என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 10 மார்ச், 2026

(12) கடிநெல்வயல் (திரு) அ. சீனிவாசன் - வாழ்க்கை வரலாறு !

 

          கடிநெல்வயல் அ.சீனிவாசன் வாழ்க்கை வரலாறு !

திரு.சீனிவாசன்
 

முகவுரை !

என்னுடைய தாயாரின் சொந்த தமக்கை மகனும் தந்தையின்  பெரியப்பா பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து, இப்போது திருச்சி நகரில் வாழ்ந்து வருபவருமான தம்பி அ.சீனிவாசனின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்படும் இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  கூகுளில் சென்று  https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும் !

 

அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON)  வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !  வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இதை உருவாக்கியுள்ள நான் (வை.வேதரெத்தினம்) மட்டுமே திருத்தம் செய்ய முடியும். இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க https://thamizhnatpu.blogspot என்னும் திறவுகோலைப் பயன்படுத்தும் யாருக்கும் இப்பக்கம் திறந்து கொள்ளும். இனி வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்   சேர்ந்தவர் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு.சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு. சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்துகொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; நடுவுலவர் திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு சண்முகவேல் தேவர் ! இந்தக் கொடியில் மலர்ந்த மலரே திரு சீனிவாசன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

அருணாச்சல தேவர் – செல்வி சுந்தராம்பாள்  திருமணம் !

மூத்தவர் திரு. அருணாச்சல தேவர், திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளுர் சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையாரின் மூத்த மகள் செல்வி மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. 1927 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 -ஆம் நாள் (10-04-1927) பிறந்த இக்குழந்தைக்கு மீனாட்சிசுந்தரம் என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். பிறந்த 18 -ஆம் நாளிலேயே தன் குழந்தையை விட்டுவிட்டு, தாயார் திருமதி மீனாட்சி மறைந்து போனார் !

 

பாட்டியே தாயானார் !

சிவப்பிரகாசம் - கல்யாணி இணையருக்கு  ஞானப்பிரகாசம், வரதராசன், கருணாநிதி என மூன்று ஆண் குழந்தைகளும் மீனாட்சியம்மை, சுந்தராம்பாள், சாரதாம்பாள் என மூன்று பெண் குழந்தைகளும் இருந்தனர். அந்த நேரத்தில் சிவப்பிரகாசம் - கல்யாணி இணையருக்கு  நான்காவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பண்டரிநாதன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த அந்தக் குழந்தைக்கு அகவை ஆறுமாதம் நிறைவடையும் நேரத்தில்தான் மீனாட்சிசுந்தரம் என்னும் குழந்தையும் மீனாட்சி அம்மையாருக்குப் பிறந்தது !

 

மீனாட்சிசுந்தரம் பிறந்த 18 -ஆம் நாள் அவரது தாயார் மீனாட்சியம்மை மறைந்து போனதால் குழந்தை மீனாட்சிசுந்தரத்தை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் திரு அருணாச்சல தேவர் மனம் கலங்கிப் போனார். அப்போது திருமதி மீனாட்சியின் தாயாரும், திரு அருணாச்சல தேவரின் மாமியாருமான திருமதி கல்யாணி அம்மையார் தன் கணவர் திரு சிவப்பிரகாச தேவருடன் கலந்துரையாடி ஒரு முடிவுக்கு வந்தார். 6 மாதக் குழந்தையான தன் மகன் பண்டரிநாதனுடன், 18 நாள் குழந்தையான மீனாட்சிசுந்தரத்தையும்  தன் மகனைப் போல் பாலூட்டி வளர்க்க முன்வந்தார் !

 

பண்டரிநாதனும், மீனாட்சி சுந்தரமும் சம வயதுக் குழந்தைகள்.  கல்யாணி அம்மையார் எத்துணைக் காலத்திற்கு இரு குழந்தைகளுக்கும் பாலூட்டி வளர்க்க முடியும்? எனவே மனைவியை இழந்துவிட்ட திரு.அருணாச்சல தேவருக்கு தன் இரண்டாவது மகள் செல்வி சுந்தராம்பாளை மணம் முடித்துக் கொடுப்பது என்றும், திருமணத்திற்குப் பின் திருமதி சுந்தராம்பாள்,  குழந்தை மீனாட்சிசுந்தரத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் திரு.சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையார் இணையர் முடிவெடுத்தனர் !


திரு அருணாச்சல தேவர் – செல்வி சுந்தராம்பாள் திருமணம் !

திரு. அருணாச்சல தேவர் – செல்வி சுந்தராம்பாள் திருமணம் விரைவிலேயே நடந்தேறிற்று. திருமணத்திற்குப் பின் திருமதி சுந்தராம்பாள் அம்மையார் தன் அக்காள் காலஞ்சென்ற மீனாட்சியம்மையின் குழந்தையைத் தன் குழந்தை போல் கண்ணும் கருத்துமாய் வளர்த்து வந்தார். இதற்கிடையில் திருமதி சுந்தராம்பாள் கருவுற்றார். ஆனால் அக்குழந்தை பிறந்தவுடன் இறந்து போயிற்று. ஒன்றல்ல இரண்டல்ல, ஒன்றன் பின் ஒன்றாக மொத்தம் நான்கு குழந்தைகள் இவ்வாறு பிறந்தவுடன் அல்லது பிறந்து சில நாள் இடைவெளியில் இறந்து போயின !

 

சீனிவாசன் பிறப்பு !

அடுத்தடுத்து குறுகிய கால இடைவெளியில் நான்கு குழந்தைகளைப் பெற்று அவற்றைப் பறிகொடுத்ததால் திருமதி சுந்தராம்பாள் அம்மையார் உடல் நலிந்து போனார். நலிவடைந்த உடல் நிலையிலும் ஐந்தாவதாகக் கருவுற்று, ஒரு ஆண் குழந்தைக்கும் தாயானார். 1946 -ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் நாள் (21-05-1946) (விய வருடம், வைகாசி மாதம், 8-ஆம் நாள், செவ்வாய்க்கிழமை, திருவோண விண்மீன் கூடிய நன்னாளில்) பிறந்த இந்தக் குழந்தைக்கு சீனிவாசன் என்று பெயரிட்டு பெற்றோர் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்!

 

குடியிருந்த வீட்டின்  வரலாறு !

கடிநெல்வயல், பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் திரு நல்லபொதிய தேவரின் மகன்கள் திரு. சீனிவாச தேவர், திரு சிங்காருத் தேவர் இருவரும் இணைந்து கட்டிய ஓட்டு வீட்டில் இருவரும் தம் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தனர். திரு சீனிவாச தேவருக்கு அருணாச்சலம், சாம்பசிவம், சண்முகவேல் என மூன்று மகன்கள் பிறந்தனர். திரு. சிங்காருத் தேவருக்கு காசிநாதன், வைத்தியநாதன் என இரண்டு மகன்கள் பிறந்தனர். இரு குடும்பத்தினரும் ஒரே வீட்டில், தனித்தனியாக  வாழ்ந்து வந்தனர். சீனிவாச தேவர் வீட்டின் நடுக் கூடத்தின் தென் பகுதியிலும், தெற்கு  ஆரலிலுமாக வாழ்ந்து வந்தார். சிங்காருத் தேவர் வீட்டின் நடுக் கூடத்தின் வட பகுதியிலும், வடக்கு   ஆரலிலுமாக வாழ்ந்து வந்தார்.  இந்தக் கூட்டுக் குடும்ப வீட்டுக்குப் பெரிய பண்ணை என்பது ஊரார் வழங்கிய பெயர் !


தெற்குப் பண்ணை, நடுப்பண்ணை, வடக்குப் பண்ணை வீடுகள் !

காலப் போக்கில் காசிநாத தேவர் குடும்பம் அவர் இறந்த பிறகு, அவரது மகன் திரு இருளப்ப தேவர் காலத்தில் பெரிய பண்ணை (கூட்டுக்குடும்ப) வீட்டிற்குத் தென்புறமாக தனியாக வீடுகட்டிக்கொண்டு தனிக் குடித்தனம் சென்றனர். சாம்பசிவ தேவரும் தென்புறமாகத் தனியாக ஒரு ஓட்டு வீடு (நடுப்பண்ணை)  கட்டிக்கொண்டு வாழ்ந்து வந்தனர். சற்று வடக்கில் கூரை வீடு கட்டிக்கொண்டு திரு சண்முகவேல் தேவர் தனிக் குடித்தனம் போனார்!

 

எங்கள் (வை.வேதரெத்தினம்) குடும்பம் இடப்பெயர்வு !

பெரியப்பா திரு.அருணாச்சல தேவர் குடும்பமும், என் தந்தையார் திரு. வைத்தியநாத தேவர் குடும்பமும் கூட்டுக் குடும்ப வீடாகத் திகழ்ந்த பெரிய பண்ணை  வீட்டில் 1960 -ஆம் ஆண்டு வரை வாழ்ந்து வந்தோம். 1960 -ல் எங்கள் குடும்பம் திருத்துறைப் பூண்டிக்கு இடம் பெயர்ந்ததை முன்னிட்டு பெரிய பண்ணை  வீட்டில் திரு அருணாச்சல தேவர் குடும்பம் மட்டுமே வாழ்ந்து வந்தது !

 

எனது பெற்றோர் !

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்த காலகட்டத்தில் திரு அருணாச்சல தேவரின் சிற்றப்பா திரு.  சிங்காருத் தேவர் மகன் திரு. வைத்தியநாத தேவருக்கு வாழ்க்கைப்பட்டு, நான்கு குழந்தைகளுக்குத் தாயாகி அதே வீட்டில் வாழ்ந்து வந்தார் என் அன்னையான திருமதி சாரதா அம்மையார். அப்போது  திருமதி சுந்தராம்பாள் அம்மையாரும் அதே வீட்டில்  வாழ்ந்து வந்தார் !

 

திரு வைத்தியநாத தேவர் – சாரதா இணையருக்கு முதலாவதாகப் பிறந்த பெண்ணின் பெயர் சிந்தாமணி. இரண்டாவதாகப் பிறந்த ஆண் குழந்தை சிவப்பிரகாசம், ஒன்றரை அகவையில் இறந்து போனது. மூன்றாவதாகப் பிறந்த பெண் குழந்தை ஜானகி இரண்டு ஆண்டுகளிலேயே இறந்து போயிற்று. நான்காவதாக நான் 1944 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 29-ஆம் நாள் (29-04-1944) (தாரண வருடம், சித்திரை மாதம், 17 -ஆம் நாள், பூச விண்மீன் கூடிய நன்னாளில்) பிறந்தேன் !

 

சுந்தராம்பாள் அம்மையார் மறைவு !

1946 -ஆம் ஆண்டு, மே மாதம் 21 -ஆம் நாள் (21-05-1946) பிறந்த திரு சீனிவாசனுக்கு ஒன்றரை அகவை ஆகும் போது அவரது அன்னை திருமதி சுந்தராம்பாள் அம்மையார் இறந்து போனார். 18 மாதக் கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திரு அருணாச்சல தேவர் தடுமாறிப் போனார். இப்பொழுது 18 மாதக் குழந்தையான சீனிவாசனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை என் தாயார் திருமதி சாரதாம்பாள் அம்மையார் ஏற்றுக்கொண்டார். முதற்பிள்ளை மீனாட்சிசுந்தரம் தன் பாட்டியாரிடம் பால்குடித்து வளர்ந்தார். இரண்டாவது பிள்ளையான சீனிவாசன் தன் சிற்றன்னையிடம் பால் குடித்து வளர்ந்தார் !

 

திரு.மீனாட்சி சுந்தரத்திற்குத் திருமணம் செய்ய முடிவு !

முதல் மனைவி மூலம் மீனாட்சி சுந்தரம் என்னும் குழந்தையும் (10-04-1927), இரண்டாவது மனைவி மூலம் சீனிவாசன் (21-05-1946) என்னும் குழந்தையும் அடைந்த திரு அருணாச்சல தேவர் இரு மனைவிகளையும் 20 ஆண்டுகள் இடைவெளியில் (முதல் மனைவி மறைவு 1927, இரண்டாவது மனைவி மறைவு 1947) இழந்த நிலையில் பங்காளிகளின் கருத்துரைப்படி 20 அகவை ஆன தன் மூத்த மகன் மீனாட்சி சுந்தரத்திற்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார் !

 

தகட்டூர், கல்யாணச்சேரி, இராசகோபால் தேவர் – அரங்கம்மாள் இணையரின் இரண்டாவது மகள் பார்வதியை, திரு.மீனாட்சி சுந்தரம் 1947 -ஆம் ஆண்டு மணந்து கொண்டு, அவ்வாண்டே ஆசிரியப் பணியிலும் அமர்ந்தார். இவர்கள் திருமணத்திற்குப் பிறகு, திருமதி பார்வதி அம்மையாரும், என் அன்னை திருமதி சாரதா அம்மையாரும் 20 மாதக் குழந்தையான சீனிவாசனைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்!

 

சீனிவாசனின் தொடக்கக் கல்வி !

ஐந்து அகவை ஆன நிலையில் திரு சீனிவாசன் கடிநெல்வயலில் இயங்கிவரும் அரசுத் தொடக்கப்பள்ளியில் 1951-ஆம் ஆண்டு அக்டோபர்  மாதம் (கர ஆண்டு புரட்டாசி மாதம்) விசயதசமி நாளில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். 5-ஆம் வகுப்பு வரைத் தன் படிப்பை திரு. சீனிவாசன் அங்கேயே தொடர்ந்தார் !


உயர்நிலைப் பள்ளிப் படிப்பு !

பின்பு ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தியில் உள்ள இரா.நடேசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1956 -ஆம் ஆண்டு சூன் மாதம் 6-ஆம் வகுப்பில் சேர்ந்த திரு சீனிவாசன் பள்ளி இறுதி வகுப்பான 11 -ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்து 1962 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தேர்வெழுதி நன்முறையில் தேர்ச்சி பெற்று, தன் கல்விப் பயணத்தை நிறைவு செய்தார்!

 

ஆசிரியர் பயிற்சிக்கு முயற்சி !

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, ஆசிரியர் பயிற்சிப் பள்ளியயில் சேர முயன்றார். சில ஆண்டுகள் முயன்றும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.  ஐந்து ஆண்டுகள் ஓடி மறைந்தன. திரு.சீனிவாசனின் தந்தை  என்னிடம் சொல்லி நான் பணிபுரிந்த புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்த்துவிடச் சொன்னார்!


அ.தொ.ப.நிலையத்தில் சேரல் !

பொருத்துநர் (FITTER), கடைசலர் (TURNER), மின்னிழை அமைப்பியல் (WIREMAN), கருவிகள் கம்மியர் (INSTRUMENT MECHANIC), எந்திரப் பணியியல் (MACHINIST), ஒருக்கியல் (WELDER) ஆகிய ஆறு தொழிற்பிரிவுகள் புதுக்கோட்டையில் இயங்கி வந்தன.   அவற்றுள் இரண்டாண்டுப் பயிற்சிக் காலம் உடைய எந்திரப் பணியியல் (MACHINIST - COMPOSITE) தொழிற்பிரிவில் திரு.சீனிவாசனை நான் சேர்த்துவிட்டேன். அத்துடன் மாதம் உருபா 20 உதவித் தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்தேன். அப்போது திரு எம்.இலட்சுமிபதி என்பவர் அவருக்கு ஆசிரியர். பயிற்சியிலிருந்த காலத்தில், புதுக்கோட்டை, திருக்கோகர்ணம், மேல மேட்டுத் தெருவில், வீடு வாடகைகைக்கு எடுத்து,  சில நண்பர்களைச் சேர்த்துக்கொண்டு சீனிவாசன் அங்கு தங்கியிருந்ததுடன் சொந்தமாகச் சமைத்தும் சாப்பிட்டு வந்தார் !

 

சு.சிவசுந்தரம்  தொழிற் பயிற்சியில் சேரல் !

திரு சீனிவாசன் ஈராண்டுப் பயிற்சியில் ஓராண்டை முடிக்கும் தறுவாயில், வேதாரணியம், பயத்தவரன்காடு சுப்பையாப் பிள்ளை மகன் சிவசுந்தரம் என்பவர் புதுக்கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேர விரும்புவதாகவும், அவர் தனது நண்பர் என்றும் தெரிவித்து, அவரைப் பயிற்சியில் சேர்த்துவிட நான் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று திரு சிவசுந்தரத்தை ஈராண்டுப் பயிற்சிப் பிரிவான கடைசலர் (TURNER) பிரிவில் 1968 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்த்துவிட்டேன் ! திரு சீனிவாசன், திரு சிவ சுந்தரம் இருவரும் திருக்கோகர்ணம் மேல மேட்டுத் தெரு வீட்டில்  தங்கிக் கொண்டு சமைத்துச் சாப்பிட்டு வந்தனர் !

 

திரு.சீனிவாசனின் தொழிற் பயிற்சி நிறைவு !

ஆகஸ்ட் 1967 -ல் பயிற்சியில் சேர்ந்த திரு.சீனிவாசன், சூலை 1969 -ல் பயிற்சி நிறைவு பெற்று கடிநெல்வயல் சென்றுவிட்டார். பிறகு, திருக்கோகர்ணம் பெரிய தெருவில் திரு இலட்சுமி நாராயண அய்யர் வீட்டின் முன்னறையில் தங்கியிருந்த நான், திரு.சிவசுந்தரம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அதைக் காலி செய்துவிட்டு, மேட்டுத் தெருவில் ஒரு வீட்டில் திரு சிவ சுந்தரத்துடன் தங்கத் தொடங்கினேன் !

 

திரு.சீனிவாசன் பழகுநர் பயிற்சி ( APPRENTICESHIP TRAINING !

கடிநெல்வயல் சென்ற சீனிவாசன் சில மாதங்கள் கழித்து, கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி. தொழிற்சாலையில் 1969 -ஆம் ஆண்டு பழகுநர் பயிற்சிக்குச் சேர்ந்து ஓராண்டு காலத்தில் அதை நிறைவு செய்தார் ! பின்பு அங்கேயே  ஷார்ப்  டூல்ஸ்  ( SHARP TOOLS)  என்னும் நிறுவனத்தில் சேர்ந்து ஒன்பது மாத காலம் பணி புரிந்தார் !


எஸ்.ஆர்.பி.டூல்ஸ்  (S.R.P. TOOLS) நிறுவனத்தில் வேலை !

கோவையில் தொடர்ந்து பணி புரிய வாய்ப்பில்லாததால் கடிநெல்வயல் திரும்பிய  திரு சீனிவாசன் வேலை வாய்ப்புக்குப் பல வழிகளிலும்  முயன்றார். அதன் விளைவாக, சென்னை, திருவான்மியூர் அருகில் இயங்கிவந்த எஸ்.ஆர்.பி.டூல்ஸ் (M/S. S.R.P.TOOLS) என்னும் நிறுவனத்தில் அவருக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது. 1970-ஆம் ஆண்டு வாக்கில் இந்த வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது என்று நினைக்கிறேன் ! ஓரிரு ஆண்டுகள் நன்கு இயங்கி வந்த இந்த நிறுவனம், பின்பு தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக  அடிக்கடி கதவடைப்பை அறிவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடாறு மாதம், காடாறு மாதம்  என்னும் சொலவடைக்கு எற்ப, எஸ்.ஆர்.பி.டூல்ஸ்  (M/S. S.R.P.TOOLS) ஆறு மாதம் இயங்கும், ஆறு மாதம் மூடிக்கிடக்கும் ! ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கு மேல் அங்கு பணி புரிந்திருக்கிறார் !

 

தந்தை அருணாச்சல தேவர் மறைவு !

திரு சீனிவாசன் சென்னை, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் (M/S. S.R.P.TOOLS) நிறுவனத்தில் பணி புரிந்து வந்த போது,  அவரது தந்தை திரு. அருணாச்சல தேவர் 1974 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 18 -ஆம் நாள் (18-04-1974)  முதுமையின் காரணமாக இறந்து போனார். அப்பொழுது நான் திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தேன் !


சீனிவாசன் – ஆனந்தி திருமணம் !

தந்தை இறந்து ஓராண்டு நிறைவதற்குள் திருமணம் செய்துவிட வேண்டும் என்று யாரோ ஒரு சோதிடர் சொன்னதைக் கேட்டுக்கொண்டு, எனக்கும், சீனிவாசனுக்கும் தாய் மாமாவான நெடும்பலம் திரு. சி.பண்டரிநாதன் அவர்கள் சீனிவாசனுக்குப் பெண்பார்க்கத் தொடங்கினார். அவருக்குத் தூரத்து உறவான மாங்குடி திரு வடிவேல் தேவர் வகையில் பெண் இருப்பதாகச் சொல்லி, கோட்டூர் திரு கோவிந்தராசுத் தேவர்  – நாகரெத்தினம் அம்மையார் இணையரின் ஆறாவது பெண்ணான செல்வி ஆனந்தியைப் பேசி முடிவு செய்து 1974 -ஆம் ஆண்டு, சூன் மாதம் 10 -ஆம் நாள் (10-06-1974) மாங்குடி திரு வடிவேல் தேவர் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது !

 

சென்னையில் குடியேற்றம் !

திருமணத்திற்குப் பிறகு திரு.சீனிவாசன் – ஆனந்தி இணையர் சென்னை, திருவான்மியூரை அடுத்த அண்ணா நகரில்  புதுக்குடித்தனம் தொடங்கினர். சென்னைக்கு நான் செல்லும் போதெல்லாம் திருவான்மியூருக்குச் சென்று திரு.சீனிவாசன் – ஆனந்தி இணையரைப் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருவான்மியூர் வாழ்க்கையின் போது திரு.சீனிவாசன் – ஆனந்தி இணையருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த இந்தக் குழந்தை விரைவிலேயே  இறந்தும் போயிற்று !

 

வேலை வாய்ப்பகத்தில் பதிவு !

வேலை வாய்ப்பகப் பதிவை உரிய காலத்தில் புதுப்பிக்கப் பலமுறை  தவறியதால், பதிவு முன்மை (SENIORITY) பின்னுக்குப் போய்க்கொண்டே இருந்தது. இதன் விளைவாக, திரு சீனிவாசனுக்கு பாரத மிகுமின் தொழிலகத்தில்  (BHEL)  பணி பெறும் வாய்ப்புக் கிடைக்காமற் போயிற்று !

 

படைக்கலத் தொழிலகத்தில்  (ORDNANCE FACTORY)  பணி வாய்ப்பு !

இந்தச் சூழ்நிலையில் திருச்சி நவல்பட்டு படைக்கலத் தொழிலகத்தில் (ORDNANCE FACTORY)  பணி வாய்ப்பு வந்தது. ஆனால் சென்னை எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நிறுவனத்தை விடக் குறைவான சம்பளமே கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. சென்னை எஸ்.ஆர்.பி.டூல்ஸ் நிறுவனத்தில் அடிக்கடி கதவடைப்பு நிகழும் போதெல்லாம் சம்பளமில்லாமல் இன்னற்படும் நிலை இருப்பதால், திருச்சிக்கு வந்து உடனடியாகப் படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்குமாறு திரு.சீனிவாசனைக் கேட்டுக்கொண்டேன். என் ஆலோசனைப்படி திரு சீனிவாசன் 1976 -ஆம் ஆண்டு, சூலை மாதம், 28 -ஆம் நாள் (28-07-1976) படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்றுக்கொண்டார் !


திருச்சிக்கு இடப்பெயர்வு !

திருச்சியில் பணியேற்ற  பிறகு நவல்பட்டுப் பகுதியில் ஊராட்சி மன்றம் பின்புறமுள்ள , தனியார் வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு  அங்கு புதுக்குடித்தனம் தொடங்கினர். ஏறத்தாழ 18 ஆண்டுகள்  அங்கு குடியிருந்த பின்  படைக்கலத் தொழிலக அலுவலர் குடியிருப்பில் அவர்களுக்கு  இடம் கிடைத்தது. அங்கு தம் குடியிருப்பை மாற்றிக் கொண்டு பணி ஓய்வு வரை அங்கேயே  வாழ்ந்து வந்தனர் !

 

கவிதா பிறப்பு !

சென்னையிலிருந்து திருச்சிக்கு பணியிடத்தையும் குடியிருப்பையும் மாற்றிக்கொண்ட பிறகு, ஈராண்டு காலத்தில் – அதாவது - 1978 -ஆம் ஆண்டு, திசம்பர் மாதம் 11 -ஆம் நாள் (11-12-1978) பெண்குழந்தை ஒன்று பிறந்தது. கவிதா என்று பெயரிட்டு வளர்த்த இப்பெண் குழந்தைக்கு இப்பொழுது 47 அகவை ஆகிறது. கவிதா இப்பொழுது வணிகவியல் மேதை (M.Com.) மெய்யியல் மேதை (M.Phil.) முனைவர் (Ph.D) ஆகிய மூன்று பட்டங்களுக்குச் சொந்தக்காரர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் துணைப் பேராசிரியராகப்  பணிபுரிந்து வரும் கவிதாவுக்கு 13-07-2006 அன்று திருமணம் நடைபெற்றது.  திருமணமான கவிதா,  தன் கணவர் திரு. கண்ணன், மகன் திருஅபினவ் (பிறந்த நாள்:  01-06-2007) ஆகியோருடன் திருச்சியில் வாழ்ந்து வருகிறார் !

 

திரு.சீனிவாசன் பணி ஓய்வு !

28-07-1976 அன்று படைக்கலத் தொழிலகத்தில் பணியில் சேர்ந்த திரு சீனிவாசன் 28 ஆண்டு, 6 மாதம், 4 நாள் பணி புரிந்த பிறகு கடந்த 31-01-2005 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார் !


சம்பத் பிறப்பு !

திரு சீனிவாசன் – ஆனந்தி இணையருக்கு அடுத்ததாக ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 1979 -ஆம் ஆண்டு, திசம்பர் மாதம், 18 -ஆம் நாள் (18-12-1979) பிறந்த இக்குழந்தைக்கு சம்பத் என்று பெயரிட்டு வளர்த்தனர். இந்தக் குழந்தை வளர்ந்து இப்போது அகவை 47 -ல் நடை பயின்று கொண்டிருக்கிறது !  

 

சம்பத்  படிப்பும் பணியும் !

கரும்புத் தொழில் நுட்பத்தில் பட்டயமும் (DIPLOMA) வணிக மேலாண்மை இயலில் (M.B.A) முதுகலைப் பட்டமும் பெற்று, தந்தை பணியாற்றிய அதே படைக்கலத் தொழிலக அலுவலகத்தில் திரு சம்பத் 15-02-2005 முதல் பணியாற்றி வருகிறார் !

 

சம்பத் – கீர்த்திகா திருமணம் !

தஞ்சாவூர் பாலோபநந்தவனம் பகுதியைச் சேர்ந்த (நி/வா) திரு இராசேந்திரன் – திருமதி இலலிதா இணையரின் மகளான செல்வி கீர்த்திகா வணிக மேலாண்மையியல்  முதுநிலை (M.B.A) பட்டதாரி. 1982-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ஆம் நாள் (02-02-1982) பிறந்த இவர் திரு சம்பத்தின் வாழ்க்கைத் துணைவி ஆனார். இவர்கள் திருமணம் 20-11-2011 அன்று தஞ்சாவூர், கீழவாசலில் உள்ள அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில்  நடைபெற்றது ! பெண்பார்த்தல், திருமண உறுதி நிகழ்வு, திருமண நிகழ்வு அனைத்திலும் நான் குடும்பத்துடன் கலந்து கொண்டேன்!

 

விஸ்மயா பிறப்பு !

சம்பத் – கிருத்திகா இணையருக்கு விஸ்மயா என்னும் பெயரில் பெண் குழந்தை ஒன்று இருக்கிறது. 2012 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ஆம் நாள் (11-08-2012)  பிறந்த விஸ்மயாவுக்கு இப்பொழுது 14 அகவை நடைபெறுகிறது  !

 

சீனிவாசன் – ஆனந்தி இணையரின் பெயரன் பெயர்த்தி !

சீனிவாசன் – ஆனந்தி இணையருக்கு மகள் வழியில் அபினவ் என்னும் 19 அகவைப் பெயரனும், மகன் வழியில் விஸ்மயா என்னும் 14 அகவைப் பெயர்த்தியும் இருக்கின்றனர். இருவரும் நன்கு படித்து  வாழ்க்கையில் உயர் நிலையை அடைவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் !

 

நிறைவுரை !

மழலைப் பருவத்திலேயே பெற்ற தாயாரை இழந்து இன்னல்கள் பலவற்றை அடைந்துவிட்ட திரு சீனிவாசன், அன்பான ,மனைவி, ஆதரவான மகன், இன்சொல் தவழும் மருமகள், மாற்றுக்குறையாத மகள், மதிப்பிலுயர்ந்த மருமகன் ஆகியோரைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியான உறவு நிலையாகும். நிகழ்காலமும் எதிர்காலமும் அவருக்கு மனநிம்மதியான,  மகிழ்ச்சியான வாழ்வை அளிக்குமாக !


திரு.சீனிவானின்   முகாமையான   வாழ்க்கை நிழ்வுள் ! 

10-04-1927. அ.மீனாட்சி சுந்தரம் பிறப்பு.

18-04-1927. திருமதி மீனாட்சி அம்மையார் மறைவு.

29-04-1944. வை.வேதரெத்தினம் பிறப்பு.

21-05-1946. அ.சீனிவாசன் பிறப்பு.

00-11-1947. திருமதி சுந்தராம்பாள் அம்மையார் மறைவு.

00-03-1962. சீனிவாசன் S.S.L.C., தேர்ச்சி.

00-08-1967. சீனிவாசன் I.T.I. பயிற்சியில் சேரல்

00-07-1969. சீனிவாசன் I.T.I. பயிற்சி நிறைவு.

18-06-1970. தங்கராசு – விசயலட்சுமி திருமணம்

18-06-1970. பசுபதி – வசந்த கோகிலம் திருமணம்.

02-07-1972. வேதரெத்தினம் – கலைச்செல்வி திருமணம்.

18-04-1974. சீனிவாசனின் தந்தை அருணாச்சல தேவர் மறைவு.

10-06-1974. சீனிவாசன் – செல்வி ஆனந்தி திருமணம்.

28-07-1976. சீனிவாசன் படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்பு.

19-05-1978. செந்தமிழ்ச்செல்வி – இராசேந்திரன் திருமணம்.

19-05-1978. கோவிந்தராசு – இரேவதி திருமணம்.

11-12-1978. கவிதா பிறப்பு.

18-12-1979. சம்பத் பிறப்பு.

02-02-1982. கீர்த்திகா பிறப்பு.

10-02-1986. இந்திராணி – குணசேகர் திருமணம்.

08-09-1991. மீ.இராசேந்திரன் – கற்பகம் திருமணம்.

15-02-2005. சம்பத் படைக்கலத் தொழிலகத்தில் பணியேற்பு.

31-05-2005. சீனிவாசன் பணியிலிருந்து ஓய்வு பெறல்

13-07-2006. கவிதா – கண்ணன் திருமணம்.

01-06-2007. அபினவ் கண்ணன் பிறப்பு.

20-11-2011. சம்பத் – கீர்த்திகா திருமணம்.

11-08-2012. விஸ்மயா சம்பத் பிறப்பு.

31-05-2020. அ.மீனாட்சிசுந்தரம் மறைவு.

19-10-2023. மீ.பார்வதி அம்மையார் மறைவு.

 -----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 26]

{10-03-2026}

-------------------------------------------------------------------------------------

அ.சீனிவாசன் 
(5.3.2026-அன்று  எடுத்த படம்)



ஆனந்தி சீனிவாசன் (5.3.2026-அன்று  எடுத்த படம்)



சீனிவாசன் + ஆனந்தி சீனிவாசன் 
(5.3.2026-அன்று  எடுத்த படம்)


ஆனந்தி, விஸ்மயா, சீனிவாசன்.
(5.3.2026-அன்று  எடுத்த படம்)


சம்பத் சீனிவாசன் 


கீர்த்திகா சம்பத்  (5.3.2026-அன்று  எடுத்த படம்)
                                          

கீர்த்திகா, விஸ்மயா,சம்பத்


ஆனந்தியும் சீனிவாசனும் 
(1974 -ல் எடுத்த படம்)


சம்பத் + கீர்த்திகா

சம்பத் 



விஸ்மயாவும் கீர்த்திகாவும்.
(5.3.2026-அன்று  எடுத்த படம்)




கலைச்செல்வி, வேதரெத்தினம், சீனிவாசன், ஆனந்தி, கீர்த்திகா.
(5.3.2026-அன்று  எடுத்த படம்)

கலைச்செல்வி, விஸ்மயா, சீனிவாசன், ஆனந்தி, கீர்த்திகா
                                          (5.3.2026-அன்று  எடுத்த படம்)


பாட்டி ஆனந்தி, பெயர்த்தி விஸ்மயா, தாத்தா சீனிவாசன் 
                                            (5.3.2026-அன்று  எடுத்த படம்)

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

(11) கடிநெல்வயல் (திரு) அன்பழகன் - வாழ்க்கை வரலாறு !

 

                                                                                                   


  கடிநெல்வயல் திரு ச.அன்பழகன் வாழ்க்கை வரலாறு !


முகவுரை.

என்னுடைய  தந்தை திரு.சி.வைத்தியநாத தேவரின்  பெரியப்பா மகன் திரு சாம்பசிவ தேவரின் மகள்வழிப் பெயரனும்  பஞ்சநதிக்குளம் சின்ன காரியக்காடு திரு சிங்காரவேல் தேவரின் மகன் வழிப் பெயரனும் கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவருமான திரு ச.அன்பழகனின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாததுயாராலும் அழிக்கவோதிருத்தம் செய்யவோஎதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம்வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் நல்லபொதிய தேவர்.   இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர், நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்துகொண்டார்.  இவர்களுள் திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; நடுவிலவர்  திரு.சாம்பசிவ தேவர்கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! திருசாம்பசிவ தேவரின் மகள் திருமதி நீலாம்பாள் (எ) தனலட்சுமி சக்கரபாணி  இல்லத்தில்  மலர்ந்த நறுமண  மலரே திரு அன்பழகன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)


கடிநெல்வயல், கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார்புரம், நல்லபொதிய தேவர் மகன் திரு .சீனிவாச தேவரின்  இரண்டாவது மகனான  திரு சாம்பசிவத் தேவர், பஞ்சநதிக்குளம் சின்னகாரியக் காடு திரு சிங்காரவேல் தேவரின் மகளான செல்வி வீரம்மாளைத்  திருமணம்  செய்துகொண்டார் !

 

தாய்வழித் தாத்தா திரு சாம்பசிவ தேவர் – வீரம்மாள் இணையர் !

திரு சாம்பசிவ தேவர் – வீரம்மாள் இணையருக்கு 5 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.   தலைச்சன் குழந்தையின் பெயர் நீலாம்பாள் (எ) தனலட்சுமி; இரண்டாவது குழந்தையின் பெயர் பால சுந்தரி; மூன்றாவது குழந்தையின் பெயர் தேவகுஞ்சரி; நான்காவது குழந்தையின் பெயர் நாகவல்லி. ஐந்தாவது குழந்தையின் பெயர்  சிங்காரவேலு; ஆறாவது குழந்தையின் பெயர் விசயா !

 

திரு சாம்பசிவ தேவரின் பிள்ளை பெண்களின் திருமணம் !

தலைச்சன் குழந்தை, வளர்ந்து பெரிய பெண் ஆனதும் தனது தாய் மாமா பஞ்நதிக்குளம் சக்கரபாணி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது பெண்ணான  பாலசுந்தரி பஞ்நதிக்குளம் நடுச்சேத்தி, (கூழையன்காடு) இரத்தின தேவர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது பெண் தேவகுஞ்சரி, வாய்மேடு சொக்கையாத் தேவர் மகன் காந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். நான்காவதாகப் பிறந்த பெண் நாகவல்லி ஐந்து வயது ஆகும் நிலையில் இறந்து போனது.  ஐந்தாவதாகப் பிறந்த சிங்காரவேலு தோப்புத் துறை இராமலிங்க  தேவர் என்பவரின் மகள் தையல்நாயகியைத் திருமணம் செய்துகொண்டார். ஆறாவதாகப் பிறந்த விசயா அகத்தியன்பள்ளி திரு இராமாமிர்தம் என்பவரின்  மகன் முருகேசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் !

 

திரு அன்பழகனின் பெற்றோர், திரு சக்கரபாணித் தேவர் – தனலட்சுமி இணையர் திருமணம்

சக்கரபாணித் தேவர் – நீலாம்பாள் (எ) தனலட்சுமி இணையர் திருமணம் கடிநெல்வயலிலுள்ள திரு சாம்பசிவ தேவர் வீட்டில் நடைபெற்றது. அதே நாளில் தான் என் தமக்கையார் சிந்தாமணி – தாய்மாமா சி.பண்டரிநாதன் திருமணமும் கடிநெல்வயலிலுள்ள எங்கள் வீட்டில் நடைபெற்றது. திருமணம் எந்த ஆண்டு நடைபெற்றது என்பது எனக்கு நினைவில்லை. அப்பொழுது எனக்கு பத்து  அகவை இருக்கலாம். பெரும்பாலும் அது 1954 -ஆம் ஆண்டாக இருக்கக்கூடும் !


திருமணப் பந்தலில் தட்டொலிப்பேழை (Gramaphone) இயக்கம்.

மாமா திரு.பண்டரி நாதன் – அக்கா சிந்தாமணி திருமணத்தில்  நான் நெற்பொறி அள்ளிக்கொடுக்க  மாமாவும் அக்காவும் சேர்ந்து பொறியை ஓமகுண்டத்தில் போட்டது இப்போதும் (2026) தெளிவாக நினைவு இருக்கிறது. அதுபோல், மாமா திரு.பண்டரி நாதன் – அக்கா சிந்தாமணி திருமணத்தில், திருமணப் பந்தலில் தட்டொலிப்பேழை (Gramaphone) வைத்து திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பியதும் நினைவிருக்கிறது !


திரு சக்கரபாணித்தேவர் – தனலட்சுமி இணையர் 

இல்லற வாழ்வு.

திரு சக்கரபாணித் தேவர் – நீலாம்பாள் (எ) தனலட்சுமி இணையர் திருமணம் நடந்த பின்பு அவர்களது இல்லற வாழ்வு கடிநெல்வயலிலேயே தொடங்கியது. திரு சக்கரபாணித் தேவர் வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனார் சாம்பசிவ தேவர் வீட்டிலேயே வாழ்ந்துவந்தார். அவரது தந்தையார் திரு சிங்காரவேலுத் தேவர் தன் மகனின் திருமணத்தைப் பார்ப்பதற்கு முன்பே இறந்து போனார்.  திரு சக்கரபாணித் தேவர் தன் மாமனாரின் நிலபுலன்களைக் கவனிப்பதும், அவற்றில் நெல் சாகுபடி செய்வதும்  அவரது அன்றாடக் கடமைகளாக மாறிப் போயின ! அவரது சிற்றப்பா பஞ்சநதிக்குளம் சின்னகாரியக்காடு கந்தசாமித் தேவர் ஆண்டுக்கு ஓரிரு முறை கடிநெல்வயல் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவருக்கு 60 அல்லது 65  அகவை இருக்கலாம். கையில் தடி ஊன்றிக் கொண்டு அவர் நடந்து வரும் காட்சி இன்றும் கூட என் நினைவுகளில் பசுமையாக நிலைத்திருக்கிறது !


திரு அன்பழகன் பிறப்பும் திரு சக்கரபாணித் தேவர் மறைவும் 

1954 வாக்கில் திருமணமான சக்கரபாணித் தேவர் – நீலாம்பாள் (எ) தனலட்சுமி இணையருக்கு 1972 வரை – ஏறத்தாழ 18 ஆண்டுகள் குழந்தையின்மை தொடர்ந்தது. அதன் பின் 1972 -ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் (16-05-1972) ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அன்பழகன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். ஆனால் அன்பழகனின் தந்தை திரு சக்கரபாணித் தேவர், அன்பழகன் பிறந்த அதே ஆண்டிலேயே இறந்து போனார் !


தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையாரின்  கையறு நிலை !

அன்பழகனின் தாயார் திருமதி நீலாம்பாள் (எ) தனலட்சுமி தன் வாழ்க்கையில் துன்பங்களையே எதிர்கொண்டு வாழும் நிலை ஏற்பட்டது. சொந்தம் விட்டுப்போகக் கூடாது என்று நடப்பா திரு சாம்பசிவ தேவர் தன் மைத்துனர் திரு சக்கரபாணித் தேவருக்குத் தன் மகள் தனலட்சுமியைத் திருமணம் செய்து கொடுத்ததில் தொடங்கியது திருமதி தனலட்சுமியின் துயர வாழ்வு. 1954 வாக்கில் திருமணமான அவருக்கு, ஏறத்தாழ 18 ஆண்டுகள் குழந்தையின்மை நிலவியது. பின்பு குழந்தை பிறந்தது; ஆனால் அதே ஆண்டு தன் கணவரைப் பறிகொடுத்தார். பெரியவர்கள் செய்யும் சில தவறுகள் பிள்ளைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கியது திருமதி தனலட்சுமியின் வாழ்க்கை !

 

அன்பழகனின் தொடக்கக் கல்வி !

தந்தையை இளமையிலேயே இழந்துவிட்ட  அன்பழகன்,  தாயுடன் தன் தாத்தா பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வந்தார். ஐந்து அகவை ஆனதும் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கின. வழக்கம் போல் பனை ஓலைச் சுவடியில் தமிழ் எழுத்துகளையும் எண்களையும் எழுதி, அதில் மஞ்சள் தடவி, பெரியோர்களின் வாழ்த்துகளுடன்,  குழந்தை அன்பழகன் கடிநெல்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1977 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசயதசமி நாளன்று ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஐந்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்த அன்பழகன் 1982 -ஆம் ஆண்டு சூன் மாதம் கருப்பம்புலம் பி.வி.தேவர் உயர்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர்க்கப்படார் !

 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு !

1983- ஆம் ஆண்டு, சூன் மாதம், வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் சேர்ந்த அன்பழகன் பள்ளிறுதி வகுப்புவரை அங்கேயே தனது படிப்பைத் தொடர்ந்து 1986 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தனது படிப்பை நிறைவு செய்தார் !

 

அன்பழகன் பணி தேடும் படலம் !

பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபின், தனது சித்தி விசயாவின் கணவரான அகத்தியம்பள்ளி திரு முருகேசன் அவர்களின்  தேநீர்க்கடையில் அவருக்கு உதவியாக ஏறத்தாழ 9 ஆண்டுகள்  (1986 – 1995) அன்பழகன் பணிபுரிந்தார். இதையடுத்து வேதாரணியம் லலிதா நகைக் கடையில் பணியில் சேர்ந்து 12  ஆண்டுகள் பணியாற்றித் தனது இளமைக் காலத்தைக் கரைத்தார். தக்க வழிகாட்டவும், உதவிகள் செய்யவும் உறவினர்கள் இல்லாவிட்டால் படித்த இளைஞர்களின் இளமைக்காலம் இப்படித்தான் முடமாகிப் போகிறது !

 

நடத்துநர் பணியில் அன்பழகன் இணைவு !

லலிதா நகைக் கடையில் பணியாற்றுகையில் சில நல்லவர்களின் வழிகாட்டுதலில், நடத்துநர் பணிக்குத் தகுதி பெறும் பொருட்டு, குறுகிய காலப் பயிற்சியும், உரிமமும் பெற்று, வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். வேலை வாய்ப்பகத்தின் பரிந்துரையின் பேரில்  அப்போதைய சோழன் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடமிருந்து வந்த அழைப்பாணையை ஏற்று, நடத்துநருக்கான நேர்காணலில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று  03 – 04 - 2007 அன்று நடத்துநராகப் பணியில் சேர்ந்தார் !


அன்பழகன் - ஈசுவரி  திருமணம் !

நடத்துநராகப் பணி ஏற்பதற்கு முன் இல்லற வாழ்க்கையில் இணையும் பேறு அன்பழகனுக்கு வாய்த்தது. வேதாரணியம் வட்டம் மருதூரைச் சேர்ந்த திரு.தெட்சணாமூர்த்தி – சீதாரமணி இணையரின் மகளான செல்வி ஈசுவரி அன்பழகனின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இவர்கள் திருமணம் தாரண ஆண்டு, பங்குனி மாதம், 14 -ஆம் நாள், ஞயிற்றுக் கிழமை (27-03-2005) மருதூர் கந்தபவுன்ராசு திருமண மண்டபத்தில் இனிது நிகழ்ந்தேறியது !

 

தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையார் மறைவு ! 

வாழ்க்கையில் இன்பம் என்பதை முற்றிலுமாகவே இழந்திருந்த தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி அம்மையார் மகனின் திருமணத்தைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்த நிம்மதியில் 14 மாத காலம் மகனுடன் வாழ்ந்த பின், விய ஆண்டு, வைகாசி மாதம் 30-ஆம் நாள் (13-05-2006) சனிக்கிழமை பௌர்ணமி நாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார் !


சித்தி விசயாவின் துணை !

தாயார் தனலட்சுமி மறைந்த பின் சித்தி விசயாவின் துணையுடன் அன்பழகன் தன் குடும்பத்தை நடத்தி வந்தார்.  1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயா, தனது 23 -ஆவது அகவையில் அகத்தியன் பள்ளியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை 1976 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 -ஆம் நாள் (27-08-1976) மணந்து கொண்டார். திரு முருகேசன் தேநீர் நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவர்களது இல்லற வாழ்வு எத்தனை ஆண்டுகள் நீடித்தது என்பது எனக்கு நினைவில்லை. திரு முருகேசன் – விசயா இணையருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டவில்லை. திரு முருகேசன் தன் வாழ்வின் இடைப்பகுதியிலேயே தன் மனைவி விசயாவை விட்டுவிட்டு மறைந்து போனார். எரியும் நெருப்பு வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இலவம் பஞ்சாக கருகிப் போன விசயாவின் வாழ்வுக்கு திரு அன்பழகன் தான் பாலைவனச் சோலையாகத் திகழ்ந்து ஆதரவளித்து வந்தார் !

 

அன்பழகன் – ஈசுவரி  இணையரின் பிள்ளைகள் !

அன்பழகன் – ஈசுவரி இணையருக்கு தமேந்திகா, தர்ஷனா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. விய வருடம், ஆவணி மாதம், 5 -ஆம் நாள் திங்கள் கிழமை (21-08-2006) பிறந்த தமேந்திகா  இப்போது ஆயக்காரன்புலம், சிவகண்ணு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், அறிவியல் வாலை (கணிதம்) வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு இப்போது அகவை 20 ஆகிறது. இரண்டாவது பெண் தர்ஷனா விசய வருடம், ஆவணி மாதம், 6 -ஆம் நாள் வியாழக்கிழமை (22-08-2013) பிறந்தார். 13 அகவை ஆகும் இவர் இப்போது கடிநெல்வயலில் உள்ள அரசினர் அரசினர்மேனிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

 

ஊராட்சித் துணைத் தலைவராக அன்பழகன்  தேர்வு  !

திரு. அன்பழகனின் வாழ்க்கை ஓடம் அமைதியான குளத்தில் ஆடி அசைந்து பயணித்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராவண்ணம் மக்கள் சேவையில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வந்தது. ஆம் ! கடிநெல்வயல் ஊராட்சியில், கீழக்காடு சார்பில் ஊராட்சி உறுப்பினராகவும் பின்னர் ஊராட்சித் துணைத் தலவராகவும் தேர்வாகும் வாய்ப்புக் கிடைத்தது. 2001 -ஆம் ஆண்டு முதல் 2006 -ஆம் வரை ஐந்தாண்டுக் காலம் ஊரார் புகழும் வண்ணம் இப்பதவியில் அவர் பணியாற்றியது அவரது வாழ்வில் ஒரு இனிப்பான வசந்த காலம் என்று தான் சொல்ல வேண்டும் !

 

திரு சாம்பசிவ தேவரின் நான்கு பெண்கள் !

நடப்பா திரு சாம்பசிவ தேவரின் நான்கு பெண்களில் மூத்தவரான நீலாம்பாள் (எ) தனலட்சுமி, மூன்றாவது பெண்ணான தேவகுஞ்சரி, கடைசிப் பெண்ணான விசயா மூவரின் வாழ்க்கையும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதையாகவே அமைந்துவிட்டது. மூவரின் வாழ்க்கைப் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டாவது பெண்ணான பஞ்சநதிக்குளம் இரெ.பாலசுந்தரியின் வாழ்க்கை சற்று ஆறுதலான பாதையில் பயணத்தை மேற்கொண்டு பெயர் சொல்லும் பிள்ளை, பெண் என நீண்டிருந்தாலும் அவரும் கடந்த 09-04-2021 அன்று தனது 78-ஆம் அகவையில் காலமானார் !


இரண்டாவது சித்தி வாய்மேடு தேவகுஞ்சரி மறைவு !

மூன்றாவது பெண்ணான தேவகுஞ்சரியும் நானும் கடிநெல்வயலில் உள்ள தொடக்கப்பள்ளியில்  அந்தக் காலத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள். இருவரும் சம அகவையினர். அவரது கணவர் திரு.காந்தி அவர்களின்  குடும்பம் போதுமான செல்வச் செழிப்பு இன்மையால் தேவகுஞ்சரியின் வாழ்வும் இனிக்க வில்லை. ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுத்த தேவகுஞ்சரி குழந்தையை வளர்த்து ஆளாக்கித்  திருமணம் செய்து கொடுத்த பின்  மறைந்து போனார் !


மூன்றாவது சித்தி விசயா மறைவு !

1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயாவின் , வாழ்க்கை புயலில் சிக்கிய கப்பல் போல ஆகிவிட்டது.  தன் வாழ்வுக்கும் இனிமைக்கும் நிம்மதிக்கும்  வெகுதொலைவு என்பதை உணர்ந்த விசயா, கடந்த 01-12-2025 அன்று தனது 72 -ஆம் அகவையில்  இவ்வுலக வாழ்வை நீத்தார் !

 

அன்பழகன் - ஈசுவரி இணையர்  வாழ்க வளமுடன் !

வாழ்வின் முன்பகுதியில் தன் இளமைக் காலத்தில் ஏற்றம் எதையும் காணமுடியாத அன்பழகன், வாழ்வின் இடைப் பகுதியிலாவது  வளமான வாழ்வை அடைய வாழ்த்துவோம். இரு பெண்களும் நன்கு படித்து, அரசுப் பதவிகளை அடையும் வழிமுறைகளை சான்றோர்களிடம்  கேட்டறிந்து  வாழ்வில் உயர்வடைய வாழ்த்துவோம் !

------------------------------------------------------------------------------------------------------

          அன்பழகன் வாழ்வின் முகாமையான நிகழ்வுகள் !

 ----------------------------------------------------------------------------------------------------

00-00-1934 :தாயார் நீலாம்பாள் (எ) தனலட்சுமி பிறப்பு

00-00-1953 :சித்தி விசயா பிறப்பு 

00-00-1954 L:தனலட்சுமி–சக்கரபாணித் தேவர் திருமணம் 

16-05-1972 :அன்பழகன் பிறப்பு  

00-00-1972 :தந்தை சக்கரபாணித் தேவர் மறைவு  .

00-10-1977 :அன்பழகன் 1-ஆம் வகுப்பில் சேரல்  

27-08-1976  :விசயா - முருகேசன் திருமணம் 

00-06-1982 :அன்பழகன் 6-ஆம் வகுப்பில் கருப்பம்புலத்தில் சேரல் 

00-06-1983 :அன்பழகன் 7-ஆம் வகுப்பில் வேதாரணியத்தில் சேரல்

00-03-1986 :அன்பழகன் 10-ஆம் வகுப்பு (S.S.L.C) நிறைவு  

1986 -1995 :சிற்றப்பா முருகேசன் தேநீர்க்கடையில் பணியாற்றல்

1995 -2007 :லலிதா நகைக் கடையில் பணியாற்றல் 

27-03-2005 :அன்பழகன் - ஈசுவரி திருமணம்  

2001-2006 :ஊராட்சித் துணைத் தலைவராகப் பணியாற்றல்

13-05-2006 :தாயார், தனலட்சுமி (72 வயது) மறைவு

21-08-2006 :மகள் தமேந்திகா பிறப்பு  

03-04-2007 :நடத்துநராகப் பணியில் சேரல்

22-08-2013 :மகள் தர்ஷனா பிறப்பு  

09-04-2021 :சித்தி இரெ.பாலசுந்தரி (78 வயது) மறைவு

01-12-2025 :சித்தி விசயா (72 வயது) முருகேசன் மறைவு

 -----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 10]

{22-02-2026}

-------------------------------------------------------------------------------------

          

திரு ச.அன்பழகன்

  
திருமதி ஈசுவரி - அன்பழகன் இணையர் 

திருமதி ஈசுவரி - அன்பழகன் இணையர் 


தமேந்திகா அன்பழகன்

தர்ஷனா அன்பழகன் 

திருமதி தனலட்சுமி சக்கரபாணித் தேவர்

                      
திருமதி தனலட்சுமி சக்கரபாணித் தேவர்




திருமதி தேவகுஞ்சரி காந்தி தேவர்

திருமதி விசயா முருகேச தேவர்