என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

அன்பழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்பழகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

(11) கடிநெல்வயல் (திரு) அன்பழகன் - வாழ்க்கை வரலாறு !

 

                                                                                                   


  கடிநெல்வயல் திரு ச.அன்பழகன் வாழ்க்கை வரலாறு !


முகவுரை.

என்னுடைய  தந்தை திரு.சி.வைத்தியநாத தேவரின்  பெரியப்பா மகன் திரு சாம்பசிவ தேவரின் மகள்வழிப் பெயரனும்  பஞ்சநதிக்குளம் சின்ன காரியக்காடு திரு சிங்காரவேல் தேவரின் மகன் வழிப் பெயரனும் கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவருமான திரு ச.அன்பழகனின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாததுயாராலும் அழிக்கவோதிருத்தம் செய்யவோஎதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம்வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன் நல்லபொதிய தேவர்.   இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர், நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்துகொண்டார்.  இவர்களுள் திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; அடுத்தவர்  திரு.சாம்பசிவ தேவர்கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர்.  திருசாம்பசிவ தேவரின் மகள் திருமதி நீலாம்பாள் (எ) தனலட்சுமி சக்கரபாணி  இல்லத்தில்  மலர்ந்த நறுமண  மலரே திரு அன்பழகன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)


தாய் வழிக் குலக்கொடி: 

மாரியப்ப தேவர்  >  நல்லபொதிய தேவர்  > சீனிவாச தேவர் / நீலாம்பாள் அம்மையார் > சாம்பசிவ தேவர் / வீரம்மாள் அம்மையார் > (மகள்) நீலாம்பாள் (எ) தனலட்சுமி. 

 

தந்தை  வழிக் குலக் கொடி: 

பஞ்சநதிக்குளம் சிங்காரவேல்  தேவர்  > சக்கரபாணித் தேவர் / (தாயார்)  நீலாம்பாள் (எ) தனலட்சுமி  >  அன்பழகன் / (மனைவி) ஈசுவரி. 


தாத்தா திரு. சாம்பசிவ  தேவர் - வீரம்மாள் இணையர்.

கடிநெல்வயல், கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார்புரம், மாரியப்ப தேவர் மகன் நல்லபொதிய தேவர். இவரது  மகன் திரு .சீனிவாச தேவரின்  இரண்டாவது மகனான  திரு சாம்பசிவத் தேவர், பஞ்சநதிக்குளம் சின்னகாரியக் காடு திரு சிங்காரவேல் தேவரின் மகளான செல்வி வீரம்மாளைத்  திருமணம்  செய்துகொண்டார் !

 

தாய்வழித் தாத்தா திரு சாம்பசிவ தேவர் – வீரம்மாள் !

திரு சாம்பசிவ தேவர் – வீரம்மாள் இணையருக்கு ஐந்து பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.   தலைச்சன் குழந்தையின் பெயர் நீலாம்பாள் (எ) தனலட்சுமி; இரண்டாவது குழந்தையின் பெயர் பால சுந்தரி; மூன்றாவது குழந்தையின் பெயர் தேவகுஞ்சரி; நான்காவது குழந்தையின் பெயர் நாகவல்லி. ஐந்தாவது குழந்தையின் பெயர்  சிங்காரவேலு; ஆறாவது குழந்தையின் பெயர் விசயா !

 

திரு சாம்பசிவ தேவரின் பிள்ளை பெண்களின் திருமணம் !

தலைச்சன் குழந்தை, வளர்ந்து பெரிய பெண் ஆனதும் தனது தாய் மாமா பஞ்நதிக்குளம் சக்கரபாணி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது பெண்ணான  பாலசுந்தரி பஞ்நதிக்குளம் நடுச்சேத்தி, (கூழையன்காடு) இரத்தின தேவர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது பெண் தேவகுஞ்சரி, வாய்மேடு சொக்கையாத் தேவர் மகன் காந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். நான்காவதாகப் பிறந்த பெண் நாகவல்லி ஐந்து வயது ஆகும் நிலையில் இறந்து போனது.  ஐந்தாவதாகப் பிறந்த சிங்காரவேலு தோப்புத் துறை இராமலிங்க  தேவர் என்பவரின் மகள் தையல்நாயகியைத் திருமணம் செய்துகொண்டார். ஆறாவதாகப் பிறந்த விசயா அகத்தியன்பள்ளி திரு இராமாமிர்தம் என்பவரின்  மகன் முருகேசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் !

 

திரு அன்பழகனின் பெற்றோர், திரு சக்கரபாணித் தேவர் – தனலட்சுமி இணையர் திருமணம்:

சக்கரபாணித் தேவர் – நீலாம்பாள் (எ) தனலட்சுமி இணையர் திருமணம் கடிநெல்வயலிலுள்ள திரு சாம்பசிவ தேவர் வீட்டில் நடைபெற்றது. அதே நாளில் தான் என் தமக்கையார் சிந்தாமணி – தாய்மாமா சி.பண்டரிநாதன் திருமணமும் கடிநெல்வயலிலுள்ள எங்கள் வீட்டில் நடைபெற்றது. திருமணம் எந்த ஆண்டு நடைபெற்றது என்பது எனக்கு நினைவில்லை. அப்பொழுது எனக்கு பத்து  அகவை இருக்கலாம். பெரும்பாலும் அது 1954 -ஆம் ஆண்டாக இருக்கக்கூடும் !


திருமணப் பந்தலில் தட்டொலிப்பேழை (Gramaphone) இயக்கம்.

மாமா திரு.பண்டரி நாதன் – அக்கா சிந்தாமணி திருமணத்தில்  நான் நெற்பொறி அள்ளிக்கொடுக்க  மாமாவும் அக்காவும் சேர்ந்து பொறியை ஓமகுண்டத்தில் போட்டது இப்போதும் (2026) தெளிவாக நினைவு இருக்கிறது. அதுபோல், மாமா திரு.பண்டரி நாதன் – அக்கா சிந்தாமணி திருமணத்தில், திருமணப் பந்தலில் தட்டொலிப்பேழை (Gramaphone) வைத்து திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பியதும் நினைவிருக்கிறது !


திரு சக்கரபாணித்தேவர் – தனலட்சுமி இணையர் 

இல்லற வாழ்வு.

திரு சக்கரபாணித் தேவர் – நீலாம்பாள் (எ) தனலட்சுமி இணையர் திருமணம் நடந்த பின்பு அவர்களது இல்லற வாழ்வு கடிநெல்வயலிலேயே தொடங்கியது. திரு சக்கரபாணித் தேவர் வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனார் சாம்பசிவ தேவர் வீட்டிலேயே வாழ்ந்துவந்தார். அவரது தந்தையார் திரு சிங்காரவேலுத் தேவர் தன் மகனின் திருமணத்தைப் பார்ப்பதற்கு முன்பே இறந்து போனார்.  திரு சக்கரபாணித் தேவர் தன் மாமனாரின் நிலபுலன்களைக் கவனிப்பதும், அவற்றில் நெல் சாகுபடி செய்வதும்  அவரது அன்றாடக் கடமைகளாக மாறிப் போயின ! அவரது சிற்றப்பா பஞ்சநதிக்குளம் சின்னகாரியக்காடு கந்தசாமித் தேவர் ஆண்டுக்கு ஓரிரு முறை கடிநெல்வயல் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவருக்கு 60 அல்லது 65  அகவை இருக்கலாம். கையில் தடி ஊன்றிக் கொண்டு அவர் நடந்து வரும் காட்சி இன்றும் கூட என் நினைவுகளில் பசுமையாக நிலைத்திருக்கிறது !


திரு அன்பழகன் பிறப்பும் திரு சக்கரபாணித் தேவர் மறைவும் 

1954 வாக்கில் திருமணமான சக்கரபாணித் தேவர் – நீலாம்பாள் (எ) தனலட்சுமி இணையருக்கு 1972 வரை – ஏறத்தாழ 18 ஆண்டுகள் குழந்தையின்மை தொடர்ந்தது. அதன் பின் 1972 -ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் (16-05-1972) ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அன்பழகன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். ஆனால் அன்பழகனின் தந்தை திரு சக்கரபாணித் தேவர், அன்பழகன் பிறந்த அதே ஆண்டிலேயே இறந்து போனார் !


தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையாரின்  கையறு நிலை !

அன்பழகனின் தாயார் திருமதி நீலாம்பாள் (எ) தனலட்சுமி தன் வாழ்க்கையில் துன்பங்களையே எதிர்கொண்டு வாழும் நிலை ஏற்பட்டது. சொந்தம் விட்டுப்போகக் கூடாது என்று நடப்பா திரு சாம்பசிவ தேவர் தன் மைத்துனர் திரு சக்கரபாணித் தேவருக்குத் தன் மகள் தனலட்சுமியைத் திருமணம் செய்து கொடுத்ததில் தொடங்கியது திருமதி தனலட்சுமியின் துயர வாழ்வு. 1954 வாக்கில் திருமணமான அவருக்கு, ஏறத்தாழ 18 ஆண்டுகள் குழந்தையின்மை நிலவியது. பின்பு குழந்தை பிறந்தது; ஆனால் அதே ஆண்டு தன் கணவரைப் பறிகொடுத்தார். பெரியவர்கள் செய்யும் சில தவறுகள் பிள்ளைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கியது திருமதி தனலட்சுமியின் வாழ்க்கை !

 

அன்பழகனின் தொடக்கக் கல்வி !

தந்தையை இளமையிலேயே இழந்துவிட்ட  அன்பழகன்,  தாயுடன் தன் தாத்தா பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வந்தார். ஐந்து அகவை ஆனதும் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கின. வழக்கம் போல் பனை ஓலைச் சுவடியில் தமிழ் எழுத்துகளையும் எண்களையும் எழுதி, அதில் மஞ்சள் தடவி, பெரியோர்களின் வாழ்த்துகளுடன்,  குழந்தை அன்பழகன் கடிநெல்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1977 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசயதசமி நாளன்று ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஐந்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்த அன்பழகன் 1982 -ஆம் ஆண்டு சூன் மாதம் கருப்பம்புலம் பி.வி.தேவர் உயர்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர்க்கப்படார் !

 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு !

1983- ஆம் ஆண்டு, சூன் மாதம், வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் சேர்ந்த அன்பழகன் பள்ளிறுதி வகுப்புவரை அங்கேயே தனது படிப்பைத் தொடர்ந்து 1986 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தனது படிப்பை நிறைவு செய்தார் !

 

அன்பழகன் பணி தேடும் படலம் !

பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபின், தனது சித்தி விசயாவின் கணவரான அகத்தியம்பள்ளி திரு முருகேசன் அவர்களின் தேநீர்க்கடையில் அவருக்கு உதவியாக ஏறத்தாழ ஓன்பது  ஆண்டுகள்  (1986 – 1995) அன்பழகன் பணிபுரிந்தார். இதையடுத்து வேதாரணியம் லலிதா நகைக் கடையில் பணியில் சேர்ந்து 12  ஆண்டுகள் பணியாற்றித் தனது இளமைக் காலத்தைக் கரைத்தார். தக்க வழிகாட்டவும், உதவிகள் செய்யவும் உறவினர்கள் இல்லாவிட்டால் படித்த இளைஞர்களின் இளமைக்காலம் இப்படித்தான் முடமாகிப் போகிறது !

 

நடத்துநர் பணியில் அன்பழகன் இணைவு !

லலிதா நகைக் கடையில் பணியாற்றுகையில் சில நல்லவர்களின் வழிகாட்டுதலில், நடத்துநர் பணிக்குத் தகுதி பெறும் பொருட்டு, குறுகிய காலப் பயிற்சியும், உரிமமும் பெற்று, வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். வேலை வாய்ப்பகத்தின் பரிந்துரையின் பேரில்  அப்போதைய சோழன் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடமிருந்து வந்த அழைப்பாணையை ஏற்று, நடத்துநருக்கான நேர்காணலில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று  2007 - ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம்,  03 - ஆம் நாள் (03 – 04 - 2007 ) அன்று நடத்துநராகப் பணியில் சேர்ந்தார் !


அன்பழகன் - ஈசுவரி  திருமணம் !

நடத்துநராகப் பணி ஏற்பதற்கு முன் இல்லற வாழ்க்கையில் இணையும் பேறு அன்பழகனுக்கு வாய்த்தது. வேதாரணியம் வட்டம் மருதூரைச் சேர்ந்த திரு.தெட்சணாமூர்த்தி – சீதாரமணி இணையரின் மகளான செல்வி ஈசுவரி அன்பழகனின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இவர்கள் திருமணம் 2005 - ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 27 - ஆம் நாள் (தாரண ஆண்டு, பங்குனி மாதம், 14 -ஆம் நாள்), ஞயிற்றுக் கிழமை (27-03-2005) மருதூர் கந்தபவுன்ராசு திருமண மண்டபத்தில் இனிது நிகழ்ந்தேறியது !

 

தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையார் மறைவு ! 

வாழ்க்கையில் இன்பம் என்பதை முற்றிலுமாகவே இழந்திருந்த தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையார் மகனின் திருமணத்தைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்த நிம்மதியில் 14 மாத காலம் மகனுடன் வாழ்ந்த பின், 2006 - ஆம் ஆண்டு, மே மாதம், 13 - ஆம் நாள் (விய ஆண்டு, வைகாசி மாதம் 30-ஆம் நாள்) (13-05-2006) சனிக்கிழமை, பௌர்ணமி நாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார் !


சித்தி விசயாவின் துணை !

தாயார் தனலட்சுமி மறைந்த பின் சித்தி விசயாவின் துணையுடன் அன்பழகன் தன் குடும்பத்தை நடத்தி வந்தார்.  1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயா, தனது 23 -ஆவது அகவையில் அகத்தியன் பள்ளியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை 1976 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 -ஆம் நாள் (27-08-1976) மணந்து கொண்டார். திரு முருகேசன் தேநீர் நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவர்களது இல்லற வாழ்வு எத்தனை ஆண்டுகள் நீடித்தது என்பது எனக்கு நினைவில்லை. திரு முருகேசன் – விசயா இணையருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டவில்லை. திரு முருகேசன் தன் வாழ்வின் இடைப்பகுதியிலேயே தன் மனைவி விசயாவை விட்டுவிட்டு மறைந்து போனார். எரியும் நெருப்பு வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இலவம் பஞ்சாக கருகிப் போன விசயாவின் வாழ்வுக்கு திரு அன்பழகன் தான் பாலைவனச் சோலையாகத் திகழ்ந்து ஆதரவளித்து வந்தார் !

 

அன்பழகன் – ஈசுவரி  இணையரின் பிள்ளைகள் !

அன்பழகன் – ஈசுவரி இணையருக்கு தமேந்திகா, தர்ஷனா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. 2006 - ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 21 - ஆம் நாள் (விய வருடம், ஆவணி மாதம், 5 -ஆம் நாள்) திங்கள் கிழமை (21-08-2006) பிறந்த தமேந்திகா  இப்போது ஆயக்காரன்புலம், சிவகண்ணு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், அறிவியல் வாலை (கணிதம்) (B.Sc -Maths) வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு இப்போது அகவை 20 ஆகிறது. இரண்டாவது பெண் தர்ஷனா 2013 - ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம்  22 - ஆம் நாள் (விசய வருடம், ஆவணி மாதம், 6 -ஆம் நாள்) வியாழக்கிழமை (22-08-2013) பிறந்தார். 13 அகவை ஆகும் இவர் இப்போது கடிநெல்வயலில் உள்ள அரசினர் அரசினர்மேனிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்!

 

ஊராட்சித் துணைத் தலைவராக அன்பழகன்  தேர்வு  !

திரு. அன்பழகனின் வாழ்க்கை ஓடம் அமைதியான குளத்தில் ஆடி அசைந்து பயணித்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராவண்ணம் மக்கள் சேவையில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வந்தது. ஆம் ! கடிநெல்வயல் ஊராட்சியில், கீழக்காடு சார்பில் ஊராட்சி உறுப்பினராகவும் பின்னர் ஊராட்சித் துணைத் தலவராகவும் தேர்வாகும் வாய்ப்புக் கிடைத்தது. 2001 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் வரை ஐந்தாண்டு காலம் ஊரார் புகழும் வண்ணம் இப்பதவியில் அவர் பணியாற்றியது அவரது வாழ்வில் ஒரு இனிப்பான வசந்த காலம் என்று தான் சொல்ல வேண்டும் !

 

திரு சாம்பசிவ தேவரின் நான்கு பெண்கள் !

நடப்பா திரு சாம்பசிவ தேவரின் நான்கு பெண்களில் மூத்தவரான நீலாம்பாள் (எ) தனலட்சுமி, மூன்றாவது பெண்ணான தேவகுஞ்சரி, கடைசிப் பெண்ணான விசயா மூவரின் வாழ்க்கையும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதையாகவே அமைந்துவிட்டது. மூவரின் வாழ்க்கைப் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டாவது பெண்ணான பஞ்சநதிக்குளம் இரெ.பாலசுந்தரியின் வாழ்க்கை சற்று ஆறுதலான பாதையில் பயணத்தை மேற்கொண்டு பெயர் சொல்லும் பிள்ளை, பெண் என நீண்டிருந்தாலும் அவரும் கடந்த 2021 - ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 09 - ஆம் நாள் (09-04-2021) அன்று தனது 78-ஆம் அகவையில் காலமானார் !


இரண்டாவது சித்தி வாய்மேடு தேவகுஞ்சரி மறைவு !

மூன்றாவது பெண்ணான தேவகுஞ்சரியும் நானும் கடிநெல்வயலில் உள்ள தொடக்கப்பள்ளியில்  அந்தக் காலத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள். இருவரும் சம அகவையினர். அவரது கணவர் திரு.காந்தி அவர்களின்  குடும்பம் போதுமான செல்வச் செழிப்பு இன்மையால் தேவகுஞ்சரியின் வாழ்வும் இனிக்க வில்லை. ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுத்த தேவகுஞ்சரி குழந்தையை வளர்த்து ஆளாக்கித்  திருமணம் செய்து கொடுத்த பின்  மறைந்து போனார் !


மூன்றாவது சித்தி விசயா மறைவு !

1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயாவின் , வாழ்க்கை புயலில் சிக்கிய கப்பல் போல ஆகிவிட்டது.  தன் வாழ்வுக்கும் இனிமைக்கும் நிம்மதிக்கும்  வெகுதொலைவு என்பதை உணர்ந்த விசயா, கடந்த 2025 - ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், ஒன்றாம் நாள் (01-12-2025)  அன்று தனது 72 -ஆம் அகவையில்  இவ்வுலக வாழ்வை நீத்தார் !

 

அன்பழகன் - ஈசுவரி இணையர்  வாழ்க வளமுடன் !

வாழ்வின் முன்பகுதியில் தன் இளமைக் காலத்தில் ஏற்றம் எதையும் காணமுடியாத அன்பழகன், வாழ்வின் இடைப் பகுதியிலாவது  வளமான வாழ்வை அடைய வாழ்த்துவோம். இரு பெண்களும் நன்கு படித்து, அரசுப் பதவிகளை அடையும் வழிமுறைகளை சான்றோர்களிடம்  கேட்டறிந்து  வாழ்வில் உயர்வடைய வாழ்த்துவோம் !

------------------------------------------------------------------------------------------------------

          அன்பழகன் வாழ்வின் முகாமையான நிகழ்வுகள் !

 ----------------------------------------------------------------------------------------------------

00-00-1934 :தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி பிறப்பு

23-04-1948: தாய்மாமா சா.சிங்காரவேலு பிறப்பு.

00-00-1953 :சித்தி விசயா பிறப்பு 

00-00-1954 :தனலட்சுமி–சக்கரபாணித் தேவர் திருமணம் 

00-00-1957: சித்தி பாலசுந்தரி - இரத்தின தேவர் திருமணம்.

00-00-1960: சித்தி தேவகுஞ்சரி - காந்தி தேவர் திருமணம்.

00-00-1962: தாத்தா சீ.சாம்பசிவ தேவர் மறைவு.

16-05-1972 :அன்பழகன் பிறப்பு  

00-00-1972 :தந்தை சக்கரபாணித் தேவர் மறைவு  .

19-06-1977: மாமா சிங்காரவேலு - தையல்நாயகி திருமணம்.

00-10-1977 :அன்பழகன் 1-ஆம் வகுப்பில் சேரல்  

27-08-1976  :விசயா - முருகேசன் திருமணம் 

00-06-1982 :அன்பழகன் 6-ஆம் வகுப்பில் கருப்பம்புலத்தில் சேரல் 

00-06-1983 :அன்பழகன் 7-ஆம் வகுப்பில் வேதாரணியத்தில் சேரல்

00-03-1986 :அன்பழகன் 10-ஆம் வகுப்பு (S.S.L.C) நிறைவு  

1986 -1995 :சிற்றப்பா முருகேசன் தேநீர்க்கடையில் பணியாற்றல்

1995 -2007 :லலிதா நகைக் கடையில் பணியாற்றல் 

27-03-2005 :அன்பழகன் - ஈசுவரி திருமணம்  

2001-2006 :ஊராட்சித் துணைத் தலைவராகப் பணியாற்றல்

13-05-2006 :தாயார், தனலட்சுமி (72 வயது) மறைவு

21-08-2006 :மகள் தமேந்திகா பிறப்பு  

03-04-2007 :நடத்துநராகப் பணியில் சேரல்

22-08-2013 :மகள் தர்ஷனா பிறப்பு  

09-04-2021 :சித்தி இரெ.பாலசுந்தரி (78 வயது) மறைவு

00-08-2022: மாமி தையல்நாயகி சிங்காரவேலு மறைவு.

01-12-2025 :சித்தி விசயா (72 வயது) முருகேசன் மறைவு

 -----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 10]

{22-02-2026}

-------------------------------------------------------------------------------------

          

திரு ச.அன்பழகன்

  
திருமதி ஈசுவரி - அன்பழகன் இணையர் 

திருமதி ஈசுவரி - அன்பழகன் இணையர் 


தமேந்திகா அன்பழகன்

தர்ஷனா அன்பழகன் 

திருமதி தனலட்சுமி சக்கரபாணித் தேவர்

                      
திருமதி தனலட்சுமி சக்கரபாணித் தேவர்




திருமதி தேவகுஞ்சரி காந்தி தேவர்

திருமதி விசயா முருகேச தேவர்


(தாய்மாமா)  திரு.சிங்காரவேலு  சாம்பசிவம்