வேலூர் மீ.இராசேந்திரன் வாழ்க்கை
வரலாறு !
முகவுரை !
என்னுடைய
தாயாரின் சொந்த தமக்கையின் (மீனாட்சி அம்மையார்) பெயரனும் தந்தையின் பெரியப்பா
(சீனிவாச தேவர்) கொள்ளுப் பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து
வளர்ந்து, இப்போது வேலூர் நகரில்
வாழ்ந்து வருபவருமான திரு.மீ.இராசேந்திரனின் வாழ்க்கை வரலாறு
இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்படும் இந்தப்
பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும் கூகுளில் சென்று https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து "தேடுக" (SEARCH) என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள் உங்கள் முன் ஓடிவந்து
நிற்கும் !
அதிலிருந்து "தமிழ்
நட்பு" என்று காணப்படும்
வரியைச் சொடுக்குங்கள். அவ்வளவுதான் ! "தமிழ் நட்பு” வலைப்பூப் பக்கம்
திறந்து கொள்ளும்.
அடுத்து
நீங்கள் விரும்பும் ஆளிநரின் (PERSON) வாழ்க்கை
வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !
வலைப்பூ
(BLOG) எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது;
இதை உருவாக்கிய என்னைத் தாவிர வேறு யாராலும் இதை அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும்
கூட்டவோ குறைக்கவோ முடியாது. இதை உருவாக்கியுள்ள நான் (வை.வேதரெத்தினம்) மட்டுமே
திருத்தம் செய்ய முடியும். இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க https://thamizhnatpu.blogspot என்னும் திறவுகோலைப் பயன்படுத்தும் யாருக்கும் இப்பக்கம் திறந்து
கொள்ளும். இனி வாழ்க்கை வரலாற்றைப் படியுங்கள் !
பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !
நாகப்பட்டினம் மாவட்டம்,
வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம்
கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச் சேர்ந்தவர் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு.சீனிவாச தேவர் மற்றும்
திரு சிங்காருத் தேவர். திரு. சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கை நல்லாளை
மணந்துகொண்டார். திரு
சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; நடுவுலவர்
திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு சண்முகவேல் தேவர்
! திரு.அருணாச்சல தேவர் – மீனாட்சியம்மை இணையரின் தலைமகன் திரு,மீனாட்சிசுந்தரம்.
திரு மீனாட்சுந்தரம் – பார்வதி அம்மையார் இணையரின் இரண்டாவது பிள்ளையே திரு.இராசேந்திரன்.
(கடிநெல்வயல் முன்பு
தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு
சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)
குலக்கொடி !
திரு இராசேந்திரனின்
குலக்கொடித் தோற்றம் வருமாறு :-
நல்லபொதிய தேவர் > [சீனிவாசதேவர் / நீலாம்பாள் அம்மையார்] > [அருணாச்சல
தேவர் / மீனாட்சி அம்மையார்] > [மீனாட்சி சுந்தரம் / பார்வதி அம்மையார்]
> இராசேந்திரன் !
அருணாச்சல தேவர் / மீனாட்சி அம்மையார் ! சுருக்க வரலாறு !
திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளூரைச் சேர்ந்தவர்
திரு சிவப்பிரகாச தேவர். அவரது மனைவி பெயர்
கல்யாணி அம்மையார். இவர்களுக்கு ஞானப்பிரகாசம், வரதராசன், கருணாநிதி, பண்டரிநாதன் ஆகிய
நான்கு மகன்களும், மீனாட்சி, சுந்தராம்பாள், சாரதாம்பாள் ஆகிய மூன்று மகள்களும் இருந்தனர்.
இவர்களுள் மீனாட்சியை மணந்தவர் திரு அருணாச்சல தேவர். 1927 -ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம் 10 -ஆம் நாள் (10-04-1927) திரு
அருணாச்சல தேவர் – மீனாட்சி அம்மை இணையருக்குப் பிறந்த குழந்தையான மீனாட்சி சுந்தரம்
18 நாள் பிள்ளையாக இருக்கும் போது குழந்தையை விட்டுவிட்டு தாயார் மறைந்து போனார் !
பாட்டியே தாயும் ஆனார் !
பிறந்த 18 நாளில்
தாயை இழந்துவிட்ட குழந்தை மீனாட்சிசுந்தரத்தை எப்படி வளர்ப்பது என்று தெரியாமல் திரு.அருணாச்சலத்
தேவர் மனம் கலங்கிப் போனார். அப்போது திரு அருணாச்சலத் தேவரின் மாமனார் திரு சிவப்பிரகாச
தேவரும், மாமியார் திருமதி கல்யாணி அம்மையாரும் கலந்து பேசி தங்களுடைய ஆறுமாதக் குழந்தையான பண்டரிநாதனுடன் 18 நாள் குழந்தையான மீனாட்சுந்தரத்தையும் சேர்த்து
கல்யாணி அம்மையாரே பால் கொடுத்து வளர்ப்பது என்றும், விரைவில் தங்களுடைய இரண்டாவது
மகளான சுந்தராம்பாளை திரு அருணாச்சலத் தேவருக்கு மணம் முடித்துக் கொடுப்பது என்றும்
முடிவு செய்தனர். பாட்டியிடம் பால் குடித்து வளரும் குழந்தையானார் மீனாட்சி சுந்தரம் !
திரு அருணாச்சலத் தேவரின் இரண்டாம் திருமணம் !
பிறந்து 18 நாளில்
தாயை இழந்துவிட்ட குழந்தை மீனாட்சிசுந்தரத்தை வளர்த்து ஆளாக்கும் பொருட்டு, தனது மாமனார்,
மாமியார் கருத்துரைப்படி திரு அருணாச்சலத் தேவர், மறைந்த மீனாட்சியம்மையின் தங்கையான
சுந்தராம்பாளை இரண்டாம் தாரமாக மணந்துகொண்டார். சுந்தராம்பாள், மீனாட்சிசுந்தரத்தை
வளர்த்து ஆளாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் !
சுந்தராம்பாளும் மீனாட்சிசுந்தரமும் !
தன் அக்காள் குழந்தையைத்
தன் குழந்தையாகப் பாவித்து வளர்த்துவந்த திருமதி சுந்தராம்பாள், தனக்கு அடிக்கடி ஏற்பட்ட
கருச்சிதைவின் காரணமாக உடல் நலிந்து போனார். சிலமுறை குழந்தைகள் பிறந்தவுடன் இறந்தும்
போயின. ஏறத்தாழ 18 ஆண்டுகள் இல்லற வாழ்வில் ஈடுபட்டு சாறு பிழியப்பட்டக் கரும்புச்
சக்கையாக உடல் நலிந்து போனார். இறுதியில்
1946 -ஆம் ஆண்டு, மே மாதம் 21- ஆம் நாள் (21-05-1946) ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து,
அதை 18 மாத காலம் வளர்த்து திரு அருணாச்சல
தேவரின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு இறந்து போனார். இப்பொழுது, சீனிவாசன் என்னும் அந்தக்
குழந்தையை வளர்க்கும் பொறுப்பு என் தாயார் திருமதி சாரதாம்பாளின் தோள்களில் வந்து அமர்ந்தது
!
சீனிவாசனின் தாயானார் சாரதாம்பாள் !
சிவப்பிரகாசதேவர்
– கல்யாணி அம்மையாரின் முதற் பெண்ணும், இரண்டாவது பெண்ணும் திரு அருணாச்சல தேவருக்கு
மனைவிகளாகி இறந்தும் போயினர். திருமதி சுந்தராம்பாள் திரு அருணாச்சல தேவரின் இரண்டாவது
மனைவியாக வாழ்ந்துவந்த சில ஆண்டுகளில், அவரது தங்கையான சாரதாம்பாள் (என் தாயார்) திரு
அருணாச்சல தேவரின் சிற்றப்பா மகன் திரு வைத்தியநாத தேவருக்கு மனைவியாகி “பெரிய பண்ணை வீடு” என்னும் அதே வீட்டில் வாழ்ந்து
வந்தார்.
சிந்தாமணி, சிவப்பிரகாசம்,
சானகி, வேதரெத்தினம் ஆகிய நான்கு குழந்தைகளின் தாயான திருமதி சாரதாம்பாள், சிவப்பிரகாசம்,
சானகி, இருவரையும் இடையிலேயே பறிகொடுத்துவிட்டு, எஞ்சிய இரு குழந்தைகளுடன் வாழ்ந்து
வருகையில், மறைந்த சுந்தராம்பாளின் 18 மாதக் குழந்தையான சீனிவாசனையும் வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்
!
கல்விப் பயணம் !
தம்பி சீனிவாசனுக்கும்
அண்ணன் மீனாட்சிசுந்தரத்திற்கும் இடையில் அகவையில்
19 ஆண்டுகள் வேறுபாடு இருந்தது. தனது பிறந்த ஊரான
கடிநெல்வயலில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளியில் தனது கல்விப் பயணத்தைத் தொடங்கிய திரு.மீனாட்சிசுந்தரம், ஆயக்காரன்புலம் உயர்நிலைப்பள்ளியில்
7-ஆம் வகுப்புப் படிப்பையும், 8-ஆம் வகுப்பு முதல் 11-ஆம் வகுப்பு (OLD S.S.L.C) வரையிலான படிப்பைத் திருத்துறைப்பூண்டி
கழக உயார்நிலைப் பள்ளியிலும் மேற்கொண்டு தன் கல்விப் பயணத்தை 1943 ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் நிறைவு செய்தார் !
ஆசிரியர் பயிற்சி:
பள்ளி
இறுதி வகுப்பு வரைப் படித்திருந்த இவர்,
ஆசிரியப் பணியை விரும்பி, அதற்கான முயற்சிகளில் ஈடுபடலானார். இடைநிலை ஆசிரியர் (SECONDARY
GRADE TEACHER) பயிற்சிக்கு விண்ணப்பித்திருந்த இவருக்கு, தஞ்சை இடைநிலை ஆசிரியர்
பயிற்சிப் பள்ளியில் (SECONDARY
GRADE TEACHER TRAINING SCHOOL)
இடம் கிடைத்து 1943 ஆம் ஆண்டு
சூன் மாதம் பயிற்சியில் சேர்ந்தார் !
ஆசிரியராகப் பணி ஏற்பு:
பயிற்சி
முடித்த சில ஆண்டுகளிலேயே தான் படித்த திருத்துறைப்பூண்டி அரசு உயர்நிலைப்
பள்ளியிலேயே இவருக்கு இடைநிலை ஆசிரியர் பணி வாய்ப்புக் கிடைத்தது. பிறந்த
ஊரில் தந்தையும், தம்பி ஒருவரும் தனியாக வாழ்ந்து வந்த அந்தச் சூழலிலும், திருத்துறைப்
பூண்டியில் ஆசிரியப் பணியை ஏற்றுக் கொண்டார் !
திரு.மீனாட்சிசுந்தரம் திருமணம்:
பிறந்த
18 -ஆம் நாளிலேயே தன் தாயாரை இவர் இழந்தமையால், இவரது தகப்பனார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். இதன்
விளைவாகத் தன் தாயின் தங்கையே இவருக்குச் சிற்றன்னையாக அமைந்தார். சிற்றன்னையாரும் 18 ஆண்டுகள்
கழித்து, ஒரு ஆண் மகவைத் தந்து விட்டு விரைவில் இறந்து போனார். இவரும், இவரது தம்பி
சீனிவாசன் என்பவரும் தாயில்லாப் பிள்ளைகளாக வாழ வேண்டிய துன்பச் சூழ்நிலை
நிலவியதால், உறவினர்களின் வலியுறுத்தலால் இவர் திருமணம் செய்து கொள்ள இசைய வேண்டியதாயிற்று !
வேதாரணியம் வட்டத்தில்
உள்ள தகட்டூர் என்னும் ஊரின் ஒரு பகுதியான கல்யாணச்சேரி இராசகோபால் தேவர் – அரங்கம்மாள்
இணையரின் இரண்டாவது மகளான பார்வதி என்னும் மங்கையை இவர் 1947 -ஆம் ஆண்டு, தனது 20 –ஆம் அகவையில் மணந்துகொண்டார் ! இவர் தனது
ஒரே மைத்துனரான சிவநேசன் என்பவரையும் சில ஆண்டுகளியே இழக்க நேர்ந்தது, பட்ட
காலிலேயே படும் என்னும் பழமொழியை நினைவு படுத்துவதாக அமைந்திருந்தது !
குடும்பம்:
திரு.
மீனாட்சி சுந்தரம் – பார்வதி அம்மையார் இணையருக்கு கோவிந்தராசு, இராசேந்திரன், அருட்செல்வன்
ஆகிய 3 ஆண்
மகவினரும், விசயலட்சுமி,
வசந்த கோகிலம்,
செந்தமிழ்ச் செல்வி,
இந்திராணி,
பத்மசுந்தரி
ஆகிய ஐந்து பெண் மகவினரும் பிறந்தனர் ! இந்த
எண்மருள் திரு இராசேந்திரனின் வாழ்க்கை வரலாற்றைத் தருகிறது இந்தக் கட்டுரை
!
இராசேந்திரன் பிறப்பு !
1958 -ஆம் ஆண்டு சூன்
மாதம் 28 -ஆம் நாள் (28-06-1958) திரு
மீனாட்சிசுந்தரம் – திருமதி பார்வதி இணையருக்கு நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் திரு.இராசேந்திரன்.
தொடக்கக் கல்வி!
திரு.இராசேந்திரன்
தனது ஐந்தாம் அகவை நிறைவில் – அதாவது 1963
-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசயதசமி நாளன்று பனையோலைச் சுவடி கையில் தவழ, புத்தாடை
அணிந்து கடிநெல்வயலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில்
சேர்ந்தார். ஐந்தாம் வகுப்பு வரை அங்கேயே பயின்ற அவர் அன்றாடம் போக வர ஏறத்தாழ மூன்று
கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டியிருந்தது !
உயர் பள்ளிக் கல்வி !
அடுத்து 6 -ஆம் வகுப்பிலிருந்து
தனது உயர்நிலைக் கல்வியைத் தொடர அவர் வேதாரணியத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில்
சேர்ந்தார். கடிநெல்வயலுக்கும் வேதாரணியத்திற்கும் இடையில் 8 கிலோமீட்டர் தொலைவு இருக்கும்.
அன்றாடம் 8 + 8 = 16 கிலோ மீட்டர் தொலைவு நடந்து
சென்று அவர் 6- ஆம் வகுப்பு முதல் 11- ஆம்
வகுப்பு (OLD S.S.L.C) வரையிலான தனது படிப்பை
நன்முறையில் நிறைவு செய்தார் !
கல்லூரிக் கல்வி !
தன் மகனைக் கல்லூரியில்
சேர்த்துப் படிக்க வைக்க விரும்பிய திரு மீனாட்சி சுந்தரம், அதிராம்பட்டினம், தஞ்சாவூர்,
பூண்டி, மயிலாடுதுறை என நான்கு கல்லூரிகள் சுற்றிலும் இருக்கையில் ஏறத்தாழ 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மயிலாடுதுறை A.V.C. கலை அறிவியல்
கல்லூரியைத் தேர்வு செய்து, புகுமுக வகுப்பில்
(PRE UNIVERSITY COURSE) சேர்த்துவிட்டார். 1974 -ஆம் ஆண்டு சூன் மாதம் கல்லூரியில்
சேர்ந்த திரு இராசேந்திரன் புகுமுக வகுப்புப் படிப்பை மட்டும் நிறைவு விட்டு கல்லூரியை விட்டு வெளியேறினார்
!
தொழிற்கல்வியில் சேரல் !
கல்லூரிப் படிப்புக்குப்
பின் ஈராண்டுகள் கழிந்தன. பின்பு அரசினர் தொழிற்
பயிற்சி நிலையத்தில் (I.T.I) நான் பணி புரிந்து வந்ததால், அதில் சேர திரு இராசேந்திரன்
விரும்பினார். என் கருத்துரைப்படி, திருச்சி, நாகப்பட்டினம் பயிற்சி நிலையங்களுக்கு
விண்ணப்பித்தார். திருச்சியில் அவருக்கு “பொருத்துநர்” (FITTER) தொழிற்பிரிவிலும், நாகப்பட்டினத்தில் “ஓருக்கியல்”
(WELDER) தொழிற்பிரிவிலும் இடம் கிடைத்தது. “பொருத்துநர்” (FITTER) தொழிற்பிரிவைத் தேர்வு செய்து 1977 -ஆம் ஆண்டு ஆகஸ்டு
மாதம் முதல் 1979 -ஆம் ஆண்டு சூலை மாதம் வரை திருச்சி நிலையத்தில் ஈராண்டுகள் பயிற்சி பெற்றார் !
தனியார் நிறுவன வேலையில் சேர்வு !
திருச்சியில் பயிற்சியை நிறைவு செய்த திரு இராசேந்திரன், சென்னையில்
உள்ள நெல்காஸ்ட்டு (NELCAST (P) LTD) என்னும் தனியார் நிறுவனத்தில் ஓராண்டும், அடுத்து
இண்டியா ரேடியேட்டர்ஸ் (INDIA RADIATORS, PUZHAL, CHENNAI) என்னும் நிறுவனத்தில் ஓராண்டும்
பணி புரிந்தார்!
பழகுநர் பயிற்சி !
பின்னர் ஓராண்டு இடைவெளிக்குப்
பின், திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் (BHEL – TRICHY) ஓராண்டு பழகுநர் பயிற்சியை
(23-4-1982 – 22-4-1983) நிறைவு செய்தார். பிறகு அங்கேயே தினக்கூலி (N.M.R) அடிப்படையில்
1984 முதல் 1990 வரை ஆறாண்டுகள் பணி புரிந்தார் !
நாகையில் பணி வாய்ப்பு !
நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்
12-07-1984 முதல் 07-04-1987 வரை அலுவலக மேலாளராக
நான் பணிற்றிய போது அங்கு வெட்புலமாக இருந்த பணிமனை உதவியாளர் பணியிடத்திற்கு திரு இராசேந்திரனைப் பணியமர்த்தம் செய்திட நான்
முழு முயற்சி செய்தேன். ஆனால் அப்போதிருந்த அகில இந்திய அண்ணா தி.மு.க ஆட்சியில் அமைச்சராக
இருந்த இராமநாதபுரம் திரு இராமசாமி என்பவர் பணத்தை வாங்கிக்கொண்டு அதை வேறு ஒருவருக்கு
வழங்கிடச் செய்துவிட்டார் !
இராணிப்பேட்டையில் பணியேற்றார் திரு. இராசேந்திரன் !
பாரத மிகுமின் நிறுவனத்தில்
பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்தல் என்னும் அடிப்படையில் திரு.இராசேந்திரனுக்கு
இராணிப்பேட்டை பாரத மிகு மின் நிறுவனத்தில் நிரந்தரப் பணிவாய்ப்பு கிடைத்தது. அங்கு
27-4-1991 முதல் 24-07-2018 வரை 27 ஆண்டுகள் 02 மாதம் 27 நாள் சீர்மிகு பணியாற்றினார்.
இராசேந்திரன் - கற்பகம் திருமணம் !
திரு இராசேந்திரனுக்கு
1991 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 8 -ஆம் நாள் (08-09-1991) திருமணம் நடைபெற்றது. வாய்மேடு திரு மு.இராமசாமித் தேவர் – திருமதி வசந்த
கோகிலம் அம்மையார் இணையரின் மூன்றாவது மகள் செல்வி கற்பகம் இவரது வாழ்க்கைத் துணைவியானார்.
திருத்துறைப்பூண்டி, பெரிய கோயில் திருமண மண்டபத்தில் உற்றார் உறவினர் புடைசூழத் திருமணம்
சிறப்பாக நடைபெற்றது !
அருண்மொழித் தேவன் பிறப்பு !
திரு.இராசேந்திரன்
– திருமதி கற்பகம் இணையருக்கு 1992 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம், 24 -ஆம் நாள் (24-11-1992) ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு
அருண்மொழித் தேவன் எனப பெயர் சூட்டி வளர்த்து வந்தனர் !
அருண்மொழித் தேவனின் படிப்பு !
திரு அருண்மொழித்
தேவன், தொடக்கம் முதலே படிப்பில் திறமைசாலியாகத் திகழ்ந்தார். பள்ளிக் கல்வி முடிந்த
பிறகு திருச்சியிலுள்ள தேசியத் தொழில் நுட்ப நிறுவனத்தில் பயின்று “நுட்பவியல் வாலை”
(B.Tech) பட்டம் பெற்றார் !
அருண்மொழித் தேவன் பணியேற்பு !
பொறியியல் பட்டதாரியான
அருண்மொழித் தேவன், இந்திய மாநில அளகையில்
(STATE BANK OF INDIA) உதவி மேலாளராக 2015 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15- ஆம்
நாள் (15-11-2015)
பணியமர்த்தம் பெற்றார். இப்போது வேலூர் மாவட்டம் சாயிநாதபுரம் கிளையில்
பணிபுரிந்து வருகிறார் !
அருண்மொழித்தேவன் - அன்புத் தாமரை திருமணம் !
நாகை மாவட்டம்
வேதாரணியம் வட்டம், தென்னடாரைச் சேர்ந்த திரு முத்துராமலிங்கம் திருமதி இந்திரா இணையரின் மகள் செல்வி அன்புத் தாமரையை
திரு அருண்மொழித் தேவன் மணந்து கொண்டார். அன்புத் தாமரை கலையியல் மேதை (M.A) மெய்யியல்
மேதை (M.phil) கல்வியியல் வாலை (B.Ed) பட்டதாரி. இவர்கள் திருமணம் 2018 - ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 11- ஆம் நாள் ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது
!
கூடுதல் கல்வித் தகுதிகள் பெறல் !
இராணிப் பேட்டையில்
பணியிலிருக்கும் காலத்தில் தனது நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு,
அரசினர் பல்தொழிற் பயிற்சிக் கல்லூரியில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து பயின்று எந்திரப்
பொறியியல் பிரிவில் பட்டயம் (D.M.E) பெற்றார். அத்துடன் சென்னை National Institute of Fire Safety -யில்
அஞ்சல் வழிக் கல்வியில் சேர்ந்து DIPLOMA IN FIRE SAFETY என்னும் பட்டயமும் பெற்றார்
!
புதிய வீடு வாங்கல் !
பணி ஓய்வுக்கு முன்னதாக, இராணிப்பேட்டைக்கு அருகிலுள்ள வேலூரில் புதிய வீடு
ஒன்று கட்டிட வேண்டும் அல்லது வாங்கிட வேண்டும் என்னும் முயற்சியில் ஈடுபட்டு, வேலூர்
சத்துவாச்சாரி அருகிலுள்ள அரங்காபுரத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் கட்டி விற்பனைக்கு
விடுத்த 307 என்னும் இலக்கமுள்ள வீட்டை வாங்கி 21-08-2002
அன்று புதுமனை புகுவிழாவையும் சிறப்பாக நடத்தினார் !
பணி ஓய்வு !
27 ஆண்டுகளுக்கும்
மேலாகச் சிறப்புடன் பணியாற்றிய திரு இராசேந்திரன், இறுதியில் 2018 -ஆம் ஆண்டு சூலை மாதம் 24 -ஆம் நாள் (24-07-2018 ) அன்று
பணியிலிருந்து ஓய்வு பெற்றார் !
தந்தை, தாய் மறைவு !
திரு இராசேந்திரனின்
தந்தை திரு,மீனாட்சி சுந்தரம் 2020 -ஆம் ஆண்டு, மே மாதம், 31-ஆம் நாள், (31-05-2020) தனது
93 -ஆவது அகவையில் காலமானார். தாயார் திருமதி
பார்வதி அம்மையார் கடந்த 1923 -ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 19 -ஆம் நாள் (19-10-2023) தனது
95 -ஆவது அகவையில் காலமானார் !
நிறைவுரை !
இப்பொழுது 68 அகவையாகும் திரு இராசேந்திரன் உற்றார் உறவினர்களுடன் அன்பாகப் பழகும் இயல்பு கொண்டவர். அன்பான மனைவி, ஆதரவான மகன், குறிப்பறிந்து பழகும் மருமகள், கொஞ்சி மகிழ ஆறு அகவையாகும் பெயர்த்தி நறுமுகை ஆகியோர் அடங்கிய அளவான குடும்பம். திரு.இராசேந்திரன் குடும்பம் ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரோடி அனைத்து நலங்களும் பெற்று வளமோடு வாழ்க என்று வாழ்த்துவோம் !
=====================================================
மீ.இராசேந்திரன் வாழ்க்கை வரலாற்றில் முகாமையான
சில நிகழ்வுகள் !
10-04-1927 : அ.மீனாட்சி
சுந்தரம் பிறப்பு.
28-04-1927 : மீனாட்சியம்மையார்
மறைவு.
21-05-1946 : அ.சீனிவாசன்
பிறப்பு
00-11-1947 : சுந்தரம்
அம்மையார் மறைவு.
00-04-1943 : அ.மீனாட்சிசுந்தரம் பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி.
00-06-1943 : அ.மீனாட்சிசுந்தரம்
ஆசிரியர் பயிற்சியில் சேரல்
00-00-1944 : அ.மீனாட்சிசுந்தரம்
ஆசிரியராகப் பணியில் சேரல்.
00-00-1947 : அ.மீனாட்சிசுந்தரம்
– பார்வதி அம்மையார் திருமணம்.
28-06-1958 : மீ.இராசேந்திரன்
பிறப்பு.
00-10-1963 : கடிநெல்வயல்
பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரல்.
00-06-1968 : வேதாரணியத்தில்
6-ஆம் வகுப்பில் சேரல்.
03-05-1970 : கற்பகம்
பிறப்பு.
00-03-1974 : மீ.இராசேந்திரன்
பள்ளியிறுதி வகுப்பு தேர்ச்சி
18-04-1974 : சீ.அருணாச்சல
தேவர் மறைவு.
10-06-1974 : அ.சீனிவாசன்
– ஆனந்தி திருமணம்.
00-06-1974
: புகுமுக வகுப்பில் சேரல்.
00-08-1977
; திருச்சி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் சேரல்
00-00-1979
: நெல்காஸ்டில் தற்காலிகப் பணியில் சேரல்.
00-04-1980
: இந்தியா ரேடியாட்டர்ஸில் தற்காலிகப் பணியில் சேரல்.
23-04-1982
: திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தில் பழகுநர் பயிற்சி
1984
–1990 : அற்றைச் சம்பள வேலை (N.M.R. at B.H.E.L)
27-04-1991
: இராணிப்பேட்டை மிகுமின் நிறுவனத்தில் பணியில் சேரல்
08-09-1991
: மீ.இராசேந்திரன் – கற்பகம் திருமணம்.
24-11-1992
: அருண்மொழித் தேவன் பிறப்பு.
22-04-1996
: பட்டயப் படிப்பில் சேரல் (D.M.E)
21-08-2002
: மீ.இராசேந்திரன் வேலூர் வீடு புதுமனை புகுவிழா.
15-11-2015
: அருண்மொழித் தேவன் அளகையில் பணியேற்பு.
24-07-2018
: பணியிலிருந்து ஓய்வு பெறல்.
21-01-2020
: நறுமுகை பிறப்பு.
31-05-2020
: அ.மீனாட்சிசுந்தரம் மறைவு.
19-10-2023
: மீ.பார்வதி அம்மையார் மறைவு.
ஆக்கம்
+ இடுகை,
வை.வேதரெத்தினம்,
(vedarethinam76@gmail.com)
ஆட்சியர்,
“தமிழ்நட்பு”
வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2057, மீனம் (பங்குனி) 04]
{18-03-2026}
----------------------------------------------------------------------------------------------------

