என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

செவ்வாய், 7 ஏப்ரல், 2026

(15) பொன்னேரி (திரு) கனகராசனின் வாழ்க்கை வரலாறு !


பொன்னேரி திரு ச.கனகராசன் வாழ்க்கை வரலாறு !

திரு.ச.கனகராசன்

முகவுரை.

என்னுடைய  தந்தை வழித் தாத்தா திரு. சிங்காருத் தேவரின் அண்ணன் பெயரனும்,  கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து,  சென்னையில் பணிபுரிந்து இப்பொழுது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வாழ்ந்து வருபவருமான தம்பி ச.கனகராசனின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ,  எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்   https://thamizhnatpu.blogspot.com  என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து  "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான்!  "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம்"  திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  (PERSON) வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !

 

பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் மாரியப்ப தேவர். இவரது மகன்  நல்லபொதிய தேவர். நல்லபொதிய தேவரின் மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். திரு.சீனிவாச தேவர் நீலாம்பாள் என்னும் மங்கையை மணந்து கொண்டார். திரு சிங்காருத் தேவர் பிரகதாம்பாள் என்னும் மங்கை நல்லாளைத் திருமணம் செய்து கொண்டார். திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; அடுத்தவர்  திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! திரு சண்முகவேல் தேவர் இல்லத்தில் மலர்ந்த நறுமண  மலர் தான்  திரு கனகராசன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)

 

தந்தை வழிக் குலக்கொடி: 

மாரியப்ப தேவர்  >  நல்லபொதிய தேவர்  >  சீனிவாச தேவர் / நீலாம்பாள் அம்மையார்  >  சண்முகவேல் தேவர் / பஞ்சரத்தினம் அம்மையார்  >  கனகராசன் /  (மனைவி)  சுமதி.

 

தாய் வழிக் குலக் கொடி: 

பிச்சையாத் தேவர் / சீதாலட்சுமி  அம்மையார்   > (மகள்) பஞ்சரத்தினம் அம்மையார்  / (கணவர்) சண்முகவேல் தேவர்  >  கனகராசன் / (மனைவி)  சுமதி. 

 

திரு சண்முகவேல் தேவர்  பஞ்சரத்தினம் அம்மையார் 

இணையர் திருமணம் !

திரு சீனிவாச தேவரின் மூத்த மகன் திரு. அருணாச்சல தேவர், திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளுர் சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையாரின் மூத்த மகள் செல்வி மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். இளையவரான திரு.சாம்பசிவ தேவர், பஞ்சநதிக்குளம்  சின்னகாரியக்காடு திரு கந்தசாமித் தேவரின் அண்ணன் திரு சிங்காரவேல் தேவரின் மகளான செல்வி வீரம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.   கடைசிப் பிள்ளையான திரு சண்முகவேல் தேவர்  அப்போது கடிநெல்வயல் கீழக்காட்டில் வாழ்ந்து வந்த திரு க. பிச்சையாத் தேவர் – சீதையம்மாள் இணையரின் இரண்டாவது மகளான செல்வி பஞ்சரத்தினம் என்பவரை  1942 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் !

 

திரு  சண்முகவேல்  தேவரின்  வாழ்க்கைப் பணி !

திரு.சண்முகவேல் தேவர், தனது தாத்தா திரு நல்லபொதிய தேவர் மற்றும் தந்தை திரு.சீனிவாசத் தேவர் ஆகியோரின் வழிவந்த குடும்பச் சொத்தான வேளாண் நிலங்களில், தனது அண்ணன்மார் திரு அருணாச்சலத் தேவர், திரு சாம்பசிவத் தேவர் ஆகியோருடன், தொடக்கத்தில் இணைந்து கூட்டாக வேளாண்மை செய்து வந்தார். பிற்காலத்தில் அண்ணன்மாருடன் பாகப் பிரிவினை ஆனபின்பு, தனது பங்காகக் கிடைத்த நன்செய், புன்செய் நிலங்களில் தனியாக வேளாண்மை செய்வதில் கவனம் செலுத்தி வந்தார் !

 

திரு சண்முகவேல் பஞ்சரத்தினம் இணையரின் குழந்தைகள் !

திரு சண்முகவேல் பஞ்சரத்தினம் இணையருக்கு  மூன்று ஆண்  குழந்தைகள்  பிறந்தனர்.  சதாசிவம், செயராமன், கனகராசன் என்று அவர்களுக்குப் பெயரிட்டு வளர்த்து வந்தனர்.  தலைச்சன் பிள்ளையான திரு சதாசிவம் 1947 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10 -ஆம் நாள் (10-04-1947) பிறந்தார். இரண்டாவது பிள்ளையான திரு செயராமன்  1952 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29 -ஆம் நாள் (29-12-1952)  (நந்தன ஆண்டு மார்கழி மாதம், 15 -ஆம் நாள், திங்கள் கிழமை, உரோகிணி விண்மீன் நிலவிய நாளில்)  பிறந்தார். மூன்றாவது பிள்ளையான திரு கனகராசன் 1954 -ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம், 09 - ஆம் நாள் (9-12-1954) (சய ஆண்டு, கார்த்திகை மாதம், 24 -ஆம் நாள்)  வியாழக்கிழமை உரோகிணி விண்மீன் நிலவிய நன்னாளில்) பிறந்தார் !

 

திரு. கனகராசனின் கல்விப் பயணம்  !

தொடக்கக் கல்வி:

திரு கனகராசன், 1962 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் கடிநெல்வயலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து தனது கல்விப் பயணத்திற்குப் பிள்ளையார் சுழி போட்டார். தொடர்ந்து ஐந்தாம் வகுப்பு வரை அங்கேயே படித்து மேற்படிப்புக்காக ஏப்பிரல் 1967 -ல் அங்கிருந்து வெளியேறினார்.

 

இடைநிலை & உயர் நிலைக் கல்வி:

கடிநெல்வயல் தொடக்கப் பள்ளியிலிருந்து விடுபட்டு, தனது மேற்படிப்பை முன்னிட்டு, கருப்பம்புலத்தில் உள்ள பி.வி.தேவர் நடுநிலைப் பள்ளியில்  06 - ஆம் வகுப்பில் 1967 – ஆம் ஆண்டு சூன் மாதம் சேர்ந்தார். 08 - ஆம் வகுப்பு வரை அங்கேயே படித்த அவர், அதை நிறைவு செய்தபின், அங்கிருந்து விடுபட்டு, வேதாரணியத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 1969 – ஆம் ஆண்டு சூன் மாதம்  09 - ஆம் வகுப்பில் சேர்ந்தார். 10, மற்றும் 11 – ஆம் வகுப்புப் படிப்புகளை அதே பள்ளியில் தொடர்ந்த அவர், பள்ளியிறுதி வகுப்பான 11 – ஆம் வகுப்புத் தேர்வை 1974 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றார் !

 

தந்தை  திரு.சண்முகவேல்  தேவர் மறைவு:

திரு கனகராசன் வேதாரணியம் பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது – அதாவது 1970 – ஆம் ஆண்டு சூலை மாதம் - அவரது தந்தை திரு சண்முகவேல் தேவர் காலமானார். இளமைக் காலத்தில் தந்தையை இழப்பது என்பது கொடுமையானது. இத்தகைய துன்பத்தை திரு கனகராசனும் அனுபவித்திருக்கிறார் !

 

தேவூர் மாமா உணவகத்தில் தொழில் கற்றல்:

பள்ளியிறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின்பு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்புற்றுத் தேங்கி நிற்கையில், கனகராசனின் தாய்மாமாவான  K.P.M எனப்படும் திரு க.பி.முருகையாத் தேவர், திரு கனகராசனுக்கு ஒரு அறிவுரை சொன்னார். நாகப்பட்டினம் அருகிலுள்ள தேவூரில்  உணவு விடுதி (HOTEL) தொடங்கி, வெற்றிகரமாக நடத்திவந்த என் தாய்மாமா திரு சி,பண்டரிநாதன் அவர்களின் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்து தொழில் கற்றுக்கொண்டால் எதிர்காலத்திற்குப் பயான்படும்  என்பதே அந்தக் கருத்துரை. அவரது  அறிவுரைப்படி, திரு. கனகராசன் 1975-ஆம் ஆண்டு தேவூர் மாமா உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். ஈராண்டுகள் அங்கு பணிபுரிந்து உணவகத் தொழிலை ஓரளவுக்குக் கற்றுக்கொண்டார் !

 

அண்ணன் வேதரெத்தினம் அவர்களின் அறிவுரை:

திரு கனகராசனை ஒருமுறை சந்தித்த நான் (வை.வேதரெத்தினம்) பள்ளியிறுதி வகுப்பு வரைப் படித்த அவரை, நாகப்பட்டினம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஏதாவதொரு தொழிற் பிரிவில் சேர்ந்து, தொழிற் கல்வி பயிலும்படியும், அதற்கான ஏற்பாடுகளை நான் செய்கிறேன் என்றும் வாக்குறுதி தந்தேன். அப்பொழுது நான் நாகையில்  (1975 – 1981) பண்டகக் காப்பாளராக (STORE KEEPER) பணி புரிந்து வந்தேன் !

 

நாகை தொழிற் பயிற்சி நிலயத்தில் சேரல்:

நான் வாக்களித்தபடி திரு கனகராசனை 1977 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், நாகப்பட்டினம் அரசினர் தொழிற்பயிற்சி நிலயத்தில் “வார்ப்பியல்” (MOULDER) பிரிவில் சேர்த்துவிட்டேன். அத்துடன் பயிற்சி நிலைய மாணவர் விடுதியிலும் (HOSTEL) இடம் கிடைக்கச் செய்தேன். மாணவர் விடுதியில் திரு. கனகராசன் சொந்தமாகச் சமைத்துச் சாப்பிட்டு வந்தார் !

 

பயிற்சி நிறைவு:

வார்ப்பியல் தொழிற் பிரிவில் ஓராண்டுப் பயிற்சி நிறைவடைந்து 1978 -ஆம் ஆண்டு சூலை மாதம் திரு.கனகராசன் அகில இந்தியத் தொழிற் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேர்ச்சி அடைந்தார் !

 

பழகுநர் பயிற்சியில் சேரல்:

அகில இந்தியத் தொழிற் தேர்வினை அடுத்து, பழகுநர் பயிற்சி பெற்றிட  வேண்டும். சென்னை, திருவொற்றியூரில் உள்ள K.C.P. LIMITED என்னும் தொழிற்சாலையில் பழகுநர் பயிற்சிக்குத் தகுதியான மாணவர்கள் பட்டியல்  அனுப்புமாறு நாகப்பட்டினம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் கேட்கப்பட்டிருந்தது.    அனுப்பவிருந்த பட்டியலில்  திரு.கனகராசனுக்கு இடம் கிடைக்கவில்லை. தட்டச்சரிடம் சொல்லி பட்டியலில் திரு கனகராசன் பெயர் இடம் பெறச் செய்தேன். எப்படிச் செய்தேன், என்ன செய்தேன் என்பதை இங்கு விவரிக்க இயலாது. K.C.P. LIMITED தொழிலகத்தில் இடம் கிடைத்து, அங்கு 09-09-1978 முதல் 14.03.1980 வரை பழகுநர் பயிற்சியை மேற்கொண்டு திரு.கனகராசன் அதை வெற்றிகரமாக நிறைவு செய்தார் !

 

வேலை தேடும் படலம் தொடங்கியது:

வார்ப்பியல் தொழிலில் அடிப்படைப் பயிற்சி, பழகுநர் பயிற்சி எல்லாம் முடிந்துவிட்டது. இனி நிலைத் தன்மையுடைய வேலை வாய்ப்பைத் தேடவேண்டும் என்ற  சந்திப்பில் நின்றுகொண்டு  நாலாபுறமும் கண்களைச் சுழற்றித் தேடத் தொடங்கினார். கடுமையான தேடல்; விடாமுயற்சியுடைய தேடல்.முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா? அதன்விளைவாக திரு.கனகராசனுக்குக் கிடைத்த வேலைவாய்ப்புகள் இதோ:-

 

(01) .சிவானந்தா ஸ்டீல்ஸ், (SIVANANTHA STEELS) தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை. ஆகஸ்டு 1980 முதல் 1981 வரை = 13 மாதங்கள்.

(02) சதர்ன் கேஸ்டிங்ஸ் (SOUTHERN CASTINGS) மறைமலை, நகர், செங்கை மாவட்டம் – SUPERVISOR – செப்டம்பர் 1981 முதல் பிப்ரவரி 1983 வரை = 18 மாதங்கள்

(03) .சிவானந்தா ஸ்டீல்ஸ், (SIVANANTHA STEELS) தொழிற்பேட்டை, அம்பத்தூர், சென்னை- மார்ச்சு 1983 முதல் ஏப்பிரல் 1985 வரை = 26 மாதங்கள்.

(04) .நெல்காஸ்ட் (NELCAST LTD.) கூடூர், ஆந்திர மாநிலம் – SUPERVISOR – மே 1985 முதல் செப்டம்பர் 2004 வரை = 19 ஆண்டு, 5 மாதம்.

(05) பயோனியர் அல்லாய் கேஸ்டிங்க்ஸ் (PIONEER ALLOY CASTINGS LTD) சிப்காட், கும்மிடிப் பூண்டி – ASSISTANT MANAGER – அக்டோபர் 2004 முதல் நவம்பர் 2006 வரை = 02 ஆண்டு 4 மாதம்.

(06) .நெல்காஸ்ட் (NELCAST LTD.) பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம் – நவம்பர் 2006 முதல்  அக்டோபர் 2009 வரை = 03 ஆண்டுகள்.

(07) ஜெ.கே.எம். ஃபெரோடெக் லிட் (J.K.M.FERRO TECH LTD) சிப்காட், கும்மிடிப் பூண்டி- சனவரி 2010 முதல் ஆகஸ்டு 2012 வரை. = 02 ஆண்டு,08 மாதம்.

(08) ஆகஸ்டு 2012 -ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

=======================================================

மொத்தப் பணிக்காலம் = 32 ஆண்டுகள் 02 மாதங்கள்)

============================================================

 58 -ஆம் அகவையில் – அதாவது 2012 ஆண்டு  பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் பணி நீட்டிப்பு பெற்று அல்லது புதிய பணியேற்று பல்வேறு நிலைகளில் 2024 -ஆம் ஆண்டு வரை பணிபுரிந்து வந்திருக்கிறார். பணிக்காலத்தில் அவர் பட்ட துன்பங்கள் கணக்கிலடங்காது. எனினும் வாழ்க்கையில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்னும் மனதில் கொண்டிருந்த உறுதியே அவரை மேலும் மேலும் கடினமாக உழைக்கச் செய்திருக்கிறது !


திரு. கனகராசன் – செல்வி. சுமதி திருமணம்:

ஆந்திர மாநில கூடூரில்  நெல்காஸ்ட் என்னும் தொழிற்சாலையில் பணி புரிந்து வந்த காலத்தில் – அதாவது 1987 -ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 21 -ஆம் நாள் திரு கனகராசனுக்குத் திருமணம் நடைபெற்றது. வேதாரணியம் வட்டம், தகட்டூரில் ஒரு பகுதியான ஆதியங்காட்டில் வாழ்ந்து வந்த இவரது தாய்மாமாவான திரு.க.பி.கந்தசாமி – வெ.சரோஜா இணையரின் இரண்டாவது மகளான செல்வி சுமதிக்கு மாலையிட்டு மனைவியாக்கிக் கொண்டார். இவர்கள் திருமணம் உற்றார் உறவினர்கள் புடை சூழ திருத்துறைப் பூண்டி பிறவி மருந்தீசர் கோயில். மங்களாம்பிகா திருமண மண்டபத்தில் நடைபெற்றது !

 

குழந்தைகள்: (01) இரத்தினப் பிரியா:

திரு கனகராசன் – சுமதி இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.  முதற் குழந்தை 1996 – ஆம் ஆண்டு சூன் மாதம், 13 – ஆம் நாள் (13-06-1996) பிறந்தது. இக்குழந்தைக்கு இரத்தினப் பிரியா என்று பெயர் சூட்டி வளர்த்தனர். இரத்தினப்பிரியா வளர்ந்து, தகவல் தொழில் நுட்பப் பொறியியலில் வாலைப் பட்டம் (B.E–IT) பெற்று, தந்தையின் கடின உழைப்புக்குத் தகுந்த பதிலைத் தந்திருக்கிறார். 2018 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 05 – ஆம் நாள் (05-06-2018), ஆயக்காரன்புலம், 3 – ஆம் சேத்தி திரு கார்த்தியப்ப தேவர் – சுலோச்சனா இணையரின் மகன் திரு K.மணிகண்டன் B.E., என்பவருக்கு மாலை அணிவித்துத் தன் மணவாளன் ஆக்கிக் கொண்டார் இரத்தினப் பிரியா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இருவரும் இப்போது அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்தில் மென்பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர் !

 

குழந்தைகள்: (02) வித்யா:

திரு.கனகராசன் – சுமதி இணையருக்கு இரண்டாவது பெண் குழந்தை, 1999 – ஆம் ஆண்டு, சூலை மாதம், 10 ஆம் நாள் (10-07-1999) பிறந்தது. இக்குழந்தைக்கு வித்யா என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர். வித்யா வளர்ந்து, நன்கு படித்து, அறிவியலில் வாலைப் பட்டமும் (B.Sc.) வணிக மேலாண்மையியலில் மேதைப் பட்டமும் (M.B.A) பெற்று, தந்தையின்  கடின உழைப்புக்கு விடையளித்தார். இவர் 2025 – ஆம் ஆண்டு, மே மாதம், 28 – ஆம் நாள் (28-05-2025) பஞ்சநதிக்குளம் நடுச்சேத்தி, திரு ஆர்,அசோகன் – தனலட்சுமி இணையரின் மகன் திரு A.மணிகண்டன் B.E., என்பவரைக் கரம் பிடித்து தன் வாழ்க்கைத் துணைவராக வரித்துக் கொண்டார். இருவரும் இப்போது சென்னை புழுதி வாக்கத்தில் வாழ்ந்து வருகின்றனர். இருவருமே மென்பொருள் பொறியாளர்களாகப் பணியாற்றி வருகின்றனர் !

 

உற்றார் உறவினர் மறைவு:

திரு.கனகராசன் தனது நெருங்கிய உறவில் சில இழப்புகளையும் சந்திக்க வேண்டி வந்தது.

 

(01)  இவரது தாய்மாமாவின்  மகனான திரு மு.கருணாநிதி 2004 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 29 -ஆம் நாள்  (29—09-2004) யாரும் எதிர்பாரா வேளையில் இறப்பைத் தழுவினார்.

 

(02)  இவரது தாய்மாமா K.P.M எனப்படும் திரு க.பி. முருகையாத் தேவர் 2007 – ஆம் ஆண்டு,  ஏப்பிரல்  மாதம்,  20 – ஆம்  நாள்    (20-04-2007)  அகவை முதிர்வினால்   காலமானார்.)

 

(03)  தேவூர் மாமா திரு.சி.பண்டரி நாதன் 2007 – ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 06- ஆம் நாள் (06-08-2007) தனது 80 – ஆவது வயதில் காலமானார்.

 

(04) இவரது தாய் மாமா மனைவியான திருமதி செல்லமணி அம்மையார் 2008 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 29-ஆம் நாள்  (29-06-2008) அகவை முதிர்வினால் காலமானார்.  

 

(05) தேவூர் அக்காள் திருமதி சிந்தாமணி அவர்கள் 2015 – ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம், 08 – ஆம் நாள் (08-09-2015)  தனது 75 -ஆவது அகவையில் காலமானார். 

 

(06)  தாய் மாமா மகனான ஆசிரியர் மு.குமரப்பா 2019 -ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24 -ஆம் நாள்.  (24-02-2019)  யாரும் எதிர்பாரா நிலையில் திடீரென்று காலமானார்.

 

(07)  இன்னொரு தாய்மாமாவும், மாமனாருமான K.P.K எனப்படும் திரு. க.பி.கந்தசாமி 2021 -ஆம் ஆண்டு, மே மாதம், 31 – ஆம் நாள் (31-05-2021) அன்று, தனது 88- ஆம் அகவையில் (08-09-1933 - 31-05-2021)  வயது முதிர்வின் கரணமாகக்  காலமானார்.

 

(08)  தாயார் திருமதி பஞ்சரத்தினம் அம்மையார் 2024 ஆம் ஆண்டு, சனவரி மாதம், 04 – அம் நாள் தனது 97 -ஆம் அகவையில் காலமானார்.

 

முயற்சி திருவினையாக்கியது:

தொழிற்கல்வி என்னும் இலக்கு நோக்கிய பயணத்திற்கு திரு கனகராசனுக்கு நான் வழிகாட்டினேன். அவரைப் போல் ஏராளமானவர்களுக்கு வழிகாட்டி இருக்கிறேன். ஆனால் திரு கனகராசனைப் போல் விடாப்பிபிடியான உறுதியுடன் வாழ்க்கையில் முன்னேறியவர்கள் 10 விழுக்காடு அளவுக்கே இருக்கும். தனது இரண்டு மகள்களையும் நிரம்பப் படிக்கவைத்து உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்த்தது, இருவரையும் நல்ல இடங்களில் திருமணம் செய்து கொடுத்திருப்பது, தனக்கெனச் சொந்தமாகப் பொன்னேரியில் வீடுகட்டி அதில் வாழ்ந்து வருவது எல்லாம் அவரது உழைப்புக்கு அடையாளம். அதைக் கண்டு மற்றவர்களைப் போல் நானும் பெருமைப்படுகிறேன் !

 

நிறைவுரை !

துன்பங்களைக் கண்டு சோர்ந்து போகாமல் கடினமாக உழைத்து, வாழ்வில் உயர்வான இடத்தை அடைந்துள்ள திரு கனகராசனை மனதார வாழ்த்துகிறேன். நல்ல உடல் நலத்துடன், இனிய வாழ்க்கையை எதிர்கொண்டு, நூறாண்டு காலம் வாழ்ந்திடுக என்று வாழ்த்துகிறென். இதைப் படிக்கும் நீங்களும் வாழ்த்துங்கள் !

 

=====================================================

கனகராசன் வாழ்க்கையின் முகாமையான 

நிகழ்வுகள் சில !

======================================================

09-12-1954: திரு கனகராசன் பிறப்பு.

00-10-1962: கடிநெல்வயல் பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேரல்.

00-06-1967:  கருப்பம்புலம் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேரல்.

00-07-1970: தந்தை திரு சண்முகவேல் தேவர் மறைவு.

02-11-1970:  திரு. சதாசிவம் - மல்லிகா திருமணம் - 

00-06-1971: வேதாரணியம் பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேரல்.

02-07-1972: வை.வேதரெத்தினம்- கலைச்செல்வி திருமணம்

00-03-1974: பள்ளியிறுதி வகுப்பு ( OLD S.S.L.C) தேர்ச்சி.

1975 –1976: தேவூர் மாமா உணவகத்தில் பணியாற்றல்.

00-08-1977: நாகப்பட்டினம் ஐ.டி.ஐ-யில் சேரல்

00-07-1978: ஐ.டி.ஐ. தேர்வில் தேர்ச்சி பெறல்.

09-09-1978: K.C.P.யில் பழகுநர் பயிற்சியில் சேரல்.

14-03-1980: பழகுநர் பயிற்சி நிறைவு.

00-08-1980: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சில் வேலைக்குச் சேரல்.

00-08-1981: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சைவிட்டு விலகல்.

00-09-1981: மறைமலை நகர் சதர்ண் கேஸ்டிங்சில் பணியேற்றல்.

00-02-1983: மறைமலை நகர் சதர்ண் கேஸ்டிங்ஸ் விட்டு விலகல்.

00-03-1983: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சில் மீண்டும் சேரல்.

00-04-1985: அம்பத்தூர் சிவானந்தா ஸ்டீல்சை விட்டு விலகல்.

00-05-1985: ஆந்திர மாநிலம் கூடூர் நெல்காஸ்டில் பணியேற்பு.

21-08-1987: திரு.கனகராசன் – சுமதி திருமணம்.

13-06-1996: மகள் இரத்தினப் பிரியா பிறப்பு.

10-07-1999: மகள் வித்யா பிறப்பு.

30-04-2001: வை.வேதரெத்தினம்  பணியிலிருந்து ஓய்வு பெறல்.

00-09-2004: ஆந்திர மாநிலம் கூடூர் நெல்காஸ்டில் பணிவிலகல்.

29-09-2004: மைத்துனர் மு.கருணாநிதி மறைவு.

00-09-2004: கும்மிடிப்பூண்டி பயொனியர் அல்லாயில் பணியேற்பு.

00-11-2006: கும்மிடிப்பூண்டி பயொனியர் அல்லாயில் பணிவிலகல்.

00-11-2006: பொன்னேரி நெல்காஸ்டில் பணியில் சேரல்.

20-04-2007: திரு.க.பி.முருகையாத் தேவர் மறைவு.

06-08-2007: மாமா சி.பண்டரிநாதன் மறைவு. (80 வயது)

29-06-2008: மாமியார் செல்லமணி அம்மையார் மறைவு

00-10-2009: பொன்னேரி நெல்காஸ்டில் பணிவிலகல்.

00-01-2010: கும்மிடிப்பூண்டி J.K.M. பெரோடெக்கில் பணியேற்பு.

00-08-2012: J.K.M. பெரோடெக்கிலிருந்து பணி ஓய்வு பெறல்.

08-09-2015: தமக்கை சிந்தாமணி பண்டரிநாதன் மறைவு.(அகவை 75)

30-09-2016: கா.இருளப்ப தேவர் (அகவை 86) மறைவு.

05-06-2018: செல்வி இரத்தினப்பிரியா –திரு.கா. மணிகண்டன் திருமணம்

24-02-2019: மைத்துனர் மு.குமரப்பா மறைவு.

31-05-2020: .மீனாட்சிசுந்தரம்  மறைவு.                                         

31-05-2021: தாய்மாமா க.பி.கந்தசாமி மறைவு.

04-01-2024: திருமதி பஞ்சரத்தினம்  (97 வயது) மறைவு.

28-05-2025: செல்வி வித்யா – திரு.அ.மணிகண்டன் திருமணம்

--------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ்நட்பு” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2057, மீனம் (பங்குனி) 24]

{07-04-2026}

----------------------------------------------------------------------------------------------------

 

திரு. ச.கனகராசன்

திரு. ச.கனகராசன்

க.சுமதி கனகராசன்

க.இரத்தினப் பிரியா கனகராசன் B.E

க.வித்யா கனகராசன் B.Sc., M.B.A.



திரு.கனகராசன் குடும்பம்.




திரு.ச.சதாசிவம்.



திருமதி மல்லிகா சதாசிவம்.




திரு. சதாசிவம் & சேரலாதன் 




திரு.ச.செயராமன்


திருமதி.பஞ்சரத்தினம்  சண்முகவேல் தேவர் 


திருமதி.பஞ்சரத்தினம்  சண்முகவேல் தேவர் 

திரு.K.P.M. @ க.பி.முருகையாத் தேவர்.

திரு.சி.பண்டரிநாதன் (தேவூர்)



திருமதி சிந்தாமணி பண்டரிநாதன் (தேவூர்)



திரு.வை.வேதரெத்தினம் & கலைச்செல்வி

திரு.அ.மணிகண்டன் & திருமதி வித்யா 


திரு.அ.மணிகண்டன் & திருமதி வித்யா 



1 கருத்து:

  1. பாதுகாக்க வேண்டிய வாழ்க்கை வரலாறு! படித்து மகிழ வேண்டியவாழ்க்கை வரலாறு !

    பதிலளிநீக்கு