என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 18 மார்ச், 2026

(13) வேலூர் (திரு) மீ.இராசேந்திரன் வாழ்க்கை வரலாறு !


 

வேலூர் மீ.இராசேந்திரன் வாழ்க்கை வரலாறு !

 

முகவுரை !

என்னுடைய தாயாரின்  சொந்த தமக்கையின் (மீனாட்சி அம்மையார்) பெயரனும் தந்தையின்  பெரியப்பாவின் (சீனிவாச தேவர்) கொள்ளுப்  பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து, இப்போது வேலூர் நகரில் வாழ்ந்து வருபவருமான திரு.மீ.இராசேந்திரனின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்படும் இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  கூகுளில் சென்று  https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும் !

 

அதிலிருந்து  "தமிழ் நட்பு" என்று காணப்படும்   வரியைச் சொடுக்குங்கள்.   அவ்வளவுதான் !   "தமிழ்  நட்பு” வலைப்பூப் பக்கம் திறந்துகொள்ளும்.          அடுத்து   நீங்கள்  விரும்பும் ஆளிநரின்   (PERSON)   வாழ்க்கை  வரலாற்றைப்  படிக்கத்  தொடங்கலாம் !  

 

வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; இதை உருவாக்கிய என்னைத் தாவிர வேறு யாராலும் இதை அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாது. இதை உருவாக்கியுள்ள நான் (வை.வேதரெத்தினம்) மட்டுமே திருத்தம் செய்ய முடியும். இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க https://thamizhnatpu.blogspot.com என்னும் திறவுகோலைப் பயன்படுத்தும் யாருக்கும் இப்பக்கம் திறந்து கொள்ளும். இனி வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள் !

 

பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்   சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு.சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு. சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கை நல்லாளை மணந்துகொண்டார். திரு. சீனிவாசத் தேவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; அடுத்தவர்  திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு சண்முகவேல் தேவர் ! திரு.அருணாச்சல தேவர் – மீனாட்சியம்மை இணையரின் தலைமகன் திரு,மீனாட்சிசுந்தரம். இவர்களது இரண்டாவது பிள்ளையே திரு.இராசேந்திரன்!


(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

தந்தை வழிக் குலக்கொடி:

மாரியப்ப தேவர் > நல்லபொதிய தேவர் > சீனிவாச தேவர் / நீலாம்பாள் அம்மையார் > அருணாச்சல தேவர் / மீனாட்சி அம்மையார் > மீனாட்சிசுந்தரம் / பார்வதி அம்மையார் > இராசேந்திரன் / கற்பகம்.


தாய் வழிக் குலக்கொடி !

தகட்டூர், கல்யாணச்சேரி இராசகோபால் தேவர் / அரங்கம்மாள் > பார்வதி அம்மையார் / (மீனாட்சிசுந்தரம் > இராசேந்திரன் (கற்பகம்).

 

அருணாச்சல தேவர் / மீனாட்சி அம்மையார் ! சுருக்க வரலாறு !

திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளூரைச் சேர்ந்தவர் திரு சிவப்பிரகாச தேவர். அவரது மனைவி  பெயர் கல்யாணி அம்மையார். இவர்களுக்கு ஞானப்பிரகாசம், வரதராசன், கருணாநிதி, பண்டரிநாதன் ஆகிய நான்கு மகன்களும், மீனாட்சி, சுந்தராம்பாள், சாரதாம்பாள் ஆகிய மூன்று மகள்களும் இருந்தனர். இவர்களுள் மீனாட்சியை மணந்தவர் திரு அருணாச்சல தேவர்.  1927 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 10 -ஆம் நாள்  (10-04-1927) திரு  அருணாச்சல தேவர் – மீனாட்சி அம்மை  இணையருக்குப் பிறந்த குழந்தையான மீனாட்சி சுந்தரம் 18 நாள் பிள்ளையாக இருக்கும் போது குழந்தையை விட்டுவிட்டு தாயார் மறைந்து போனார் !

 

பாட்டியே தாயும் ஆனார் !

பிறந்த 18 நாளில் தாயை இழந்துவிட்ட குழந்தை மீனாட்சிசுந்தரத்தை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் திரு.அருணாச்சலத் தேவர் மனம் கலங்கிப் போனார். அப்போது திரு அருணாச்சலத் தேவரின் மாமனார் திரு சிவப்பிரகாச தேவரும், மாமியார் திருமதி கல்யாணி அம்மையாரும் கலந்து பேசி தங்களுடைய  ஆறுமாதக் குழந்தையான பண்டரிநாதனுடன்  18 நாள் குழந்தையான மீனாட்சிசுந்தரத்தையும் சேர்த்து கல்யாணி அம்மையாரே பால் கொடுத்து வளர்ப்பது என்றும், விரைவில் தங்களுடைய இரண்டாவது மகளான சுந்தராம்பாளை திரு அருணாச்சலத் தேவருக்கு மணம் முடித்துக் கொடுப்பது என்றும் முடிவு செய்தனர். பாட்டியிடம் பால் குடித்து  வளரும் குழந்தையானார் மீனாட்சி சுந்தரம் !

 

திரு அருணாச்சலத் தேவரின் இரண்டாம் திருமணம் !

பிறந்து 18 நாளில் தாயை இழந்துவிட்ட குழந்தை மீனாட்சிசுந்தரத்தை வளர்த்து ஆளாக்கும் பொருட்டு, தனது மாமனார், மாமியார் கருத்துரைப்படி திரு அருணாச்சலத் தேவர், மறைந்த மீனாட்சியம்மையின் தங்கையான சுந்தராம்பாளை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். சுந்தராம்பாள், மீனாட்சிசுந்தரத்தை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் !

 

சுந்தராம்பாளும் மீனாட்சிசுந்தரமும் !

தன் அக்காள் குழந்தையைத் தன் குழந்தையாகப் பாவித்து வளர்த்துவந்த திருமதி சுந்தராம்பாள், தனக்கு அடிக்கடி ஏற்பட்ட கருச்சிதைவின் காரணமாக உடல் நலிந்து போனார். சிலமுறை குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தும் போயின. ஏறத்தாழ 18 ஆண்டுகள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு சாறு பிழியப்பட்டக் கரும்புச் சக்கையாக உடல் நலிந்து போனார். இறுதியில்  1946 -ஆம் ஆண்டு, மே மாதம் 21- ஆம் நாள் (21-05-1946) ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, அதை 18 மாத காலம் வளர்த்து  திரு அருணாச்சல தேவரின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு இறந்து போனார். இப்பொழுது, சீனிவாசன் என்னும் அந்தக் குழந்தையை வளர்க்கும் பொறுப்பு என் தாயார் திருமதி சாரதாம்பாளின் தோள்களில் வந்து அமர்ந்தது !

 

சீனிவாசனின் தாயானார் சாரதாம்பாள் !

சிவப்பிரகாசதேவர் – கல்யாணி அம்மையாரின் முதற் பெண்ணும், இரண்டாவது பெண்ணும் திரு அருணாச்சல தேவருக்கு மனைவிகளாகி இறந்தும் போயினர். திருமதி சுந்தராம்பாள் திரு அருணாச்சல தேவரின் இரண்டாவது மனைவியாக வாழ்ந்துவந்த சில ஆண்டுகளில், அவரது தங்கையான சாரதாம்பாள் (என் தாயார்) திரு அருணாச்சல தேவரின் சிற்றப்பா மகன் திரு வைத்தியநாத தேவருக்கு மனைவியாகி  “பெரிய பண்ணை வீடு” என்னும் அதே வீட்டில் வாழ்ந்து வந்தார்!


சிந்தாமணி, சிவப்பிரகாசம், சானகி, வேதரெத்தினம் ஆகிய நான்கு குழந்தைகளின் தாயான திருமதி சாரதாம்பாள், சிவப்பிரகாசம், சானகி, இருவரையும் இடையிலேயே பறிகொடுத்துவிட்டு, எஞ்சிய இரு குழந்தைகளுடன் வாழ்ந்து வருகையில், மறைந்த சுந்தராம்பாளின் 18 மாதக் குழந்தையான  சீனிவாசனையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் !

 

கல்விப் பயணம் !

தம்பி சீனிவாசனுக்கும் அண்ணன் மீனாட்சிசுந்தரத்திற்கும் இடையில்  அகவையில் 19 ஆண்டுகள்  வேறுபாடு இருந்தது.  தனது பிறந்த ஊரான கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில்  தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய  திரு.மீனாட்சிசுந்தரம், ஆயக்காரன்புலம் உயர்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்புப் படிப்பையும், 8-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு (OLD S.S.L.C)  வரையிலான படிப்பைத் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டு தன் கல்விப் பயணத்தை 1943 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவு செய்தார் !

 

ஆசிரியர் பயிற்சி:

பள்ளி இறுதி வகுப்பு வரைப் படித்திருந்த இவர்,  ஆசிரியப் பணியை விரும்பி,  அதற்கான முயற்சிகளில் ஈடுபடலானார்.  இடைநிலை ஆசிரியர் (SECONDARY GRADE TEACHER)  பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு, தஞ்சை இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் (SECONDARY GRADE TEACHER TRAINING SCHOOL)  இடம் கிடைத்து 1943 ஆம் ஆண்டு சூன் மாதம் பயிற்சியில் சேர்ந்தார் !

 

ஆசிரியராகப் பணி ஏற்பு: 

பயிற்சி முடித்த சில ஆண்டுகளிலேயே தான் படித்த திருத்துறைப்பூண்டி அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே இவருக்கு இடைநிலை ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைத்தது. பிறந்த ஊரில் தந்தையும், தம்பி ஒருவரும் தனியாக வாழ்ந்து வந்த அந்தச் சூழலிலும், திருத்துறைப் பூண்டியில் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொண்டார் !

 

திரு.மீனாட்சிசுந்தரம் திருமணம்:

பிறந்த 18 -ஆம்  நாளிலேயே தன் தாயாரை  இவர் இழந்தமையால், இவரது தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.  இதன் விளைவாகத் தன் தாயின் தங்கையே இவருக்குச் சிற்றன்னையாக அமைந்தார்.  சிற்றன்னையாரும்  18  ஆண்டுகள் கழித்து,  ஒரு ஆண் மகவைத் தந்து விட்டு விரைவில் இறந்து போனார். இவரும், இவரது தம்பி சீனிவாசன் என்பவரும் தாயில்லாப் பிள்ளைகளாக வாழ வேண்டிய துன்பச் சூழ்நிலை நிலவியதால், உறவினர்களின் வலியுறுத்தலால் இவர் திருமணம் செய்து கொள்ள  இசைய வேண்டியதாயிற்று ! 

 

வேதாரணியம் வட்டத்தில் உள்ள தகட்டூர் என்னும் ஊரின் ஒரு பகுதியான கல்யாணச்சேரி இராசகோபால் தேவர்  அரங்கம்மாள் இணையரின் இரண்டாவது  மகளான பார்வதி என்னும் மங்கையை இவர்  1947 -ஆம் ஆண்டு, தனது  20 ஆம் அகவையில் மணந்துகொண்டார் !  இவர் தனது ஒரே மைத்துனரான சிவநேசன் என்பவரையும் சில ஆண்டுகளியே இழக்க நேர்ந்தது,  பட்ட காலிலேயே படும் என்னும் பழமொழியை நினைவு படுத்துவதாக  இது அமைந்திருந்தது !

 

குடும்பம்:

திரு. மீனாட்சி சுந்தரம்  பார்வதி அம்மையார் இணையருக்கு கோவிந்தராசு,  இராசேந்திரன்,  அருட்செல்வன் ஆகிய  மூன்று   ஆண் மகவினரும்,  விசயலட்சுமி,  வசந்த கோகிலம்,  செந்தமிழ்ச் செல்வி,  இந்திராணி,  பத்மசுந்தரி   ஆகிய ஐந்து பெண் மகவினரும் பிறந்தனர் !  இந்த எண்மருள் திரு இராசேந்திரனின் வாழ்க்கை வரலாற்றைத் தருகிறது இந்தக் கட்டுரை ! 

 

இராசேந்திரன் பிறப்பு !

1958 -ஆம் ஆண்டு சூன் மாதம் 28 -ஆம் நாள் (28-06-1958) திரு மீனாட்சிசுந்தரம் – திருமதி பார்வதி இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் திரு.இராசேந்திரன்!

 

தொடக்கக் கல்வி!

திரு.இராசேந்திரன் தனது  ஐந்தாம் அகவை நிறைவில் – அதாவது 1963 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசயதசமி நாளன்று பனையோலைச் சுவடி கையில் தவழ, புத்தாடை அணிந்து கடிநெல்வயலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அங்கேயே பயின்ற அவர் அன்றாடம் போக வர ஏறத்தாழ மூன்று கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியிருந்தது !

 

உயர் பள்ளிக் கல்வி !

அடுத்து 6 -ஆம் வகுப்பிலிருந்து தனது உயர்நிலைக் கல்வியைத் தொடர அவர் வேதாரணியத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தார். கடிநெல்வயலுக்கும் வேதாரணியத்திற்கும் இடையில் (ஐந்து மைல்)  8 கிலோமீட்டர் தொலைவு இருக்கும். அன்றாடம் 8 + 8 = 16 கிலோ  மீட்டர் தொலைவு நடந்து சென்று அவர்  6- ஆம் வகுப்பு முதல் 11- ஆம் வகுப்பு  (OLD S.S.L.C) வரையிலான தனது படிப்பை நன்முறையில் நிறைவு செய்தார் !

 

கல்லூரிக் கல்வி !

தன் மகனைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்க வைக்க விரும்பிய திரு மீனாட்சி சுந்தரம், அதிராம்பட்டினம், தஞ்சாவூர், பூண்டி, மயிலாடுதுறை என நான்கு கல்லூரிகள் சுற்றிலும் இருக்கையில் ஏறத்தாழ 110 கிலோமீட்டர்  தொலைவில் உள்ள மயிலாடுதுறை A.V.C. கலை அறிவியல் கல்லூரியைத் தேர்வு செய்து,  புகுமுக வகுப்பில் (PRE UNIVERSITY COURSE) சேர்த்துவிட்டார். 1974 -ஆம் ஆண்டு சூன் மாதம் கல்லூரியில் சேர்ந்த திரு இராசேந்திரன் புகுமுக வகுப்புப் படிப்பை  மட்டும் நிறைவு செய்துவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறினார் !

 

தொழிற்கல்வியில் சேரல் !

கல்லூரிப் படிப்புக்குப் பின் ஈராண்டுகள்  கழிந்தன. பின்பு அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (I.T.I) நான் பணி புரிந்து வந்ததால், அதில் சேர திரு இராசேந்திரன் விரும்பினார். என் கருத்துரைப்படி, திருச்சி, நாகப்பட்டினம் பயிற்சி நிலையங்களுக்கு விண்ணப்பித்தார். திருச்சியில் அவருக்கு “பொருத்துநர்” (FITTER)  தொழிற்பிரிவிலும், நாகப்பட்டினத்தில் “ஒருக்கியல்” (WELDER) தொழிற்பிரிவிலும் இடம் கிடைத்தது. “பொருத்துநர்” (FITTER)  தொழிற்பிரிவைத் தேர்வு செய்து 1977 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் 1979 -ஆம் ஆண்டு சூலை மாதம் வரை திருச்சி நிலையத்தில்  ஈராண்டுகள் பயிற்சி பெற்றார் !

 

தனியார் நிறுவன வேலையில் சேர்வு  !

திருச்சியில்  பயிற்சியை நிறைவு செய்த திரு இராசேந்திரன், அடுத்து  சென்னையில் உள்ள நெல்காஸ்ட்டு (NELCAST (P) LTD) என்னும் தனியார் நிறுவனத்தில் ஓராண்டும்,  இண்டியா ரேடியேட்டர்ஸ் (INDIA RADIATORS, PUZHAL, CHENNAI) என்னும் நிறுவனத்தில் ஓராண்டும் ஆக மொத்தம் ஈராண்டுகள்  தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார்!

 

பழகுநர் பயிற்சி !

பின்னர் ஓராண்டு இடைவெளிக்குப் பின், திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL – TRICHY) ஓராண்டு பழகுநர் பயிற்சியை (23-4-1982 – 22-4-1983) நிறைவு செய்தார். பிறகு அங்கேயே அற்றைக்கூலி (N.M.R) அடிப்படையில் 1984 முதல் 1990 வரை ஆறாண்டுகள் பணி புரிந்தார் !

 

நாகையில் பணி வாய்ப்பு !

நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் 12-07-1984 முதல் 07-04-1987 வரை அலுவலக  மேலாளராக நான் பணிற்றிய போது அங்கு வெட்புலமாக இருந்த பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு  திரு இராசேந்திரனைப் பணியமர்த்தம் செய்திட நான் முழு முயற்சி செய்தேன். ஆனால் அப்போதிருந்த அகில இந்திய அண்ணா தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த இராமநாதபுரம் திரு இராமசாமி என்பவர் பணத்தை வாங்கிக்கொண்டு அதை வேறு ஒருவருக்கு வழங்கிடச் செய்துவிட்டார் !

 

இராணிப்பேட்டையில் பணியேற்றார் திரு. இராசேந்திரன் !

பாரத மிகுமின் நிறுவனத்தில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் என்னும் அடிப்படையில் திரு.இராசேந்திரனுக்கு இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் நிரந்தரப் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு 27-4-1991 முதல் 24-07-2018 வரை 27 ஆண்டுகள் 02 மாதம் 27 நாள் சீர்மிகு பணியாற்றினார்.

 

இராசேந்திரன் - கற்பகம் திருமணம் !

திரு இராசேந்திரனுக்கு 1991 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8 -ஆம் நாள் (08-09-1991)  திருமணம் நடைபெற்றது.   வாய்மேடு திரு மு.இராமசாமித் தேவர் – திருமதி வசந்த கோகிலம் அம்மையார் இணையரின் மூன்றாவது மகள் செல்வி கற்பகம் இவரது வாழ்க்கைத் துணைவியானார். திருத்துறைப்பூண்டி, பெரிய கோயில் திருமண மண்டபத்தில் உற்றார் உறவினர் புடைசூழத் திருமணம் சிறப்பாக நடைபெற்றது !

 

அருண்மொழித் தேவன் பிறப்பு !

திரு.இராசேந்திரன் – திருமதி கற்பகம் இணையருக்கு 1992 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 24 -ஆம் நாள் (24-11-1992) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு அருண்மொழித் தேவன் எனப பெயர் சூட்டி வளர்த்து வந்தனர் !

 

அருண்மொழித் தேவனின் படிப்பு !

திரு அருண்மொழித் தேவன், தொடக்கம் முதலே படிப்பில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். பள்ளிக் கல்வி முடிந்த பிறகு திருச்சியிலுள்ள தேசியத் தொழில் நுட்ப நிறுவனத்தில் பொறியியல் பயின்று “நுட்பவியல் வாலை” (B.Tech) பட்டம் பெற்றார் !

 

அருண்மொழித் தேவன் பணியேற்பு !

பொறியியல் பட்டதாரியான அருண்மொழித் தேவன், இந்திய மாநில அளகையில்  (STATE BANK OF INDIA) உதவி மேலாளராக 2015 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15- ஆம் நாள் (15-11-2015)  பணியமர்த்தம் பெற்றார். இப்போது வேலூர் மாவட்டம் சாயிநாதபுரம் கிளையில்  பணிபுரிந்து வருகிறார் !


அருண்மொழித்தேவன் - அன்புத் தாமரை திருமணம் !

நாகை மாவட்டம் வேதாரணியம் வட்டம், தென்னடாரைச் சேர்ந்த திரு முத்துராமலிங்கம்  திருமதி இந்திரா இணையரின் மகள் செல்வி அன்புத் தாமரையை திரு அருண்மொழித் தேவன் மணந்து கொண்டார். அன்புத் தாமரை கலையியல் மேதை (M.A) மெய்யியல் மேதை (M.phil) கல்வியியல் வாலை (B.Ed) பட்டதாரி. இவர்கள் திருமணம் 2018 - ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11- ஆம் நாள் ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது !


கூடுதல் கல்வித் தகுதிகள் பெறல் !

திரு இராசேந்திரன் இராணிப் பேட்டையில் பணியிலிருக்கும் காலத்தில் தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, அரசினர் பல்தொழிற் பயிற்சிக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து பயின்று எந்திரப் பொறியியல் பிரிவில் பட்டயம் (D.M.E) பெற்றார். அத்துடன் சென்னை National Institute of Fire Safety -யில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து DIPLOMA IN FIRE SAFETY என்னும் பட்டயமும் பெற்றார் !

 

புதிய வீடு வாங்கல்  !

பணி ஓய்வுக்கு முன்னதாக,  இராணிப்பேட்டைக்கு அருகிலுள்ள வேலூரில் புதிய வீடு ஒன்று கட்டிட வேண்டும் அல்லது வாங்கிட வேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டு, வேலூர் சத்துவாச்சாரி அருகிலுள்ள அரங்காபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி விற்பனைக்கு விடுத்த 307 என்னும் இலக்கமுள்ள வீட்டை வாங்கி 21-08-2002 அன்று புதுமனை புகுவிழாவையும் சிறப்பாக நடத்தினார் !

 

பணி ஓய்வு !

27 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்புடன் பணியாற்றிய திரு இராசேந்திரன், இறுதியில் 2018 -ஆம் ஆண்டு சூலை மாதம்  24 -ஆம் நாள்  (24-07-2018 ) அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார் !

 

தந்தை, தாய் மறைவு  !

திரு இராசேந்திரனின் தந்தை திரு,மீனாட்சி சுந்தரம் 2020 -ஆம் ஆண்டு, மே மாதம், 31-ஆம் நாள், (31-05-2020) தனது 93 -ஆவது அகவையில் காலமானார்.  தாயார் திருமதி பார்வதி அம்மையார் கடந்த 2023 -ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19 -ஆம் நாள் (19-10-2023) தனது 95 -ஆவது அகவையில் காலமானார் !

 

நிறைவுரை !

இப்பொழுது 68 அகவையாகும் திரு இராசேந்திரன் உற்றார் உறவினர்களுடன் அன்பாகப் பழகும் இயல்பு கொண்டவர். அன்பான மனைவி, ஆதரவான மகன், குறிப்பறிந்து பழகும் மருமகள், கொஞ்சி மகிழ ஆறு அகவையாகும் பெயர்த்தி நறுமுகை ஆகியோர் அடங்கிய  அளவான குடும்பம். திரு.இராசேந்திரன் குடும்பம் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி அனைத்து நலங்களும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்துவோம் !

=====================================================

மீ.இராசேந்திரன் வாழ்க்கை வரலாற்றில் முகாமையான

 சில நிகழ்வுகள் !

 ====================================================

10-04-1927 : அ.மீனாட்சி சுந்தரம் பிறப்பு.

28-04-1927 : மீனாட்சியம்மையார் மறைவு.

21-05-1946 : அ.சீனிவாசன் பிறப்பு

00-11-1947 : சுந்தரம் அம்மையார் மறைவு.

00-04-1943 : அ.மீனாட்சிசுந்தரம்  பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி.

00-06-1943 : அ.மீனாட்சிசுந்தரம் ஆசிரியர் பயிற்சியில் சேரல்

00-00-1944 : அ.மீனாட்சிசுந்தரம் ஆசிரியராகப் பணியில் சேரல்.

00-00-1947 : அ.மீனாட்சிசுந்தரம் – பார்வதி அம்மையார் திருமணம்.

28-06-1958 : மீ.இராசேந்திரன் பிறப்பு.

00-10-1963 : கடிநெல்வயல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரல்.

00-06-1968 : வேதாரணியத்தில் 6-ஆம் வகுப்பில் சேரல்.

03-05-1970 : இராசேந்திரனின் மனைவி  இரா. கற்பகம் பிறப்பு.

00-03-1974 : மீ.இராசேந்திரன் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி

18-04-1974 : தாத்தா சீ.அருணாச்சல தேவர் மறைவு.

10-06-1974 : சிற்றப்பா திரு. அ.சீனிவாசன் – ஆனந்தி திருமணம்.

00-06-1974 : புகுமுக வகுப்பில் சேரல்.

00-08-1977 ; திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரல்

00-00-1979 : நெல்காஸ்டில் தற்காலிகப் பணியில் சேரல்.

00-04-1980 : இந்தியா ரேடியாட்டர்ஸில் தற்காலிகப் பணியில் சேரல்.

23-04-1982 : திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் பழகுநர் பயிற்சி 

1984 –1990 : அற்றைச் சம்பள வேலை (N.M.R. at B.H.E.L)

27-04-1991 : இராணிப்பேட்டை மிகுமின் நிறுவனத்தில் பணியில் சேரல்

08-09-1991 : மீ.இராசேந்திரன் – கற்பகம் திருமணம்.

24-11-1992 : மகன் அருண்மொழித் தேவன் பிறப்பு.

22-04-1996 : பட்டயப் படிப்பில் சேரல் (D.M.E)

21-08-2002 : மீ.இராசேந்திரன் வேலூர் வீடு புதுமனை புகுவிழா.

15-11-2015 : மகன் அருண்மொழித் தேவன் அளகையில் பணியேற்பு.

24-07-2018 : திரு.இராசேந்திரன் பணியிலிருந்து ஓய்வு பெறல்.

21-01-2020 : பெயர்த்தி நறுமுகை பிறப்பு.

31-05-2020 : தந்தை அ.மீனாட்சிசுந்தரம் மறைவு.

19-10-2023 : தாயார் மீ.பார்வதி அம்மையார் மறைவு.

 --------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மீனம் (பங்குனி) 04]

{18-03-2026}

----------------------------------------------------------------------------------------------------

மீ.இராசேந்திரன் 

மீ.இராசேந்திரன் 



கற்பகம் இராசேந்திரன்
                            



இரா.கற்பகம் & மீ.இராசேந்திரன்.



இரா.அருண்மொழித் தேவன்


அருண்.நறுமுகை


(தாத்தா) சீ.அருணாச்சலத் தேவர்


(தந்தை) அ.மீனாட்சி சுந்தரம்


(தாயார்) மீ.பார்வதி அம்மையார்.





(தாயார்) மீ.பார்வதி அம்மையார்.
தந்தையும் தாயும்








( தமக்கை) விசயலட்சுமி தங்கராசு 



வசந்தகோகிலம் பசுபதி 


செந்தமிழ்ச் செல்வி இராசேந்திரன்.


இந்திராணி குணசேகரன்



பத்மசுந்தரி முருகேசன் 




அருட்செல்வன் மீனாட்சி சுந்தரம்


புவனேசுவரி அருட்செல்வன்



பிறந்த வீடு 



செவ்வாய், 10 மார்ச், 2026

(12) கடிநெல்வயல் (திரு) அ. சீனிவாசன் - வாழ்க்கை வரலாறு !

 

          கடிநெல்வயல் அ.சீனிவாசன் வாழ்க்கை வரலாறு !

திரு.சீனிவாசன்
 

முகவுரை !

என்னுடைய தாயாரின் சொந்த தமக்கை மகனும் தந்தையின்  பெரியப்பா பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து, இப்போது திருச்சி நகரில் வாழ்ந்து வருபவருமான தம்பி அ.சீனிவாசனின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்படும் இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  கூகுளில் சென்று   https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும் !

 

அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON)  வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !  வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இதை உருவாக்கியுள்ள நான் (வை.வேதரெத்தினம்) மட்டுமே திருத்தம் செய்ய முடியும். இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க https://thamizhnatpu.blogspot.com என்னும் திறவுகோலைப் பயன்படுத்தும் யாருக்கும் இப்பக்கம் திறந்து கொள்ளும். இனி வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்   சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு.சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு. சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்துகொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; அடுத்தவர் திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு சண்முகவேல் தேவர் ! இந்தக் கொடியில் மலர்ந்த மலரே திரு சீனிவாசன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)


தந்தை வழிக் குலக்கொடி:

மாரியப்ப தேவர் > நல்லபொதிய தேவர் > சீனிவாச தேவர்  / நீலாம்பாள் அம்மையார் > அருணாச்சல தேவர் / சுந்தராம்பாள் அம்மையார் >  சீனிவாசன்  / ஆனந்தி.


தாய்வழிக் குலக்கொடி

வேளூர் சிவப்பிரகாச தேவர் / கல்யாணி அம்மையார் > சுந்தராம்பாள் அம்மையார் (கணவர்: அருணாச்சலத் தேவர்) > சீனிவாசன் / (மனைவி:)ஆனந்தி. 

 

அருணாச்சல தேவர் – செல்வி சுந்தராம்பாள்  திருமணம் !

மூத்தவர் திரு. அருணாச்சல தேவர், திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளுர் சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையாரின் மூத்த மகள் செல்வி மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. 1927 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 -ஆம் நாள் (10-04-1927) பிறந்த இக்குழந்தைக்கு மீனாட்சிசுந்தரம் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். பிறந்த 18 -ஆம் நாளிலேயே தன் குழந்தையை விட்டுவிட்டு, தாயார் திருமதி மீனாட்சி மறைந்து போனார் !

 

பாட்டியே தாயானார் !

சிவப்பிரகாசம் - கல்யாணி இணையருக்கு  ஞானப்பிரகாசம், வரதராசன், கருணாநிதி என மூன்று ஆண் குழந்தைகளும் மீனாட்சியம்மை, சுந்தராம்பாள், சாரதாம்பாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அந்த நேரத்தில் சிவப்பிரகாசம் - கல்யாணி இணையருக்கு  நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பண்டரிநாதன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த அந்தக் குழந்தைக்கு அகவை ஆறுமாதம் நிறைவடையும் நேரத்தில்தான் மீனாட்சிசுந்தரம் என்னும் குழந்தையும் மீனாட்சி அம்மையாருக்குப் பிறந்தது !

 

மீனாட்சிசுந்தரம் பிறந்த 18 -ஆம் நாள் அவரது தாயார் மீனாட்சியம்மை மறைந்து போனதால் குழந்தை மீனாட்சிசுந்தரத்தை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் திரு அருணாச்சல தேவர் மனம் கலங்கிப் போனார். அப்போது திருமதி மீனாட்சியின் தாயாரும், திரு அருணாச்சல தேவரின் மாமியாருமான திருமதி கல்யாணி அம்மையார் தன் கணவர் திரு சிவப்பிரகாச தேவருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்தார். 6 மாதக் குழந்தையான தன் மகன் பண்டரிநாதனுடன், 18 நாள் குழந்தையான மீனாட்சிசுந்தரத்தையும்  தன் மகனைப் போல் பாலூட்டி வளர்க்க முன்வந்தார் !

 

பண்டரிநாதனும், மீனாட்சி சுந்தரமும் சம வயதுக் குழந்தைகள்.  கல்யாணி அம்மையார் எத்துணைக் காலத்திற்கு இரு குழந்தைகளுக்கும் பாலூட்டி வளர்க்க முடியும்? எனவே மனைவியை இழந்துவிட்ட திரு.அருணாச்சல தேவருக்கு தன் இரண்டாவது மகள் செல்வி சுந்தராம்பாளை மணம் முடித்துக் கொடுப்பது என்றும், திருமணத்திற்குப் பின் திருமதி சுந்தராம்பாள்,  குழந்தை மீனாட்சிசுந்தரத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் திரு.சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையார் இணையர் முடிவெடுத்தனர் !


திரு அருணாச்சல தேவர் – செல்வி சுந்தராம்பாள் திருமணம் !

திரு. அருணாச்சல தேவர் – செல்வி சுந்தராம்பாள் திருமணம் விரைவிலேயே நடந்தேறியது. திருமணத்திற்குப் பின் திருமதி சுந்தராம்பாள் அம்மையார் தன் அக்காள், காலஞ்சென்ற மீனாட்சியம்மையின் குழந்தையைத் தன் குழந்தை போல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார். இதற்கிடையில் திருமதி சுந்தராம்பாள் கருவுற்றார். ஆனால் அக்குழந்தை பிறந்தவுடன் இறந்து போயிற்று. ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் நான்கு குழந்தைகள் இவ்வாறு பிறந்தவுடன் அல்லது பிறந்து சில நாள் இடைவெளியில் இறந்து போயின !

 

சீனிவாசன் பிறப்பு !

அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் நான்கு குழந்தைகளைப் பெற்று அவற்றைப் பறிகொடுத்ததால் திருமதி சுந்தராம்பாள் அம்மையார் உடல் நலிந்து போனார். நலிவடைந்த உடல் நிலையிலும் ஐந்தாவதாகக் கருவுற்று, ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார். 1946 -ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் (21-05-1946) (விய வருடம், வைகாசி மாதம், 8-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, திருவோண விண்மீன் கூடிய நன்னாளில்) பிறந்த இந்தக் குழந்தைக்கு சீனிவாசன் என்று பெயரிட்டு பெற்றோர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்!

 

குடியிருந்த வீட்டின்  வரலாறு !

கடிநெல்வயல், பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் திரு நல்லபொதிய தேவரின் மகன்கள் திரு. சீனிவாச தேவர், திரு சிங்காருத் தேவர் இருவரும் இணைந்து கட்டிய ஓட்டு வீட்டில் இருவரும் தம் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். திரு சீனிவாச தேவருக்கு அருணாச்சலம், சாம்பசிவம், சண்முகவேல் என மூன்று மகன்கள் பிறந்தனர். திரு. சிங்காருத் தேவருக்கு காசிநாதன், வைத்தியநாதன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில், தனித்தனியாக  வாழ்ந்து வந்தனர். சீனிவாச தேவர் வீட்டின் நடுக் கூடத்தின் தென் பகுதியிலும், தெற்கு  ஆரலிலுமாக (SIDE ROOM) வாழ்ந்து வந்தார். சிங்காருத் தேவர் வீட்டின் நடுக் கூடத்தின் வட பகுதியிலும், வடக்கு   ஆரலிலுமாக (SIDE ROOM) வாழ்ந்து வந்தார்.  இந்தக் கூட்டுக் குடும்ப வீட்டுக்குப் "பெரிய "பண்ணை"  என்பது  ஊரார்  வழங்கிய  பெயர் !


தெற்குப் பண்ணை, நடுப்பண்ணை, வடக்குப் பண்ணை வீடுகள் !

காலப் போக்கில் காசிநாத தேவர் குடும்பம் அவர் இறந்த பிறகு, அவரது மகன் திரு இருளப்ப தேவர் காலத்தில் பெரிய பண்ணை (கூட்டுக்குடும்ப) வீட்டிற்குத் தென்புறமாக தனியாக வீடுகட்டிக்கொண்டு தனிக் குடித்தனம் சென்றனர். சாம்பசிவ தேவரும் தென்புறமாகத் தனியாக ஒரு ஓட்டு வீடு (நடுப்பண்ணை)  கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தார். சற்று வடக்கில் கூரை வீடு கட்டிக்கொண்டு திரு சண்முகவேல் தேவர் தனிக் குடித்தனம் போனார்!


எங்கள் (வை.வேதரெத்தினம்) குடும்பம் இடப்பெயர்வு !

பெரியப்பா திரு.அருணாச்சல தேவர் குடும்பமும், என் தந்தையார் திரு. வைத்தியநாத தேவர் குடும்பமும் கூட்டுக் குடும்ப வீடாகத் திகழ்ந்த பெரிய பண்ணை  வீட்டில் 1960 -ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தோம். 1960 -ல் எங்கள் குடும்பம் திருத்துறைப் பூண்டிக்கு இடம் பெயர்ந்ததை முன்னிட்டு பெரிய பண்ணை  வீட்டில் திரு அருணாச்சல தேவர் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வந்தது !

 

எனது பெற்றோர் !

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் திரு அருணாச்சல தேவரின் சிற்றப்பா திரு.  சிங்காருத் தேவர் மகன் திரு. வைத்தியநாத தேவருக்கு வாழ்க்கைப்பட்டு, நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி அதே வீட்டில் வாழ்ந்து வந்தார் என் அன்னையான திருமதி சாரதா அம்மையார். அப்போது  திருமதி சுந்தராம்பாள் அம்மையாரும் அதே வீட்டில்  வாழ்ந்து வந்தார் !

 

திரு வைத்தியநாத தேவர் – சாரதா இணையருக்கு முதலாவதாகப் பிறந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி. இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தை சிவப்பிரகாசம், ஒன்றரை அகவையில் இறந்து போனது. மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தை ஜானகி இரண்டு ஆண்டுகளிலேயே இறந்து போயிற்று. நான்காவதாக நான் 1944 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 29-ஆம் நாள் (29-04-1944) (தாரண வருடம், சித்திரை மாதம், 17 -ஆம் நாள், பூச விண்மீன் கூடிய நன்னாளில்) பிறந்தேன் !

 

சுந்தராம்பாள் அம்மையார் மறைவு !

1946 -ஆம் ஆண்டு, மே மாதம் 21 -ஆம் நாள் (21-05-1946) பிறந்த திரு சீனிவாசனுக்கு ஒன்றரை அகவை ஆகும் போது அவரது அன்னை திருமதி சுந்தராம்பாள் அம்மையார் இறந்து போனார். 18 மாதக் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திரு அருணாச்சல தேவர் தடுமாறிப் போனார். இப்பொழுது 18 மாதக் குழந்தையான சீனிவாசனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என் தாயார் திருமதி சாரதாம்பாள் அம்மையார் ஏற்றுக்கொண்டார். முதற்பிள்ளை மீனாட்சிசுந்தரம் தன் பாட்டியாரிடம் பால்குடித்து வளர்ந்தார். இரண்டாவது பிள்ளையான சீனிவாசன் தன் சிற்றன்னையிடம் பால் குடித்து வளர்ந்தார் !

 

திரு.மீனாட்சி சுந்தரத்திற்குத் திருமணம் செய்ய முடிவு !

முதல் மனைவி மூலம் மீனாட்சி சுந்தரம் என்னும் குழந்தையும் (10-04-1927), இரண்டாவது மனைவி மூலம் சீனிவாசன் (21-05-1946) என்னும் குழந்தையும் அடைந்த திரு அருணாச்சல தேவர் இரு மனைவிகளையும் 20 ஆண்டுகள் இடைவெளியில் (முதல் மனைவி மறைவு 1927, இரண்டாவது மனைவி மறைவு 1947) இழந்த நிலையில் பங்காளிகளின் கருத்துரைப்படி 20 அகவை ஆன தன் மூத்த மகன் மீனாட்சி சுந்தரத்திற்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் !

 

தகட்டூர், கல்யாணச்சேரி, இராசகோபால் தேவர் – அரங்கம்மாள் இணையரின் இரண்டாவது மகள் பார்வதியை, திரு.மீனாட்சி சுந்தரம் 1947 -ஆம் ஆண்டு மணந்து கொண்டு, அவ்வாண்டே ஆசிரியப் பணியிலும் அமர்ந்தார். இவர்கள் திருமணத்திற்குப் பிறகு, திருமதி பார்வதி அம்மையாரும், என் அன்னை திருமதி சாரதா அம்மையாரும் 20 மாதக் குழந்தையான சீனிவாசனைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்!

 

சீனிவாசனின் தொடக்கக் கல்வி !

ஐந்து அகவை ஆன நிலையில் திரு சீனிவாசன் கடிநெல்வயலில் இயங்கிவரும் அரசுத் தொடக்கப்பள்ளியில் 1951-ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் (கர ஆண்டு புரட்டாசி மாதம்) விசயதசமி நாளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். 5-ஆம் வகுப்பு வரைத் தன் படிப்பை திரு. சீனிவாசன் அங்கேயே தொடர்ந்தார் !


உயர்நிலைப் பள்ளிப் படிப்பு !

பின்பு ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தியில் உள்ள இரா.நடேசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1956 -ஆம் ஆண்டு சூன் மாதம் 6-ஆம் வகுப்பில் சேர்ந்த திரு சீனிவாசன் பள்ளி இறுதி வகுப்பான 11 -ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்து 1962 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தேர்வெழுதி நன்முறையில் தேர்ச்சி பெற்று, தன் கல்விப் பயணத்தை நிறைவு செய்தார்!

 

ஆசிரியர் பயிற்சிக்கு முயற்சி !

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியயில் சேர முயன்றார். சில ஆண்டுகள் முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.  ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தன. திரு.சீனிவாசனின் தந்தை  என்னிடம் சொல்லி நான் பணிபுரிந்த புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்த்துவிடச் சொன்னார்!


அ.தொ.ப.நிலையத்தில் சேரல் !

பொருத்துநர் (FITTER), கடைசலர் (TURNER), மின்னிழை அமைப்பியல் (WIREMAN), கருவிகள் கம்மியர் (INSTRUMENT MECHANIC), எந்திரப் பணியியல் (MACHINIST), ஒருக்கியல் (WELDER) ஆகிய ஆறு தொழிற்பிரிவுகள் புதுக்கோட்டையில் இயங்கி வந்தன.   அவற்றுள் இரண்டாண்டுப் பயிற்சிக் காலம் உடைய எந்திரப் பணியியல் (MACHINIST - COMPOSITE) தொழிற்பிரிவில் 1967- -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம்  திரு.சீனிவாசனை  நான்  சேர்த்துவிட்டேன். அத்துடன் மாதம் உருபா 20 உதவித் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்தேன். அப்போது திரு எம்.இலட்சுமிபதி என்பவர் அவருக்கு ஆசிரியர். பயிற்சியிலிருந்த காலத்தில், புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், மேல மேட்டுத் தெருவில், வீடு வாடகைகைக்கு எடுத்து,  சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு சீனிவாசன் அங்கு தங்கியிருந்ததுடன் சொந்தமாகச் சமைத்தும் சாப்பிட்டு வந்தார் !

 

சு.சிவசுந்தரம்  தொழிற் பயிற்சியில் சேரல் !

திரு சீனிவாசன் ஈராண்டுப் பயிற்சியில் ஓராண்டை முடிக்கும் தறுவாயில், வேதாரணியம், பயத்தவரன்காடு சுப்பையாப் பிள்ளை மகன் சிவசுந்தரம் என்பவர் புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவதாகவும், அவர் தனது நண்பர் என்றும் தெரிவித்து, அவரைப் பயிற்சியில் சேர்த்துவிட நான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று திரு சிவசுந்தரத்தை ஈராண்டுப் பயிற்சிப் பிரிவான கடைசலர் (TURNER) பிரிவில் 1968 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்த்துவிட்டேன் ! திரு சீனிவாசன், திரு சிவ சுந்தரம் இருவரும் திருக்கோகர்ணம் மேல மேட்டுத் தெரு வீட்டில்  தங்கிக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டு வந்தனர் !

 

திரு.சீனிவாசனின் தொழிற் பயிற்சி நிறைவு !

ஆகஸ்ட் 1967 -ல் பயிற்சியில் சேர்ந்த திரு.சீனிவாசன், சூலை 1969 -ல் பயிற்சி நிறைவு பெற்று கடிநெல்வயல் சென்றுவிட்டார். பிறகு, திருக்கோகர்ணம் பெரிய தெருவில் திரு இலட்சுமி நாராயண அய்யர் வீட்டின் முன்னறையில் தங்கியிருந்த நான், திரு.சிவசுந்தரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதைக் காலி செய்துவிட்டு, மேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் திரு சிவ சுந்தரத்துடன் தங்கத் தொடங்கினேன் !

 

திரு.சீனிவாசன் பழகுநர் பயிற்சி ( APPRENTICESHIP TRAINING !

கடிநெல்வயல் சென்ற சீனிவாசன் சில மாதங்கள் கழித்து, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. தொழிற்சாலையில் 1969 -ஆம் ஆண்டு பழகுநர் பயிற்சிக்குச் சேர்ந்து ஓராண்டு காலத்தில் அதை நிறைவு செய்தார் ! பின்பு அங்கேயே  ஷார்ப்  டூல்ஸ்  ( SHARP TOOLS)  என்னும் நிறுவனத்தில் சேர்ந்து ஒன்பது மாத காலம் பணி புரிந்தார் !


எஸ்.ஆர்.பி.டூல்ஸ்  (S.R.P. TOOLS) நிறுவனத்தில் வேலை !

கோவையில் தொடர்ந்து பணி புரிய வாய்ப்பில்லாததால் கடிநெல்வயல் திரும்பிய  திரு சீனிவாசன் வேலை வாய்ப்புக்குப் பல வழிகளிலும்  முயன்றார். அதன் விளைவாக, சென்னை, திருவான்மியூர் அருகில் இயங்கிவந்த எஸ்.ஆர்.பி.டூல்ஸ் (M/S. S.R.P.TOOLS) என்னும் நிறுவனத்தில் அவருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது. 1970-ஆம் ஆண்டு வாக்கில் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது என்று நினைக்கிறேன் ! ஓரிரு ஆண்டுகள் நன்கு இயங்கி வந்த இந்த நிறுவனம், பின்பு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக  அடிக்கடி கதவடைப்பை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடாறு மாதம், காடாறு மாதம்  என்னும் சொலவடைக்கு ஏற்ப, எஸ்.ஆர்.பி.டூல்ஸ்  (M/S. S.R.P.TOOLS) ஆறு மாதம் இயங்கும், ஆறு மாதம் மூடிக்கிடக்கும் ! ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு மேல் அங்கு பணி புரிந்திருக்கிறார் !

 

தந்தை அருணாச்சல தேவர் மறைவு !

திரு சீனிவாசன் சென்னை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் (M/S. S.R.P.TOOLS) நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது,  அவரது தந்தை திரு. அருணாச்சல தேவர் 1974 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 18 -ஆம் நாள் (18-04-1974)  முதுமையின் காரணமாக இறந்து போனார். அப்பொழுது நான் திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன் !


சீனிவாசன் – ஆனந்தி திருமணம் !

தந்தை இறந்து ஓராண்டு நிறைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று யாரோ ஒரு சோதிடர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, எனக்கும், சீனிவாசனுக்கும் தாய் மாமாவான நெடும்பலம் திரு. சி.பண்டரிநாதன் அவர்கள் சீனிவாசனுக்குப் பெண்பார்க்கத் தொடங்கினார். அவருக்குத் தூரத்து உறவான மாங்குடி திரு வடிவேல் தேவர் வகையில் பெண் இருப்பதாகச் சொல்லி, கோட்டூர் திரு கோவிந்தராசுத் தேவர்  – நாகரெத்தினம் அம்மையார் இணையரின் ஆறாவது பெண்ணான செல்வி ஆனந்தியைப் பேசி முடிவு செய்து 1974 -ஆம் ஆண்டு, சூன் மாதம் 10 -ஆம் நாள் (10-06-1974) மாங்குடி திரு வடிவேல் தேவர் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது !

 

சென்னையில் குடியேற்றம் !

திருமணத்திற்குப் பிறகு திரு.சீனிவாசன் – ஆனந்தி இணையர் சென்னை, திருவான்மியூரை அடுத்த அண்ணா நகரில்  புதுக்குடித்தனம் தொடங்கினர். சென்னைக்கு நான் செல்லும் போதெல்லாம் திருவான்மியூருக்குச் சென்று திரு.சீனிவாசன் – ஆனந்தி இணையரைப் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருவான்மியூர் வாழ்க்கையின் போது திரு.சீனிவாசன் – ஆனந்தி இணையருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த இந்தக் குழந்தை விரைவிலேயே  இறந்தும் போயிற்று !

 

வேலை வாய்ப்பகத்தில் பதிவு !

வேலை வாய்ப்பகப் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்கப் பலமுறை  தவறியதால், பதிவு முன்மை (SENIORITY) பின்னுக்குப் போய்க்கொண்டே இருந்தது. இதன் விளைவாக, திரு சீனிவாசனுக்கு பாரத மிகுமின் தொழிலகத்தில்  (BHEL)  பணி பெறும் வாய்ப்புக் கிடைக்காமற் போயிற்று !

 

படைக்கலத் தொழிலகத்தில்  (ORDNANCE FACTORY)  பணி வாய்ப்பு !

இந்தச் சூழ்நிலையில் திருச்சி நவல்பட்டு படைக்கலத் தொழிலகத்தில் (ORDNANCE FACTORY)  பணி வாய்ப்பு வந்தது. ஆனால் சென்னை எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நிறுவனத்தை விடக் குறைவான சம்பளமே கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. சென்னை எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நிறுவனத்தில் அடிக்கடி கதவடைப்பு நிகழும் போதெல்லாம் சம்பளமில்லாமல் இன்னற்படும் நிலை இருப்பதால், திருச்சிக்கு வந்து உடனடியாகப் படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்குமாறு திரு.சீனிவாசனைக் கேட்டுக்கொண்டேன். என் ஆலோசனைப்படி திரு சீனிவாசன் 1976 -ஆம் ஆண்டு, சூலை மாதம், 28 -ஆம் நாள் (28-07-1976) படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்றுக்கொண்டார் !


திருச்சிக்கு இடப்பெயர்வு !

திருச்சியில் பணியேற்ற  பிறகு நவல்பட்டுப் பகுதியில் ஊராட்சி மன்றம் பின்புறமுள்ள , தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு  அங்கு புதுக்குடித்தனம் தொடங்கினர். ஏறத்தாழ 18 ஆண்டுகள்  அங்கு குடியிருந்த பின்  படைக்கலத் தொழிலக அலுவலர் குடியிருப்பில் அவர்களுக்கு  இடம் கிடைத்தது. அங்கு தம் குடியிருப்பை மாற்றிக் கொண்டு பணி ஓய்வு வரை அங்கேயே  வாழ்ந்து வந்தனர் !

 

கவிதா பிறப்பு !

சென்னையிலிருந்து திருச்சிக்கு பணியிடத்தையும் குடியிருப்பையும் மாற்றிக்கொண்ட பிறகு, ஈராண்டு காலத்தில் – அதாவது - 1978 -ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 11 -ஆம் நாள் (11-12-1978) பெண்குழந்தை ஒன்று பிறந்தது. கவிதா என்று பெயரிட்டு வளர்த்த இப்பெண் குழந்தைக்கு இப்பொழுது 47 அகவை ஆகிறது. கவிதா இப்பொழுது வணிகவியல் மேதை (M.Com.) மெய்யியல் மேதை (M.Phil.) முனைவர் (Ph.D) ஆகிய மூன்று பட்டங்களுக்குச் சொந்தக்காரர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப்  பணிபுரிந்து வரும் கவிதாவுக்கு, 2006 -ஆம் ஆண்டு, சூலை மாதம், 13 -ஆம் நாள்  (13-07-2006) அன்று திருமணம் நடைபெற்றது.  திருமணமான கவிதா,  தன் கணவர் திரு. கண்ணன், மகன் திருஅபினவ் (பிறந்த நாள்:  01-06-2007) ஆகியோருடன் திருச்சியில் வாழ்ந்து வருகிறார் !

 

சம்பத் பிறப்பு !

திரு சீனிவாசன் – ஆனந்தி இணையருக்கு அடுத்ததாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 1979 -ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 18 -ஆம் நாள் (18-12-1979) பிறந்த இக்குழந்தைக்கு சம்பத் என்று பெயரிட்டு வளர்த்தனர். இந்தக் குழந்தை வளர்ந்து இப்போது அகவை 47 -ல் நடை பயின்று கொண்டிருக்கிறது !  


சம்பத்  படிப்பும் பணியும் !

கரும்புத் தொழில் நுட்பத்தில் பட்டயமும் (DIPLOMA) வணிக மேலாண்மை இயலில் (M.B.A) முதுகலைப் பட்டமும் பெற்று, தந்தை பணியாற்றிய அதே படைக்கலத் தொழிலக அலுவலகத்தில் திரு சம்பத் 15-02-2005 முதல் பணியாற்றி வருகிறார் !

 

திரு.சீனிவாசன் பணி ஓய்வு !

28-07-1976 அன்று படைக்கலத் தொழிலகத்தில் பணியில் சேர்ந்த திரு சீனிவாசன் 28 ஆண்டு, 6 மாதம், 4 நாள் பணி புரிந்த பிறகு கடந்த 2005 -ஆம் ஆண்டு, மே மாதம், 31 -ஆம் நாள் (31-05-2005) அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார் !


சம்பத் – கீர்த்திகா திருமணம் !

தஞ்சாவூர் பாலோபநந்தவனம் பகுதியைச் சேர்ந்த (நி/வா) திரு இராசேந்திரன் – திருமதி இலலிதா இணையரின் மகளான செல்வி கீர்த்திகா வணிக மேலாண்மையியல்  முதுநிலை (M.B.A) பட்டதாரி. 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் (02-02-1982) பிறந்த இவர் திரு சம்பத்தின் வாழ்க்கைத் துணைவி ஆனார். இவர்கள் திருமணம் 2011 -ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 20 -ஆம் நாள் 20-11-2011 அன்று, தஞ்சாவூர், கீழவாசலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது ! பெண்பார்த்தல், திருமண உறுதி நிகழ்வு, திருமண நிகழ்வு அனைத்திலும் நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன்!

 

விஸ்மயா பிறப்பு !

சம்பத் – கிருத்திகா இணையருக்கு விஸ்மயா என்னும் பெயரில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. 2012 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ஆம் நாள் (11-08-2012)  பிறந்த விஸ்மயாவுக்கு இப்பொழுது 14 அகவை நடைபெறுகிறது  !

 

சீனிவாசன் – ஆனந்தி இணையரின் பெயரன் பெயர்த்தி !

சீனிவாசன் – ஆனந்தி இணையருக்கு மகள் வழியில் அபினவ் என்னும் 19 அகவைப் பெயரனும், மகன் வழியில் விஸ்மயா என்னும் 14 அகவைப் பெயர்த்தியும் இருக்கின்றனர். இருவரும் நன்கு படித்து  வாழ்க்கையில் உயர் நிலையை அடைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் !

 

நிறைவுரை !

மழலைப் பருவத்திலேயே பெற்ற தாயாரை இழந்து இன்னல்கள் பலவற்றை அடைந்துவிட்ட திரு சீனிவாசன், அன்பான ,மனைவி, ஆதரவான மகன், இன்சொல் தவழும் மருமகள், மாற்றுக்குறையாத மகள், மதிப்பிலுயர்ந்த மருமகன் ஆகியோரைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான உறவு நிலையாகும். நிகழ்காலமும் எதிர்காலமும் அவருக்கு மனநிம்மதியான,  மகிழ்ச்சியான வாழ்வை அளிக்குமாக !

=======================================================

திரு.சீனிவானின்   முகாமையான   வாழ்க்கை நிழ்வுள் ! 

=============================================

10-04-1927. அண்ணன் அ.மீனாட்சி சுந்தரம் பிறப்பு.

18-04-1927. பெரியம்மா திருமதி மீனாட்சி அம்மையார் மறைவு.

29-04-1944. கட்டுரையாளர் வை.வேதரெத்தினம் பிறப்பு.

21-05-1946. திரு. அ.சீனிவாசன் பிறப்பு.

00-11-1947. தாயார் திருமதி சுந்தராம்பாள் அம்மையார் மறைவு.

00-03-1962. சீனிவாசன் S.S.L.C., தேர்ச்சி.

00-08-1967. சீனிவாசன் I.T.I. பயிற்சியில் சேரல்

00-07-1969. சீனிவாசன் I.T.I. பயிற்சி நிறைவு.

18-06-1970. தங்கராசு – விசயலட்சுமி திருமணம்

18-06-1970. பசுபதி – வசந்த கோகிலம் திருமணம்.

02-07-1972. வேதரெத்தினம் – கலைச்செல்வி திருமணம்.

18-04-1974. சீனிவாசனின் தந்தை அருணாச்சல தேவர் மறைவு.

10-06-1974. சீனிவாசன் – செல்வி ஆனந்தி திருமணம்.

28-07-1976. சீனிவாசன் படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்பு.

19-05-1978. செந்தமிழ்ச்செல்வி – இராசேந்திரன் திருமணம்.

19-05-1978. கோவிந்தராசு – இரேவதி திருமணம்.

11-12-1978. மகள் கவிதா பிறப்பு.

18-12-1979. மகன் சம்பத் பிறப்பு.

02-02-1982. மருமகள் கீர்த்திகா பிறப்பு.

10-02-1986. இந்திராணி – குணசேகர் திருமணம்.

08-09-1991. மீ.இராசேந்திரன் – கற்பகம் திருமணம்.

15-02-2005. சம்பத் படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்பு.

31-05-2005. சீனிவாசன் பணியிலிருந்து ஓய்வு பெறல்

13-07-2006. மகள் கவிதா – கண்ணன் திருமணம்.

01-06-2007. பெயரன் அபினவ் கண்ணன் பிறப்பு.

20-11-2011. சம்பத் – கீர்த்திகா திருமணம்.

11-08-2012. விஸ்மயா சம்பத் பிறப்பு.

31-05-2020. அ.மீனாட்சிசுந்தரம் மறைவு.

19-10-2023. மீ.பார்வதி அம்மையார் மறைவு.

 -----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 26]

{10-03-2026}

-------------------------------------------------------------------------------------

அ.சீனிவாசன் 
(5.3.2026-அன்று  எடுத்த படம்)



ஆனந்தி சீனிவாசன் (5.3.2026-அன்று  எடுத்த படம்)



சீனிவாசன் + ஆனந்தி சீனிவாசன் 
(5.3.2026-அன்று  எடுத்த படம்)


ஆனந்தி, விஸ்மயா, சீனிவாசன்.
(5.3.2026-அன்று  எடுத்த படம்)


சம்பத் சீனிவாசன் 


கீர்த்திகா சம்பத்  (5.3.2026-அன்று  எடுத்த படம்)
                                          

கீர்த்திகா, விஸ்மயா,சம்பத்


ஆனந்தியும் சீனிவாசனும் 
(1974 -ல் எடுத்த படம்)


சம்பத் + கீர்த்திகா

சம்பத் 



விஸ்மயாவும் கீர்த்திகாவும்.
(5.3.2026-அன்று  எடுத்த படம்)




கலைச்செல்வி, வேதரெத்தினம், சீனிவாசன், ஆனந்தி, கீர்த்திகா.
(5.3.2026-அன்று  எடுத்த படம்)

கலைச்செல்வி, விஸ்மயா, சீனிவாசன், ஆனந்தி, கீர்த்திகா
                                          (5.3.2026-அன்று  எடுத்த படம்)


பாட்டி ஆனந்தி, பெயர்த்தி விஸ்மயா, தாத்தா சீனிவாசன் 
                                            (5.3.2026-அன்று  எடுத்த படம்)

விஸ்மயா பூப்புனித நீராட்டு விழா நாளில் (22-03-2026) எடுத்த படம். 


விஸ்மயா பூப்புனித நீராட்டு விழா நாளில் (22-03-2026) எடுத்த படம். 




விஸ்மயா பூப்புனித நீராட்டு விழா நாளில் (22-03-2026) எடுத்த படம். 




(தந்தை) சீ.அருணாச்சல தேவர்.

(அண்ணன்) திரு.மீனாட்சி சுந்தரம்

(அண்ணி) பார்வதி அம்மையார்.

பிறந்த வீடு