என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

இராமச்சந்திரன்.பாலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இராமச்சந்திரன்.பாலு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 22 பிப்ரவரி, 2020

(03) இராமச்சந்திரன் (திரு).பா - பெரியகுளம்.

தோற்றம்:

தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டம், எண்டப்புளி என்னும் ஊரில் 1980 ஆம் ஆண்டு, ஏப்பிரல் திங்கள், 19 ஆம் நாள் இராமச்சந்திரன் பிறந்தார். பெரியகுளத்திலிருந்து வத்தலக் குண்டு செல்லும் சாலையில் 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இவ்வூரின் அருகில் முருகமலை என்னும் வனப்பு மிக்க மலை அமைந்துள்ளது. இவ்வூரிலிருந்து பார்த்தால் கொடைக்கானல் மலையின் எழில்மிகு தோற்றம் கண்களுக்குத் துல்லியமாகத் தெரியும். இராமச்சந்திரனின் தந்தையார் பெயர் பாலுச்சாமி. தாயார் பழனி அம்மையார் !

உடன்பிறப்புகள்:

இவருடன் உடன்பிறந்தோர் நால்வர். தமையனார் பெயர் கிருட்டிணசாமி, தமக்கையார் அழகம்மை, தம்பியர் கண்ணதாசன், மற்றும் அழகர்சாமி ! அனைவருக்கும் திருமணமாகித் தத்தம் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றனர் !

பள்ளிக் கல்வி:

ஐந்து அகவை ஆகும் போது இராமச்சந்திரன் தனது கல்வி உலாவைத் தொடங்கினர். எண்டப்புளியியிலேயே இயங்கி வந்த சிறீ மார்க்கண்டேயா தொடக்கப் பள்ளியில் 1985 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் அடியெடுத்து வைத்தார் ! இப்பள்ளியிலேயே ஐந்தாம் வகுப்பு வரைப் பயின்ற இவர் , தனது உயர்நிலைப் பள்ளிக் கல்விக்காக பெரியகுளம் செல்ல நேர்ந்தது. இங்குள்ள விக்டோரியா அரசி அரசினர் மேனிலைப் பள்ளியில் 1990 ஆம் ஆண்டு சூன் மாதம் ஆறாம் வகுப்பில் சேர்ந்து பயிலத் தொடங்கினார் !

இவரது கல்வி உலாவில் அவ்வப்போது தடைகள் பல தோன்றினாலும் அவற்றை எல்லாம் கடந்து வெற்றிகரமாக நடை பயின்ற இவர், 9 –ஆம் வகுப்புப் படிக்கையில் ஏனோ சோர்வடைந்தார்.  ஆண்டுத் தேர்வு என்னும் தடையைக் கடக்க முடியாமல் தளர்ந்து போனார். தேர்வில் தோல்வியடைந்தார் !

இவரது கல்வியில் அக்கறை கொண்டிருந்த தந்தையார் பாலுச்சாமி, என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.; மும்முரமாகச் சிந்தித்தார். இறுதியில், பள்ளி மாற்றம் இதற்குத் தீர்வாக அமையும் என்று நம்பினார். எண்டப்புளியிலிருந்து  5  கி.மீ. தொலைவில் உள்ள வடுகப்பட்டி அரசினர் மேனிலைப் பள்ளியில்  தன் மகனை 1994 ஆம் ஆண்டு 9 ஆம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைத்தார். புதிய பள்ளி ! புதிய சூழ்நிலை ! இராமச்சந்திரனுக்குப் படிப்பில் நாட்டம் ஏற்பட்டது ! வகுப்பில் சிறந்த மாணவனாகத் திகழத் தொடங்கினார். இறுதியில் 1998 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் தனது மேனிலைக் கல்வியை (12 ஆம் வகுப்பு) அதிக மதிப்பெண்கள் பெற்று நிறைவு செய்தார் !

கல்லூரிக் கல்வி:

தந்தையார் பாலுச்சாமி, தன் மகன் பட்டதாரியாக இந்தக் குமுகாயத்தில் பெருமையுடன் நடமாட வேண்டும் என்று ஆசைப்பட்டார்.  இதற்காக எத்துணை இன்னல்கள் வந்தாலும் அவற்றை எதிர்கொள்ள அணியமானார். விளைவு ? தன் மகனையும் அழைத்துக்கொண்டு 65 கி.மீ தொலைவில் உள்ள  உசிலம்பட்டியில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் கலைக் கல்லூரிக்குச் சென்று, கல்லூரி முதல்வரைச் சந்தித்து உரையாடினார். கல்லூரியில் இடம் கிடைத்தது. வணிகப் பொருளியல் வாலை (BACHELOR OF BUSINESS ECONOMICS)  வகுப்பில் 1998 - ஆம் ஆண்டு சூன் மாதம் சேர்ந்து பயிலத் தொடங்கினார் !

திருமணம்:

கல்லூரியில் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்திருந்த நிலையில் வீட்டில் திருமணப் பேச்சு முளைவிடத் தொடங்கியது. இவர் வாழ்ந்து வரும் அதே எண்டப்புளியில் இன்னொரு பகுதியில் வாழ்ந்து வந்த பழனிவேல்சரசுவதி அம்மையார் இணையினரின் ஒரே மகளான  திருமலைச் செல்வியை இராமச் சந்திரனுக்குத் திருமணம் செய்விக்கலாம் என்று கருதி இரு வீட்டாரும் கலந்து பேசத் தொடங்கினர்.  இறுதியில், படிப்பும் தொடரட்டும், திருமணமும் நடக்கட்டும் என்று முடிவு செய்து 2000 –ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 12 ஆம் நாள் இருவரையும் இல்லற வாழ்வில் இணைத்து வைத்தனர் !

பட்டப் படிப்பு:

திருமணத்திற்குப் பிறகும் இராமச்சந்திரன் படிப்பைத் தொடர்ந்து, பயின்று, பட்டம் பெற்று, தந்தையார் பாலுச்சாமி அவர்களின் கனவை நிறைவேற்றி வைத்தார் . கையில் பட்டம் ! மனதில் என்னென்னவோ திட்டம் !

பணிவாய்ப்புத் தேடல்:

படித்தவர்களுக்கெல்லாம் இந்த நாட்டில் வேலை கிடைத்து விடுகிறதா என்ன ? இராமச்சந்திரன் கடுமையாக முயன்றார். திருப்பூர், பல்லடம், கோவை, தென்காசி, திருநெல்வேலி, தேனி என்று இவர் வேலை தேடி அலைந்த ஊர்களின் பட்டியல் நெடியது. அங்கெல்லாம் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைத்தாலும், போதுமான ஊதியம் கிடைக்கவில்லை !

தந்தை மறைவு:

குடும்ப ஓடம் மனிதக் குமுகாயம் என்னும் ஆற்றில் மெல்ல ஆடி அசைந்து சென்று கொண்டிருக்கையில், இவரது தந்தையார் பாலுச்சாமி 2007 ஆம் ஆண்டு கதுமென (திடீரென) மறைந்து போனார். தந்தையின் பிரிவு இராமச்சந்திரனை நிலைகுலைந்து போகச் செய்தது. தந்தை மீது இவருக்கும், இவர் மீது தந்தைக்கும் இருந்த பற்று (பாசம்) என்னும்  கயிறு மிகவும் வலுவானது. அறுவாதது; அறுக்கவும் முடியாதது. இதன் தாக்கம், இராமச்சந்திரனுக்குக் குடும்பத்தின் மீதான பிணைப்பு குலைந்து போய்விடுமோ என்று உற்றார் உறவினர்கள் அச்சப்படுமளவுக்கு இட்டுச் சென்றது. எனினும் இந்த வீட்சியிலிருந்து தானே மீண்டெழும் அளவுக்கு அவருக்கு மன உறுதி மறுபிறவி எடுத்தது இன்னும் வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது !

சொந்தத் தொழில்:

அரசியல் சூழ்ச்சிகளால் அலைப்புற்றுக் கிடக்கும் தமிழ்நாட்டில், தனக்கு அரசு வேலை கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்ட இராமச்சந்திரன், அடுத்தவனிடம் ஐயாயிரம் உருபாவுக்கு அடிமை வேலை செய்வதை விட, சொந்தமாகத் தொழில் செய்து வருமானம் தேடலாம் என்னும் முடிவுக்கு வந்தார். சொந்த ஊரிலேயே பால் வணிகராக வலம் வரத் தொடங்கினார். பால் கறவை மையங்களுக்குத் தன் பேடுருளியில் (MOPED) சென்று, பாலைச் சேகரித்துக் கொண்டு வந்து, தன் வீட்டருகே பால் விற்பனையகம் (MILK BOOTH) தொடங்கி நடத்தி வருகிறார். நாளொன்றுக்கு 150 லிட்டர் வரை விற்பனையாகிறது !

எதிர்காலத் திட்டம்:

பால் விற்பனையுடன், இதர பாற் பொருள்களான (MILK PRODUCTS) தயிர், நெய், பால் கோவா  ஆகிவற்றையும் தன் விற்பனையகத்தில் (MILK BOOTH) கிடைக்கச் செய்யவேண்டும் என்பது இவரது திட்டம். மாவட்டத் தொழில் மையம் மூலம் இதற்கான நயனுரை (ADVICE) பெறவும் திட்டமிட்டிருக்கிறார். இதற்காகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப் பெற்றால் அதில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார் !

குடும்பம்:

இராமச்சந்திரன்திருமலைச் செல்வி இணையருக்கு அர்சவர்த்தினி (18), விட்டுணுதாசு (விண்ணவதாசன்) (17) என இரு மக்கள் செல்வங்கள் இருக்கின்றனர்.  மகள் 12 –ஆம் வகுப்பிலும், மகன் 11-ஆம் வகுப்பிலும் எ.புதுப்பட்டி மேனிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். பிள்ளைகளுக்கு  ஏட்டுப் படிப்பு மட்டும் போதாது என்பதை உணர்ந்த இவ்விணையர், அவர்களுக்குப் பிடித்தமான தொழிற் பயிற்சி வகுப்புகளில் சேர்த்து பயிற்சி பெற வைக்கவும் திட்டமிட்டு வருகின்றனர் !

தமிழார்வம்:

இராமச்சந்திரனுக்கு இயல்பாகவே தமிழ் மீது பற்று அதிகம். அதனால் சொக்கி என்னும் காலாண்டு இலக்கிய இதழை, இவர் நீண்ட காலமாக நடத்தி வருகிறார். தனி இதழ் விலை உருபா 25-00. இருநூறு  படிகள் அச்சிட்டு பெரியகுளம், தேனி மற்றும் அவற்றின் சுற்று வட்டாரங்களில் பெட்டிக் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. அத்துடன் தமிழ்ப் பணி மன்றம் என்னும் முகநூற் குழுவில் உறுப்பினர் ஆன பின்பு, தமிழார்வம் இவருக்குக் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிவிட்டது. பாடல்கள் புனையவும், பாட்டரங்கங்களில் கலந்து கொண்டு பாடல்கள் படைக்கவும் திறன் பெற்றுள்ள இராமச்சந்திரன், தமிழ்த் தாயின் முன்னணித் தொண்டர் என்பதில் ஐயமில்லை !

வலைப்பூ:

தனது படைப்புகளைப் பாதுகாக்கவும், பிறருடன் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இவர் பெரியகுளம் பாலு இராமச்சந்திரன் என்னும் வலைப்பூவை (BLOG) நிறுவிப் பேணி வருகிறார். வலைப்பூ முகவரி : http://thamizhkulam.blogspot.com .பத்தோடு பதினொன்றாக இருப்பதை விட , ஆயிரத்தில் ஒருவராக இருப்பதில் தான் இவருக்கு ஆர்வம் அதிகம் !

முடிவுரை:

தொழிற்திறன் வல்லமை பெறும் வாய்ப்புகளைப் பெறாமல், ஏட்டுக் கல்வி வாய்ப்பை மட்டுமே பெற்றதால், வாழ்க்கையில் நிரம்பவும் இன்னற் பட்டிருக்கிறார் இராமச்சந்திரன். அவர் எதிர்கொண்ட இன்னல்களை அவரது மக்கள் செல்வங்களும் நேர்கொள்ளக் கூடாது. எனவே இருவரையும் அவர்களுக்குப் பிடித்த தொழிற் பயிற்சிகளில் சேர்ந்து பயிற்சி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர முயல்வார் என நம்புகிறோம். வாழ்க தமிழ்த் தொண்டர் இராமச்சந்திரன் ! வாழிய அவரது மனைவியும் மக்களும் ! வாழ்வில் அனைத்து வளங்களையும் பெற்று இராமச்சந்திரன் குடும்ப உறுப்பினர்கள் நீடுழி வாழ்க என வாழ்த்துவோம் !

தொடர்பு முகவரி:

பாலு இராமச்சந்திரன்,
ஆர்.டி.யூ.காலனி,
எண்டப்புளி அஞ்சல்,
பெரியகுளம் வட்டம்,
தேனி மாவட்டம்,
.குஎண் 625604.
எழினி - 8754711841
மின்னஞ்சல் bramji319@gmail.com

------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2051,கும்பம்(மாசி)09]
{21-02-2020}

------------------------------------------------------------------------------------------------------