரி,
ஓசூர். 635 110
                        
தொடர்பு எழினி எண்: 
72004 98159

மின்னஞ்சல் முகவரி: vedarethinam76@gmail.com
                     

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
(vedarethinam76@gmail.com)
ஆட்சியர்,
"தமிழ் நட்பு" வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு : 2051, சுறவம் (தை),22]
{05-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------


வே.கலைச்செல்வி - வை.வேதரெத்தினம்
(படம் எடுத்த ஆண்டு : 1972)  


வை.வேதரெத்தினம் (படம் எடுத்த ஆண்டு : 1971)



வை.வேதரெத்தினம் (படம் எடுத்த ஆண்டு : 2018)



வை.வேதரெத்தினம் 
(படம் எடுத்த ஆண்டு: 2025)






வே.கலைச்செல்வி (படம் எடுத்த ஆண்டு : 1975)

வே.கலைச்செல்வி (படம் எடுத்த ஆண்டு : 2018)


வை.வேதரெத்தினம், - வே.கலைச்செல்வி இணையர்
(படம் எடுத்த ஆண்டு : 2015)



வே.இளம்பரிதி .B.Tech (படம் எடுத்த ஆண்டு : 1996)

வே.இளம்பரிதி .B.Tech (படம் எடுத்த ஆண்டு : 2015)

வே.கவிக்குயில் (படம் எடுத்த ஆண்டு : 1992)

வே.கவிக்குயில் B.E. (படம் எடுத்த ஆண்டு : 2015)

வே.இளவரசி (படம் எடுத்த ஆண்டு : 1995)

வே.இளவரசி. B.Sc. (படம் எடுத்த ஆண்டு : 2019)


வை.சாரதாம்பாள் வைத்தியநாதன் (படம் எடுத்த ஆண்டு : 2003)

வே.கவிக்குயில் - ப.சிவக்குமார் இணையர்
(படம் எடுத்த ஆண்டு 2003)


S.K.கீர்த்திவாசன்
(படம் எடுத்த ஆண்டு: 2017)



வே.இளவரசி - ஜெ.பிரபு இணையர் 
(படம் எடுத்த ஆண்டு : 2017)



 
இளவரசி, பிரபு, நேகா, அபிசேக்


நேகா பிரபு
(படம் எடுத்த ஆண்டு : 2017)








அபிசேக் பிரபு.