என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

(16) கடிநெல்வயல் (திரு) ந.சுப்ரமணியனின் வாழ்க்கை வரலாறு !

 

    கடிநெல்வயல் ந.சுப்ரமணியன்- வாழ்க்கை வரலாறு !




முகவுரை.

என்னுடைய  தந்தையின்  சொந்த அண்ணன் திரு காசிநாத தேவரின் பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து, வளர்ந்து  வாழ்ந்து வருபவருமான திரு.ந.சுப்ரமணியன் அவர்களின் வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ,  திருத்தம் செய்யவோ, எதையும் புதிதாகக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க கூகுளில் சென்று https://thamizhnatpu.blogspot.com என்று உள்ளீடு (TYPE) செய்து   "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான்!   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம்" திறந்து கொள்ளும்.  அடுத்து நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !

 

பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123,  வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்   சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். இவர்களுள் திரு சிங்காருத்  தேவருக்கு இரண்டு  பிள்ளைகள்.  மூத்தவர் திரு காசிநாத  தேவர்;  இளையவர் என் தந்தையான திரு.வைத்தியநாத தேவர்;  இந்தக் கொடியில் திரு காசிநாத தேவரின் பெயரனாக, அவரது மகன் திரு.கா.நடராசன் இல்லத்தில் மலர்ந்து மணம் பரப்பி வரும்   மலரே திரு  ந.சுப்ரமணியன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

தந்தை வழிக் குலக்கொடி:

மாரியப்ப தேவர் > நல்லபொதிய தேவர் > சிங்காருத் தேவர் / பிரகதாம்பாள் அம்மையார் > காசிநாத தேவர் / மாரிமுத்து அம்மையார் > நடராச தேவர் / அலர்மேல் மங்கை அம்மையார் > சுப்ரமணியன் / (மனைவி) சாந்தி..


தாய் வழிக் குலக்கொடி:

குப்புசாமித் தேவர் > சுப்பையாத் தேவர் / அமிர்தவல்லி அம்மையார் > (மகள்) அலர்மேல் மங்கை / (கணவர்) கா.நடராச தேவர் > ந.சுப்ரமணியன் / சாந்தி..

 

தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், கடிநெல்வயல் என்னும் சிற்றூரில்  பள்ளித் தலைமை ஆசிரியராகப்  பணி புரிந்த திரு.கா.நடராச  தேவர் – அலர்மேல் மங்கை அம்மையாரின் புதல்வராக 1963 – ஆம் ஆண்டு, மே மாதம், 23 – ஆம் நாள்  (23-05-1963)  தோன்றியவர்  திரு. ந.சுப்ரமணியன் !


தொடக்கப் பள்ளிக்  கல்வி:

கடிநெல்வயலில்  இயங்கி வரும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1969 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், விசய தசமி நாளன்று திரு சுப்ரமணியன் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்[பட்டார். புத்தாடை உடுத்தி, கைகளில் ஓலைச் சுவடியை ஏந்திக்கொண்டு அன்று அவர் பள்ளி நோக்கி  சுறு சுறுப்புடன் நடைபோட்டது உடன் சென்ற மாணவர்களையே மிகவும் வியக்க வைத்தது !

 

நடுநிலைப் பள்ளிக்  கல்வி:

1974 -ஆம் ஆண்டு ப்பிரல் மாதம் ஐந்தாம் வகுப்புப் படிப்பை முடித்த திரு சுப்ரமணியன், அடுத்து  ஆறாம் வகுப்பில் சேர கருப்பம்புலம் பி.வி.தேவர் நடுநிலைப் பள்ளியை நாடினார். அங்கு 1974 -ஆம் ஆண்டு சூன் மாதம் 6-ஆம் வகுப்பில் சேர்ந்த அவர், 7, 8 – ஆம் வகுப்புகளையும் அதே பள்ளியில் படித்து நிறைவு செய்தார் !

 

உயர்நிலை & மேனிலைப் பள்ளிக் கல்வி:

கருப்பம்புலம் பள்ளியில் 8 - ஆம் வகுப்பு வரைப் படித்த திரு சுப்ரமணியன், அதற்கு மேல் படிக்க, அங்கு மேல் வகுப்புகள் இல்லாமையால், ஆயக்காரன்புலம் இரா.நடேசனார் அரசு மேனிலைப் பள்ளியில் 1977 – ஆம் ஆண்டு சூன் மாதம் 9 – ஆம் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் தொடர்ந்து படித்து, 10, 11 (+1) , 12 (+2) -ஆம் வகுப்புகளையும் படித்து நிறைவு செய்து 1982 – ஆம் ஆண்டு +2 தேர்வில்  தேர்ச்சி பெற்று வெளியில் வந்தார் !

 

பட்டப் படிப்பு:

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பட்டப் படிப்பில் சேர அவர் விரும்பினார். அதனால் 1982 – ஆம் ஆண்டு, சூன் மாதம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள அதிராம்பட்டினத்தில் இயங்கி வந்த காதிர் முகைதீன் கல்லூரியில் கலையியல் வாலை (B.A–History) வகுப்பில் சேர்ந்து வரலாற்றை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கலானார் ! பட்டப்படிப்பு இறுதியாண்டுத் தேர்வை 1985 – ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றுப் பட்டதாரியும் ஆனார் !

 

கூடுதல் தகுதி பெறும் முயற்சி:

பட்டப் படிப்பு மட்டும் போதாது, கூடுதலாக வேறு சில தொழிற் படிப்புச் சான்றுகளையும் பெற்றிட வேண்டும் என்னும் ஆர்வம் உந்தப் பெற, 1992 – ஆம் ஆண்டு மே மாதம் கடலூரில் நடைபெற்ற வேளாண்மை மேனிலைத் தேர்வில் (HIGHER  EXAMINATION  IN AGRICULTURE) கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப் பெறும் சான்றிதழையும் பெற்றார் !

 

இதையடுத்து   03 -05 -1993 முதல் 24- 07- 1993 வரை திருச்சியில் நடைபெற்ற தொழில்நுட்ப ஆசிரியர்க்கான சான்றிதழ் களப் பயிற்சியில் கலந்து கொண்டு வேளாண் தொழில் நுட்ப மேனிலைத் தேர்வில் வெற்றி பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககம் வழங்கிய சான்றிதழைப் பெற்றுள்ளார் !

 

திரு. சுப்ரமணியன் – சாந்தி திருமணம்:

வேலைக்குச் செல்லும் தகுதி பெறும் முயற்சிகளுக்கு இடையே, பெற்றோரின் விருப்பத்திற்கிணங்க திருமணம் செய்து கொள்ளும் சூழ்நிலையும் அவருக்கு ஏற்பட்டது. பஞ்சநதிக்குளம் கீழச்சேத்தி, ஆசிரியர் திரு மு. பழனித்துரை – சரோஜினி இணையரின் மகள் செல்வி சாந்தியை  திரு சுப்ரமணியன் கரம் பிடித்து மனைவியாக்கிக் கொண்டார். இவர்கள் திருமணம், கருப்பம்புலம் திரு. பி.வி.தேவர் திருமண அரங்கில் 1996 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 08 – ஆம் நாள் (8-9-1996) உற்றார் உறவினர் புடை சூழ இனிது நடைபெற்றது ! செல்வி சாந்தி 1977 – ஆம் ஆண்டு மே மாதம், 01 – ஆம் நாள் (01-05-1977)  பிறந்தவர்; +2 வரைப் படித்தவர் !

 

GHCL - பணியில் சேரல்:

திருமணம் ஆனபிறகு  அடுத்த ஓரிரு ஆண்டுகள் பல்வேறு வேலைகளுக்கு திரு சுப்ரமணியன் முயற்சி செய்தார். இறுதியில், கடிநெல்வயலில் இயங்கிவரும் குஜராத் மிகு வேதிப் பொருள் நிறுவனத் தொழிலகத்தில் (GUJARATH HEAVY CHEMICALS LIMITTED) தொழில் நுட்ப வினைஞனராக (TECHNICIAN)  2000 – ஆம் ஆண்டு மே மாதம் 01 – ஆம் நாள் (01-05-2000)  பணியில் சேர்ந்தார். இவரது பணிநிலையை இந்நிறுவனம் 2007 – ஆம் ஆண்டு நிலைப் பணியாக (PERMANENT) அறிவித்தது !

 

சுனில் நந்தா பிறப்பு:

திரு. சுப்ரமணியன் – சாந்தி இணையருக்கு 1997 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 04 – ஆம் நாள்  (04-11-1997) ஒரு ஆண் மகவு பிறந்தது. இக்குழந்தைக்கு சுனில் நந்தா என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர் !

 

சுனில் நந்தாவின்  தொடக்கக் கல்வி:

திரு.சுனில் நந்தா  L.K.G, U,K.G, மற்றும்  1- ஆம் வகுப்பு முதல்  08 -  ஆம் வகுப்பு வரையிலான தொடக்க நிலை மற்றும்  இடைநிலைக்  கல்வியை, (2003 – 2011) வேதாரணியத்தில் இயங்கி வரும்  புனித அந்தோணியார் பதின்ம மேனிலைப் பள்ளியில் பயின்றார் !

 

உயர்நிலப் பள்ளிக் கல்வி:

அடுத்து 09 – ஆம் வகுப்பு முதல் 10 - ஆம் வகுப்பு வரையிலான உயர்நிலைப் பள்ளிக் கல்வியை (2011 – 2013)  ஆயக்காரன்புலத்தில் இயங்கி வரும் இரா.நடேசனார் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.  10 -ஆம் வகுப்பு இறுதித் தேர்வில் 500 – க்கு 490 மதிப்பெண்கள் (98%) பெற்று பள்ளி முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார் !

 

மேனிலைப் பள்ளிக் கல்வி:

அடுத்த நிலையான மேனிலைப் பள்ளிக் கல்வியை -  +1 மற்றும், +2 வகுப்புப் படிப்புகளை (2013 – 2015)  - திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள சௌடாம்பிகா பதின்ம மேனிலைப் பள்ளியில் மேற்கொண்டார். +2 இறுதித் தேர்வில் 1200 – க்கு 1122 மதிப்பெண்கள் (93.5%) பெற்று அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார் !

 

பொறியியல் கல்வி:

விளையும்  பயிர் முளையிலேயே தெரியும்  என்னும் முது மொழிக்கு ஏற்ப இளமையிலேயே படிப்பில் படு சுட்டியாக விளங்கிய  திரு சுனில் நந்தா,  அடுத்து 2015 -ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் உள்ள ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து எந்திரப் பொறியியல் பிரிவில் (MECHANICAL ENGINEERING) நான்காண்டுகள் (2015–2019) படித்து, பொறியியல் வாலை (B.E) பட்டம் பெற்றார் !

 

புதிதாக  மாடி வீடு கட்டல்:

திரு சுப்ரமணியன் – சாந்தி இணையர் குடியிருந்து வந்த ஓட்டு வீடு அவரது பெரியப்பா திரு. கா.இருளப்ப  தேவர் அவர்கள் தனது 18 – ஆவது அகவையில் – அதாவது – 1950 – ஆம் ஆண்டு – கட்டிய வீடு. கிழக்குப் பார்த்த அந்த வீட்டில் நுழைந்தவுடன் தெற்கு வடக்கில் ஆளோடி, அடுத்து திண்ணை, திண்ணையின் தென்புறமும், வடபுறமும்  கசாலை எனப்படும் 12’ X  8’ அளவுள்ள அறைகள், இரு அறைகளிலும் கிழக்குப் பார்த்த சன்னல்கள்,  திண்ணையை அடுத்து உள்ளே சென்றால் அகலமான கூடம், கூடத்தின் தென்பக்கமாக 10 அடி உயர மரப் பத்தாயம், கூடத்தை அடுத்து உள்ளே தெற்கு வடக்கு நீள வாக்கில் ஆளோடி போன்றதொரு புறக்கட்டு, அதன் இரு புறமும் கிழக்கு மேற்கு நீள வாக்கில் ஆரல் எனப்படும் சமையலறைகள், 1950 வாக்கில் கட்டப்பெற்ற அந்த வீட்டை – 70 ஆண்டுகள் பழமையான வீட்டை – 2021 – ஆம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 15-ஆம் நாள்  (15-09-2021) (பிலவ ஆண்டு, ஆவணி மாதம் 30 - ஆம் நாள் புதன் கிழமை) இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் மாடி வீடு கட்ட மனை போட்டார் திரு.சுப்ரமணியன் !

 

ஒப்பந்தக்காரர் மூலம் ஒரே ஆண்டில் அதைச் செயல்படுத்தியும்விட்டார்.  2023 -ஆம் ஆண்டில் கட்டப்பெற்ற புதிய  வீட்டின் புதுமனை புகு விழா 2023 – ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம் 03 – ஆம் நாள் (03-03-2023) நடைபெற்றது. கட்டப்பெற்ற புதிய வீட்டின் படத்தை இக்கட்டுரையின் இறுதியில் இணைத்துள்ளேன். 70 ஆண்டு காலம் திரு இருளப்ப தேவரின் குடும்பத்திற்கு ஆலமரமாய் விளங்கி, 2021 – ஆம் ஆண்டு  இடிக்கப்பெற்ற பழமையான அந்த வீட்டின் படத்தையும் இணைத்திருக்கிறேன் ! பார்த்து மகிழுங்கள் !

 

எங்கே அந்த வீடு ?

உறவுக்காரப் பறவையான கே.எஸ். நடேச தேவர், தாய்ப் பறவையான மாரிமுத்து அம்மையார், பிள்ளைப் பறவைகளான கா.இருளப்ப தேவர், கா.நடராச தேவர், கா.செகதாம்பாள் அம்மையார், வாழவந்த பறவைகளான இ.இராஜம் அம்மையார், ந.அலர்மேல் மங்கை அம்மையார், இளம் பறவைகளான இ.இராமலிங்கம், ந.சுப்ரமணியன், ந.காசிநாதன், ந.தமிழ்ச்செல்வி எனப் பல பறவைகள் வாழ்ந்த வீடு, பேசிப் பேசி மகிழ்ந்த வீடு, படுத்து உறங்கிய வீடு-  நேற்றுவரை  இருந்தது; இன்று இல்லை ! “பழையன கழிதலும் புதியன புகுதலும், வழுவல, கால வகையினானே” என்ற நன்னூல் நூற்பாவின் பொருள் இதுதானோ ?

 

சுனில் நந்தாவுக்கு அஞ்சல் துறை வேலை வாய்ப்பு:

பொறியியல் பட்டம் பெற்றபின் குறுகிய கால இடைவெளியில் (2020)  அவருக்கு அஞ்சல் துறையில்  ஊரக அஞ்சலக மேலவர் (RURAL POST MASTER) பணி கிடைத்தது. இடையூர் - சங்கேந்தியை அடுத்த தேவதானம், வேதாரணியத்தை அடுத்த ஆதனூர் ஆகிய இடங்களில் பணி புரிந்தார் !

 

ஆயுள் காப்பீட்டுக் கழக வேலை வாய்ப்பு:

அடுத்து, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் வளர்ச்சி அதிகாரியாகப் பணி வாய்ப்புக் கிடைத்தது. 2023 ஆம் ஆண்டு முதல் திரு சுனில்நந்தா இப்பணியை ஏற்று வேதாரணியத்தைத் தலைமை இடமாகக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் !

 

சுனில் நந்தா – பொன்மொழி திருமணம்:

திரு சுனில் நந்தாவுக்குத் திருமணம் செய்து வைத்திட அவரது பெற்றோர் முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினர். இறுதியில், ஆயக்காரன் புலம் – 2 – ஆம் சேத்தி, சாந்தான்வெளி பகுதியைச் சேர்ந்த திரு. இர.திருமாறன் – தி.ஜானகி இணையரின் மகள் செல்வி பொன்மொழியைத் தேர்வு செய்தனர். இவர்கள் திருமணம் 2023 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 20 – ஆம் நாள் (20-08-2023) ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் உற்றார் உறவினர்கள் புடை சூழ மிகச்சிறப்பாக நடைபெற்றது.  1998 – ஆம் ஆண்டு சூன் மாதம், 25 – ஆம் நாள் (25-06-1998)  பிறந்த,  மணமகள் பொன்மொழி, B.Sc., M.B.A பட்டதாரி !

 

பெயர்த்தி பிறப்பு:

திரு சுப்ரமணியன் – சாந்தி இணையருக்கு, 2024 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 18 – ஆம் நாள் (18-08-2024) பெயர்த்தி பிறந்தாள். குழந்தைக்கு ஸ்மிர்த்தி (SMIRTHI) என்று பெயரிட்டு அழைத்து வரும் திரு சுப்ரமணியன் – சாந்தி இணையருக்கும், பெற்றோரான திரு சுனில் நந்தா – திருமதி பொன்மொழி இணையருக்கும் நமது நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வோம் !

 

மறைந்தவர்களை மறக்கவியலாது !

(01).சனக்குடி எஸ்.குழந்தைவேல் பிள்ளை மறைவு:

திரு சுப்பிரமணியனின் அத்தை  திருமதி செகதாம்பாளின் கணவர் திரு. எஸ்.குழந்தைவேல் பிள்ளை அவர்கள், 1974 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 25 – ஆம் நாள் (25-08-1974)  காலமானார். அரிமா (சிங்கம்) போல் பார்வையும் கம்பீரமான தோற்றமும் கொண்ட அவர் இறந்து 52 ஆண்டுகளாகியும் அவர் என் கண்ணுக்குள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார் !

 

(02).பாட்டி மாரிமுத்து அம்மையார் மறைவு:

திரு சுப்ரமணியனின் தந்தை வழிப் பாட்டியார் – வெள்ளைப் புடவை கட்டிக்கொண்டு பழைய வீட்டின் தெற்குக் கசாலையில் சிறிய அளவில் மளிகைக்கடை நடத்தி வந்த பாட்டியார் – மாரிமுத்து அம்மையார், 1995 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 27 – ஆம் நாள் (27-02-1995) இரு மகன்கள், மருமகள்கள், பெயரன், பெயர்த்தி அனைவரையும் விட்டுவிட்டு இவ்வுலக வாழ்வை நீத்தார் ! பிள்ளைப் பறவைகளை விட்டுவிட்டுத் தாய்ப்பறவை பறந்துவிட்டது !

 

(03) கருப்பம்புலம்  அத்தான்  திரு. ந.சிவானந்தம் மறைவு:

திரு கா.நடராச தேவரின் மருமகனும் திரு. சுப்ரமணியனின் தங்கை கணவருமான கருப்பம்புலம் ந.சிவானந்தம் M.A., B.Ed., அவர்கள் 2014 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 03 – ஆம் நாள்  (03-09-2014)  உற்றார் உறவினர்கள் அனைவரையும் துன்பக் கடலில் தள்ளிவிட்டு, அவர் மட்டும் மீளாத் துயிலில் ஆழ்ந்து போனார். என் மீது கொள்ளை அன்பும் மதிப்பும்  வைத்திருந்த அவர்  மறைந்துவிட்டர் என்பதை என்னால் இன்றும் கூட நம்பமுடியவில்லை !

 

(04).பெரியப்பா திரு.இருளப்ப தேவர் மறைவு:

திரு சுப்ரமணியனின் பெரியப்பாவும் கடிநெல்வயலின் மேனாள்  கிராம அதிகாரியுமான திரு. கா.இருளப்ப தேவர் அவர்கள் 2016 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 30 – ஆம் நாள் (30-09-2016) தனது 86 – ஆவது வயதில் ஈசனக்குடியில் உள்ள அவரது மகன் வீட்டில் காலமானார் ! கடிநெல்வயலில் தனது 18 – ஆம் அகவையில் சொந்தமாக வீடுகட்டி வாழ்ந்து காட்டிய  தலைமகன், ஊராரையும் உற்றார் உறவினர்களையும் துன்பத்தில் தவிக்க விட்டுவிட்டுப் பறந்துவிட்டார் !

 

(05).தாயார் திருமதி அலர்மேல் மங்கை மறைவு:

திரு சுப்ரமணியனின் தாயார் திருமதி அலர்மேல் மங்கை சில மாதங்களாக உடல்நலமின்றி வாழ்ந்து வந்தார். தன்னுடைய நலக்குறைவை எதிர்த்துப் போராட அவருக்கு வலுக் குறைந்து கொண்டே வந்தது. மருமகள் சாந்தி, பெற்ற மகளைப் போல தன் மாமியாரைக் கவனித்துக் கொண்டு  வந்தார். எனினும், இறுதியில் 2022 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 08 – ஆம் நாள் (08-02-2022)  தந்தை திரு கா.நடராச தேவரின் குலவிளக்கு  ஒளியிழந்து அணைந்து போனது.  “நெருநல் உளன் ஒருவன், இன்றில்லை என்னும் பெருமை படைத்து இவ்வுலகு” என்பது வள்ளுவர் வாக்கு !

 

(06).அத்தை திருமதி செகதாம்பாள் அம்மையார் மறைவு.

திரு. சுப்ரமணியனின் ஒரே அத்தை ஈசனக்குடி திருமதி கு.செகதாம்பாள் அம்மையார் அவர்கள் 2023 – ஆம் ஆண்டு, மே மாதம், 26 – ஆம் நாள் (26-05-2023) தனது 89-ஆம் அகவையில் காலமானார். 1952 -ஆம் ஆண்டு புயலின் போது, கோமளப் பேட்டையில் சிக்கிக்கொண்ட என்னைப் பாதுகாக்க அவர் பட்டபாடு இன்றும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.  இந்தப்பாசப்  பறவையும் பறந்து போய்விட்டது !


(07).பெரியம்மா இராஜம் அமையார் மறைவு:

கடிநெல்வயல் பங்காளிகள் அனவரையும் தன் அன்பால் கட்டிப் போட்டிருந்த பெரியம்மா - திரு சுப்ரமணியனின் பெரிய தாயார் -  திருமதி இராஜம் அம்மையார், 2026 – ஆம் ஆண்டு, சனவரி மாதம், 19 – ஆம் நாள் (19-01-2026) இப்பூவுலக வாழ்வை நீத்தார். இவ்வுலகில் வாழ்ந்தது போதும் என்று நினைத்து, கிளி பறந்துவிட்டது போலும் !

 

நிறைவுரை:

ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்பது அவனைப் பிற்காலத் தலைமுறையினருக்கு உள்ளது உள்ளபடிப் படம் பிடித்துக் காட்டும் ஒரு உயரிய முயற்சி. இந்த முயற்சியைச் செய்வதில், இந்தக் கட்டுரையை உருவாக்கிய வை.வேதரெத்தினமாகிய   எனக்கு மிகுந்த மன மகிழ்ச்சியும் மன நிறைவும் கிடைக்கிறது. திரு சுப்ரமணியன் தனது வாழ்வின் முற்பகுதியில் பல இன்னல்களுக்கு ஆட்பட்டவர். அவரது வாழ்வின் இடைப்பகுதியும், பிற்பகுதியும் மகிழ்ச்சிக்குக் குறைவில்லாமல் வளமுடனும் நலமுடனும் அமையும் என்று எதிர்பார்ப்போம் – வாழ்த்துவோம்! 

=========================================================

திரு.ந.சுப்ரமணியன் வாழ்கையின் முகாமையான  

நிகழ்வுகள்.

========================================================

23-05-1963: திரு சுப்ரமணியன் பிறப்பு.

00-10-1969: கடிநெல்வயல் பள்ளியில் 1-ஆம் வகுப்பில் சேரல்.

00-06-1974: கருப்பம்புலம் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேரல்.

25-08-1974: ஈசனக்குடி திரு. குழந்தைவேல் பிள்ளை மறைவு.

00-06-1977: வேதாரணியம் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேரல்.

00-04-1982. +2 வகுப்பில் தேர்ச்சி.

00-06-1982: கல்லூரியில் பட்டப்படிப்பில் சேரல்.

00-04-1985: B.A (His) பட்டப் படிப்பில் தேர்ச்சி.

00-05-1992: வேளாண்மை மேனிலைத் தேர்வில் தேர்ச்சி.

24-07-1993: தொழில் நுட்ப ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி.

27-02-1995: பாட்டி மாரிமுத்து அம்மையார் மறைவு.

08-09-1996: திரு.சுப்ரமணியன் – சாந்தி திருமணம்.

04-11-1997: மகன் சுனில் நந்தா பிறப்பு.

01-05-2000: GHCL – அன்னிலைப் பணியில் சேரல்.

00-00-2007: GHCL – நிறுவனத்தில் பணி நிரந்தரம்.

03-09-2014: கருப்பம்புலம் திரு.ந.சிவானந்தம் மறைவு.

30-09-2016: பெரியப்பா திரு.கா.இருளப்ப தேவர் மறைவு.

00-07-2019: சுனில் நந்தா B.E.பட்டம் பெறுதல்.

00-00-2020: சுனில் நந்தா அஞ்சல் துறையில் பணியேற்பு.

15-09-2021: திரு இருளப்ப தேவர் கட்டிய பழைய வீடு இடிக்கப்பட்ட நாள்

08-02-2022: தாயார் திருமதி. அலர்மேல் மங்கை மறைவு.

03-03-2023: புதிதாக மாடி வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்தல்.

00-00-2023: சுனில் நந்தா  L.I.C – யில் பணியேற்பு.

26-05-2023: அத்தை செகதாம்பாள் அம்மையார் மறைவு.

20-08-2023: சுனில் நந்தா – பொன்மொழி திருமணம்.

18-08-2024: பெயர்த்தி ஸ்மிர்த்தி பிறப்பு.

19-01-2026: பெரியம்மா இராஜம் அம்மையார் மறைவு.

======================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மீனம் (பங்குனி) 24]

{07-04-2026}

----------------------------------------------------------------------------------------------------

திரு.ந.சுப்ரமணியன்



திரு.ந.சுப்ரமணியன்




திருமதி. சு.சாந்தி சுப்ரமணியன்

திருமதி. சு.சாந்தி சுப்ரமணியன்



திருமதி சு.சாந்தி, திரு சுனில் நந்தா, திரு.ந.சுப்ரமணியன்

திரு சுனில் நந்தா



திரு சுனில் நந்தா & திருமதி பொன்மொழி



பவித்திரா, பொன்மொழி, சுனில், திலீபன்.



ஸ்மிர்த்தி



திருமதி அலர்மேல்மங்கை & திரு.கா.நடராசன்



திரு.கா.நடராசன்



திருமதி அலர்மேல் மங்கை நடராசன்

திரு.இ.இராமலிங்கம் & ஸ்ரீநாத் இராமலிங்கம்


திரு.ந.சிவானந்தம்




திருமதி தமிழ்ச்செல்வி சிவானந்தம்



திரு.திலீபன் - பவித்திரா இணையர்

கா.இருளப்ப தேவர்

இ.இராசம் அம்மையார்

இ.இராமலிங்கம்


இரா.திலகவதி இராமலிங்கம்

கு.குழந்தைவேல் பிள்ளை



செகதாம்பாள் குழந்தைவேல் பிள்ளை

கா.மாரிமுத்து அம்மையார்
திரு.சு.நடராச தேவர், ஆயக்காரன்புலம்


சரோஜினி & பழனித்துரை இணையர்






திரு.சுப்ரமணியன் பிறந்த 70 ஆண்டு பழமையான வீடு. 2021-ல் இடிக்கப்பட்டது.

திரு.சுப்ரமணியன் (2023-ல் கட்டிய ) இப்போது வாழும் வீடு.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக