என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 29 செப்டம்பர், 2021

(06) நடராச தேவர் (திரு).கா - கடிநெல்வயல்.

கா. நடராசன் 

கடிநெல்வயல் கா. நடராசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு 

தோற்றம்:


நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்யல் என்னும் சிற்றூரில் 1938 –ஆம் ஆண்டு, சனவரி மாதம், 19 –ஆம் நாள் பிறந்தவர் திரு.கா.நடராசன். இவரது தந்தை பெயர் சி.காசிநாத தேவர்; தாயார் திருமதி மாரிமுத்து அம்மையார் !

 

பெற்றோர் வரலாறு:


கடிநெல்வயலில் பிறந்து, வாழ்ந்தவர் திரு.சிங்காருத் தேவர். இவருக்குப் பிறந்த ஆண்மக்கள் இருவர். மூத்தவர் திரு.காசிநாத தேவர்; இளையவர் திரு.சி.வைத்தியநாததேவர். திருத்துறைப் பூண்டி அருகிலுள்ள வேப்பஞ்சேரியில் வாழ்ந்து வந்த திரு.இராமசாமித் தேவரின் மகள் செல்வி மாரிமுத்துவை மணந்துகொண்டவர் திரு.காசிநாத தேவர் !

 

உடன்பிறப்புகள்:

 

திரு.காசிநாத தேவர்திருமதி மாரிமுத்து அம்மையார் இணையருக்கு  இரு ஆண்மக்களும் ஒரு பெண் மகவும் பிறந்தனர். மூவரில் மூத்த குழந்தையின் பெயர் இருளப்பன். பஞ்சநதிக்குளம் இருளப்பசாமியின் நினைவாக வைத்த பெயர். இவர் 1930 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 -ஆம் நாள் பிறந்தார். அடுத்ததாகப் பிறந்த பெண் குழந்தையின் பெயர் செகதாம்பாள். மூன்றாவது குழந்தையின் பெயர் நடராசன். இவர் பிறந்த நாள் 19-01-1938.

 

தொடக்கக் கல்வி:


திரு.நடராசன் தனது 5 - ஆம் அகவையில் கடிநெல்வயலில் உள்ள அரசினர்  தொடக்கப் பள்ளியில் தன் கல்வியுலாவைத் தொடங்கினார். 1943 –ஆம் ஆண்டு விசயதசமி நாளன்று கைகளில் ஓலைச் சுவடியுடன் ஒன்றாம் வகுப்பில் அடியெடுத்து வைத்த இவர்  5 –ஆம் வகுப்பு வரை இதே பள்ளியில் பயின்று தன் தொடக்கக் கல்வியை நிறைவு செய்தார்  !


இடைநிகழ்வு - தந்தை மறைவு:


கடிநெல்வயலில் திரு.நடராசன் நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கையில்அவரது தந்தை திரு.காசிநாத தேவர்வேப்பஞ்சேரியில் இருந்த தனது நிலத்தின் அறுவடைப் பணியின்  நிமித்தம்  அங்கு சென்றிருந்தார்.  அந்த  நேரத்தில் அவருக்கு வாந்தி பேதி (CHOLERA) ஏற்பட்டு, முதலுதவி மருத்துவம் பார்த்துக் கொண்டுதிருத்துறைப்பூண்டி சென்று அங்கிருந்து தொடர்வண்டி (Rail) மூலம் அகத்தியன் பள்ளி நிலையத்தில்  வந்து இறங்கினார் !

 

வாந்திபேதி மீண்டும் அவரது உடல்நிலையை நலிவடையச் செய்ததுஅகத்தியன் பள்ளியிலிருந்து மாட்டுவண்டி மூலம்அவரைக் கடிநெல்வயல் அழைத்து வந்தனர்கடிநெல்வயலை நெருங்க நெருங்க அவர் உயிர் ஊசலாடத் தொடங்கியதுஆலடிக் குளத்திற்கு வடக்கில்  பின்னாளில் நாவிதர் வடிவேலு குடியிருந்த மனைவரை வந்த மாட்டுவண்டிஅங்கிருந்து வீடு வரை வருவதற்கு வண்டிச்சாலை இல்லாததால் அங்கேயே நின்றுவிட்டது !

 

ஒரு கயிற்றுக் கட்டிலில் அவரைப்  படுக்க வைத்து அங்கிருந்து கட்டிலுடன் தூக்கிவந்தனர்இப்போது பெரிய பண்ணை வீடு என்று வழங்கப்படும் திரு.காசிநாத தேவர் வாழ்ந்த வீட்டிற்கு அவர் வந்து சேரும் வரை இருந்த உயிர்இரண்டொரு நாழிகைகளில் அவரை விட்டுப் பிரிந்துவிட்டது. 1948 –ஆம் ஆண்டு திரு.காசிநாத தேவர் எனப்படும் என் பெரியப்பா மறைந்த போது  எனக்கு அகவை நான்கு. அவரது இறப்பு நிகழ்வு அனைத்தும் மெல்லிய   புகைப்படலக்   காட்சிகளாக என் மனத்தில் இன்றும் நிலைத்திருக்கிறது !


அண்ணனின் அரவணைப்பில்:

 

10 -ஆம்  அகவையில் தந்தையை இழந்துவிட்ட திரு.நடராசன்தாயார்  மாரிமுத்து அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாலும் ஒரு தந்தையைப் போல் தன் தம்பியைப் பாதுகாத்துப் படிக்க வைத்தவர் அண்ணன் இருளப்ப தேவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை  !

 

பள்ளிக் கல்வி:


தொடக்கக் கல்வியை அடுத்து  திரு.நடராசன்,  1949 –ஆம் ஆண்டு சூன் மாதம் வேதாரணியத்தில்  உள்ள அரசினர் உயர்நிலைபள்ளியில்  6 –ஆம் வகுப்பில் சேர்ந்தார் !

 

படிப்பில் திறமைசாலியாக  விளங்கிய அவர் அப்போது  இனிய குரல் வளத்தையும் பெற்றிருந்தார். அந்நாளில் வெளிவந்து பரவலாக  மக்களிடம் சென்றடைந்திருந்த  திரைப்படப் பாடல்கள் அவரது குரல்வளத்தில் மேலும் மெருகேறிக் கேட்பவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திக் கொண்டிருந்தன.  அந்த இனிய குரலை நான் கேட்டு ஏறத் தாழ 60 ஆண்டுகள்  கடந்துவிட்டன, என்றாலும் அந்தப் பாடல்கள் இன்னும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதாகவே உணரமுடிகிறது !

 

பள்ளிக் கல்வி நிறைவு:

 

மக்களால் அப்போது நரிக்குண்டு பள்ளிக்கூடம்  என்று அழைக்கப்பெற்று வந்த  வேதாரணியம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில்  அப்போதைய பள்ளியிறுதி வகுப்பான 11 –ஆம் வகுப்புத் தேர்வினை 1955 –ஆம் ஆண்டு மார்ச் மாதம் எழுதிய இவர், அதில் தேர்ச்சி பெற்றதும்,  இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலானார்.

 

ஆசிரியர் பயிற்சிக்கு முதன்முறை, தேர்வு:


ஈராண்டுகள் முயன்ற பிறகு 1957 –ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வு செய்யப் பெற்றார். பயிற்சியில் சேர்வதற்காக, தஞ்சாவூரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு 1957 –ஆம் ஆண்டு சூன் மாதம் சென்றார். உடைகள் வைத்திருந்த தகரப் பெட்டி, படுப்பதற்கு நூற்கம்பள விரிப்பு, தலையணை, வாளி போன்ற பொருள்களுடன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்கு இவரும், இவரது உடைமைகளை எடுத்துச் செல்ல ஒரு துணைவருமாக இருவரும் சென்றனர். இந்தக் காட்சியைக் கண்ணுற்ற பள்ளி முதல்வர், ”உன் உடைமைகளைச் சுமந்து வர ஒரு துணைவரா ? உனக்கு இங்கு இடமில்லை, சென்றுவிடுஎன்று சொல்லிச் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார் !

 

கடிநெல்வயலில் அப்போது ஊரார் போற்றும் உயரிய மனிதராகத் திகழ்ந்த மு..தனசாமிப் பிள்ளை போன்றோர் பலவழிகளில் முயன்றும் இறுதியில் பயனில்லாமற் போயிற்று.  மனிதர்கள் அதிகாரிகளாக இருந்தால், பேசலாம்; ஞாயத்தை எதிர்பார்க்கலாம்; பேய்கள் அதிகாரத்தில் அமர்ந்தால் அங்கு பரிவும் இருக்காது, ஞாயமும் கிடைக்காது. சோர்ந்த மனத்துடன் வீட்டிற்கு வந்த திரு.நடராசன்  துன்ப உணர்வில் துவண்டுபோனார் !

 

ஆசிரியர்  பயிற்சிக்கு இரண்டாம் முறையாகத் தேர்வு:


பத்து மாதங்கள் உருண்டோடின. மனச் சோர்வைத் துடைத்து எறிந்துவிட்டு, மீண்டும் ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்தார். முயற்சி திருவினையாக்கும் என்பது உண்மையாகியது !  ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வானார். இம்முறை வேதாரணியத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இடம் கிடைத்தது. 1958 –ஆம் ஆண்டு சூன் மாதம் பயிற்சியில் சேர்ந்தார்.  ஈராண்டுப் பயிற்சியை 1960 –ஆம் ஆண்டு நிறைவு செய்தார் !

 

ஆசிரியப் பணியில் அமர்வு:


இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்த பின்பு விரைவிலேயே ஆசிரியராகவும்  பணியமர்த்தம் செய்யப்பெற்றார். ஆம் ! 1960 –ஆம் ஆண்டு  சூலை மாதம் வேம்பதேவன் காடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கபள்ளியில் இடைநிலை ஆசிரியராக (Secondary Grade Assistant) பணியில் சேர்ந்தார் ! ”அரசினர் தொடக்கப்பள்ளிஎன்னும் பெயர் மாறிஊராட்சி ஒன்றியத் தொடக்கபள்ளிஎனப் புதிய பெயரைச் சூட்டிக்கொண்டு பள்ளிகள் இயங்கத் தொடங்கியது இந்தக் காலகட்டத்தில் தான் !

 

ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பணியாற்றிய பிறகு  அங்கிருந்து தாணிக்கோட்டகத்திற்கு இடமாற்றலானார். அங்கு சிலகாலம் பணியற்றிய பிறகு தனது பிறந்த ஊரும் படித்த பள்ளி இருக்கும் ஊருமான  கடிநெல்வயலுக்குத் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணி மாற்றல் பெற்றார் !

 

கடிநெல்வயலை அடுத்து சிறுதலைக்காடு, கருப்பம்புலம் செட்டியகாடு, ஆதனூர் ஆகிய இடங்களில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். இறுதியில் கடிநெல்வயலில் இரண்டாம் முறையாகத் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஏறத்தாழ  35  ஆண்டுகள் ஆசிரியப் பணிக்குப் பிறகு 1996 –ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 –ஆம் நாள் ஓய்வு பெற்றார் !

 

உடன்பிறப்புகளின் சுருக்க வரலாறு:


மூத்தவரான திரு.இருளப்பதேவருக்கு  18 அகவை ஆகும்போது அவரது தந்தை காசிநாத தேவர் மறைந்துபோனார். குடும்பத் தேரை இழுத்துச் செல்ல வேண்டிய முழுப் பொறுப்பும் இவர் தோள்களில் வந்து இறங்கியது. தலைவனை இழந்த  குடும்பத்திற்காக அந்த இளம் பருவத்திலேயே  தனியாக அவர் போராட வேண்டியிருந்தது !

 

புதிதாக  வீடுகட்டியது, தன்  திருமணத்தைச் சிறப்புடன்  நடத்திக் காட்டியது, தங்கையின் திருமணம், தம்பியின் திருமணம் ஆகியவற்றைக் காலாகாலத்தில் செய்து  காட்டியது, போன்ற செயல்களைத் துணிவுடன் நிகழ்த்திக் காட்டிய திரு.இருளப்ப தேவர் கடிநெல்வயல் ஊரக (கிராம)  அதிகாரியாக (பட்டாமணியார் – VILLAGE MUNSIFF ) நெடுங்காலம் பணிபுரிந்தார். இறுதியில் 30-09-2016 அன்று தனது  87 –ஆம் அகவையில் காலமானார் !

 

திரு.இருளப்பதேவர், திரு. நடராச தேவர் ஆகியோரின்  ஒரே பெண்பால் உடன்பிறப்பான செல்வி செகதாம்பாள், ஈசனக்குடி திரு.குழந்தைவேல் பிள்ளை என்பவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். இப்போது அவருக்கு அகவை 86 ஆகிறது. திரு குழந்தைவேல் பிள்ளை  அவர்கள்  25-08-1974 அன்று காலமாகிவிட்டதால், திருமதி செகதாம்பாள்  அவர்கள் தன் அண்ணன் மகன் திரு.இராமலிங்கம் குடும்பத்தினருடன்   மன்னார்குடி வட்டம்  ஈசனக்குடியில் இப்போது வாழ்ந்து வருகிறார் !

 

தாயார் மறைவு:


ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு  பெறுவதற்கு ஓராண்டு முன்னதாகஅதாவது  27-02-1995 அன்று - திரு.நடராசன்  தனது அன்னை மாரிமுத்து அம்மையாரையும்  இழந்தார். 10 -ஆம்  அகவையில் தந்தையை இழந்த இவர் தனது 58 –ஆம் அகவையில் தாயாரையும்  இழந்தார் !

 

திருமணம்:


ஆசிரியப் பணியேற்ற இரண்டாம் ஆண்டிலேயே – 1962 –ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் - இவருக்குத் திருமணம்  நடைபெற்றது. ஆயக்காரன்புலம் 3 –ஆம் சேத்தியைச் சேர்ந்த திரு.சுப்பையாத் தேவர் - திருமதி அமிர்தவல்லி இணையரின்  செல்வமகள் திருநிறைசெல்வி அலர்மேல் மங்கையை  தனது 24 –ஆம் அகவையில் கரம் பிடித்தார் !

 

குடும்பம்:


திரு.நடராசன்திருமதி அலர்மேல் மங்கை  இணையருக்கு  இரு ஆண் மக்களும் ஒரு பெண் மகவும் பிறந்தனர்.  மூத்த பிள்ளை  திரு. சுப்ரமணியன்,  23-05-1963 அன்று பிறந்தார்.   இவர் பஞ்சநதிக்குளம் கீழச் சேத்தி, திரு.பழனித்துரை அவர்களின் மகள் செல்வி. சாந்தியை  08-09-1996  அன்று திருமணம் செய்துகொண்டார் !

 

இவர்களது ஒரே மகன் பெயர் திரு.சுனில் நந்தா . பொறியியல் பட்டதாரியான இவர், இந்திய அஞ்சல் துறையில் பணியாற்றுகிறார்.  திரு சுப்ரமணியன், கடிநெல்வயலில் இயங்கிவரும் குஜராத் ஹெவி கெமிகல்ஸ் லிமிட்டெட் என்னும்  நிறுவனத்தில் பணியாற்றி, இவ்வாண்டு (31-05-2021 அன்று)  ஓய்வு பெற்றார் !

 

திரு.நடராசன்அலர்மேல் மங்கை இணையரின் மகள் பெயர் தமிழ்ச் செல்வி. இவர் கருப்பம்புலம் நடுக்காட்டைச் சேர்ந்த ஆசிரியர் திரு.நடராச தேவரின் மகன் திரு .சிவானந்தம்  M.A. B.Ed., அவர்களை 31-08-1986 அன்று மணந்து  கொண்டார் !


இவர்களது ஒரே மகன் திரு.திலீபன் நடராஜ், மென்பொருள் பொறியாளராகச் சென்னையில் பணிபுரிந்து வருகிறார் !

 

தமிழ்ச் செல்விசிவானந்தம் ஆகியோரின் இல்லற ஓடம்யார் கண் பட்டதோ தெரியவில்லை – 03-09-2014 அன்று கவிழ்ந்து போயிற்று. ஆம் ! அன்று தான் என் மனதில் இன்றும் நீக்கமற நிறைந்திருக்கும் திரு.சிவானந்தம் அவர்கள் மறைந்த நாள் !

 

திரு.சிவானந்தம்திருமதி தமிழ்ச்செல்வி இணையரின் 28 ஆண்டு இல்லறவாழ்வு முடிவுக்கு வந்தாலும், அவர்களது  மகன்  திலீபன் நடராஜ் B.E.,  மருமகள் பவித்திரா B.E., ஆகியோரின் இல்லறச் சோலையில் பூத்திருக்கும் பெயர்த்தியின் வாயிலாக சற்றே மன அமைதி கண்டு வருகிறார் பாட்டி தமிழ்ச்செல்வி !

 

திரு.நடராசன்திருமதி அலர்மேல் மங்கை இணையரின் இரண்டாவது  பிள்ளையான  திரு. காசிநாதன் 17-06-1973 அன்று பிறந்தார். M.A.,B.Ed., பட்டதாரியான இவர்  இப்போது தமிழாசிரியராகப் பணியாற்றி வருகிறார்., M.A., M.Phil., பட்டதாரியான செல்வி சுதாவை 21-05-2007 அன்று மணந்துகொண்டார். இவர்களுடைய ஒரே மகன் பெயர் பத்ரிநாத் !

 

முடிவுரை:


தொடக்கப்பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான திரு.நடராச தேவர்  அவர்கள் இளமைக் காலத்தில் இசைநயத்துடன் பாடும் வல்லமை  பெற்றவராக இருந்ததுடன், முத்து  முத்தாக எழுதும் கையெழுத்து  ஆற்றல் உடையவராகவும்  திகழ்ந்தார். அவரது  கையெழுத்துத் திறன் இன்று வரை அதே நேர்த்தியுடன் நீடிக்கிறது என்பது அவரையறிந்த அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் நற்செய்தியாகும் !


தான் பணிபுரிந்த பள்ளிகளில் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தவர். கற்பித்தல், ஒழுங்கு, கட்டுப்பாடுகளைப் பின்பற்றுதல் பள்ளி ஆவணங்கள் பேணுதல்  ஆகியவற்றில் பிற ஆசிரியர்களுக்கு முன்னெறியாக விளங்கியவர் !


இயல்பாகவே அனைவரிடமும் அன்புள்ளமும் பிறருக்கு உதவும் பரிவு மனமும் கொண்டவர். வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட துன்பங்களைப் போல் வேறு யாருக்கும் வரலாகாது என்று எண்ணுபவர். நல்லுள்ளம் படைத்த நடராச தேவரும் அவர் மனைவி மக்கள் உள்பட அவரது இல்லத்தினர் அனைவரும்  என்றென்றும் நலமுடன் வாழ இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவிப்போம் !

*****************************************************************************

இவரது வாழ்க்கை நிகழ்வுகள் ஆண்டு வாரியாக !


(01) 18-04-1930. அண்ணன் கா.இருளப்ப தேவர் பிறப்பு

(02) 19-01-1938. கா.நடராசன்  பிறப்பு

(03) 00-10-1943. கா.நடராசன் ஒன்றாம் வகுப்பில் சேர்தல்

(04) 00-00-1948. திரு.காசிநாத தேவர் மறைவு.

(05) 00-06-1949. வேதாரணியத்தில் 6-ஆம் வகுப்பில் சேர்தல்

(06) 00-03-1955. S.S.L.C. தேர்ச்சி.

(07) 00-06-1957. ஆசிரியர் பயிற்சிக்கு  முதன்முறை  தேர்வு பெறல்

(08) 00-06-1958. வேதாரணியத்தில் ஆசிரியர் பயிற்சியில்  சேரல்

(09) 00-07-1960. வேம்பதேவன் காட்டில் ஆசிரியராகப் பணியேற்பு.

(10) 00-09-1962. கா.நடராசன் அலர்மேல் மங்கை திருமணம்

(11) 23-05-1963. .சுப்ரமணியன் பிறப்பு.

(12) 17-06-1973. .காசிநாதன் பிறப்பு

(13) 25-08-1974. எஸ்.குழந்தைவேல் பிள்ளை மறைவு.

(14) 31-08-1986. தமிழ்ச்செல்விசிவானந்தம் திருமணம்.

(15) 27-02-1995. மாரிமுத்து அம்மையார் மறைவு.

(16) 31-01-1996. ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெறுதல்.

(17) 08-09-1996. சுப்ரமணியன்சாந்தி திருமணம்.

(18) 21-05-2007. காசிநாதன்சுதா திருமணம்.

(19) 03-09-2014. திரு.சிவானந்தம் மறைவு.

(20) 30-09-2016. திரு.இருளப்பதேவர் மறைவு.

 

******************************************************************************

 

திரு.கா.நடராச தேவர் அவர்களின் தொடர்பு முகவரி:

கா.நடராச தேவர்,

ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்,

கீழக்காடு,

கடிநெல்வயல் (.நி)

ஆயக்காரன்புலம்-2. (கி..நி)

வேதாரணியம் வட்டம்,

நாகப்பட்டினம் மாவட்டம்.

அடையெண்: 614 707

எழினி (Mobile):

81108 – 83187

97876 – 33187

63829 – 74337

76398 – 18407

--------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்,

[தி.: 2052, கன்னி (புரட்டாசி)13]

{29-09-2021}

-------------------------------------------------------------

கா.நடராசன் - சு.அலர்மேல் மங்கை இணையர்
 (1962)
கா.நடராசன்.
(1962)
கா.நடராசன் 
(25-01-2013)
கா.நடராசன்
(08-01-2018)
கா.நடராசன்
(25-09-2021)
கா.நடராசன்
(25-09-2021)
கா.நடராசன்
(25-09-2021)
கா.நடராசன்
(25-09-2021)


ந.அலர்மேல்மங்கை
(08-01-2018)
கா.இருளப்ப தேவர்
மாரிமுத்து அம்மையார்

ந.சுப்ரமணியன் 
ந.சுப்ரமணியன்
(25-09-2021)



சு.சாந்தி
(08-01-2018)

.காசிநாதன் - கா.சுதா- கா.பத்ரிநாத்



ந.காசிநாதன்

கா.பத்ரிநாத்




2 கருத்துகள்: