என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

(17) சேரன்குளம் (திரு) இரகுநாத பிள்ளை வாழ்க்கை வரலாறு !

 

சேரன்குளம் திரு. அரங்க. இராகுநாத பிள்ளை  அவர்களின் வாழ்க்கை வரலாறு !

அரங்க. இரகுநாத பிள்ளை

முகவுரை.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டம், சேரன்குளம் என்னும் ஊரில் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து 2004 – ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 30 – ஆம் நாள் இப்பூவுலக வாழ்வை நீத்து, புகழுடம்பு எய்திய மாமா (மனைவியின் தந்தை) திரு.அரங்க. இரகுநாத பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)   எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம் ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது;  யாராலும் அழிக்கவோ,  திருத்தம் செய்யவோ,  எதையும் புதிதாகக் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாதது. நிரம்ப வரலாற்றுச் செய்திகள் அடங்கியுள்ள   இந்தப் பக்கத்தை திறந்து பார்க்க . விரும்புவோர் கூகுளில்   சென்று https://thamizhnatpu.blogspot.com   என்று உள்ளீடு (TYPE)  செய்து  "தேடுக" (SEARCH)   என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்    உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து  "தமிழ் நட்பு"  என்று காணப்படும்   வரியைச் சொடுக்குங்கள்.   அவ்வளவுதான்!   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம்"  திறந்து கொள்ளும்.  அடுத்து   நீங்கள் விரும்பும் ஆளிநரின்   (PERSON)   வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கத்தைப் படிக்கத் தொடங்கலாம் !

 

தோற்றம்:

திருவாரூர் மாவட்டம்  மன்னார்குடி நகரத்தின் கிழக்குப் புறமாக  ஓடும் பாம்பணி (பாமணி) ஆற்றின் கீழ்கரையில் அமைந்துள்ள சேரன்குளம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்த நினைவில் வாழும் திரு அரங்கசாமிப் பிள்ளை – திருமதி வள்ளியம்மை ஆகியோரின் மகனாக, 1920 -ஆம் ஆண்டு தோன்றியவர் திரு. இரகுநாத பிள்ளை !

 

உடன்பிறப்புகள் !

திரு இரகுநாத பிள்ளையின் உடன் பிறந்தோர் எண்ணிக்கை மொத்தம் மூன்று. இம்மூவரில், எல்லோருக்கும் மூத்தவர் திரு. அரங்க. இராமசாமிப் பிள்ளை. அடுத்துப் பிறந்தவர் திரு.அரங்க. அமிர்தலிங்கம் பிள்ளை. அடுத்துப் பிறந்தது வடிவாம்பாள் என்னும் பெண் குழந்தை. இம்மூவருக்கும் இளையவராகப் பிறந்தவரே திரு. அரங்க. இரகுநாத பிள்ளை !

 

திரு.அரங்க. இராமசாமிப் பிள்ளை !

இவர் மனைவி பெயர் திருமதி. அலமேலு.  மன்னார்குடி வட்டத்திலுள்ள காருகுடி என்னும் ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவ்விணையருக்கு மொத்தம் ஆறு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. அவர்கள் பெயர் விவரம் வருமாறு :- (01) திரு. இரா கணபதி (02) திரு. இரா. அரங்கராசன் (03) திரு.இரா. சீனிவாசன் (04) திரு.இரா. சவகர்லால் (05) திரு. இரா. சுசீந்திரன்  (06) திரு. இரா. நித்தியானந்தம் (07) செல்வி சரோசா. இந்த ஏழு பேருள்  நால்வர் மட்டுமே இப்போது உள்ளனர் !

 

இவர்களில் திரு. கணபதி (P.A to DISTRICT JUDGE), கெழுகத்தூரில் பெண் எடுத்தவர். திரு.அரங்கராசன் (CHIEF ENGINEER at NORTERN RAILWAY), சங்கேந்தி திரு பொன்னுத் துரைப் பிள்ளை மகளைத் திருமணம் செய்தவர். திரு.சீனிவாசன்  (ELECTRIC TRAIN DRIVER at NORTH EAST RAILWAY), மாங்குடி திரு முத்துவேல் பிள்ளை மகளைத் திருமணம் செய்தவர். திரு.சவகர்லால் (DRAUGHTING OFFICER at B.H.E.L. TRICHY), குமாரபுரம் (கொசதாங்கி) திரு. சகதீசம் பிள்ளையின் பெண்ணை மணந்தவர். திரு.சுசீந்திரன் (ADDITIONAL DIRECTOR, C.P.R.I. BANGALORE), திருவாரூர் திரு சோமசுந்தரம் பிள்ளையின் மகளை மணந்தவர். திரு. நித்தியானந்தம், மாங்குடி திரு. முத்துவேல் பிள்ளை மகளை மணந்தவர். செல்வி சரோசா, சங்கேந்தி திரு.பொன்னுத்துரைப் பிள்ளை மகனை மணந்தவர் !

 

திரு. அரங்க. அமிர்தலிங்கம் பிள்ளை !

இவர் மனைவி பெயர் திருமதி வேதம்பாள் அம்மையார் – மணலி திரு கந்தசாமி அவர்களின் தங்கை. இவர்களுக்கு  ஆறு  ஆண் குழந்தைகளும் இரு பெண் குழந்தைகளும் பிறந்தன. அவர்கள் பெயர் விவரம் வருமாறு:- (01) திரு. அ. இராசப்பா (CHIEF PHARMACIST) (02) திரு. அ. கேசவன் (P.W.D. EXECUTIVE ENGINEER) (03) திரு. அ. பிரகாசம் (JOINT REGISTRAR – CO-OP DEPT (04) திரு. அ. பரத்துவாசன் (MANAGER, STATE CO-OP DAND DEV.BANK)  (05) திரு. அ. இரவீந்திரன் (EXECUTIVE ENGINEER, PORT TRUST), CHENNAI)  (06) திரு. அ. மார்க்ஸ், ADVOCATE, MANNARGUDI.  (07) செல்வி அ. நிர்மலா  (08) செல்வி. பாரதி.  இவர்களுள் அறுவர் மட்டுமே இப்போது உள்ளனர் ! ஆறு பிள்ளைகளும் உயர்ந்த பதவிகளை வகித்தவர்கள். அவர்கள் திருமணம் செய்துகொண்ட உறவு வகை பற்றி இப்போது எனக்கு நினைவில்லை !

 

பொதுவுடைமைக் கட்சியினருக்குப் புகலிடம் தந்த வீடு !

திரு. அமிர்தலிங்கம் பிள்ளை, திரு இரகுநாத பிள்ளை இருவரும் பொதுவுடைமைக் கட்சியில் வட்டாரத் தலைவர்களாக இருந்தவர்கள். 1952 – ஆம் ஆண்டு வாக்கில் இந்திய அளவில் பொதுவுடைமைக் கட்சியினர் வேட்டையாடப் பட்டு சிறைப்படுத்தப் பட்ட காலத்தில், மேற்கு வங்கத்தைத் சேர்ந்த திரு அஜாய் கோஷ், திரு. பி.டி. ரணதிவே, கேரளாவைச் சேர்ந்த திரு இ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு.பி. இராமமூர்த்தி, திரு.எம்.ஆர்.வெங்கட் ராமன் போன்ற பெருந்தலைவர்கள் தலைமறைவு வாழ்க்கை நடத்திடப் புகலிடம் தந்தது திரு. அமிர்தலிங்கம் பிள்ளை, திரு இரகுநாத பிள்ளை ஆகியோரின் “தெற்குத் தெரு பிள்ளை வீடு” !

 

பொதுவுடைமைக் கட்சியில் ஏற்பட்ட பிளவு !

1962 - ஆம் ஆண்டு சீனா, இந்திய வடவெல்லையில் ஊடுறுவி பெரும் நிலப் பரப்பை வலிந்து பற்றிக்கொண்டது. இது, அப்போது இந்தியத் தலைமை அமைச்சராக இருந்த நேருவுக்கு  தெரியாமல் நடந்த  செயல்.  பாதுகாப்புத்  துறை ஒன்றிய அமைச்சராக இருந்த வி.கே.கிருஷ்ண மேனனின் விழிப்பின்மை காரணமாக நாட்டுக்கு ஏற்பட்ட இந்த இழுக்கினால் நேரு மனமுடைந்து 1964 – ஆம் ஆண்டு மே மாதம்,  27 - ஆம் (17-05-1964)  நாள் இறந்து போனார். சீனாவின் இத்தகைய செயலால் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர்களிடையே கருத்து மோதல் எற்பட்டு, சீன ஆதரவு, உருசிய ஆதரவு என இருவேறு நிலைகளை எடுத்தனர்.  இதன் விளைவாக பொதுவுடைமைக் கட்சி “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி” (COMMUNIST PARTY OF INDIA) ,  “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி – மார்க்சிஸ்டு)  (COMMUNIST PARTY OF INDIA – MARXIST)  என 1964 – ஆம் ஆண்டு இரண்டாகப் பிளவு பட்டது !


பொதுவுடைமைக் கட்சியில் இந்திய அளவில் ஏற்பட்ட பிளவு, சேரங்குளத்திலும் எதிரொலித்தது.  திரு. அமிர்தலிங்கம் பிள்ளை, “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி – மார்க்சிஸ்டு)”  ஆதரவு நிலையையும், திரு. இரகுநாத பிள்ளை “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி” ஆதரவு நிலையையும் எடுத்தனர்.  இவர்கள் மைத்துனரான மணலி திரு.சி.கந்தசாமி, “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி” ஆதரவு நிலையை வெளிப்படுத்தினார். இவர் அகில இந்திய அளவில் அறிமுகம் பெற்ற ஒரு பெருந்தலைவர். “இந்தியப் பொதுவுடைமைக் கட்சி” யின் மாநிலச் செயலாளராகவும் பணியாற்றியவர் !

 

வட்டாரத் தலைவர்கள் !

திரு. அமிர்தலிங்கம் பிள்ளை, திரு இரகுநாத பிள்ளை இருவரும் தமிழ்நாடு அளவில் அறிமுகமான வட்டாரத் தலைவர்களாக தத்தம் பிரிவில் உயர்ந்தனர்.  கட்சித் தலைவர்கள், இவர்கள் வீட்டிற்கு அடிக்கடி வந்து, கலந்துரையாடும் அளவுக்குப் புகழ் பெற்று விளங்கினர்.

 

மக்கள் மனம் கவர்ந்த ஊராட்சித் தலைவர் !

சேரன்குளம் ஊராட்சி ஏறத்தாழ 1000 குடும்பங்களை உள்ளடக்கிய ஒரு ஊரகம்.  ஊர்மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை குறைவின்றிச் செய்து கொடுத்து, மக்களின் மனம் கவர்ந்த தலைவராக விளங்கிய திரு இரகுநாத பிள்ளை தொடர்ச்சியாக 30 ஆண்டுகள் ஊராட்சிமன்றத் தலைவராகப் போட்டியின்றித் தேர்வு செய்யப்பெற்று வரலாறு படைத்தவர் !

 

சிறை சென்று மீண்ட போராளி !

பொதுவுடைமைக் கட்சி முன்னெடுத்த நிலமீட்சிப் போராட்டம் போன்ற பல போராட்டங்களில் கலந்து  கொண்டு சிறை சென்றவர் ! என் திருமணத்திற்கு முதல் நாள் அறிவிக்கப்பட்டிருந்த ஏதோவொரு போராட்டம் காரணமாக, போராட்ட நாளுக்கு  முன்னதாகவே காவல் துறையினர்  அவரைத் தளைப்படுத்தி  (கைது செய்து)  அழைத்துச் செல்ல நேரிட்டது. அஃது எப்படிப்பட்ட நேரம் தெரியுமா ? அவரது இரண்டாவது மகளின் திருமணத்திற்கு இரு நாள் முன்பு. திருமண  நிகழ்வை அறிந்த காவல் ஆய்வாளர், தன் சொந்தப் பொறுப்பில் திரு இரகுநாத பிள்ளையை பிணையில் விடுவித்து அனுப்பி வைத்தார்.  திருமணம் முடிந்து மறுநாள் தானாகவே காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளரிடம் சொல்லி தன்னைச் சிறையில் அடைக்கச் செய்தார் ! அரசியலில் நேர்மையையும் வாக்குத் தவறாமையையும் கடைப்பிடித்த பண்பாளர் !

 

திரு. அமிர்தலிங்கம் பிள்ளை – செல்வி வேதாம்பாள் திருமணம் !

திரு. அமிர்தலிங்கம் பிள்ளையின் தங்கையும்  திரு இரகுநாத பிள்ளையின் தமக்கையுமான  செல்வி வடிவம்மாள் மணலி திரு.சி. கந்தசாமி அவர்களின் தம்பி திரு சி. இராமலிங்கம் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். மணலியாரின் தங்கை  செல்வி  வேதம்பாளை  திரு. அமிர்தலிங்கம் பிள்ளை திருமணம் செய்து கொண்டார் !

 

திரு.இரகுநாத பிள்ளை – செல்வி செண்பகலட்சுமி திருமணம் !

பஞ்சநதிக்குளம் மேற்கு (கொண்டதேவன் காடு) திரு. நடேச தேவர் - இராசம்மாள் இணையரின்  மகளும் திரு. கணேச தேவர் அவர்களின் தங்கையுமான  செல்வி  செண்பகலட்சுமியை திரு இரகுநாத பிள்ளை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் 1946 அல்லது 1947 – ஆம் ஆண்டு நடந்திருக்கலாம் என்று கருதுகிறேன் !

 

திரு.இரகுநாத பிள்ளையின் தொழில் !

திரு. இரகுநாத பிள்ளைக்கு வேளாண்மை தான் முதன்மைத் தொழில். வேளாண்குடி மக்களிடம் அறுவடைப் பருவ காலத்தில் நெல் கொள்முதல் செய்து வணிகர்களிடம் விற்பனை செய்வதும்  துணைத் தொழிலாக இருந்தது.  அரசியல் ஈடுபாடு என்பதும் அவரை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது !

 

திரு.இரகுநாத பிள்ளை – செல்வி செண்பகலட்சுமி இணையரின் குடும்பம்!

இவ்விணையருக்கு ஆண் குழந்தைகள் எழுவரும், பெண் குழந்தைகள் நால்வரும் ஆக மொத்தம் 11 குழந்தைகள் பிறந்தனர். வேளாண்மைத் தொழிலையும், அரசியல் பணிப் பொறுப்புகளையும் திரு.இரகுநாத பிள்ளை கவனித்துக் கொண்டார். குடும்பத்தையும், பிள்ளைகள் படிப்பையும்  திருமதி செண்பகலட்சுமி கவனித்துக் கொண்டார் ! காலப் போக்கில் பிள்ளைகள் ஒவ்வொருவரும் வளர்ந்து வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை எட்டிப் பிடிக்க அணியமாகி வந்தனர். அவர்களது வாழ்க்கை ஓடம் இவ்வாறு அமைதியான முறையில் ஓடிக்கொண்டிருந்தது !

 

செல்வி காஞ்சனமாலா – திரு.ப.மா.சுப்ரமணியன் திருமணம் !

திரு.இரகுநாத பிள்ளை – செல்வி செண்பகலட்சுமி இணையரின் மூத்த பெண்ணின் பெயர் செல்வி காஞ்சனமாலா. திருமண அகவையை எட்டிய செல்வி காஞ்சனமாலாவுக்கு உரிய வாழ்க்கைத் துணையத் தேடித் தர அவரது  பெற்றோர் முயன்று வந்தனர். பல தேடல்களுக்குப் பிறகு, பஞ்சநதிக்குளம் மாணிக்கத் தேவரின் மகன், ஆசிரியர்,  திரு.ப.மா.சுப்ரமணியனை (பி.நா: 14-06-1941) தேர்வு செய்தனர். இவர்கள் திருமணம் 1969 – ஆம் ஆண்டு, மே மாதம், 22 – ஆம் நாள் (22-05-1969) நடைபெற்றது. இவர்களுக்கு 1970 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், 12 – ஆம் நாள் (12-10-1970) பிறந்த முத்தழகன் என்னும் பெயரில் ஒரு பிள்ளை இருக்கிறார். அடுத்துப் பிறந்த வான்மதி என்னும் பெண் குழந்தை 1974 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 17 – ஆம் நாள் (17-02-1974) குழந்தைப் பருவத்திலேயே இறந்து போனது !

 

திரு. வேதரெத்தினம் – செல்வி கலைச்செல்வி திருமணம் !

திரு. செல்வராசு – கனகாம்புசம் திருமணம்

திரு.இரகுநாத பிள்ளை – செல்வி செண்பகலட்சுமி இணையரின் இரண்டாவது பெண் செல்வி கலைச்செல்வி (பி.நா:17-06-1956) என் மனைவியானார். எங்கள் திருமணம் 1972 – ஆம் ஆண்டு, சூலை மாதம், 02 – ஆம் நாள் (02-07-1972) சேரன்குளத்தில் பெரிய வீட்டு முன்றிலில் (முற்றத்தில்) பந்தல் போட்டு, வெள்ளை கட்டி, ஒப்பனை செய்து, சட்டமன்ற உறுப்பினர் மன்னை திரு.மு.அம்பிகாபதி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  இதே நாளில், இதே அரங்கில் என் தங்கை செல்வி கனகாம்புசம், திரு இரகுநாத பிள்ளையின் தலைமகன் திரு செல்வராசுவை (பி.நா:16-05-1948)  மணந்தார்!

 

திரு. மகாதேவன் – செல்வி அன்புச்செல்வி திருமணம் !

திரு. இரகுநாத பிள்ளையின் இரண்டாவது மகன்  திரு. மகாதேவன் 1951 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 26 – ஆம் நாள் (26-09-1951) பிறந்தவர். சென்னை, வில்லிவாக்கம், சிங்காரம் பிள்ளை மேனிலைப் பள்ளியில் இவர் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றி வந்தார். வேதாரணியம் வட்டம்,  பன்னாள் என்னும் ஊரகத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர், திரு வேலாயுததேவர் – திருமதி அஞ்சம்மாள் இணையரின் மகள் செல்வி அன்புச் செல்வியை (பி.நா: 03-05-1957) திரு. மகாதேவன், வாழ்க்கைத் துணைவியாக ஏற்கும் விழா 1979 – ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 14 – ஆம் நாள் (14-11-1979) திருத்துறைப்பூண்டி, பெரியகோயில், அருள்மிகு மங்களநாயகி திருமண மண்டபத்தில் இனிது நடைபெற்றது !

 

திரு. பாஸ்கரன் - செல்வி பிரேமா திருமணம் !

திரு.இரகுநாத பிள்ளையின் மூன்றாவது மகன் திரு. பாஸ்கரன், தென்னிந்திய இருப்பூர்தித் துறையில் (SOUTHERN RAILWAY)  நிலைய மேலாளராக (STATION MANAGER) பணி புரிந்து வந்தார். திருத்துறைப்பூண்டி வட்டம், தரகமருதூர் என்னும் ஊரகத்தைச் சேர்ந்த திரு நாராயண பிள்ளையின் மகள் செல்வி பிரேமாவை 1981 – ஆம் ஆண்டு, மே மாதம், 25 – ஆம் நாள் (25-05-1981) இவர் மணந்து கொண்டார் ! இவ்விணையருக்குப் பிறந்த வசந்தகுமார், வினோத்குமார் என்னும் இரு ஆண் குழந்தைகளும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் !

 

திரு.அசோகன் – செல்வி தமயந்தி திருமணம் !

வேதாரணியம் வட்டம், ஆயக்காரன்புலம் 2 – ஆம் சேத்தியைச் சேர்ந்தவர்கள்  திரு தன்ராஜ் – திருமதி மங்களம் இணையர். இவர்கள் மன்னார்குடி இராசகோபாலசாமி திருக்கோயில் அருகிலுள்ள திருமஞ்சன வீதியில் குடியிருந்து வந்தனர். இவர்கள் மகன் திரு.அசோகன். இவரை, திரு இரகுநாத பிள்ளையின் மூன்றாவது பெண்ணாகிய செல்வி தமயந்தி 1985 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 22 – ஆம் நாள் (22-08-1985) மாலை சூடித் தன் மணவாளனாக மனம் பற்றிக் கொண்டார். இவர்கள் திருமணம் மன்னார்குடியில் நடைபெற்றது. இவ்விணையருக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரு பெருமக்கள் உள்ளனர் !

 

திரு.பிரகலாதன் – செல்வி அன்பரசி  திருமணம் !

திரு.இரகுநாத பிள்ளையின் நான்காவது  மகன் திரு. பிரகலாதன், பேருந்து நடத்துநராக (BUS CONDUCTOR)  பணி புரிந்து வந்தார். இவர் மன்னார்குடியை   அடுத்த அசேஷம் என்னும் ஊரகத்தைச் சேர்ந்த திரு. அமிர்தகடேசன் என்பவரின் மகள் செல்வி அன்பரசியை 1989 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 10 – ஆம் நாள் (10-09-1989) மணந்து கொண்டார். இவரது திருமணம் பொதுவுடைமைக் கட்சியின் புகழபெற்ற பெருந்தலைவர் திரு. K.T.K.தங்கமணி அவர்கள் தலைமையில் மன்னார்குடியில் நடைபெற்றது !


திரு.இரவி – செல்வி இராசவள்ளி திருமணம் !

ஆயக்காரன்புலம் 3 – ஆம் சேத்தியைச் சேர்ந்த திரு வையாபுரிப் பிள்ளை – திருமதி பார்வதி அம்மையார் இணையர் வலங்கைமான் அருகிலுள்ள பூனாயிருப்பில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் மகன் திரு இரவி படைத் துறையில் (MILITARY) பணியாற்றி வந்தார். இவர், திரு இரகுநாத பிள்ளையின்  நான்காவது பெண் செல்வி இராசவல்லியை (பி.நா: 28-12-1969) மாலையிட்டு மனைவியாக ஏற்றுக்கொள்ளும் மணவிழா 1991 – ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 18 – ஆம் நாள் (18-03-1991) மன்னார்குடியில் நடைபெற்றது ! இவ்விணையருக்குப் பிறந்த ஒரு பெண்ணும், ஒரு பிள்ளையும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர் !


திரு. சூரியமூர்த்தி – செல்வி ஆனந்த வல்லி திருமணம் !

திரு.இரகுநாத பிள்ளையின் ஐந்தாவது மகன் திரு. சூரியமூர்த்தி (பி.நா: 14-02-1961) பெங்களூரில் ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணி புரிந்து வந்தார். இவர் வேதாரணியம் வட்டம் தென்னடார் என்னும் ஊரகத்தைச் சேர்ந்த திரு எஸ்.பொன்னுத்துரைத் தேவரின் மகள் செல்வி ஆனந்தவல்லியை 1993 – ஆம் ஆண்டு, மே மாதம், 17 – ஆம் நாள் (17-05-1993) மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு மங்களாம்பிகை திருமண மண்டபத்தில் இனிது நடைபெற்றது !

 

திரு.ஜீவானந்தம் – செல்வி சாந்தி திருமணம் !

திரு.இரகுநாத பிள்ளையின் ஆறாவது மகன் திரு. ஜீவானந்தம், திருச்சி, பொன்மலை இருப்பூர்திப் பணிமனையில் (RAILWAY WORKSHOP) ஒருக்கராக (WELDER) பணிபுரிந்து வந்தார். திருத்துறைப்பூண்டி வட்டம் விளக்குடியை அடுத்த திருவலஞ்சுழியைச் சேர்ந்த ஆசிரியர் திரு.சுப்ரமணியன் என்பவரது மகள் செல்வி சாந்தியை 1993 – ஆம் ஆண்டு, மே மாதம், 23 – ஆம் நாள் (23-05-1993) இவர் மணந்து கொண்டார். இவர்கள் திருமணம் திருத்துறைப்பூண்டி அருள்மிகு மங்களாம்பிகை திருமண மண்டபத்தில் உற்றார் உறவினர் புடை சூழ இனிது  நடைபெற்றது !

 

திரு.செந்தில்குமார் – செல்வி பொன்மணி திருமணம் !

திரு.இரகுநாத பிள்ளையின் ஏழாவது மகன் திரு. செந்தில்குமார் (பி.நா: 31-05-1970) இந்திய அரசின் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வந்தார். இவர், அகத்தியன்பள்ளி திரு.நடராசன் அவர்களின் மகள் செல்வி பொன்மணியை 1998 – ஆம் ஆண்டு, மே மாதம், 29 – ஆம் நாள் (29-05-1998) திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் வேதாரணியத்தில் நடைபெற்றது !

 

திரு. அரங்க. இரகுநாத பிள்ளையின் மணிவிழா !

திரு. இரகுநாதபிள்ளை – திருமதி செண்பகலட்சுமி அம்மையார் இணையரின் 60 - ஆம் ஆண்டு மணிவிழா 1980 – ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 28 – ஆம் நாள் (28-03-1980) சேரன்குளத்தில் வீட்டளவில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டோர் பெயர் விவரம் வருமாறு ;- (01) திரு. இரகுநாத பிள்ளை (02) திருமதி செண்பகலட்சுமி அம்மையார் (03) திரு. இராமசாமிப் பிள்ளை (04) திருமதி அலமேலு அம்மையார் (05) திருமதி சரோஜா (06) திரு.ப,மா.சுப்ரமணியன் (07) திருமதி காஞ்சனமாலா (08) திரு வை.வேதரெத்தினம் (09) திருமதி கலைச்செல்வி (10) திரு செல்வராஜ் (11) திருமதி கனகாம்புஜம் (12) திரு. மகாதேவன் (13) திருமதி. அன்புச்செல்வி (14) திரு.பாஸ்கரன் (15) திரு.பிரகலாதன் (16) திரு. சூரியமூர்த்தி (17) திரு.ஜீவானந்தம் (18) திரு.செந்தில்குமார் (19) செல்வி தமயந்தி (20) செல்வி இராசவள்ளி (21) திரு.பாலதண்டாயுதம் (22) திரு. இராஜா (23) திரு.முத்தழகன் (24) திரு.இளம்பரிதி (25) செல்வி அம்மு (எ) மகேஸ்வரி) (26) செல்வி கவிக்குயில்.

 

மறைந்த நிலவுகள் !

(01)   திரு.செல்வராஜ் – கனகாம்புஜம்  இணையரின் இரண்டாவது மகன் திரு இளையராஜா, 1976 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 2- ஆம் நாள் (02-06-1976) ஒரு வயதுப் பிள்ளையாக இருக்கும்போது, (00-00-1975 – 02-06-1976) தேள் கொட்டியதால், இறந்து போனான் !

(02)   திரு இரகுநாத பிள்ளையின் மூத்த மகனும், என் தங்கை திருமதி கனகாம்புசத்தின் கணவருமான திரு.செல்வராசு, 1991 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 29 – ஆம் நாள் (29-08-1991) சிறுநீரகச் செயலிழப்பின் காரணமாக, (16-05-1948 – 29-08-1991) தனது 44 -ஆம் அகவையில் காலமானார் !

(03)   இந்தக் கட்டுரையின் கதாநாயகனும், என் மாமனாரும், என் மனைவியின் தந்தையுமான திரு அரங்க. இராகுநாத பிள்ளை அவர்கள் 2004 – ஆம் ஆண்டு, ஏப்பிரல் மாதம், 30 – ஆம் நாள் (30-04-2004) அகவை முதிர்வின் காரணமாக (00-00-1920 – 30-04-2004)  தன் 85 -ஆம் அகவையில் காலமானார் !

(04)   திரு செல்வராசு – திருமதி கனகாம்புசம் இணையரின் தலைமகனும், என் தங்கை மகனுமான திரு பாலதண்டாயுதம் 2013 – ஆம் ஆண்டு, சனவரி மாதம், 22 – ஆம் நாள் (22-01-2013) தனது 40 – ஆவது அகவையில் (26-07-1973 – 22-01-2013) தன் மனைவி மக்களைத் தவிக்க  விட்டு விட்டுக் காலமானார் !

(05)   திரு.இரகுநாத  பிள்ளையின் மனைவியும், என் மாமியாரும், என் மனைவியின் தாயாருமான திருமதி செண்பகலட்சுமி அம்மையார், 2013 – ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், 16 – ஆம் நாள் (16-10-2013) தன் 85 – ஆவது அகவையில் (00-00-1929 – 16-10-2013) அகவை முதிர்வின் காரணமாகக் காலமானார் !

(06)   திரு.இரகுநாத பிள்ளையின் ஆறாவது மகனும், பொன்மலை இருப்பூர்திப் பணிமனையில் பணிபுரிந்து வந்தவருமான திரு.ஜீவானந்தம், 2019 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 24 – ஆம் நாள் (24-09-2019) தனது 57 – ஆவது அகவையில்  (00-00-1963 – 24-09-2019) உடல்நலக் குறைவால் காலமானார். உடல் நலத்தில் கவனம் செலுத்தாமையால், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கிவிட்டு அவர் மறைந்து போனார் !

(07)   திரு இரகுநாத பிள்ளையின் இரண்டாவது மகனும், என் மனைவியின் அண்ணனும், ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குநருமான  திரு மகாதேவன், 2019 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29 – ஆம் நாள் (29-09-2019) தனது 69 – ஆவது அகவையில் (26-9-1951 - (29-09-2019) சிறுநீரகச் செயலிழப்பின் காரணமாகக் காலமானார் !

=======================================================

திரு.இரகுநாத பிள்ளை வாழ்க்கை வரலாற்றின் முகாமையான நிகழ்வுகள்!

=======================================================

00-00-1920 : திரு. இரகுநாத பிள்ளை பிறப்பு.

00-00-1929 : செல்வி ந.செண்பகலட்சுமி பிறப்பு

14-06-1941 : திரு. ப.மா.சுப்ரமணியன் பிறப்பு.

00-00-1946 : திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி திருமணம்.

16-05-1948 : திரு. இரகு.செல்வராசு பிறப்பு.

26-09-1951 : திரு. இரகு. மகாதேவன் பிறப்பு.

17-06-1956 : இரகு. கலைச்செல்வி பிறப்பு.

03-05-1957 : பன்னாள் வே.அன்புச்செல்வி பிறப்பு.

14-02-1961 : இரகு சூரியமூர்த்தி பிறப்பு.

00-00-1962 : பொதுவுடைமைக் கட்சித் தலைவர்கள் -  புகலிடம் அளிப்பு.

00-00-1963 : திரு. இரகு ஜீவானந்தம் பிறப்பு.

27-05-1964 : இந்தியத் தலைமையமைச்சர் திரு நேரு மறைவு.

00-00-1964 : பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிளவுபடல்.

22-05-1969 : திரு.ப.மா.சுப்ரமணியன் – செல்வி காஞ்சனமாலா திருமணம்.

28-12-1969 : செல்வி இராசவல்லி இரவி பிறப்பு.

31-05-1970 : திரு. இரகு. செந்தில்குமார் பிறப்பு.

12-10-1970 : திரு. ப.மா.சு.முத்தழகன் பிறப்பு.

02-07-1972 : திரு. வை.வேதரெத்தினம் – செல்வி கலைச்செல்வி திருமணம்.

02-07-1972 : திரு. இரகு செல்வராசு – செல்வி கனகாம்புசம் திருமணம்

26-07-1973 : திரு. பாலதண்டாயுதம் பிறப்பு.

17-02-1974 : செல்வி ப.மா.சு.வான்மதி இறப்பு.

02-06-1976 : திரு.செ.இளையராஜா தேள் கடியினால் இறப்பு.

18-05-1977 : செல்வி அம்மு (எ) மகேசுவரி பிறப்பு.

10-03-1979 : திரு.செ.இராஜா பிறப்பு.

14-11-1979 : திரு. இரகு. மகாதேவன் – செல்வி அன்புச்செல்வி திருமணம்.

28-03-1980 : திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி 60 – மணிவிழா.

17-11-1980 : திரு.ம.இராகுல் பிறப்பு.

25-05-1981 : திரு இரகு. பாஸ்கரன் – செல்வி பிரேமா திருமணம்.

24-09-1982 : திருமதி உமா இராகுல் பிறப்பு.

14-04-1983 : திரு.ம.பகத்சிங் பிறப்பு.

22-08-1985 : செல்வி தமயந்தி – திரு த.அசோகன் திருமணம்.

17-01-1986 : திரு பா.வினோத்குமார் பிறப்பு.

10-09-1989 : திரு.இரகு. பிரகலாதன் – செல்வி அன்பரசி திருமணம்.

18-03-1991 : செல்வி இராசவல்லி – திரு.வை. இரவி திருமணம்.

29-08-1991 : திரு.இரகு. செல்வராசு மறைவு.(16-5-1948 - 29-8-1991) (44 அகவை)

04-09-1991 : திருமதி பூங்கோதை பகத்சிங் பிறப்பு.

17-05-1993 : திரு.இரகு. சூரியமூர்த்தி – ஆனந்த வள்ளி திருமணம்.

23-05-1993 : திரு. இரகு. ஜீவானந்தம் – செல்வி சாந்தி திருமணம்.

19-12-1994 : திரு. சூ. நவீன் பிறப்பு.

31-05-1996 : செல்வி ஜீ.வினிதா பிறப்பு.

22-04-1998 : செல்வி ஜீ.சுருதி பிறப்பு.

29-05-1998 : திரு.இரகு. செந்தில்குமார் – செல்வி பொன்மணி திருமணம்.

15-11-1999 : செல்வி அம்மு (மகேசுவரி) – திரு தமிழ்ச்செல்வன் திருமணம்.

30-04-2004 : திரு. இரகுநாத பிள்ளை மறைவு. (00-00-1920 - 30-4-2004) (85 அகவை)

04-06-2005 : திரு. ஜீ. லோகேஷ் பிறப்பு.

15-09-2011 : திரு. ம.இராகுல் – செல்வி உமா திருமணம்.

22-01-2013 : திரு. செ. பாலதாண்டாயுதம் மறைவு. (26-7-1973 - 22-1-2013) 

                      (40 அகவை)

16-10-2013 : திருமதி செண்பகலட்சுமி அம்மையார் மறைவு. ( 00-00-1929   -16-10-

                       2013) (85 அகவை)

06-02-2017 : திரு.ம.பகத்சிங் – செல்வி பூங்கோதை திருமணம்.

24-06-2019 : திரு. இரகு. ஜீவானந்தம் மறைவு.(00-00-1963 -  24-6-2019) (57 அகவை)

29-09-2019 : திரு. இரகு. மகாதேவன் மறைவு. (26-9-1951 -29-9-2019) (69 அகவை)

 ======================================================

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மேழம் (சித்திரை) 03]

{16-04-2026}

----------------------------------------------------------------------------------------------------

திருமதி செண்பகலட்சுமி & திரு இரகுநாத பிள்ளை



திரு இரகுநாத பிள்ளை & திருமதி செண்பகலட்சுமி 



திரு இரகுநாத பிள்ளை 


 திருமதி செண்பகலட்சுமி 


திருமதி கனகாம்புசம் & திரு செல்வராசு.


திரு மகாதேவன் & திருமதி அன்புச்செல்வி

திருமதி காஞ்சனமாலா & திரு.ப.மா.சுப்ரமணியன்




திரு. வை.வேதரெத்தினம் & திருமதி கலைச்செல்வி.



திருமதி சாந்தி & திரு. ஜீவானந்தம்


திரு. பாலதண்டாயுதம்



திரு. இராஜா



திருமதி அம்மு (எ) மகேசுவரி & திரு.தமிழ்ச்செல்வன் 


திரு.சூரியமூர்த்தி 


திரு.பிரகலாதன்


திரு. ஜீவானந்தம்


திரு.செந்தில்குமார் 




திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி,  60 - ஆம் அகவை நிறைவு - – மணிவிழா. (28-03-1980 - அன்று எடுத்த படம்)


திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி,  60 - ஆம் அகவை நிறைவு - – மணிவிழா. (28-03-1980 - அன்று எடுத்த படம்)


திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி,  60 - ஆம் அகவை நிறைவு - – மணிவிழா. (28-03-1980 - அன்று எடுத்த படம்)





திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி,  60 - ஆம் அகவை நிறைவு - – மணிவிழா. (28-03-1980 - அன்று எடுத்த படம்)

திரு.இரகுநாத பிள்ளை – செண்பகலட்சுமி,  60 - ஆம் அகவை நிறைவு - – மணிவிழா. (28-03-1980 - அன்று எடுத்த படம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக