என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

(10) கடிநெல்வயல் (திரு) ச.சதாசிவம் - வாழ்க்கை வரலாறு !

      

கடிநெல்வயல் திரு ச.சதாசிவ தேவர் வாழ்க்கை வரலாறு !

முகவுரை.

என்னுடைய  தந்தை திரு. சி.வைத்தியநாத தேவரின் பெரியப்பா திரு. சீனிவாச தேவரின் பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து,  வாழ்ந்து வருபவருமான தம்பி ச.சதாசிவத்தின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !  "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன்  நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்து கொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; அடுத்தவர்  திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! திரு சண்முகவேல் தேவர் இல்லத்தில் மலர்ந்த நறுமண  மலரே திரு சதாசிவம் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)


தந்தை வழிக் குலக்கொடி: 

மாரியப்ப தேவர்  >  நல்லபொதிய தேவர்  >  சீனிவாச தேவர் / நீலாம்பாள் அம்மையார்  > சண்முகவேல் தேவர் / பஞ்சரத்தினம் அம்மையார்  >  சதாசிவம் / (மனைவி) மல்லிகா.


தாய் வழிக் குலக் கொடி: 

இராமச்சந்திர தேவர் > பிச்சையாத் தேவர் / சீதாலட்சுமி  அம்மையார்  > (மகள்) பஞ்சரத்தினம் / (கணவர்) சண்முகவேல் தேவர்  > சதாசிவம் / (மனைவி) மல்லிகா. 


திரு சண்முகவேல் தேவர்  – பஞ்சரத்தினம் அம்மையார் 

இணையர் திருமணம் !

திரு. அருணாச்சல தேவர், திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளுர் சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையாரின் மூத்த மகள் செல்வி மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். இளையவரான திரு.சாம்பசிவ தேவர், பஞ்சநதிக்குளம் சின்னகாரியக்காடு கந்தசாமித் தேவரின் அண்ணன் திரு சிங்காரவேல் தேவரின் மகளான செல்வி வீரம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.   கடைசிப் பிள்ளையான திரு சண்முகவேல் தேவர் அப்போது கடிநெல்வயல் கீழக்காட்டில் அப்போது வாழ்ந்து வந்த திரு க. பிச்சையாத் தேவர் – சீதையம்மாள் இணையரின் இரண்டாவது மகளான செல்வி பஞ்சரத்தினம் என்பவரை 1942 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் !

 

திரு சண்முகவேல் தேவரின் வேளாண் பணி வாழ்க்கை !

திரு.சண்முகவேல் தேவர், தனது தாத்தா திரு நல்லபொதிய தேவர் மற்றும் தந்தை திரு.சீனிவாசத் தேவர் ஆகியோரின் வழிவந்த குடும்பச் சொத்தான வேளாண் நிலங்களில், தனது அண்ணன்மார் திரு அருணாச்சலத் தேவர், திரு சாம்பசிவத் தேவர் ஆகியோருடன், தொடக்கத்தில் இணைந்து கூட்டாக வேளாண் தொழிலைச் செய்துவந்தார். பிற்காலத்தில் அண்ணன்மாருடன் பாகப் பிரிவினை ஆனபின்பு, தனது பங்காகக் கிடைத்த நன்செய், புன்செய் நிலங்களில் தனியாக வேளாண்மை செய்வதில் கவனம் செலுத்தி வந்தார்!

 

திரு சண்முகவேல் – பஞ்சரத்தினம் இணையரின் குழந்தைகள் !

திரு சண்முகவேல் – பஞ்சரத்தினம் இணையருக்கு மூன்று ஆண் குழந்தைகள் பிறந்தனர். சதாசிவம், செயராமன், கனகராசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்த அவர்கள் பெற்றோருக்குக் கவலையை மறக்கச்செய்யும் மாமருந்தாகத் திகழ்ந்து பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டிகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர் !

 

தலைப் பிள்ளையான திரு சதாசிவம் 1947 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10 -ஆம் நாள் (10-04-1947)  பிறந்தார். இரண்டாவது பிள்ளையான  திரு.செயராமன்    1952 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 -ஆம் நாள் (29-12-1952)  (நந்தன ஆண்டு மார்கழி மாதம், 15 -ஆம் நாள், திங்கள் கிழமை, உரோகிணி விண்மீன் நிலவிய நாளில்   பிறந்தார்) மூன்றாவது பிள்ளையான திரு கனகராசன் 1954 -ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 09 - ஆம் நாள் (சய ஆண்டு, கார்த்திகை மாதம், 24 -ஆம் நாள்)  (9-12-1954) வியாழக்கிழமை உரோகிணி விண்மீன் நிலவிய நன்னாளில் பிறந்தார் !

 

திரு. சதாசிவத்தின் கல்விப் பயணம்  !

திரு சதாசிவம் 1952 – ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் விசயதசமி நாளன்று  பெற்றோர், உற்றார் உறவினர்கள் குழுமியிருக்க, “அரிவோம், நன்றாக, குரு வாழ்க, குருவே துணை” என்று எழுத்தாணியால் பனையோலைச் சுவடியில் எழுதப்பெற்று மஞ்சள் தடவி, பெரியோர்கள் ஒருமுறை சொல்லிக் கொடுக்க, அவர்கள்  வாழ்த்துகளுடன்    கடிநெல்வயலிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் !

 

ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை கடிநெல்வயலில் படிப்பை (1952-53 முதல் 1956-57வரை) தொடர்ந்த திரு சதாசிவம் தனது  6 -ஆம் வகுப்புப் படிப்பை (1957-58) ஆயக்காரன் புலத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 7 மற்றும் 8 -ஆம் வகுப்புப் படிப்பை (1958-59 முதல் 1959-60 வரை ) கருப்பம்புலம் பி.வி.தேவர்  நடுநிலைப்பள்ளியிலும் மேற்கொண்டார் !

 

9, 10, 11, ஆகிய வகுப்புப் படிப்புகளை, (1960-61 முதல் 1962-63 வரை) வேதாரணியம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மேற்கொண்டார்.  பள்ளி இறுதி வகுப்பான 11 -ஆம் வகுப்புத்   தேர்வில் (மார்ச் 1963) நன்முறையில் தேர்ச்சி பெற்றார் !

 

அருகில் கல்லூரி எதுவும் இல்லாததாலும், பள்ளியிறுதி வகுப்பு வரைப் படித்தது போதும் எனப் பெற்றோர் முடிவு செய்ததாலும், திரு சதாசிவம் தனது படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு, தந்தைக்கு உதவியாக வேளாண் பணிகளில்  ஈடுபடலானார் !


திரு. சதாசிவத்தின் தந்தை நோய் வாய்ப்படல் !

திரு சதாசிவத்தின் தந்தையான சண்முகவேல் தேவருக்கு வாத நோயின் பாதிப்பு ஏற்பட்டு, வேளாண் பணிகளைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தந்தை முடங்கிப் போனதால், திரு.சதாசிவம், வேளாண் பணிகளுடன் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அரசுப் பணி எதற்கும் செல்லமுடியாத நெருக்கடி ஏற்பட்டது !

 

தந்தையின்  சிறப்பு ஆற்றல்  !

திரு சண்முகவேல் தேவர் அவர்கள் வாத நோயால் முடங்கிப் போவதற்கு முன்பு, பஞ்சநதிக்குளம் அங்காளம்மன் அருளால், பங்காளிகளின் வீடுகளில் எதிர்காலம் பற்றி உரைக்கும் மருளாளியாகத் திகழ்ந்தார். வேறு வகையில் சொல்வதானால் அருள் வந்து சாமியாடி நல்வாக்குச் சொல்பவராக இலங்கினார். ஆண்டுதோறும்  வைகாசி  மாதம்  விசாக  நாளன்று கடிநெல்வயல், மங்காங்குளம்  மேல்கரையிலிருந்து பாற் காவடி எடுத்துக்கொண்டு கோடிக்கரை குழகர் கோயிலுக்கு ஐந்தாறு பேர் செல்வது வழக்கம். அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொறுப்பை திரு சண்முகவேல் தேவர் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார் !

 

கடிநெல்வயலிலிருந்து கால்நடையாக, முட்டகம், உப்பளம் வழியாக கோடிக்கரை இராமர் பாதம் அருகிலுள்ள ஒரு குளத்தை அடைந்து அங்கு கை கால் கழுவிக் கொண்டு சாலை வழியாக குழகர் கோவிலை அடைவது வழக்கம். நானும் இவ்வாறு சிலமுறை சென்றிருக்கிறேன். கோயிலில் குடிகொண்டுள்ள குழகர் எனப்படும் முருகப் பெருமானுக்கு, காவடியில் கட்டிக் கொண்டு செல்லும் பாலால் திருமுழுக்குச் செய்துவிட்டு,  அங்கு வணிகர்களால் விற்பனை செய்யப்படும் பலாப்பழம் மற்றும் இன்ன பிறவற்றை வாங்கிக்கொண்டு  ஊர்  திரும்புவோம் !

 

கோடிக்கரைக் காட்டில் விளையும் பாலப்பழம், வடிவத்திலும் நிறத்திலும்  வேப்பம்பழம் போலிருக்கும். சுவையோ வேப்பம் பழத்திற்கு நேர் எதிர்நிலை.  அத்துணை இனிப்பாக இருக்கும். அதையும் வாங்கிக் கொண்டு  ஊர் திரும்புவோம். திரு சண்முகவேல் தேவர் அவர்கள் முடங்கிப் போனபிறகு, காவடி எடுத்துச்செல்லும் பழக்கம் முற்றிலும் நின்றுபோயிற்று !

 

1957 -ஆம் ஆண்டு வேதாரணியத்தில் திரு எம்.ஜி.ஆர். நடித்த “இன்பக்கனவு” நாடகம் நடைபெற்றது. நினைவில் வாழும் திரு சு.சிவசுந்தரம் வீடு இருக்கும் இடத்தில் அந்த நாடகம் நடைபெற்றது. நாடகத்தைக் காண திரு சண்முகவேல் தேவருடன், நான், அண்ணன் நடராசன், திரு தனசாமி, திரு.மதிவாணன், திரு பாலையாத் தேவர் மகன் தெட்சணாமூர்த்தி, திரு சற்குண தேவர் மகன் முருகையன், திரு தாயுமனவன், நடுக்காடு திரு பாஞ்சான் மகன் தங்கசாமி, வெள்ளாழர் காடு திரு வைத்தியலிங்கம் பிள்ளை, திரு இராசுப் பிள்ளை மகன் பாலசுப்ரமணியன்  மற்றும் சிலர் சென்றிருந்தோம். சிற்றப்பா திரு சண்முகவேல் தேவர் அவர்கள் இளமை ததும்ப எங்களுடன் இணைந்து ஆட்டமும் பாட்டமுமாக நாடகம் முடிந்து ஊர்திரும்பிய அந்த மகிழ்ச்சியான நிகழ்வு இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது !

 

பஞ்சரத்தினம் அம்மையாரின்  அத்தை  இரத்தினம் அம்மையார். 

இப்பொழுது திரு சதாசிவம் வீடு இருக்கும் மனையில் திரு பிச்சையாத் தேவர் – சீதை அம்மையார் வாழ்ந்த  வைக்கோல் செற்றை வேய்ந்த கூரை வீடு இருந்தது. அதில் திரு பிச்சையாத் தேவருடன் அவரது தங்கை இரத்தினம் அம்மையாரும் வாழ்ந்து வந்தார். அவர் இறக்கும் வரை அதே வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். அவர் இறப்புக்கு முன்னதாகவே திரு பிச்சையாத் தேவரும் , சீதை அம்மையாரும் வேதாரணியம் அருகிலுள்ள பயத்தவரன் காட்டுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர் ! இந்த வீட்டில் தான் கடிநெல்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த, கண்டிப்புக்குப் பெயர் போன தலைமை ஆசிரியர், திரு. தியாகராச தேவர் தன் குடும்பத்தினருடன் வாடகைக்கு வாழ்ந்து வந்தார் ! அவருடைய மகன் திரு.வேதமூர்த்தி, திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியில் வாழ்ந்து வருவதாகக் கேள்வி !

 

திரு. சண்முகவேல் தேவர் மறைவு !

வாத நோயால்  நடமாட்டம் முடங்கிப் போன திரு சண்முகவேல் தேவர் இல்லற வாழ்வில் ஏறத்தாழ 28 ஆண்டுகள் கழித்த பின், அதை மேலும் நீட்டிக்க முடியாமல் 1970 -ஆம் ஆண்டு சூலை மாதம் (ஆனி) கடைசியில் இறந்து போனார். 23 வயதேயான திரு சதாசிவம் தோள்களில் குடும்பச் சுமையை இறக்கி வைத்துவிட்டு தந்தைப் பறவை பறந்துவிட்டது ! பிள்ளைப் பறவை தவித்துப் போனது !

 

திரு. சதாசிவம் – மல்லிகா திருமணம் !

திரு சதாசிவத்தின் தாய்மாமா திரு கே.பி.முருகையாத் தேவர்  தன் தங்கையையும், தங்கை பிள்ளைகளையும் வாழ்க்கைச் சுழலில் சிக்குண்டு சோர்ந்து போக விடாமல் கரையேற்றிவிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தன் மகள்  செல்வி மல்லிகாவை, திரு. சதாசிவத்திற்கு மணம் முடித்து வைத்து அவர்களுக்கு உதவியாக இருக்க  விரும்பினார். உற்றார் உறவினருடன் கலந்து பேசினார்.   இறுதியில் திரு சதாசிவம் – செல்வி மல்லிகா திருமணம் 1970 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2- ஆம் நாள் (02-11-1970)  திங்கட்கிழமை நடந்தேறியது !

 

திரு சதாசிவத்தின்  தொழில்நிலை  வரலாறு  !

வேளாண் வருமானம் போதுமான அளவுக்கு இல்லாததால் திரு.சதாசிவம் வேறு வேலை வாய்ப்புகளை நாடலானார். கடிநெல்வயலின் தென்புறம் அமைந்திருந்த அளத்தில், உப்பு விளைவிக்கும்  தொழிலில்  "மேட்டூர்  வேதிப்பொருள்  நிறுவனம்" (METTUR CHEMICALS LIMITED)  ஈடுபட்டிருந்தது.  பின்னாளில்  குசராத்தைத் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு  (GHCL)  தொழிற்சாலை கைம்மாறியது.  அதில் 1970 முதல் 1972 வரை திரு.சதாசிவம் பணிபுரிந்தார். பிறகு எட்டாண்டுகள் இடைவெளிக்குப் பின் இரண்டாவது முறையாக 1980 முதல் 2005 வரை ஏறத்தாழ 25 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணி புரிந்து, 2005 -ஆம் ஆண்டு தனது 58 - ஆவது அகவையில் அதிலிருந்து  ஓய்வு பெற்றார் !  அவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில்  உப்புத் தயாரிப்பு நிறுவனம் பெயரளவுக்கு ஒரு சிறு தொகையை ஓய்வூதியமாக இன்றளவும் வழங்கி வருகிறது !  

 

திரு சதாசிவம் – மல்லிகா  இணையரின் பிள்ளைகள் !

திரு சதாசிவம் – மல்லிகா இனையருக்கு 2 ஆண் மகவும்  2 பெண் மகவும் பிறந்தனர். முதற் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அக்குழந்தைக்கு, குழந்தையின் தாய்மாமா திரு மு.கருணாநிதி  “பூங்குழலி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1972 -ஆம் ஆண்டு. பிறந்த பூங்குழலிக்கு இப்போது வயது 53.  திருமணமாகி  தன் கணவருடன் மயிலாடுதுறையில் வாழ்ந்து வருகிறார். இரண்டாவதாகப் பிறந்த ஆண்குழந்தைக்கு “சேரலாதன்” என்று தாய்மாமா திரு மு.கருணாநிதிதான் பெயர் வைத்தார். 1975 - ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 -ஆம் நாள் (25-03-1975)  பிறந்த சேரலாதனுக்கு இப்போது அகவை 51. திருமணமாகி, மனைவி இலட்சுமி, மகள்கள் யாஷிகா, பிரக்க்ஷிகா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் !

 

மூன்றாவதும் ஆண்குழந்தை. 1977-ஆம் ஆண்டு பிறந்த இக்குழந்தைக்கு சரவணன்  என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இவருக்கும் திருமணமாகிவிட்டது. மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். நான்காவதாகப் பிறந்த  பெண் குழந்தைக்கு “சீதா” என்று பெயர் சூட்டி வளர்த்தனர். 1980 -ஆம் ஆண்டு பிறந்த சீதாவுக்கு இப்பொழுது 45 அகவை ஆகிறது. 2004-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09-ஆம் ஆம் நாள் (09-09-2004) திருமணமான இவர்  தன் கணவர் சந்திரசேகருடன்  வேதாரணியம் அருகில் வாழ்ந்து வருகிறார் !

 

க.பி.முருகையாத் தேவர் மறைவு !

திரு சதாசிவம் குடும்பத்திற்குப் பல வகையிலும் உதவி வந்தார் அவரது தாய்மாமாவும், மாமனாருமான திரு கே.பி.முருகையாத் தேவர். வேதாரணியம் அருகிலுள்ள பயத்தவரன்காட்டில் வாழ்ந்து வந்த அவர்  அகவை முதிர்வின் காரணமாகக் கடந்த 2007 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 20 -ஆம் நாள்  (20-4-2007)  அன்று   இறந்து போனார் !

பஞ்சரத்தினம் அம்மையார் மறைவு.

திரு கே.பி.முருகையாத் தேவரின் தங்கையும் திரு சதாசிவத்தின் தாயாராருமான பஞ்சரத்தினம் அம்மையார் தன் மகன் திரு சதாசிவத்துடன் கடிநெல்வயலில் வாழ்ந்து வந்தார். 1927 -ஆம் ஆண்டு பிறந்த அவரும் கடந்த 2024-ஆம் ஆண்டு, சனவரி மாதம், 4-ஆம் நாள் (4-1-2024)  தனது 97 -ஆவது அகவையில், அகவை முதிர்வினால்  காலமானார் !


 மைத்துனர்கள், மாமியார் மறைவு: 

திரு சதாசிவத்தின் மைத்துனர் திரு மு.கருணாநிதி, ஈர்மக் கலையில் (PAINTING) வல்லவர். ஈர்மம் (PAINT) கொண்டு அவர் எழுதும் பெயர்ப் பலகைகளும், விளம்பரப் பலகைகளும் கண்களைச் சுண்டி இழுக்கும்.  அத்துணை அழகு. அவர், கடந்த 2004 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29 -ஆம் நாள் (29-09-2004) கதுமென (திடீரென்று) மறைந்து போனார். இன்னோரு மைத்துனரான திரு மு.குமரப்பா  ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர். அவரும், கடந்த 2019 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24 -ஆம் நாள் (24-02-2019) யாரும் எதிர்பாரா வண்ணம்  இயற்கை  எய்தினார். மாமியார்  திருமதி செல்லமணி அம்மையாரும்  கடந்த 2008 -ஆம் ஆண்டு, சூன் மாதம், 29 -ஆம்  நாள்  (29-06-2008)  இவ்வுலக வாழ்வை நீத்தார் !


நிறைவுரை !

பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் ஆண்பிள்ளைகள் தலையெடுக்கும் முன்பு, அவர்கள் தந்தையார் மறைந்து போவதென்பதும் குடும்பச் சுமையை பாலபருவம் முடியாத மூத்த பிள்ளை சுமப்பென்பதும்   தொடர்ந்து நடந்து வருகிறது. பங்காளிக் கிளைகளான, அண்ணன் இருளப்ப தேவர், நான் (வேதரெத்தினம்),  தம்பி சீனிவாசன், தம்பி சிங்காரவேலு, தம்பி சதாசிவம் எல்லோருமே  இந்தச் சுழலில் சிக்குண்டு தவித்துப் போயிருக்கிறோம் !  வாழ்க்கை என்பது எங்களுக்கெல்லாம் துன்பத்திலிருந்து தான் தொடங்கியிருக்கிறது.  இளைய தலைமுறையிராவது  எங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வளமாக வாழட்டும்  !

==================================================

திரு சதாசிவம் வாழ்க்கை வரலாற்றில்  சில முகாமையான 

நிகழ்வுகள் !

==============================================

00-00-1927 : திருமதி பஞ்சரத்தினம் அம்மையார் பிறப்பு.

00-00-1942 : திரு. சண்முகவேல் - பஞ்சரத்தினம் திருமணம். 

10-04-1947 : திரு. சதாசிவம் பிறப்பு.

00-10-1952 :  கடிநெல்வயல்   பள்ளியில் 1-ஆம் வகுப்பில் சேரல்.

29-11-1952:  முதலாவது புயல்.

29-12-1952 : தம்பி செயராமன் பிறப்பு.

09-12-1954 :  தம்பி கனகராசன் பிறப்பு.

30-11-1955:  இரண்டாவது புயல். 

00-00-1957 :  வேதாரணியத்தில் M.G.R -ன்  நாடகம்.

00-06-1957 :  ஆயக்காரன்புலத்தில்   6-ஆம் வகுப்பில் சேரல்

00-06-1958 :   கருப்பம்புலத்தில் 7-ஆம் வகுப்பில் சேரல்.

00-06-1960 : வேதாரணியத்தில் 9-ஆம் வகுப்பில் சேரல்.

00-03-1963 : பள்ளியிறுதி வகுப்பு (S.S.L.C) தேர்ச்சி. 

00-07-1970 : தந்தை திரு சண்முகவேல் தேவர் மறைவு.

02-11-1970 :  திரு. சதாசிவம் - மல்லிகா திருமணம் - 

1970 -1972:   கடிநெல்வயல் GHCL -ல் பணியாற்றல்

00-00-1972 : மகள் பூங்குழலி பிறப்பு.

25-03-1975 : மகன் சேரலாதன் பிறப்பு.

00-00-1977 : மகன் சரவணன் பிறப்பு.

00-00-1980 : மகள் சீதா பிறப்பு.

09-09-2004. சீதா - சந்திரசேகரன்  திருமணம்.

29-09-2004 : மைத்துனர் மு.கருணாநிதி மறைவு.

1980 -2005 :  GHCL -ல் மீண்டும் பணியாற்றல்

00-04-2005 : GHCL -ல்  இருந்து பணி ஓய்வு பெறல். 

20-04-2007 : திரு.க.பி.முருகையாத் தேவர் மறைவு.

29-06-2008 : மாமியார் செல்லமணி அம்மையார் மறைவு. 

24-02-2019 : மைத்துனர் மு.குமரப்பா மறைவு.

04-01-2024 : திருமதி பஞ்சரத்தினம்  (97 வயது) மறைவு.

----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 10]

{22-02-2026}

-------------------------------------------------------------------------------------------------

ச.சதாசிவம் சண்முகவேல்

          

மல்லிகா சதாசிவம்



திரு. சதாசிவம் & திரு.சேரலாதன் 


சேரலாதன் சதாசிவம்


இலட்சுமி சேரலாதன்




சேரலாதன் - இலட்சுமி இணையர்.


யாஷிகா சேரலாதன்





யாஷிகா சேரலாதன்


பிரக்க்ஷிகா சேரலாதன்


ச,செயராமன் சண்முகவேல்

 

பிரசாத் செயராமன்

பிரசன்னா செயராமன்

ச.கனகராசன் சண்முகவேல்

    

திரு.கனகராசன் தன் மனைவி, மகள்களுடன் 


பஞ்சரத்தினம் அம்மையார்

        

க.பி.முருகையாத் தேவர்

 

 


  

 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக