என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

(01) வேதரெத்தினம் (திரு.) வை - கடிநெல்வயல்



வை . வேதரெத்தினம் 

கடிநெல்வயல் வை. வேதரெத்தினம்  அவர்களின் வாழ்க்கை வரலாறு 


தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில் 1944 –ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 ஆம் நாள் இவர் பிறந்தார். தந்தையார் பெயர் வைத்தியநாதன். தாயார் சாரதா அம்மையார் !

உடன்பிறப்பு:

இவருடன் உடன் பிறந்தோர் நால்வர். தமக்கையார் சிந்தாமணி அம்மையார், தங்கைகள் கல்யாணி அம்மையார், கனகாம்புயம் அம்மையார், ஞானசுந்தரி என்னும் சுமதி அம்மையார் ஆகியோர் !

பள்ளிக் கல்வி:

கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரைப் பயின்ற இவர், உயர்நிலைப்  பள்ளிக் கல்வியை, ஆயக்காரன்புலத்தில் உள்ள இரா.நடேசனார் நினைவு அரசினர் உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தார். இங்கு 6 –ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரைப் பயின்ற இவர் பள்ளியிறுதி வகுப்பான 11 –ஆம் வகுப்பினைத் திருத்துறைப்பூண்டி கழக உயர்நிலைப் பள்ளியில் 1960 –ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்களில் நிறைவு செய்தார்

மாநிலத் திட்டக்குழு உறுப்பினராக இருந்த திரு.பழனித்துரை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த திரு.இரகுபதி, புகழ்பெற்ற மருத்துவராகத் திகழ்ந்த திரு.வி.விநோதகன் ( திருமதி சசிகலாவின் தமையனார்) கால்நடைத் துறை துணை இயக்குநராக இருந்த திரு.இரத்தின .இராசேந்திரன் ஆகியோர் இவரது வகுப்புத் தோழர்கள் !

கல்லூரிக் கல்வி:

ஈராண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தஞ்சை, மன்னர் சரபோசி அரசினர் கல்லூரியில் 1962 –ஆம் ஆண்டு புகுமுக வகுப்பில் (P.U.C) சேர்ந்தார். இப்படிப்பை 1963 ஏப்ரலில் நிறைவு செய்தார். இவ்வகுப்பில் இவர் பெற்றிருந்த மிக அதிக மதிப்பெண்களைக் கண்ட கல்லூரி முதல்வர் கேப்டன், முருகையன் அவர்கள் மருத்துவப் படிப்பில் சேர வலியுறுத்தினார். விண்ணப்பித்தால், உடனே இடம் கிடைக்கக் கூடிய  வாய்ப்பு இருந்தது; எனினும் குடும்பத்தின் செல்வ வளம்  நிறைவாக இல்லாததால், மருத்துவப் படிப்பில் இவர் சேரமுடியவில்லை அரசுப் பணியில் சேர்ந்த பிறகு இவர் மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத்தில் அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து வணிகவியல் வாலை (B.Com) பட்டம் பெற்றார் !

கூடுறவுத் துறையில் அரசுப் பணி:

1960 -ஆம் ஆண்டு தனது 16 –ஆம் அகவையில் தந்தையை இழந்த இவர், குடும்பச் சுமையைத் தனது தோள்களில் ஏற்க  வேண்டி இருந்ததால், பணிக்குச் செல்ல விரும்பினார். இவருக்கு அரசுப் பணி கிடைக்கவே கிடைக்காது என்று ஓங்கி  ஒலித்த  கணியன்   (சோதிடர்ஒருவரின்  தடைச்  சொற்களையும் மீறி 1964 –ஆம் ஆண்டு ஆகத்து மாதம் கூட்டுறவுத் துறையில், தணிக்கைப் பிரிவில் இளநிலை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். கூட்டுறவுத் துறையில் பணியை ஏற்று ஒன்றரை ஆண்டுகள், தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தங்கியிருந்த காலம் தான் இவருக்கு உலகம் என்றால் இன்னதென்று உணர்ந்திட உதவியது. தமிழ்த் தாத்தா உ.வே.சா. அவர்களின் இல்லத்திற்குச் சென்று வந்தது, பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்டு அறிவுத் தெளிவு பெற்றது, கலைஞரைச் சாலையில் சந்தித்துப் பேசியது உள்பட பல இனிய துய்ப்புகள் (EXPERIENCES)  இங்கே கிடைத்தன !

காவல் துறையில் அரசுப்பணி:

கூட்டுறவுத் துறையில் ஒன்றரை ஆண்டுகள் அன்னிலைப் பணியிடத்தில் (TEMPORARY APPOINTMENT) பணிபுரிந்த பிறகு, விடுபட்டு 1965 பிப்ரவரித் திங்களில் கடலூர் சென்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிலைப் பணியிடத்தில் (REGULAR APPOINTMENT) எழுத்தராக (CLERK) பணியில் சேர்ந்தார் ! காவலர்கள் மட்டுமன்றி, உதவி ஆய்வாளர், ஆய்வாளர் வரை வந்து ஒரு எழுத்தருக்கு வணக்கம் சொல்லும்  நம்பமுடியாக் காட்சியை அங்கு இவர் காண நேர்ந்தது. வாழ்க்கை தான் எத்துணை வியப்புகளை ஒரு மனிதனுக்கு வாரி வழங்குகிறது !

அரசினர் தொழிற்பயிற்சி நிலையப் பணி:

காவல் துறைப் பணியைவிடக் கூடுதல் ஊதியத்தில், நிலையான பணி வாய்ப்புக் கிடைத்ததால் (REGULAR JOB) புதுக்கோட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 1966 ஆம் ஆண்டு ஏப்பிரல் 21 அன்று இவர் பண்டகக் காப்பாளராகப் பணியேற்றார். இங்கு பணி புரிகையில் புலவர்கள் தி.சு.மலையப்பன், அன்பு கணபதி, வித்வான் கந்தசாமி ஆகியோரது தொடர்பு கிடைத்தது. குன்றக்குடி அடிகளார், புலவர் கா.கோவிந்தன், இராய சொக்கலிங்கனார், ..இராசகோபாலன், .நமசிவாயம், சோ.சத்தியசீலன் உள்பட பல தமிழறிஞர்கள் பங்கேற்ற வள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழா  1969 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் மூன்று நாள்கள் நடைபெற்றது. விழா அமைப்பாளர்களில் ஒருவராக இவரும் இருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் வாய்ப்புக் கிடைத்தது;  தமிழ்ப் பணி மீதான ஈர்ப்பும் இங்குதான் இவருக்கு ஏற்பட்டது !

இவர் பணியாற்றிய நிலையங்களும்  காலப் பகுதியும் வருமாறு :-

பண்டகக் காப்பாளர்:
(பணியில் சேர்ந்த நாள்; 21-04-1966)
(01).அ.தொ.ப. நிலையம், புதுக்கோட்டை: 21-04-66   -  31-10-71
(02) அ.தொ.ப. நிலையம், திருச்சி:..................01-11-71  -  03-05-75
(03) அ.தொ.ப. நிலையம், நாகை:...................04-05-75   -  14-07-81
(04) அ.தொ.ப. நிலையம், சேலம்: ...................15-07-81  -  10-05-84
அலுவலக மேலாளர்:
(05) அ.தொ.ப. நிலையம், தாராபுரம்:.............11-05-84  -  11-07-84
(06) அ.தொ.ப. நிலையம், நாகை:.....................12-07-84  -  07-04-87
(07) அ.தொ.ப. நிலையம், சேலம்:......................08-04-87  - 05-05-92
(08) அ.தொ.ப. நிலையம், ஈரோடு:....................06-05-92  -  10-06-93
(09) அ.தொ.ப நிலையம், சேலம்:.......................11-06-93  -  26-11-96
ஆட்சி அலுவலர்:
(10) அ.தொ.ப. நிலையம், ஓசூர்:........................27-11-96  -  30-04-2001

(ஆட்சி அலுவலர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாள்: 30-04-2001)

தமிழ்ச் சொல்லாக்கம்:

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயன்பாட்டில் இருந்து வந்த எந்திரங்கள், கருவிகள், நுகர்பொருள்கள், அறைகலன்கள், மூலப் பொருள்கள் அனைத்துக்கும் தமிழ்ச் சொல் ஆக்கும் பணியை இங்குதான் இவர் தொடங்கினார். 1966 –ஆம் ஆண்டு தொடங்கிய இப்பணி, கடந்த 54 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றால், அதற்குத் தமிழ் மீது இவருக்கு உள்ள அளப்பரிய ஈடுபாடே காரணம் என்றால் அது மிகையில்லை !

திருமணம்:

இவரது திருமணம் 1972 –ஆம் ஆண்டு சூலை 2 –ஆம் நாள் நிகழ்வுற்றது. மன்னை மு.அம்பிகாபதி தலைமையில் நடைபெற்ற இத் திருமணம் ஐயர் இல்லாமல், மந்திரம் ஓதாமல், சீர்திருத்த முறையில் நடைபெற்றது. மணலி கந்தசாமி என்னும் பொதுவுடைமைக் கட்சித் தலைவரின் உறவினரான இரகுநாத பிள்ளையின் இளைய மகள் கலைச்செல்வி இவரது வாழ்க்கைத் துணையாக அமைந்தார். இவ்விணையருக்கு இளம்பரிதி என்னும் ஒரு ஆண்மகவும், கவிக்குயில், இளவரசி ஆகிய இரு பெண் மகவினரும் உள்ளனர் !

பணி ஓய்வு:

அரசுப் பணியில், இறுதியாக ஆட்சி அலுவலர் (ADMINISTRATIVE OFFICER) என்னும் உயர் பணியில் நான்கரை ஆண்டுகள் பணியாற்றினார். உதவி இயக்குநர் (ASSISTANT DIRECTOR) சார் ஆட்சியர் (SUB-COLLECTOR) போன்ற பணியிடங்களுக்கு இணையானது ஆட்சி அலுவலர் பணியிடம். 2001 –ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 –ஆம் நாள் அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவர், பணியில் இருக்கும் போது, அரசு அலுவலர் ஒன்றியம், துறை சார்ந்த அமைச்சுப் பணியாளர் சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம் ஆகிவற்றில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார் !

பொதுப்பணி:

பணி ஓய்வுக்குப் பிறகு, தஞ்சாவூரில், இவர் வாழ்ந்து வந்த பகுதி மக்களை ஒன்றிணைத்து 650 குடும்பங்களை உள்ளடக்கிதிருவள்ளுவர் குடியிருப்போர் நலச் சங்கம்அமைத்து அதன் தலைவராகவும் பணியாற்றினார். 2006 –இல் அமைக்கப்பட்ட இச்சங்கம் கடந்த 14 ஆண்டுகளாகச் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது !

முகநூல் பணி:

2015 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம்தமிழ்ப் பணி மன்றம்என்னும் பெயரில் முகநூற் குழு ஒன்று தொடங்கி. அதன் ஆட்சியராக இன்று வரைச் செயல்பட்டு வருகிறார். தமிழ் வளர்ச்சிப் பணி ஒன்றையே குறிக் கோளாகக் கொண்டு இயங்கி வரும் இக்குழுவில் தமிழ் வளர்ச்சியில் நாட்டமுடைய 2350 உறுப்பினர்கள் இருக்கின்றனர். ஏறத்தாழ 450 கட்டுரைகளை தமிழ்ப் பணி மன்றத்தில் எழுதியுள்ள ஆட்சியர் வேதரெத்தினம் அவர்கள், தமிழ் உணர்வாளர்களை உருவாக்குவதில் முன்னணியில் இருந்து வருகிறார் ! தமிழ்ப் பணி மன்றம் அல்லாது, “தமிழ்ப் பொழில்”, “கலைச் சொற் களஞ்சியம்”, “அகரமுதலி”, ஆகிய முகநூற் குழுக்களையும் இயக்கி வரும் இவர், தமிழ் வளர்ச்சியில் முனைப்பாக இருப்பவர்களை ஒன்றிணைத்துசிறப்பாகத் தமிழ்ப் பணி ஆற்றி வருகிறார் ! வாழ்க இவரது தமிழ் உள்ளம் ! வளர்க இவரது புகழ் !

**************************************************************************

தொடர்பு முகவரி:

வை.வேதரெத்தினம்

28/25.டைட்டான் நகரியம்,
மத்திகிரி,
ஓசூர். 635 110
                        
தொடர்பு எழினி எண்: 
73587 95801

மின்னஞ்சல் முகவரி: vedarethinam76@gmail.com

                     

---------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
(vedarethinam76@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, சுறவம் (தை),22]
{05-02-2020}

-----------------------------------------------------------------------------------------------------


கலைச்செல்வி - வேதரெத்தினம்
(1972)  


வை.வேதரெத்தினம் (1971)


வை.வேதரெத்தினம் (2018)



கலைச்செல்வி (1975)

கலைச்செல்வி (2018)

இளம்பரிதி .B.Tech (1996)

இளம்பரிதி .B.Tech (2015)

கவிக்குயில் (1992)

கவிக்குயில் B.E. (2015)

இளவரசி (1995)

இளவரசி. B.Sc. (2019)

சாரதாம்பாள் (2003)




















10 கருத்துகள்:

  1. ஐயா ! நானே உங்களுடைய வரலாற்றைக் கேட்டுப் பெற எண்ணிக் கொண்டிருந்தேன் !
    என்னுடைய சொக்கி இதழில் வெளியிடுவதற்காக !
    இந்த வரலாறு போதுமானது !
    இதனுடன் நான் அடைந்த தமிழ்ப் பயன் பற்றியும், இன்னமும் இதில் தாங்கள் குறிப்பிடாத உங்கள் சிறப்புகளை நான் அறிந்ததை தொகுத்து வெளியிடுவேன் !
    மிக்க நன்றி ஐயா !
    மிக்க மகிழ்ச்சி !

    பதிலளிநீக்கு
  2. சொக்கி இதழில் வெளியிடும் முன் என்னிடம் காட்டுங்கள். நான் பார்த்த பின்பு வெளியிடலாம் !

    பதிலளிநீக்கு
  3. அருமையான தகவல், ஒரு கதையை போல , வரலாற்றை எழுதி உள்ளீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் , ஆவலோடு எதிர்பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. தங்கள் விழைவை நிறைவேற்ற முயல்கிறேன் ! தங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  5. தமிழோடு வளரும் எமது தலைவரே ! தங்களோடு தமிழும் வளர்கிறது ! தாங்கள் வாழ்க்கை எமக்கு வழிகாட்டியாக அமைகிறது !

    பதிலளிநீக்கு
  6. தங்கள் வாழ்க்கை வரலாறு மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயமில்லை ! !

    பதிலளிநீக்கு
  7. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் !

    பதிலளிநீக்கு