தோற்றம்:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்
பூண்டி வட்டம் திருவலஞ்சுழி என்னும் சிற்றூரில் 1966 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம்
7 ஆம் நாள் இரவி பிறந்தார். இவரது தந்தையார் பெயர்
வையாபுரிப் பிள்ளை. தாயார் பார்வதி அம்மையார் !
பெற்றோர் பிறப்பிடம்:
இரவியின் தந்தை வையாபுரிப் பிள்ளை,
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் வட்டம் ஆயக்காரன்புலம் 3 ஆம் சேத்தி, நல்லான் குத்தகை என்னும் ஊரில் பிறந்தவர். புலால் உணவு
உண்ணாத தூய சைவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், வேதாரணியம் ஆருகில்
உள்ள புட்பவனம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த .திருஞானம் பிள்ளை
என்பவரின் மகள் பார்வதி அம்மையாரை மணந்தவர் !
தொடக்கக் கல்வி:
வையாபுரிப் பிள்ளையின்
செல்வப் புதல்வனான இரவியை, இனி இரவி வையாபுரி என்றே குறிப்பிடுவோம்.
இவர் 1970 ஆம் ஆண்டு விசயதசமியன்று திருத்துறைப்பூண்டி
வட்டம், களப்பால் என்னும் ஊரில் உள்ள தொடக்கப் பள்ளியில் முதலாம்
வகுப்பில் சேர்க்கப்பட்டார். முதலிரண்டு வகுப்புகளையும் இங்கு
பயின்ற இரவி வையாபுரி 1972 ஆம் ஆண்டு சூன் மாதம் திருத்துறைப்
பூண்டி வட்டம், வங்கநகர் என்னும் சிற்றூரில் உள்ள தொடக்கப்பள்ளியில்
3 ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் !
நான்காம் வகுப்பினையும்
இதே பள்ளியில் தொடர்ந்த இரவி வையாபுரி, ஐந்தாம் வகுப்புப்
படிப்பிற்காக வேதாரணியத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இங்கு இவரது தாய்வழிப் பாட்டனார் வீட்டில் தங்கிப் பள்ளிக்குச் சென்று வந்தார்
!
உயர்நிலைக் கல்வி:
இவர் கால்களில் சக்கரம்
கட்டிக் கொண்டிருந்தார் போலும் ! ஆறாம் வகுப்புப் படிப்பதற்காக
திருத்துறைப்பூண்டி வட்டம் மருதவனம் என்னும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார். இவரது பெற்றோர் வங்ககரில் குடியிருந்து வந்ததால், அருகில்
இருந்த மருதவனத்திற்குச் சென்று வருவது இவருக்கு
எளிதாகவே இருந்தது. காற் சக்கரங்கள் மீண்டும் சுழலத் தொடங்கியது
! இவரது பெற்றோர், திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி
அருகில் உள்ள பூனாயிருப்பு என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்ததால், இவரும் தனது படிப்புக்காகப் பள்ளி மாற வேண்டி வந்தது.
1976 ஆம் ஆண்டு
சூன் மாதம் ஆலங்குடியில் உள்ள உயர்நிலைபள்ளியில் 7 ஆம் வகுப்பில்
இவர் சேர்ந்தார். இவருக்கு வாய்த்த நற்பேறோ என்னவோ, இவர் 7, 8, 9 ஆகிய மூன்று வகுப்புகளையும் இதே பள்ளியிலேயே
தொடர்ந்து பயில முடிந்தது. ஆனால் காற் சக்கரம் சும்மா இல்லை.
மீண்டும் சுழன்றது. 10 ஆம் வகுப்புக் கல்விக்காக
இவர் மீண்டும் வேதாரணியம் சென்றார். முன்பு போலவே தாய்வழிப் பாட்டனார்
வீட்டில் தங்கிருந்து படித்து வந்தார் !
அடுத்து மேனிலைக் கல்வியாயிற்றே ! நல்ல பள்ளியில் படிக்க வைக்கப் பெற்றோர் விருப்பம் கொண்டிருந்தனர்.
பெற்றோர் பூனாயிருப்பில் குடியிருந்ததால், அங்கிருந்து
6 கி.மீ தொலைவில் உள்ள நீடாமங்கலத்தில் உள்ள மேனிலைப்
பள்ளியில் இரவி வையாபுரி 11 ஆம் வகுப்பில் 1980 ஆம் ஆண்டு சேர்ந்து பயின்றார். வீட்டிலிருந்து அன்றாடம்
ஈருருளியில் (BI-CYCLE) பள்ளிக்குச் சென்று வருவதை வழக்கமாகக்
கொண்டிருந்தார். 12 ஆம் வகுப்பையும் இதே பள்ளியில் பயின்று தேர்ச்சி
பெற்றார் !
பணி தேடல்:
பன்னிரண்டு வகுப்புகளைப்
பயில ஏழு முறைப் பள்ளி மாற்றம் நிகழ்ந்து விட்டது. இனிமேலும்
படிப்புக்காக அலைய வேண்டாம். பணியில் அமரும் வாய்ப்புகளைத் தேடலாம்
என்று இரவி வையாபுரியும் அவர் பெற்றோரும் முடிவு செய்தனர். பணி
வாய்ப்புக்காகப் பல வழிகளில் முயன்றனர். ஓராண்டு காலம் இதில்
உருண்டோடியது !
படைத்துறைப் பணி:
முனைப்பான முயற்சியின்
விளைவாக இவருக்குப் படைத் துறையில் (MILITARY SERVICE) பணி வாய்ப்புக் கிட்டியது. படைத்துறையில் கைவினைஞராக
(CRAFTSMAN) 1983 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் நாள்
பணியில் சேர்ந்தார். அன்றே ஈராண்டு காலப் பயிற்சியும் மத்தியப்
பிரதேச மாநிலம் போபாலில் தொடங்கியது. பயிற்சி நிறைவில் கைவினைஞராக
(CRAFTSMAN) உத்தர காண்ட் மாநிலம் டேராடூனில் பணியில் அமர்த்தப்பட்டார்.
பின்பு அங்கிருந்து ”லான்ஸ் நாயக்” (NANSNAIK)
பதவிக்கு உயர்வு பெற்று 1988 ஆம் ஆண்டு மே மாதம்
ஜம்மு-கஷ்மீர் மாநிலம் லடாக்கிற்கு (LADAKH) மாற்றப்பட்டார் ! இங்கு ஈராண்டுகள் பணி புரிந்த பிறகு
“நாயக்” (NAIK) பதவிக்கு உயர்த்தப் பட்டு
மகாராட்டிர மாநிலம் புனே நகருக்கு மாற்றப்பட்டுப் பணி புரிந்து வந்தார் !
திருமணம்:
புனேயின் இவர் பணிபுரிந்து
வருகையில் திருமண வாய்ப்புக் கைகூடி வந்தது. 1991 ஆம் ஆண்டு
மார்ச்சு மாதம் 18 ஆம் நாள், இவருக்குத்
திருமணமாயிற்று. மன்னார்குடி வட்டம் சேரன்குளம் என்னும் ஊரைச்
சேர்ந்த இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி இணையரின் நான்காவது மகள்
இராசவல்லி என்னும் மங்கை இவருக்கு வாழ்க்கைத் துணைவி ஆனார் !
மக்கள் செல்வம்:
இவ்விணையருக்கு 1992 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்
5 ஆம் நாள் பெண் மகவொன்று ”கிர்கி”யில் (KIRKEE) உள்ள படைத்துறை மருத்துவமனையில் பிறந்தது.
வீணா என்று பெயரிடப் பெற்ற இப் பெண்மகவு பிற்காலத்தில் பொறியியல் வாலை
மற்றும் வணிக மேலாண்மை மேதை (B.E.,M.B.A) பட்டங்கள் பெற்று,
வளைகுடா நாடொன்றில் தன் கணவர் மற்றும் ஒரு ஆண் மகவுடன் வாழ்ந்து வருகிறார்
!
இரவி வையாபுரி – இராசவல்லி இணையருக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை 28-02-1996 அன்று பிறந்தது. சூர்யராஜ் என்று பெயரிடப்பெற்ற இக்குழந்தை
இன்று பொறியியலில் வாலைப் பட்டம் (B.E.) பெற்று ஓசூரில் ஒரு நிறுவனத்தில்
பணி புரிந்து வருகிறார் !
திருமணத்திற்குப் பிந்தைய பணி:
1992 ஆம் ஆண்டு
பெண் மகவு பிறந்த பிறகு, இரவி வையாபுரி படைத் துறையிலேயே உள்ள
பயிற்சிப் பள்ளியில் மின்னியலில் பட்டயப் படிப்பில் சேர்வதற்கான திறனறித் தேர்வை எழுதினார்.
இதற்கிடையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூருக்கு (FEROZPUR) இடமாற்றம் செய்யப்பெற்று
1993 சூன் மாதம் பணியில் சேர்ந்தார். திறனறித்
தேர்வில் தேர்ச்சி பெற்றதைத் தொடர்ந்து பட்டயப் படிப்பில் 1994, மார்ச்சு மாதம் பயிற்சியில் சேர்ந்தார். பயிற்சிக் காலம்
14 மாதங்கள். பட்டயப் படிப்புக்கான பயிற்சியை நிறைவு செய்து இறுதித் தேர்விலும்
1995, மே மாதம் தேர்ச்சி அடைந்தார் !
பட்டயத் தகுதி
(DIPLOMA) பெற்றதும், படைத்துறை அலுவலகம் இவரைத் தொழில்நுட்பப் பிரிவில் ”ஹவில்தார் மேஜர்” (HAVILDAR MAJOR) பதவிக்கு உயர்த்தி,
அரியானா மாநிலம் “ஹிஸார்” (HISSAR) என்னும் இடத்தில் பணியில் அமர்த்தியது. இங்கு சில ஆண்டுகள்
பணி புரிந்த பிறகு போபாலில் உள்ள இ.எம்,.இ. பயிற்சி மையத்திற்கு
(E.M.E. TRAINING CENTER) இடமாற்றம் செய்யப்பெற்று 1998, மே மாதம் பணியில் சேர்ந்தார் !
போபால் இ.எம்.இ. பயிற்சி மையத்திலிருந்து
”நைப் சுபேதார்” (NAIB SUBEDHAR) பதவிக்கு உயர்த்தப்பட்டு,
படைத்துறைத் தலைமை அலுவலகத்திற்கு (ARMY HEAD QUARTERS) 2000
-ஆம் ஆண்டு பிப்ரவரி மாத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்,
அயல்நாட்டில் பணி:
ஆப்பிரிக்காவில் உள்ள “போட்ஸ்வானா” (BOTSWANA) என்னும் நாட்டிற்கு இந்தியாவிலிருந்து
படைத்துறையினரை அனுப்பி, அந்நாட்டுப் படைகளுக்குப் பயிற்சி அளிக்கும்
திட்டத்தின் கீழ் படைப்பிரிவு ஒன்று 2002 –ஆம் ஆண்டு மே மாதம்
அனுப்பப்பட்டது. இதில் இரவி வையாபுரியும் இடம் பெற்று
”போட்ஸ்வானா” சென்றார். குடும்பத்தினரையும்
அங்கு அழைத்துச் செல்ல அரசு இசைவளித்ததால், இவர் தன் குடும்பத்தினரையும் ”போட்ஸ்வானா”வுக்கு அழைத்துச் சென்றார். அங்குப் பணியின் இருக்கும்
போதே “சுபேதார்” (SUBEDHAR) ஆகப் பதவி உயர்வும்
பெற்றார் !
பயிற்றுநர் பணி:
மூன்றாண்டுகள் அயல்நாட்டில்
பணிபுரிந்த பிறகு 2005 –ஆம் ஆண்டு சூன் மாதம் இந்தியா
திரும்பினார். இங்கு வந்த பிறகு தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்
(SECUNDERABAD) நகாரில் உள்ள இ.எம்.இ. பொறியியல் கல்லூரியில் பயிற்றுநராகப் பணியில் அமர்த்தப்பட்டார்
!
விழை ஓய்வு:
ஏறத்தாழ 23 ஆண்டுகள் படைத்துறையில் பணியாற்றிய பிறகு, பணியிலிருந்து
முன்னதாகவே ஓய்வு பெற விரும்பி (PREMATURE RETIREMENT) விண்ணப்பித்ததன்
பேரில் 2006 ஆம் –ஆண்டு அக்டோபர் மாதம்
31 –ஆம் நாள் படைத்துறைப் பணியிலிருந்து விடுவிக்கப்படார் !
ஓய்வுக்குப் பிந்தைய பணி:
படைத்துறைப் பணியிலிருந்து
ஓய்வு பெற்றுச் சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்த பிறகு “ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்” (RELIENCE COMMUNICATIONS) என்னும் தனியார் நிறுவனத்தில் களப் பொறியாளராக (FIELD ENGINEER) ஈராண்டுகள் பணிபுரிந்த பிறகு இந்தியர் அளகையில் (INDIAN BANK) எழுத்தராக (CLERK) முறையாகத் தேர்வு செய்யப்பட்டு,
2009 –ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 11 –ஆம் நாள் நாகை மாவட்டம் வேதாரணியம் கிளையில்
பணியில் அமர்த்தப்பட்டார் !
அளகைப்பணி:
2009 –ஆம் ஆண்டு
இந்தியர் அளகையில் (RECRUITMENT IN INDIAN BANK) எழுத்தராகப்
பணியில் சேர்ந்த இவர், கடந்த 11 ஆண்டுகளாக
அளகைச் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். வேதாரணியம்,
திருப்பூந்துருத்தி ஆகிய கிளைகளில் பணியாற்றிய இவர் இப்பொழுது, தஞ்சாவூர் நகரில் உள்ள ஈஸ்வரி நகர் கிளையில் பணியாற்றிவருகிறார் !
தொழிற்சங்கப் பணி:
இந்தியர் அளகையின் தொழிற்சங்கமான
அனைத்திந்திய அளகைப் பணியாளர் கும்பகோணம் வட்டார அலகின் உதவிச் செயலாளராகக் கடந்த மூன்று
ஆண்டுகளாகச் செயலாற்றி வரும் இவர், அளகை அலுவலர்களின்
நலனுக்காகப் பாடுபடுவதைப் பெருமையாகக் கருதிச் செயல்பட்டு வருகிறார் !
முடிவுரை:
செய்யும் தொழிலே தெய்வம்
என்னும் கோட்பாட்டை, முன்னிறுத்தி, எந்த ஊரில் பணியாற்றினாலும், எந்தப் பணியை மேற்கொண்டிருந்தாலும்,
அதைச் செவ்வனே செய்திட வேண்டும் என்னும் என்னும் கருத்துக் கொண்டிருக்கும்
இவர், தன் பணியில் மேலும் மேலும் பல முத்திரைகளைப் பதித்து வாழ்வில்
உயர்ந்திட, வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துவோம் !
தொடர்பு முகவரி:
இரவி வையாபுரி,
45, சக்தி நகர்,
மானோசிப்பட்டி சாலை.
தஞ்சாவூர் 613
004
மின்னஞ்சல்: suryaveena69@gmail.com
எழினி:
94426 38776
------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ: 2051, கும்பம் (மாசி),17]
{29-02-2020}
------------------------------------------------------------------------------------------------------
நாட்டுக்காகப் பயனுள்ள பணியாற்றி இருக்கும் தங்களைத் தமிழுலகம் வாழ்த்துகிறது ! வாழ்க வளமுடன் !
பதிலளிநீக்கு