என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 ஏப்ரல், 2026

(14) கடிநெல்வயல் (திரு) சா.சிங்காரவேலுவின் வாழ்க்கை வரலாறு !


சிங்காரவேலு சாம்பசிவம்

கடிநெல்வயல் சா.சிங்காரவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு, 

முகவுரை.

என்னுடைய தந்தையின்  பெரியப்பா பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து,  வாழ்ந்து வருபவருமான தம்பி சா.சிங்காரவேலுவின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ,  திருத்தம் செய்யவோ, எதையும் புதிதாகக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !  "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !

 

பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்   சேர்ந்தவர் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்துகொண்டார். திரு சிங்காருத் தேவர் பிரகதாம்பாள் என்னும் மங்கையை மணந்து கொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்;  அடுத்தவர் திரு.சாம்பசிவ தேவர்;  கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! இந்தக் கொடியில் திரு சாம்பசிவ தேவருக்கு மகனாகப் பிறந்த  மலரே திருசிங்காரவேலு !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

தோற்றம்:

கடிநெல்வயல் திரு. சாம்பசிவ தேவர் – வீரம்மாள் இணையரின் ஒரே பிள்ளையான திரு சிங்காரவேலு 1948 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம், 23 -ஆம் நாள்  (23-04-1948) பிறந்தார் ! திரு சாம்பசிவத் தேவரின் மாமனாரும், பிறந்த குழந்தையின் தாய்வழிப் பாட்டனாருமான பஞ்சநதிக்குளம், சின்னகாரியக்காடு திரு சிங்காரவேலுத் தேவரின்  நினைவாக, குழந்தைக்கு “சிங்காரவேலு” என்று பெயர் சூட்டப்பட்டது.

 

உடன்பிறப்புகள்:

இவருக்கு முன்னதாக மூன்று பெண்கள் பிறந்திருந்தனர். (01) நீலாம்பாள் (எ) தனலட்சுமி. தந்தை வழிப் பாட்டியார் நீலாம்பாள் அம்மையாரின் நினைவாக வைக்கப்பெற்ற பெயர். இவர் பிறந்த நாள் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பிறந்த ஆண்டு 1934 அல்லது 1935 ஆக இருக்கக் கூடும்.  (02) பாலசுந்தரி. இவர்  பிறந்த நாளும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பிறந்த ஆண்டு 1940  அல்லது 1941 -ஆக இருக்கக் கூடும்.  (03) தேவகுஞ்சரி. இவர்  பிறந்த நாளும் சரியாகத் தெரியவில்லை. ஆனால் பிறந்த ஆண்டு 1944 -ஆக இருக்கக் கூடும். ஏனெனில் இவரும் நானும் சம அகவையினர். திரு சிங்காரவேலு நான்காவதாகப் பிறந்தவர். இவரை அடுத்து நாகவல்லி என்னும் பெண் குழந்தை பிறந்திருந்தது. ஏறத்தாழ ஐந்து அகவை ஆகும் போது இக்குழந்தை இறந்துவிட்டது. இக்குழந்தையின் பிறந்த நாளும் தெரியவில்லை. ஆறாவதாகப் பிறந்த பெண் குழந்தை “விசய” ஆண்டில் பிறந்ததால் “விசயா” என்று பெயர் வைக்கப் பெற்றவர். “விசய” ஆண்டுக்குச் சமமான ஆங்கில ஆண்டு 1953. ஆகையால் இவர் பிறந்த ஆண்டை 1953 என எடுத்துக் கொள்ளலாம் !

 

முதற் புயல்:

நாகப்பட்டினம், வேதாரணியம், கோடிக்கரைப் பகுதிகளை உள்ளடக்கி 1952-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 29 -ஆம் நாள் (29-11-1952) கடுமையான புயல் ஒன்று தாக்கியது. காற்றின் வீச்சினால் கடல் அலைகள் திரண்டு எழுந்து வந்து உப்பளம் வழியாக முட்டகத்தின் ஓரத்தில் அமைந்துள்ள கடிநெல்வயல் உள்பட பல ஊர்களில் புகுந்து விளை நிலங்களையெல்லாம் உவர்நிலமாக்கி விட்டது ! இந்தப் புயல் அடித்த போது திரு சிங்காரவேலு 3 அகவைப் பிள்ளையாக இருந்திருப்பார் ! நான், ஈசனக்குடி செகதாம்பாள் அக்காள் மற்றும் பெரியம்மாள் மாரிமுத்து அம்மையாருடன்   கோமளப்பேட்டை என்னும் ஊரில் (அக்காள் வீட்டில்) அச்சத்தால் நடுங்கிக் கொண்டிருந்தேன் !


பள்ளிக் கல்வி:

திரு.சிங்காரவேலு 5-ஆவது வரையிலான (1953 – 1958) தொடக்கக் கல்வியை கடிநெல்வயலிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்  பள்ளியில் மேற்கொண்டார். அடுத்து 6, 7, 8 -ஆம் வகுப்புப் படிப்புகளை (1958 – 1961) கருப்பம்புலம் பி.வி.தேவர் நடுநிலைப் பள்ளியிலும், 9, 10 -ஆம் வகுப்புப் படிப்புகளை (1961-1962) வேதாரணியத்திலுள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டார். ஆனால் 10 ஆம் வகுப்புப் படிப்பை (S.S.L.C) நிறைவு செய்யாமல் 1962 -ஆம் ஆண்டு இடையிலேயே நிறுத்திவிட்டார் !

 

அக்காள் செல்வி. தனலட்சுமி - சி சக்கரபாணி   திருமணம்:

திரு.சிங்காரவேலுவின் அக்காள்  செல்வி நீலாம்பாள் (எ) தனலட்சுமியின் திருமணம் (2025 ஆம் ஆண்டு இடித்து அகற்றப் பெற்ற) திரு சாம்பசிவ தேவரின் இல்லத்தின் முன்புறம் பந்தல் போட்டு, நடைபெற்றது. திரு சாம்பசிவ தேவரின் மைத்துனரும், செல்வி தனலட்சுமியின் தாய்மாமனுமான பஞ்சநதிக்குளம் சின்னகாரியக்காடு சிங்காரவேல் தேவரின் மகன் திரு சக்கரபாணியை, செல்வி தனலட்சுமி மாலையிட்டு மணவாளனாக்கிக் கொண்டார். இவர்கள் திருமணம் 1954 -ஆம் ஆண்டு நடைபெற்றது. நாளும், மாதமும் தெரியவில்லை !

 

இதே நாளில்தான் என் அக்காள் செல்வி சிந்தாமணியின் திருமணமும், நாங்கள் பிறந்த வீடான “பெரியபண்ணை” வீட்டு முற்றத்தில்  பந்தல்போட்டு உற்றார் உறவினர்கள் புடை சூழ நடைபெற்றது. செல்வி. சிந்தாமணி, தன் தாய் மாமனான திருத்துறைப்பூண்டி, வித்வான் மானைக்கால் திரு. சி.பண்டரிநாதன் அவர்களைக் கரம் பிடித்தார் !

 

இரண்டாவது புயல்:

பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் என்னும் முதுமொழிக்கேற்ப, 1952 -ஆம் ஆண்டு கடுமையான புயலால் தாக்கப்பட்ட நாகப்பட்டினம், வேதாரணியம், கோடிக்கரைப் பகுதிகள் இரண்டாவது முறையாக 1955 -ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 30 -ஆம் நாள் (30-11-1955) மாலை தொடங்கி இரவு முழுவதும்  மீண்டும் தாக்கப்பட்டது. அப்போது நான்  கடிநெல்வயலில்தான் இருந்தேன்.  காலையில் புயல் ஓய்ந்ததும் எழுந்து பார்த்தால் வயல்களில் நெற்பயிர்களே தெரியவில்லை. எங்கும் கடல் போல் காட்சியளித்தது. மரங்கள் வீழ்ந்து கிடந்தன. வீட்டில் வேயப்பட்டிருந்த ஓடுகளில் கால்வாசி போன இடம் தெரியவில்லை. திருசிங்காரவேலுவின் வீட்டின் பின்புறம் வீட்டுடன் இணைந்த சார்ப்பை அடுத்து குதிரைக் கொட்டகை ஒன்று போடப்பட்டிருந்தது. சார்ப்புக்கும் கொட்டகைக்கும் இடையில் இடைவெளி விடாமல் “V” வடிவத்தில் இருந்த பகுதியில் அவர்கள் வீட்டுப் பசு மாடு ஒன்று புயலால் தூக்கி வீசப்பட்டு அதன் இரு கால்கள் சார்ப்பிலும், அடுத்த இரு கால்கள் குதிரைக் கொட்டகை இறப்பிலும் கீற்றைப் பொத்துக்கொண்டு நின்றது ! அதைக் கூரையைவிட்டு இறக்குவதற்கு 10 பேருக்கு மேல் தேவைப்பட்டது !

 

அக்காள் பாலசுந்தரி – இரத்தின தேவர் திருமணம்:

திரு சிங்காரவேலுவின் இரண்டாவது அக்காள் செல்வி பாலசுந்தரியின் திருமணம், 1957 -ஆம் ஆண்டின் முற்பகுதியில் நடைபெற்றது. பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி (கூழையன்காடு) திரு வேதையாத் தேவரின் தம்பி திரு.இரத்தின தேவரை செல்வி பாலசுந்தரி மணந்துகொண்டார். மணமகன் வீட்டில் திருமணம் நடைபெற்றது. காலையில் திருமணம்; மாலையில் பத்துக்கும் மேற்பட்ட கூண்டு வண்டிகள், மாடுகளின் கழுத்துச் சதங்கை சல் சல் என்று ஒலியெழுப்ப, மணமக்களையும், இருபக்க மணவீட்டாரையும்   சுமந்து கொண்டு கடிநெல்வயல் நோக்கி வந்து கொண்டிருந்தன !

 

இருளப்ப தேவர் மகன் காசிநாதன் மறைவு:

புது மணமக்கள் வீடு வந்து சேர்வதற்குள், தெற்குப் பண்ணை அண்ணன் இருளப்ப தேவரின் ஐந்து அகவை மகன்  காசிநாதன் காலமாகிவிட்டான் என்னும் செய்தி முட்டகம் வரை வந்து எதிரொலித்தது. பாலசுந்தரியை “அத்தை, அத்தை” என்று அன்பொழுக அழைத்து, அவருடனேயே எந்நேரமும் ஒட்டிக்கொண்டிருந்த குழந்தை காசிநாதன் காலமாகிவிட்டான். திருமணவீடு மகிழ்ச்சியைத் துறந்து துன்ப உணர்வுகளில் துவண்டு போயிற்று !

 

தேவகுஞ்சரி – காந்தி தேவர் திருமணம்:

திரு சிங்காரவேலுவின் மூன்றாவது அக்காள் செல்வி தேவகுஞ்சரி 1944-ஆம் ஆண்டில் பிறந்தவர்.  என் அகவையை ஒத்த சம வயதினர். இவர் வாய்மேட்டைச் சேர்ந்த சொக்கையாத் தேவர் என்பவரின் மகன் காந்தி தேவர் என்பவரை 1960 -ஆம் ஆண்டு மணந்து கொண்டார். நாள், மாதம் விவரம் தெரியவில்லை. நடப்பா  திரு.சாம்பசிவ தேவர் உயிருடன் இருக்கும் போதே நடத்தி வைக்கப்பெற்ற திருமணம் இது !

 

தந்தை திரு. சாம்பசிவ தேவர் மறைவு:

இவரது தந்தை திரு சீ.சாம்பசிவ தேவர் 1962-ஆம் ஆண்டில் காலமானார். நாள், மாதம் விவரம் தெரியவில்லை. தந்தை காலமானதால், வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்த  திரு.சிங்காரவேலு, தான் பயின்று வந்த 10 ஆம் வகுப்புப் படிப்பை  இடையிலேயே நிறுத்த வேண்டியதாயிற்று !

 

தாய்மாமா திரு சக்கரபாணித்தேவர் மறைவு:

திரு சிங்காரவேலுவின் அக்காள் திருமதி நீலாம்பாள் (எ) தனலட்சுமியின் கணவரும், தாய் மாமாவுமான திரு சக்கரபாணித் தேவர் 1972-ஆம் ஆண்டு காலமானார். சரியான நாள், மாதம் ஆகிய விவரங்கள் தெரியவில்லை !

 

தங்கை விசயா – முருகேசன் திருமணம்:

திரு. சிங்காரவேலுவின் தங்கை செல்வி விசயா, அகத்தியம் பள்ளியைச் சேர்ந்த திரு இராமாமிதம் அவர்களின் மகன் திரு முருகேசன் என்பவரை 1976-ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 27 -ஆம் நாள் (27-08-1976) மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் எந்த ஊரில் நடைபெற்றது என்பது நினைவில்லை ! விசயா திருமணம் நடைபெற்ற போது தந்தை சாம்பசிவ தேவர் உயிருடன் இல்லை. ஆகையால் திரு சிங்காரவேலுதான் இதை நடத்திவைக்க வேண்டிய பொறுப்பைச் சுமக்க வேண்டியதாயிற்று !

 

சிங்காரவேலு – தையல்நாயகி திருமணம்:

தோப்புத்துறையைச் சேர்ந்த திரு.இராமலிங்க தேவர் அவர்களின் மகள் செல்வி. தையல் நாயகியை திரு. சிங்காரவேலு 1977 -ஆம் ஆண்டு, சூன் மாதம், 19 -ஆம் நாள் (19-06-1977) மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் பெண் வீட்டில் நடந்ததாக எனக்கு நினைவு. தென்னடார் திரு சண்முக வாத்தியார் என்னும் சண்முக தேவர் முன்முயற்சியில் இத்திருமணம் கைகூடியாதாகவும் நி/வா திரு அ.மீனாட்சிசுந்தரம், நி/வா திரு கா.இருளப்ப தேவர் ஆகியோர் முன்னின்று இத்திருமணத்தை நடத்தி வைத்ததாகவும் திரு.சிங்காரவேலு என்னிடம் தெரிவித்தார் !

 

வாழ்க்கை வருமானம்:

கடிநெல்வயலில் 1952 மற்றும் 1955 -ஆம் ஆண்டுகளில்  அடித்த இரு புயல்களாலும் கடல் நீர் ஊருக்குள் புகுந்த வேளாண் நிலங்களைப் பாழ்படுத்திவிட்டது. விளைநிலம் பகுதியளவுக் களர் நிலமாக மாறிவிட்டது. இதனால் விளைச்சல் குறைந்து போயிற்று; வருமானம்  விழ்ச்சி அடைந்தது. வாழ்க்கை நடத்த வேறு வாய்ப்புகளை நாட வேண்டிய துன்ப நிலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக கடிநெல்வயலின் தென்புறம் உப்பளத்தில் உப்பு எடுக்கும் பணிக்காக மேட்டுர் வேதிப்பொருள் நிறுவனம் (WIMCO) ஒரு தொழிற்சாலையை நிறுவி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பை அளித்தது. அப்பொழுது திரு சிங்காரவேலுவும் அங்கு வேலையில் சேர்ந்தார். அவர் பெற்று வந்த மாதச் சம்பளம், அவரது குடும்பத்தை இயக்கப் பெருமளவுக்கு உதவியது !

 

மகள் சங்கீதா பிறப்பு, வளர்ப்பு, & திருமணம்:

திரு சிங்காரவேலு – தையல்நாயகி இணையருக்கு 1978 -ஆம் ஆண்டு, மே மாதம், 26 -ஆம் நாள் (26-05-1978)  ஒருபெண் மகவு பிறந்தது.  இந்தப் பெண்ணுக்கு சங்கீதா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இப்பெண்ணுக்குத்  திருமணமாகி இப்பொழுது கணவர் திரு செல்லத்துரையுடன், ஆயக்காரன்புலம், நல்லான் குத்தகையில்  வாழ்ந்து வருகிறார் !  இவர்கள் திருமணம் 2002 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 26 -ஆம் நாள் (26-08-2002) நடைபெற்றது !

 

மகன் வீரபாண்டியனின் பிறப்பு, வளர்ப்பு, & திருமணம்:

அடுத்து, திரு சிங்காரவேலு – தையல்நாயகி இணையருக்கு 1982 -ஆம் ஆண்டு, சூன் மாதம், 04-ஆம் நாள் (04-06-1982) ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. வீரபாண்டியன் என்று பெயர் சூட்டி வளர்த்த இப்பிள்ளை வளர்ந்து இப்பொழுது கடிநெல்வயலில் இயங்கிவரும் குசராத் மிகுநிலை  வேதிப்பொருள் லிமிட்டெட் (GHCL) என்னும் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார் ! வீரபாண்டியனுக்கு 2017 -ஆம் ஆண்டு மே மாதம் 29 -ஆம் நாள் (29-05-2017) திருமணம் நடைபெற்றது. வேளாங்கண்ணியைச் சேர்ந்த திரு கண்ணன் – வளர்மதி இணையரின் மகள் செல்வி சாலினியைத் திரு வீரபாண்டியன் கரம் பிடித்தார் !

 

பணி ஓய்வு:

திரு சிங்காரவேலு குசராத் மிகுநிலை  வேதிப்பொருள் லிமிட்டெட் (GHCL) என்னும் நிறுவனத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால் 2006 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 22-ஆம் நாள்  (22-04-2006) பணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது மட்டும் தெரிகிறது. 

 

தமக்கையார்  நீலாம்பாள் (எ) தனலட்சுமி மறைவு:

திரு சிங்காரவேலுவின் தமக்கையார்   திருமதி நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையார் வயது முதிர்வின் காரணமாக 2006 -ஆம் ஆண்டு, மே மாதம், 13 -ஆம் நாள் (13-05-2006) தனது 72-ஆவது அகவையில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.


இரண்டாவது தமக்கை பாலசுந்தரி மறைவு:

மூன்று தமக்கையருள் திருமதி பாலசுந்தரி இரண்டாமவர். பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தியில் வாழ்க்கைப்பட்டவர். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 09-ஆம் நாள் (09-04-2021) தனது 78-ஆவது அகவையில் காலமானார் !

 

தங்கை விசயா மறைவு !

1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயாவின் , வாழ்க்கை புயலில் சிக்கிய கப்பல் போல ஆகிவிட்டது.  தன் வாழ்வுக்கும் இனிமைக்கும் நிம்மதிக்கும்  வெகுதொலைவு என்பதை உணர்ந்த விசயா, கடந்த 2025 – ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 01-ஆம் நாள் (01-12-2025) தனது  72 -ஆம் அகவையில்  இவ்வுலக வாழ்வை நீத்தார் !

 

மனைவி தையல்நாயகி மறைவு:

திருமதி தையல்நாயகி 1977-ஆம் ஆண்டு சூன் மாதம், 19-ஆம் நாள் திரு சிங்காரவேலுவுக்கு மாலையிட்டு  அவரது மனைவியானார்.  48 ஆண்டுகள் அவருடன் இல்லறத்தில் இணைந்து பயணித்த அவர் கடந்த 2025 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 22 -ஆம் நாள் (22-08-2025) காலமானார். திரு சிங்காரவேலுவின் இணைப்பறவை அவரைத் தனியாக விட்டுவிட்டுப் பறந்து விட்டது !

 

நிறைவுரை:

வாழ்க்கை என்பது காட்டாற்று வெள்ளம் போன்றது. அதில் எத்தனைக் காலம் வெள்ளம் வரும், எப்போது வடிந்து போகும் என்பது யாருக்கும் தெரியாது. திரு சிங்காரவேலுவின் வாழ்க்கையில் காட்டாற்று வெள்ளம் போல் இன்பமும் துன்பமும் மாறி மாறி வந்து கொண்டே இருந்தன. 77-ஆவது அகவையில் மனைவியை இழந்து தனிப் பறவையாகிவிட்ட அவர், இனிமேலாவது துன்ப உணர்வுகளைத்  துடைத்து விட்டு அமைதியான  வாழ்க்கை ஓடத்தில் பயணிக்கட்டும் !

=======================================================

கடிநெல்வயல் சா.சிங்காரவேலு வாழ்க்கையின் முகாமையான நிகழ்வுகள் !

=======================================================

 

23-04-1948. சா.சிங்காரவேலு பிறப்பு.

29-11-1952. முதற் புயல்.

00-00-1953. தங்கை விசயா பிறப்பு.

00-00-1954. நீலம்பாள் (எ) தனலட்சுமி சக்கரபாணித்தேவர் திருமணம்.

30-11-1955. இரண்டாவது புயல்.

00-00-1957. பாலசுந்தரி – இரத்தின தேவர் திருமணம்.

00-00-1960. தேவகுஞ்சரி – காந்தி தேவர் திருமணம்.

00-00-1962. தந்தை சீ.சாம்பசிவ தேவர் மறைவு.

00-00-1972. சி.சக்கரபாணித் தேவர் மறைவு.

27-08-1976. விசயா – முருகேசன் திருமணம்

19-06-1977. சிங்காரவேலு – தையல்நாயகி திருமணம்.

26-05-1978. சங்கீதா செல்லத்துரை பிறப்பு

04-06-1982. மகன் வீரபாண்டியன் சிங்காரவேல் பிறப்பு.

12-10-1995. மருமகள் சாலினி வீரபாண்டியன் பிறப்பு.

26-08-2002. மகள் சங்கீதா – செல்லத்துரை திருமணம்.

22-04-2006 பணியிலிருந்து ஓய்வு பெறல்

13-05-2006. தமக்கை தனலட்சுமி சக்கரபாணி மறைவு.(72 வயது)

29-05-2017. மகன் வீரபாண்டியன் - சாலினி திருமணம்.

23-05-2018. பெயரன் அவினேஷ் வீரபண்டியன் பிறப்பு.

09-04-2021. தமக்கை பாலசுந்தரி இரத்தினம் மறைவு.(78 வயது)

22-08-2025. மனைவி தையல்நாயகி சிங்கரவேல் மறைவு.

01-12-2025. தங்கை விசயா முருகேசன் மறைவு.(72 வயது)

========================================================

.

 

--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மீனம் (பங்குனி) 18]

{01-04-2026}

----------------------------------------------------------------------------------------------------

சிங்காரவேலு சாம்பசிவம்





சிங்காரவேலு சாம்பசிவம்


தையல்நாயகி சிங்காரவேலு


தையல்நாயகி சிங்காரவேலு



வீரபாண்டியன் சிங்காரவேலு



வீரபாண்டியன் & ஷாலினி 



ஷாலினி, அவினேஷ் & வீரபாண்டியன்



நீலாம்பாள் (எ) தனலட்சுமி சக்கரபாணி



நீலாம்பாள் (எ) தனலட்சுமி சக்கரபாணி



பாலசுந்தரி இரத்தினம்



விஜயா முருகேசன்


சாம்பசிவ தேவர் கட்டி வாழ்ந்த வீடு

சிங்காரவேலு பிறந்து வாழ்ந்த வீடு.