என் தமிழ் உறவுகள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

(11) அன்பழகன் (திரு) கடிநெல்வயல்.

 

                                                                                                   


  கடிநெல்வயல் திரு ச.அன்பழகன் வாழ்க்கை வரலாறு !


முகவுரை.

என்னுடைய  தந்தை திரு.சி.வைத்தியநாத தேவரின்  பெரியப்பா மகன் திரு சாம்பசிவ தேவரின் மகள்வழிப் பெயரனும்  பஞ்சநதிக்குளம் சின்ன காரியக்காடு திரு சிங்காரவேல் தேவரின் மகன் வழிப் பெயரனும் கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருபவருமான திரு ச.அன்பழகனின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாததுயாராலும் அழிக்கவோதிருத்தம் செய்யவோஎதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம்வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். இவர்களுள் திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; நடுவிலவர்  திரு.சாம்பசிவ தேவர்கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! திருசாம்பசிவ தேவரின் மகள் திருமதி தனலட்சுமி சக்கரபாணி இல்லத்தில்  மலர்ந்த நறுமண  மலரே திரு அன்பழகன் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம்திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)


கடிநெல்வயல், கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார்புரம், நல்லபொதிய தேவர் மகன் திரு .சீனிவாச தேவரின்  இரண்டாவது மகனான  திரு சாம்பசிவத் தேவர், பஞ்சநதிக்குளம் சின்னகாரியக் காடு திரு சிங்காரவேல் தேவரின் மகளான செல்வி வீரம்மாளைத்  திருமணம்  செய்துகொண்டார் !

 

தாய்வழித் தாத்தா 

திரு சாம்பசிவ தேவர் – வீரம்மாள் இணையர் !

திரு சாம்பசிவ தேவர் – வீரம்மாள் இணையருக்கு 4 பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.   தலைச்சன் குழந்தையின் பெயர் தனலட்சுமி; இரண்டாவது குழந்தையின் பெயர் பால சுந்தரி; மூன்றாவது குழந்தையின் பெயர் தேவகுஞ்சரி; நான்காவது குழந்தையின் பெயர் சிங்காரவேலு; ஐந்தாவது குழந்தையின் பெயர் விசயா !

 

திரு சாம்பசிவ தேவரின் பிள்ளை பெண்களின் திருமணம் !

தலைச்சன் குழந்தை, வளர்ந்து பெரிய பெண் ஆனதும் தனது தாய் மாமா பஞ்நதிக்குளம் சக்கரபாணி அவர்களைத் திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது பெண்ணான  பாலசுந்தரி பஞ்நதிக்குளம் நடுச்சேத்தி, (கூழையன்காடு) இரத்தின தேவர் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது பெண் தேவகுஞ்சரி, வாய்மேடு சொக்கலிங்க தேவர் மகன் காந்தி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். நான்காவதாகப் பிறந்த சிங்காரவேலு தோப்புத் துறை பக்கிரிசாமித் தேவர் என்பவரின் மகள் தையல்நாயகியைத் திருமணம் செய்துகொண்டார். ஐந்தாவதாகப் பிறந்த விசயா முருகேசன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் !

 

திரு அன்பழகனின் பெற்றோர், திரு சக்கரபாணித் தேவர் – தனலட்சுமி இணையர் திருமணம்

சக்கரபாணித் தேவர் – தனலட்சுமி இணையர் திருமணம் கடிநெல்வயலிலுள்ள திரு சாம்பசிவ தேவர் வீட்டில் நடைபெற்றது. அதே நாளில் தான் என் தமக்கையார் சிந்தாமணி – தாய்மாமா சி.பண்டரிநாதன் திருமணமும் கடிநெல்வயலிலுள்ள எங்கள் வீட்டில் நடைபெற்றது. திருமணம் எந்த ஆண்டு நடைபெற்றது என்பது எனக்கு நினைவில்லை. அப்பொழுது எனக்கு ஐந்து அல்லது ஆறு அகவை இருக்கலாம். பெரும்பாலும் அது 1949 அல்லது 1950  -ஆம் ஆண்டாக இருக்கக்கூடும் !


திருமணப் பந்தலில் தட்டொலிப்பேழை (Gramaphone) இயக்கம்.

மாமா திரு.பண்டரி நாதன் – அக்கா சிந்தாமணி திருமணத்தில்  நான் நெற்பொறி அள்ளிக்கொடுக்க  மாமாவும் அக்காவும் சேர்ந்து பொறியை ஓமகுண்டத்தில் போட்டது இப்போதும் (2026) தெளிவாக நினைவு இருக்கிறது. அதுபோல், மாமா திரு.பண்டரி நாதன் – அக்கா சிந்தாமணி திருமணத்தில், திருமணப் பந்தலில் தட்டொலிப்பேழை (Gramaphone) வைத்து திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பியதும் நினைவிருக்கிறது !


திரு சக்கரபாணித்தேவர் – தனலட்சுமி இணையர் 

இல்லற வாழ்வு.

திரு சக்கரபாணித் தேவர் – தனலட்சுமி இணையர் திருமணம் நடந்த பின்பு அவர்களது இல்லற வாழ்வு கடிநெல்வயலிலேயே தொடங்கியது. திரு சக்கரபாணித் தேவர் வீட்டோடு மாப்பிள்ளையாக மாமனார் சாம்பசிவ தேவர் வீட்டிலேயே வாழ்ந்துவந்தார். மாமனாரின் நிலபுலன்களைக் கவனிப்பதும், அவற்றில் நெல் சாகுபடி செய்வதும்  அவரது அன்றாடக் கடமைகளாக மாறிப் போயின ! அவரது சிற்றப்பா பஞ்சநதிக்குளம் சின்னகாரியக்காடு கந்தசாமித் தேவர் ஆண்டுக்கு ஓரிரு முறை கடிநெல்வயல் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். அப்போது அவருக்கு 60 அல்லது 65  அகவை இருக்கலாம். கையில் தடி ஊன்றிக் கொண்டு அவர் நடந்து வரும் காட்சி இன்றும் கூட என் நினைவுகளில் பசுமையாக நிலைத்திருக்கிறது !


திரு அன்பழகன் பிறப்பும் திரு சக்கரபாணித் தேவர் மறைவும் 

1949 அல்லது 1950 வாக்கில் திருமணமான சக்கரபாணித் தேவர் – தனலட்சுமி இணையருக்கு 1972 வரை – ஏறத்தாழ 22 ஆண்டுகள் குழந்தையின்மை தொடர்ந்தது. அதன் பின் 1972 -ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் நாள் ஆண்குழந்தை ஒன்று பிறந்தது. அக்குழந்தைக்கு அன்பழகன் என்று பெயர் சூட்டி வளர்த்தனர். ஆனால் அன்பழகனின் தந்தை திரு சக்கரபாணித் தேவர், அன்பழகன் பிறந்த அதே ஆண்டிலேயே இறந்து போனார் !


தாயார் தனலட்சுமி அம்மையாரின்  கையறு நிலை !

அன்பழகனின் தாயார் திருமதி தனலட்சுமி தன் வாழ்க்கையில் துன்பங்களையே எதிர்கொண்டு வாழும் நிலை ஏற்பட்டது. சொந்தம் விட்டுப்போகக் கூடாது என்று நடப்பா திரு சாம்பசிவ தேவர் தன் மைத்துனர் திரு சக்கரபாணித் தேவருக்குத் தன் மகள் தனலட்சுமியைத் திருமணம் செய்து கொடுத்ததில் தொடங்கியது திருமதி தனலட்சுமியின் துயர வாழ்வு. 1950 வாக்கில் திருமணமான அவருக்கு, ஏறத்தாழ 22 ஆண்டுகள் குழந்தையின்மை நிலவியது. பின்பு குழந்தை பிறந்தது; ஆனால் அதே ஆண்டு தன் கணவரைப் பறிகொடுத்தார். பெரியவர்கள் செய்யும் சில தவறுகள் பிள்ளைகளை எப்படியெல்லாம் பாதிக்கிறது என்பதற்கு எடுத்துக் காட்டாக இலங்கியது திருமதி தனலட்சுமியின் வாழ்க்கை !

 

அன்பழகனின் தொடக்கக் கல்வி !

தந்தையை இளமையிலேயே இழந்துவிட்ட  அன்பழகன்,  தாயுடன் தன் தாத்தா பாட்டி வீட்டிலேயே வளர்ந்து வந்தார். ஐந்து அகவை ஆனதும் குழந்தையைப் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் தொடங்கின. வழக்கம் போல் பனை ஓலைச் சுவடியில் தமிழ் எழுத்துகளையும் எண்களையும் எழுதி, அதில் மஞ்சள் தடவி, பெரியோர்களின் வாழ்த்துகளுடன்,  குழந்தை அன்பழகன் கடிநெல்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 1977 -ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விசயதசமி நாளன்று ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். ஐந்தாம் வகுப்பு வரை அதே பள்ளியில் படித்த அன்பழகன் 1982 -ஆம் ஆண்டு சூன் மாதம் கருப்பம்புலம் பி.வி.தேவர் உயர்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பில் சேர்க்கப்படார் !

 

உயர்நிலைப் பள்ளிப் படிப்பு !

1983- ஆம் ஆண்டு, சூன் மாதம், வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் சேர்ந்த அன்பழகன் பள்ளிறுதி வகுப்புவரை அங்கேயே தனது படிப்பைத் தொடர்ந்து 1986 -ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் தனது படிப்பை நிறைவு செய்தார் !

 

அன்பழகன் பணி தேடும் படலம் !

பள்ளிப்படிப்பை நிறைவு செய்தபின், தனது சித்தி விசயாவின் கணவரான அகத்தியம்பள்ளி திரு முருகேசன் அவர்களின்  தேநீர்க்கடையில் அவருக்கு உதவியாக ஏறத்தாழ 9 ஆண்டுகள்  (1986 – 1995) அன்பழகன் பணிபுரிந்தார். இதையடுத்து வேதாரணியம் லலிதா நகைக் கடையில் பணியில் சேர்ந்து 12  ஆண்டுகள் பணியாற்றித் தனது இளமைக் காலத்தைக் கரைத்தார். தக்க வழிகாட்டவும், உதவிகள் செய்யவும் உறவினர்கள் இல்லாவிட்டால் படித்த இளைஞர்களின் இளமைக்காலம் இப்படித்தான் முடமாகிப் போகிறது !

 

நடத்துநர் பணியில் அன்பழகன் இணைவு !

லலிதா நகைக் கடையில் பணியாற்றுகையில் சில நல்லவர்களின் வழிகாட்டுதலில், நடத்துநர் பணிக்குத் தகுதி பெறும் பொருட்டு, குறுகிய காலப் பயிற்சியும், உரிமமும் பெற்று, வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்து வைத்திருந்தார். வேலை வாய்ப்பகத்தின் பரிந்துரையின் பேரில்  அப்போதைய சோழன் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநரிடமிருந்து வந்த அழைப்பாணையை ஏற்று, நடத்துநருக்கான நேர்காணலில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்று  03 – 04 - 2007 அன்று நடத்துநராகப் பணியில் சேர்ந்தார் !


அன்பழகன் - ஈசுவரி  திருமணம் !

நடத்துநராகப் பணி ஏற்பதற்கு முன் இல்லற வாழ்க்கையில் இணையும் பேறு அன்பழகனுக்கு வாய்த்தது. வேதாரணியம் வட்டம் மருதூரைச் சேர்ந்த திரு.தெட்சணாமூர்த்தி – சீதாரமணி இணையரின் மகளான செல்வி ஈசுவரி அன்பழகனின் வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இவர்கள் திருமணம் தாரண ஆண்டு, பங்குனி மாதம், 14 -ஆம் நாள், ஞயிற்றுக் கிழமை (27-03-2005) மருதூர் கந்தபவுன்ராசு திருமண மண்டபத்தில் இனிது நிகழ்ந்தேறியது !

 

தாயார் தனலட்சுமி அம்மையார் மறைவு ! 

வாழ்க்கையில் இன்பம் என்பதை முற்றிலுமாகவே இழந்திருந்த தாயார் தனலட்சுமி மகனின் திருமணத்தைக் கண்குளிரக் கண்டு மகிழ்ந்த நிம்மதியில் 14 மாத காலம் மகனுடன் வாழ்ந்த பின், விய ஆண்டு, வைகாசி மாதம் 30-ஆம் நாள் (13-05-2006) சனிக்கிழமை பௌர்ணமி நாளில் இவ்வுலக வாழ்வை நீத்தார் !


சித்தி விசயாவின் துணை !

தாயார் தனலட்சுமி மறைந்த பின் சித்தி விசயாவின் துணையுடன் அன்பழகன் தன் குடும்பத்தை நடத்தி வந்தார்.  1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயா, தனது 23 -ஆவது அகவையில் அகத்தியன் பள்ளியைச் சேர்ந்த முருகேசன் என்பவரை 1976 -ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 -ஆம் நாள் மணந்து கொண்டார். திரு முருகேசன் தேநீர் நிலையம் வைத்து நடத்தி வந்தார். இவர்களது இல்லற வாழ்வு எத்தனை ஆண்டுகள் நீடித்தது என்பது எனக்கு நினைவில்லை. திரு முருகேசன் – விசயா இணையருக்குக் குழந்தைச் செல்வம் கிட்டவில்லை. திரு முருகேசன் தன் வாழ்வின் இடைப்பகுதியிலேயே தன் மனைவி விசயாவை விட்டுவிட்டு மறைந்து போனார். எரியும் நெருப்பு வளையத்துக்குள் அகப்பட்டுக்கொண்ட இலவம் பஞ்சாக கருகிப் போன விசயாவின் வாழ்வுக்கு திரு அன்பழகன் தான் பாலைவனச் சோலையாகத் திகழ்ந்து ஆதரவளித்து வந்தார் !

 

அன்பழகன் – ஈசுவரி  இணையரின் பிள்ளைகள் !

அன்பழகன் – ஈசுவரி இணையருக்கு தமேந்திகா, தர்ஷனா என இரு பெண் குழந்தைகள் பிறந்தன. விய வருடம், ஆவணி மாதம், 5 -ஆம் நாள் திங்கள் கிழமை (21-08-2006) பிறந்த தமேந்திகா  இப்போது ஆயக்காரன்புலம், சிவ.முத்துக்கண்ணு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில், அறிவியல் வாலை (கணிதம்) வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு இப்போது அகவை 20 ஆகிறது. இரண்டாவது பெண் தர்ஷனா விசய வருடம், ஆவணி மாதம், 6 -ஆம் நாள் வியாழக்கிழமை (22-08-2013) பிறந்தார். 13 அகவை ஆகும் இவர் இப்போது கடிநெல்வயலில் உள்ள அரசினர் அரசினர்மேனிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்.

 

ஊராட்சித் துணைத் தலைவராக அன்பழகன்  தேர்வு  !

திரு. அன்பழகனின் வாழ்க்கை ஓடம் அமைதியான குளத்தில் ஆடி அசைந்து பயணித்துக் கொண்டிருக்கையில், யாரும் எதிர்பாராவண்ணம் மக்கள் சேவையில் தன்னை ஒப்படைத்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு வந்தது. ஆம் ! கடிநெல்வயல் ஊராட்சியில், கீழக்காடு சார்பில் ஊராட்சி உறுப்பினராகவும் பின்னர் ஊராட்சித் துணைத் தலவராகவும் தேர்வாகும் வாய்ப்புக் கிடைத்தது. ......................முதல் ...........................வரை ஐந்தாண்டுக் காலம் ஊரார் புகழும் வண்ணம் இப்பதவியில் அவர் பணியாற்றியது அவரது வாழ்வில் ஒரு இனிப்பான வசந்த காலம் என்று தான் சொல்ல வேண்டும் !

 

திரு சாம்பசிவ தேவரின் நான்கு பெண்கள் !

நடப்பா திரு சாம்பசிவ தேவரின் நான்கு பெண்களில் மூத்தவரான தனலட்சுமி, மூன்றாவது பெண்ணான தேவகுஞ்சரி, கடைசிப் பெண்ணான விசயா மூவரின் வாழ்க்கையும் முள் நிறைந்த ஒற்றையடிப் பாதையாகவே அமைந்துவிட்டது. மூவரின் வாழ்க்கைப் பயணமும் முடிவுக்கு வந்துவிட்டது. இரண்டாவது பெண்ணான பஞ்சநதிக்குளம் இரெ.பாலசுந்தரியின் வாழ்க்கை சற்று ஆறுதலான பாதையில் பயணத்தை மேற்கொண்டு பெயர் சொல்லும் பிள்ளை, பெண் என நீண்டிருந்தாலும் அவரும் கடந்த 09-04-2021 அன்று தனது 78-ஆம் அகவையில் காலமானார் !


இரண்டாவது சித்தி வாய்மேடு தேவகுஞ்சரி மறைவு !

மூன்றாவது பெண்ணான தேவகுஞ்சரியும் நானும் கடிநெல்வயலில் உள்ள தொடக்கப்பள்ளியில்  அந்தக் காலத்தில் ஒரே வகுப்பில் படித்து வந்தவர்கள். இருவரும் சம அகவையினர். அவரது கணவர் திரு.காந்தி அவர்களின்  குடும்பம் போதுமான செல்வச் செழிப்பு இன்மையால் தேவகுஞ்சரியின் வாழ்வும் இனிக்க வில்லை. ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுத்த தேவகுஞ்சரி குழந்தையை வளர்த்து ஆளாக்கித்  திருமணம் செய்து கொடுத்த பின் இறுதியில் கடந்த ................................அன்று மறைந்து போனார் !


மூன்றாவது சித்தி விசயா மறைவு !

1953 – ஆம் ஆண்டு (விசய வருடம்) பிறந்த விசயாவின் , வாழ்க்கை புயலில் சிக்கிய கப்பல் போல ஆகிவிட்டது.  தன் வாழ்வுக்கும் இனிமைக்கும் நிம்மதிக்கும்  வெகுதொலைவு என்பதை உணர்ந்த விசயா, கடந்த 01-12-2025 அன்று தனது 72 -ஆம் அகவையில்  இவ்வுலக வாழ்வை நீத்தார் !

 

அன்பழகன் - ஈசுவரி இணையர்  வாழ்க வளமுடன் !

வாழ்வின் முன்பகுதியில் தன் இளமைக் காலத்தில் ஏற்றம் எதையும் காணமுடியாத அன்பழகன், வாழ்வின் இடைப் பகுதியிலாவது  வளமான வாழ்வை அடைய வாழ்த்துவோம். இரு பெண்களும் நன்கு படித்து, அரசுப் பதவிகளை அடையும் வழிமுறைகளை சான்றோர்களிடம்  கேட்டறிந்து  வாழ்வில் உயர்வடைய வாழ்த்துவோம் !


 ---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 10]

{22-02-2026}

-------------------------------------------------------------------------------------

          

ச.அன்பழகன்

  
ஈசுவரி - அன்பழகன் இணையர் 

ஈசுவரி - அன்பழகன் இணையர் 


தமேந்திகா அன்பழகன்

தர்ஷனா அன்பழகன் 

தனலட்சுமி சக்கரபாணி

                      
தனலட்சுமி சக்கரபாணி

தேவகுஞ்சரி காந்தி

விசயா முருகேசன் 


(10) சதாசிவம் (திரு) கடிநெல்வயல்.

      

கடிநெல்வயல் திரு ச.சதாசிவ தேவர் வாழ்க்கை வரலாறு !

முகவுரை.

என்னுடைய  தந்தை திரு.சி.வைத்தியநாத தேவரின்  பெரியப்பா திரு.சீனிவாச தேவரின் பெயரனும், கடிநெல்வயல் கீழக்காட்டில் பிறந்து வளர்ந்து,  வாழ்ந்து வருபவருமான தம்பி ச.சதாசிவத்தின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாதது; யாராலும் அழிக்கவோ, திருத்தம் செய்யவோ, எதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தைச்  சேர்ந்தவர் நல்லபொதிய தேவர். இவரது மகன்கள் திரு சீனிவாச தேவர் மற்றும் திரு சிங்காருத் தேவர். இவர்களுள் திரு சீனிவாச தேவருக்கு மூன்று பிள்ளைகள்.  மூத்தவர் திரு அருணாச்சல தேவர்; நடுவிலவர்  திரு.சாம்பசிவ தேவர்; கடைசிப் பிள்ளை திரு  சண்முகவேல் தேவர் ! திரு சண்முகவேல் தேவர் இல்லத்தில் மலர்ந்த நறுமண  மலரே திரு சதாசிவம் !

 

(கடிநெல்வயல் முன்பு தஞ்சாவூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஒரு சிற்றூராகத் திகழ்ந்து வந்தது!)


திரு சண்முகவேல் தேவர்  – பஞ்சவர்ணம் அம்மையார் 

இணையர் திருமணம் !

மூத்தவர் திரு. அருணாச்சல தேவர், திருத்துறைப் பூண்டியை அடுத்த வேளுர் சிவப்பிரகாச தேவர் – கல்யாணி அம்மையாரின் மூத்த மகள் செல்வி மீனாட்சியைத் திருமணம் செய்துகொண்டார். இளையவரான திரு.சாம்பசிவ தேவர், பஞ்சநதிக்குளம் சின்னகாரியக்காடு கந்தசாமித் தேவரின் அண்ணன் மகளான செல்வி வீரம்மாளைத் திருமணம் செய்துகொண்டார்.   கடைசிப் பிள்ளையான திரு சண்முகவேல் தேவர் அப்போது கடிநெல்வயல் கீழக்காட்டில் அப்போது வாழ்ந்து வந்த திரு க. பிச்சையாத் தேவர் – சீதையம்மாள் இணையரின் இரண்டாவது மகளான செல்வி பஞ்சவர்ணம் என்பவரை 1942 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் !

 

திரு சண்முகவேல் தேவரின் வேளாண் பணி வாழ்க்கை !

திரு.சண்முகவேல் தேவர், தனது தாத்தா திரு நல்லபொதிய தேவர் மற்றும் தந்தை திரு.சீனிவாசத் தேவர் ஆகியோரின் வழிவந்த குடும்பச் சொத்தான வேளாண் நிலங்களில், தனது அண்ணன்மார் திரு அருணாச்சலத் தேவர், திரு சாம்பசிவத் தேவர் ஆகியோருடன், தொடக்கத்தில் இணைந்து கூட்டாக வேளாண் தொழிலைச் செய்துவந்தார். பிற்காலத்தில் அண்ணன்மாருடன் பாகப் பிரிவினை ஆனபின்பு, தனது பங்காகக் கிடைத்த நன்செய், புன்செய் நிலங்களில் தனியாக வேளாண்மை செய்வதில் கவனம் செலுத்தி வந்தார்!

 

திரு சண்முகவேல் – பஞ்சவர்ணம் இணையரின் குழந்தைகள் !

திரு சண்முகவேல் – பஞ்சவர்ணம் இணையருக்கு மூன்று ஆண்குழந்தைகள் பிறந்தனர். சதாசிவம், செயராமன், கனகராசன் என்று பெயரிட்டு வளர்த்து வந்த அவர்கள் பெற்றோருக்குக் கவலையை மறக்கச்செய்யும் மாமருந்தாகத் திகழ்ந்து பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் துள்ளி விளையாடும் மான்குட்டிகளாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வந்தனர் !

 

தலைப் பிள்ளையான திரு சதாசிவம் 1947 -ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 10 -ஆம் நாள் பிறந்தார். இரண்டாவது பிள்ளையான திரு.செயராமன்      ...................ஆம் ஆண்டு.............................மாதம்......................ஆம் நாள் பிறந்தார். மூன்றாவது பிள்ளையான திரு கனகராசன் சய ஆண்டு, கார்த்திகை மாதம், 24 -ஆம் நாள்  (9-12-1954) வியாழக்கிழமை உரோகிணி விண்மீன் நிலவிய நன்னாளில் பிறந்தார் !

 

திரு. சதாசிவத்தின் கல்விப் பயணம்  !

திரு சதாசிவம் 1952 – ஆம் ஆண்டு புரட்டாசி மாதம் விசயதசமி நாளன்று  பெற்றோர், உற்றார் உறவினர்கள் குழுமியிருக்க, “அரிவோம், நன்றாக, குரு வாழ்க, குருவே துணை” என்று எழுத்தாணியால் பனையோலைச் சுவடியில் எழுதப்பெற்று மஞ்சள் தடவி, பெரியோர்கள் ஒருமுறை சொல்லிக் கொடுக்க, அவர்கள்  வாழ்த்துகளுடன்    கடிநெல்வயலிலுள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார் !

 

ஒன்றாம் வகுப்பு முதல் 5 -ஆம் வகுப்பு வரை கடிநெல்வயலில் படிப்பைத் தொடர்ந்த திரு சதாசிவம் தனது  6 -ஆம் வகுப்புப் படிப்பை ஆயக்காரன் புலத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலும், 7 மற்றும் 8 -ஆம் வகுப்புப் படிப்பை கருப்பம்புலம் பி.வி.தேவர் உயர்நிலைப்பள்ளியிலும் மேற்கொண்டார் !

 

9, 10, 11, ஆகிய வகுப்புப் படிப்புகளை, வேதாரணியம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் மேற்கொண்டார்.  பள்ளி இறுதி வகுப்பான 11 -ஆம் வகுப்புத்   தேர்வில் நன்முறையில் தேர்ச்சி பெற்றார் !

 

அருகில் கல்லூரி எதுவும் இல்லாததாலும், பள்ளியிறுதி வகுப்பு வரைப் படித்தது போதும் எனப் பெற்றோர் முடிவு செய்ததாலும், திரு சதாசிவம் தனது படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு, தந்தைக்கு உதவியாக வேளாண் பணிகளில்  ஈடுபடலானார் !


திரு. சதாசிவத்தின் தந்தை உடல் நலம் !

திரு சதாசிவத்தின் தந்தையான சண்முகவேல் தேவருக்கு வாத நோயின் பாதிப்பு ஏற்பட்டு, வேளாண் பணிகளைக் கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டது. தந்தை முடங்கிப் போனதால், திரு.சதாசிவம், வேளாண் பணிகளுடன் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அரசுப் பணி எதற்கும் செல்லமுடியாத நெருக்கடி ஏற்பட்டது !

 

தந்தையின்  சிறப்பு ஆற்றல்  !

திரு சண்முகவேல் தேவர் அவர்கள் வாத நோயால் முடங்கிப் போவதற்கு முன்பு, பஞ்சநதிக்குளம் அங்காளம்மன் அருளால், பங்காளிகளின் வீடுகளில் எதிர்காலம் பற்றி உரைக்கும் மருளாளியாகத் திகழ்ந்தார். வேறு வகையில் சொல்வதானால் அருள் வந்து சாமியாடி நல்வாக்குச் சொல்பவராக இலங்கினார். ஆண்டுதோறும் வைகாசி மாதம் விசாக நாளன்று கடிநெல்வயல், மங்காங்குளம்  மேல்கரையிலிருந்து பாற் காவடி எடுத்துக்கொண்டு கோடிக்கரை குழகர் கோயிலுக்கு ஐந்தாறு பேர் செல்வது வழக்கம். அந்தக் குழுவுக்குத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் பொறுப்பை திரு சண்முகவேல் தேவர் அவர்கள் ஏற்றுக்கொண்டிருந்தார் !

 

கடிநெல்வயலிலிருந்து கால்நடையாக, முட்டகம், உப்பளம் வழியாக கோடிக்கரை இராமர் பாதம் அருகிலுள்ள ஒரு குளத்தை அடைந்து அங்கு கை கால் கழுவிக் கொண்டு சாலை வழியாக குழகர் கோவிலை அடைவது வழக்கம். நானும் இவ்வாறு சிலமுறை சென்றிருக்கிறேன். கோயிலில் குடிகொண்டுள்ள குழகர் எனப்படும் முருகப் பெருமானுக்கு, காவடியில் கட்டிக் கொண்டு செல்லும் பாலால் திருமுழுக்குச் செய்துவிட்டு,  அங்கு வணிகர்களால் விற்பனை செய்யப்படும் பலாப்பழம் வாங்கிக்கொண்டு ஊர் திரும்புவோம் !

 

கோடிக்கரைக் காட்டில் விளையும் பாலப்பழம், வடிவத்திலும் நிறத்திலும்  வேப்பம்பழம் போலிருக்கும். சுவையோ வேப்பம்பழத்திற்கு நேர் எதிர்நிலை.  அத்துணை இனிப்பாக இருக்கும். அதையும் வாங்கிக் கொண்டு  ஊர் திரும்புவோம். திரு சண்முகவேல் தேவர் அவர்கள் முடங்கிப் போனபிறகு, காவடி எடுத்துச்செல்லும் பழக்கம் முற்றிலும் நின்றுபோயிற்று !

 

1957 -ஆம் ஆண்டு வேதாரணியத்தில் திரு எம்.ஜி.ஆர். நடித்த “இன்பக்கனவு” நாடகம் நடைபெற்றது. நினைவில் வாழும் திரு சு.சிவசுந்தரம் வீடு இருக்கும் இடத்தில் அந்த நாடகம் நடைபெற்றது. நாடகத்தைக் காண திரு சண்முகவேல் தேவருடன், நான், அண்ணன் நடராசன், திரு தனசாமி, திரு.மதிவாணன், திரு பாலையாத் தேவர் மகன் தெட்சணாமூர்த்தி, திரு சற்குண தேவர் மகன் முருகையன், திரு தாயுமனவன், நடுக்காடு திரு பாஞ்சான் மகன் தங்கசாமி, வெள்ளாழர் காடு திரு வைத்தியலிங்கம் பிள்ளை, திரு இராசுப் பிள்ளை மகன் பாலசுப்ரமணியன்  மற்றும் சிலர் சென்றிருந்தோம். சிற்றப்பா திரு சண்முகவேல் தேவர் அவர்கள் இளமை ததும்ப எங்களுடன் இணைந்து ஆட்டமும் பாட்டமுமாக நாடகம் முடிந்து ஊர்திரும்பிய அந்த மகிழ்ச்சியான நிகழ்வு இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது !

 

பஞ்சரத்தினம் அம்மையாரின்  அத்தை  இரத்தினம் அம்மையார். 

இப்பொழுது திரு சதாசிவம் வீடு இருக்கும் மனையில் திரு பிச்சையாத் தேவர் – சீதை அம்மையார் வாழ்ந்த  வைக்கோல் செற்றை வேய்ந்த கூரை வீடு இருந்தது. அதில் திரு பிச்சையாத் தேவருடன் அவரது தங்கை இரத்தினம் அம்மையாரும் வாழ்ந்து வந்தார். அவர் இறக்கும் வரை அதே வீட்டில் தான் வாழ்ந்து வந்தார். அவர் இறப்புக்கு முன்னதாகவே திரு பிச்சையாத் தேவரும் , சீதை அம்மையாரும் வேதாரணியம் அருகிலுள்ள பயத்தவரன் காட்டுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர் ! இந்த வீட்டில் தான் கடிநெல்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்து மாணவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த, கண்டிப்புக்குப் பெயர் போன தலைமை ஆசிரியர், திரு. தியாகராச தேவர் தன் குடும்பத்தினருடன் வாடகைக்கு வாழ்ந்து வந்தார் ! அவருடைய மகன் திரு.வேதமூர்த்தி, திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலியில் வாழ்ந்து வருவதாகக் கேள்வி !

 

திரு. சண்முகவேல் தேவர் மறைவு !

வாத நோயால்  நடமாட்டம் முடங்கிப் போன திரு சண்முகவேல் தேவர் இல்லற வாழ்வில் ஏறத்தாழ 28 ஆண்டுகள் கழித்த பின், அதை மேலும் நீட்டிக்க முடியாமல் 1970 -ஆம் ஆண்டு சூலை மாதம் (ஆனி) கடைசியில் இறந்து போனார். 23 வயதேயான திரு சதாசிவம் தோள்களில் குடும்பச் சுமையை இறக்கி வைத்துவிட்டு தந்தைப் பறவை பறந்துவிட்டது ! பிள்ளைப் பறவை தவித்துப் போனது !

 

திரு. சதாசிவம் – மல்லிகா திருமணம் !

திரு சதாசிவத்தின் தாய்மாமா திரு கே.பி.முருகையாத் தேவர்  தன் தங்கையையும், தங்கை பிள்ளைகளையும் வாழ்க்கைச் சுழலில் சிக்குண்டு சோர்ந்து போக விடாமல் கரையேற்றிவிடும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தன் மகள்  செல்வி மல்லிகாவை, திரு. சதாசிவத்திற்கு மணம் முடித்து வைத்து அவர்களுக்கு உதவியாக இருக்க  விரும்பினார். உற்றார் உறவினருடன் கலந்து பேசினார்.   இறுதியில் திரு சதாசிவம் – செல்வி மல்லிகா திருமணம் 1970 -ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2- ஆம் நாள் திங்கட்கிழமை நடந்தேறியது !

 

திரு சதாசிவத்தின்  தொழில்நிலை  வரலாறு  !

வேளாண் வருமானம் போதுமான அளவுக்கு இல்லாததால் திரு.சதாசிவம் வேறு வேலை வாய்ப்புகளை நாடலானார். கடிநெல்வயலின் தென்புறம் அமைந்திருந்த அளத்தில், உப்பு விளைவிக்கும் தொழிலில் குசராத்தைத் சேர்ந்த நிறுவனம் ஒன்று (GHCL) அப்பொழுது ஈடுபட்டிருந்தது. அதில் 1970 முதல் 1972 வரை திரு.சதாசிவம் பணிபுரிந்தார். பிறகு எட்டாண்டுகள் இடைவெளிக்குப் பின் இரண்டாவது முறையாக 1980 முதல் 2003 வரை ஏறத்தாழ 23 ஆண்டுகள் தொடர்ச்சியாகப் பணி புரிந்து, 60 - ஆவது அகவையில் அதிலிருந்து  ஓய்வு பெற்றார் !  அவர் ஆற்றிய பணியைப் பாராட்டும் வகையில்  உப்புத் தயாரிப்பு நிறுவனம் பெயரளவுக்கு ஒரு சிறு தொகையை ஓய்வூதியமாக இன்றளவும் வழங்கி வருகிறது !  

 

திரு சதாசிவம் – மல்லிகா  இணையரின் பிள்ளைகள் !

திரு சதாசிவம் – மல்லிகா இனையருக்கு 2 ஆண் மகவும்  2 பெண் மகவும் பிறந்தனர். முதற் குழந்தை பெண்ணாகப் பிறந்தது. அக்குழந்தைக்கு, குழந்தையின் தாய்மாமா திரு மு.கருணாநிதி  “பூங்குழலி” என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். 1972 -ஆம் ஆண்டு...................மாதம்...............-ஆம் நாள் பிறந்த பூங்குழலிக்கு இப்போது வயது 53.  திருமணமாகி  தன் கணவருடன் மயிலாடுதுறையில் வாழ்ந்து வருகிறார். இரண்டாவதாகப் பிறந்த ஆண்குழந்தைக்கு “சேரலாதன்” என்று தாய்மாமா திரு மு.கருணாநிதிதான் பெயர் வைத்தார். 1975 - ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 25 -ஆம் நாள்  பிறந்த சேரலாதனுக்கு இப்போது அகவை 51. திருமணமாகி, மனைவி இலட்சுமி, மகள்கள் யாஷிகா, பிரக்க்ஷிகா ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார் !

 

மூன்றாவதும் ஆண்குழந்தை..................-ஆம் ஆண்டு...................மாதம்.............,.-ஆம் நாள் பிறந்த இக்குழந்தைக்கு சரவணன்  என்று பெயர் சூட்டி வளர்த்து வந்தனர். இவருக்கும் திருமணமாகிவிட்டது. மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். நான்காவதாகப் பிறந்த  பெண் குழந்தைக்கு “சீதா” என்று பெயர் சூட்டி வளர்த்தனர். 1980 -ஆம் ஆண்டு.....................மாதம்...............-ஆம் நாள்  பிறந்த சீதாவுக்கு இப்பொழுது 45 அகவை ஆகிறது. இவரும் திருமணமாகித் தன் கணவர் சந்திரசேகருடன்  வேதாரணியம் அருகில் வாழ்ந்து வருகிறார் !

 

க.பி.முருகையாத் தேவர் மறைவு !

திரு சதாசிவம் குடும்பத்திற்குப் பல வகையிலும் உதவி வந்தார் அவரது தாய்மாமாவும், மாமனாருமான திரு கே.பி.முருகையாத் தேவர். வேதாரணியம் அருகிலுள்ள பயத்தவரன்காட்டில் வாழ்ந்து வந்த அவர்  அகவை முதிர்வின் காரணமாகக் கடந்த  20-4-2007  அன்று   இறந்து போனார் !

பஞ்சவர்ணம் அம்மையார் மறைவு.

திரு கே.பி.முருகையாத் தேவரின் தங்கையும் திரு சதாசிவத்தின் தாயாராருமான பஞ்சவர்ணம் அம்மையார் தன் மகன் திரு சதாசிவத்துடன் கடிநெல்வயலில் வாழ்ந்து வந்தார். 1927 -ஆம் ஆண்டு பிறந்த அவரும் கடந்த  4-1-2024 அன்று தனது 97 -ஆம் அகவையில், அகவை முதிர்வினால்  காலமானார் !

 

நிறைவுரை !

பஞ்சநதிக்குளத்தார் புரத்தில் ஆண்பிள்ளைகள் தலையெடுக்கும் முன்பு, அவர்கள் தந்தையார் மறைந்து போவதென்பதும் குடும்பச் சுமையை பாலபருவம் முடியாத மூத்த பிள்ளை சுமப்பென்பதும்   தொடர்ந்து நடந்து வருகிறது. பங்காளிக் கிளைகளான, அண்ணன் இருளப்ப தேவர், நான் (வேதரெத்தினம்),  தம்பி சீனிவாசன், தம்பி சிங்காரவேலு, தம்பி சதாசிவம் எல்லோருமே  இந்தச் சுழலில் சிக்குண்டு தவித்துப் போயிருக்கிறோம் !  வாழ்க்கை என்பது எங்களுக்கெல்லாம் துன்பத்திலிருந்து தான் தொடங்கியிருக்கிறது ! இளைய தலைமுறையிராவது  எங்கள் வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு வளமாக வாழட்டும்  !

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2057, கும்பம் (மாசி) 10]

{22-02-2026}

-------------------------------------------------------------------------------------

ச.சதாசிவம் சண்முகவேல்

          

மல்லிகா சதாசிவம்


சேரலாதன் சதாசிவம்


இலட்சுமி சேரலாதன்



இலட்சுமி சேரலாதன்

சேரலாதன் - இலட்சுமி இணையர்.


யாஷிகா சேரலாதன்





யாஷிகா சேரலாதன்


பிரக்க்ஷிகா சேரலாதன்


ச,செயராமன் சண்முகவேல்

 

பிரசாத் செயராமன்

பிரசன்னா செயராமன்

ச.கனகராசன் சண்முகவேல்

    

திரு.கனகராசன் தன் மனைவி, மகள்களுடன் 


பஞ்சவர்ணம் அம்மையார்

        

க.பி.முருகையாத் தேவர்

 

 


  

 



ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2022

(09) சிங்காரவேலு (திரு) மு - கருப்பம்புலம் .

 

மு. சிங்காரவேலு 

கருப்பம்புலம் தெற்கு திரு.மு.சிங்காரவேலு அவர்களின் வாழ்க்கை வரலாறு !


முகவுரை.

கடிநெல்வயல் கீழக்காடு, பஞ்சநதிக்குளத்தார் புரம், திரு.சீ.சண்முகவேல் தேவர்  அவர்களின் மைத்துனர் பயத்தவரங்காடு, திரு.க.பி.முருகையாத் தேவர் அவர்களின் இரண்டாவது மகனும் என்னுடைய மூன்றாவது தங்கை சுமதியின் கணவரும் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் வாழ்ந்து வருபவருமான    திரு மு. சிங்காரவேல்  அவர்களின்  வாழ்க்கை வரலாறு இன்று இணையத்தில் பதிவேற்றப்படுகிறது. வலைப்பூ (BLOG)  எனப்படும் இந்த இணையப் பதிவேற்றம், ஆயிரம் ஆண்டுகளானாலும் அழியாததுயாராலும் அழிக்கவோதிருத்தம் செய்யவோஎதையும் கூட்டவோ குறைக்கவோ முடியாதது. இந்தப் பக்கத்தைத் திறந்து பார்க்க யார் விரும்பினாலும்  https://thamizhnatpu.blogspot என்று உள்ளீடு (TYPE) செய்து  "தேடுக" (SEARCH)  என்பதைச் சொடுக்கினால் ஐந்தாறு வரிகள்  உங்கள் முன் ஓடிவந்து நிற்கும். அதிலிருந்து "தமிழ் நட்பு" என்று காணப்படும்  வரியைச் சொடுக்குங்கள்.  அவ்வளவுதான் !   "தமிழ் நட்பு வலைப்பூப் பக்கம் " திறந்து கொள்ளும்.  அடுத்து  நீங்கள் விரும்பும் ஆளிநரின்  வாழ்க்கை வரலாற்றைப் படிக்கத் தொடங்கலாம் !


பஞ்சநதிக் குளத்தார் புரம் என்னும் கொடி !

நாகப்பட்டினம் மாவட்டம்வேதாரணியம் வட்டம், 123, வருவாய் ஊரகம் கடிநெல்வயல் என்னும் ஊரில் கீழக்காடு, பஞ்சநதிக் குளத்தார் புரத்தில்  வாழ்ந்து வந்தவர்கள் திரு.பிச்சையாத் தேவர் - சீதையம்மாள் இணையர். இவர்களது  மகன்கள் திரு க.பி.முருகையாத் தேவர் மற்றும் திரு க.பி.கந்தசாமித்  தேவர். பின்னாளில் திரு முருகையாத் தேவர் குடும்பம் அகத்தியன் பள்ளி அருகிலுள்ள  பயத்தவரன் காட்டுக்கும், திரு.க.பி.கந்தசாமித் தேவரின் குடும்பம் தகட்டூர், ஆதியன்காட்டுக்கும் இடம் பெயர்ந்தன.  திரு க.பி.முருகையாத் தேவருக்கு நான்கு பிள்ளைகள். இவர்களுள்  இரண்டாவது பிள்ளையே திரு.மு.சிங்காரவேலு !


தோற்றம்:

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரணியம் வட்டம், அகத்தியன் பள்ளியை அடுத்த பயத்தவரன்காடு என்னும் ரில்  வாழ்ந்து வந்த திரு.K.P.முருகையாத் தேவர்திருமதி.செல்லமணி அம்மையார் இணையரின் இரண்டாவது புதல்வராகத் தோன்றியவர் திரு.   மு.   சிங்காரவேலு.  1947 – ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 – ஆம் நாள்   (விய ஆண்டு, மாசி மாதம், 3 – ஆம் நாள் சனிக்கிழமை) இவர் பிறந்தார் !

 

பெற்றோர்:

கடிநெல்வயல் கீழக்காட்டில்  வாழ்ந்து வந்தவர்கள் திரு..பிச்சையாத் தேவர் திருமதி சீதா இணையர். பின்னாளில் இவர்கள் பயத்தவரன் காட்டுக்கு இடம் பெயர்ந்தனர்.  இவர்களது தலைமகனான திரு.முருகையன்  தொடக்கத்தில் காவல் துறையில் பணி புரிந்து, பின்பு இந்தப் பணியை விட்டு விலகி வேதாரணியம் தேவஸ்தான அலுவலகத்தில் பணிபுரியலானார். அடுத்து அரசுப் பணி வாய்ப்பு வந்த போது அதை ஏற்று வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளி அலுவலகத்தில் எழுத்தராக (CLERK) பணியில் சேர்ந்தார். அரசுப் பணி ஏற்ற பிறகு இவர் கருப்பம்புலம் தெற்குக் காட்டைச் சேர்ந்த திரு. கலிதீர்த்தா தேவர் அவர்களின் புதல்வி செல்வி செல்லமணியைத் திருமணம் செய்து கொண்டார் !

 

பிள்ளைகள்:

திரு.முருகையாத் தேவர்திருமதி செல்லமணி இணையருக்கு நான்கு ஆண் மகவும், இரண்டு பெண் மகவும் பிறந்தன. இவர்களில் மூத்தபிள்ளை  பெயர்  திரு.ருணாநிதி.  இரண்டாவது பிள்ளை திரு.சிங்காரவேலு; மூன்றாவது பிள்ளை திரு.சுந்தரமூர்த்தி; நான்காவது பிள்ளை திரு.குமரப்பா ! இரண்டு பெண் மக்களில் மூத்தவர் பெயர் மல்லிகா; இளையவர் பெயர் மலர்விழி !

 

தொடக்கக் கல்வி:

1952 – ஆம் ஆண்டு விசய தசமி நாளன்று கைகளில் ஓலைச் சுவடிகளுடன் புத்தாடை மணம் கமழ கருப்பம்புலம் நடுக்காட்டிலுள்ள திரு.P.V.தேவர் தொடக்கப்பள்ளியில் பெயர்ப் பதிவு செய்யப்பெற்று திரு.சிங்காரவேலு தனது கல்விப் பயணத்தைத் தொடங்கினார். தாய்வழிப் பெரியப்பா வீட்டிற்கு அருகிலேயே பள்ளிக்கூடம் இருந்தமையால், பள்ளி செல்வதற்கும் படிப்பில் முன்னணி பெறுவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தது !

 

பள்ளிக்கல்வி:

எட்டாம் வகுப்பு வரைத் தன் கல்வியுலாவைக் கருப்பம்புலத்தில் தொடர்ந்த திரு சிங்காரவேலு, சரியான ஆசிரியர் இன்மையால் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறமுடியாமற் போயிற்று. ஆகையால் அவரது தந்தை, திரு.சிங்காரவேலுவை, வேதாரணியத்தில் இருந்த அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்த்து அவரது படிப்பைத் தொடரச் செய்தார்.  8 – ஆம் வகுப்பிலிருந்து 11 – ஆம் வகுப்பு வரை வேதாரணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து தனது படிப்பை நிறைவு செய்த அவர், பள்ளி இறுதி வகுப்பான 11 –ஆம் வகுப்புத் தேர்வை 1965 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் எழுதித் தேர்ச்சி பெற்றார். அந்தக் காலத்தில் பள்ளிக் கல்வியானது 11 ஆண்டுப் படிப்பு உடையதாக இருந்தது. 11 ஆண்டுகள் படித்துத் தேர்ச்சி பெறுவோர்க்கு பள்ளியிறுதி வகுப்புத் தேர்ச்சி (S.S.L.C. PASS) என்று சான்றிதழ் வழங்கப்படும். SECONDARY SCHOOL LEAVING CERTIFICATE  என்பதன் சுருக்கமே S.S,L.C என்பது !


கல்லூரிக் கல்வி:

திரு. சிங்காரவேலு இளமையிலிருந்தே கருப்பம்புலம் தெற்குக் காட்டிலிருந்த தாய்வழித் தாத்தா திரு.கலிதீர்த்தா தேவருக்கு வளர்ப்புப் பிள்ளை போலவே வாழ்ந்து வந்தார். வேதாரணியத்தில் பள்ளியிறுதி வகுப்புப் படிப்பை நிறைவு செய்ததும், தன் பெயரனைக் கல்லூரியில் படிக்கவைக்க வேண்டும் என்று அவரது தாத்தா ஆசைப்பட்டார் !

 

வரது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, தந்தை திரு.K.P.முருகையாத் தேவர் அவர்கள் அதிராம்பட்டினம் காதர் முகைதீன் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பில் (PRE-UNIVERSITY COURSE) திரு. சிங்காரவேலுவைச் சேர்த்துவிட்டார்.  கல்லூரிக்கான படிப்புக் கட்டணம், விடுதிக்கான கட்டண முன்பணம்  ஆகியவற்றைச் செலுத்தி, மகனைக் கல்லூரி விடுதியில் விட்டுவிட்டு ஊருக்கு வந்து சேர்ந்தார் !

 

கல்லூரிப் படிப்பு இடைநிறுத்தம்:

திரு.சிங்காரவேலு 10 நாள் அளவுக்குத் தான் கல்லூரிக்குச் சென்றிருப்பார்; அந்த நிலையில் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்திருக்க மனமில்லாமல் படிப்பை அத்துடன் நிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிவிட்டார். பெயரனைக் கல்லூரியில் படிக்க வைக்க வேண்டும் என்னும் தாத்தாவின் கனவு அத்துடன் கலைந்து போயிற்று !

 

தாத்தாவும் பெயரனும்:

கல்லூரிப் படிப்பை இடைநிறுத்திவிட்டு ஊருக்குத் திரும்பிய திரு. சிங்காரவேலு கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தன் தாத்தாவுடனேயே அடிக்கடித் தங்கத் தொடங்கினார்.  அங்கிருந்த வேளாண் நிலங்களில் சாகுபடி வேலைகளையும், புகையிலைக் கொல்லையில் புகையிலை மற்றும் மிளகாய் சாகுபடியையும் கவனிப்பதில் தாத்தாவுக்கு உதவி செய்யலானார்.!

 

பெற்றோர் இடப்பெயர்வு:

திரு.சிங்காரவேலுவின் தந்தை வழித் தாத்தா திரு.பிச்சையாத் தேவர் தன் மனைவி மக்களுடன் தொடக்கத்தில் கடிநெல்வயலில் குடியிருந்ததாக முன்பத்தி ஒன்றில் சொல்லியிருக்கிறேன். அவருக்கு இரண்டு ஆண் மகவும் இரண்டு பெண் மகவும் பிறந்தன. அதன் பிறகே அவர்கள் அகத்தியன் பள்ளியை அடுத்த பயத்தவரன் காட்டில் குடியேறியதாக நினைக்கிறேன். அவரது இரு பிள்ளைகளில் மூத்தவரான திரு.முருகையாத் தேவர் திருமணம் செய்து கொண்டு பயத்த வரன் காட்டிலும், இளையவரான திரு.கந்தசாமி தகட்டூர், ஆதியன் காட்டிலும் தம் வாழ்விடத்தை அமைத்துக்கொண்டனர் !

 

பெண் மக்களில் மூத்தவரான செல்வி முல்லையம்பாள், தகட்டூர் ஆதியன்காடு ஆசிரியர் திரு.வெங்கடாசலத் தேவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். இளையவரான செல்வி பஞ்சவர்ணம் கடிநெல்வயல் திரு.சீ.சண்முக தேவரின் வாழ்க்கைத் துணைவியானார் !

 

கருணா ஆர்ட்ஸ் திரு.கருணாநிதி:

திரு.சிங்காரவேலு 1965 – ஆம் ஆண்டு தன் படிப்பை நிறுத்திய பிறகு கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தன் தாத்தாவுடன் அடிக்கடித் தங்கி வேளாண் பணிகளைக் கவனித்து வந்ததை முன்பத்தியொன்றில் சொல்லியிருக்கிறேன். அவரது அண்ணன் திரு.கருணாநிதிகருணா ஆர்ட்ஸ்என்னும் பெயரில் வேதாரணியத்தில் தனியாக வரைகலைத் தொழில் செய்து வந்தார். அவரது கைவிரல்களில் ஓவிய வரைகலையும், ஈர்ம (PAINTING) வரைகலையும் வாடகையின்றிக் குடியிருந்து வந்தன. ஃதன்றி சிறு அளவில் விளம்பரப் பலகைகள் தயாரித்து நிறுவும் ஒப்பந்தப் பணிகளையும் அவர் ஏற்று நடத்தி வந்தார்!

 

திருமண ஆயத்தப் பணி:

திரு.கருணாநிதி, திரு.சிங்காரவேலு இருவருக்கும் திருமணம் செய்து வைத்திட அவர்கள் தந்தை முயன்று வந்தார். திரு.கருணாநிதிக்கு, கருப்பம்புலம் திரு.சந்திரசேகரன் என்பவரது மகள் செல்வி இராஜத்தைப் பெண் கேட்டுச் சென்று, திருமணமும் முடிவாகியது. இந்த நிலையில் திருவெறும்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நான் பணிபுரிந்து வந்த காலத்தில், திருவெறும்பூர்  இருப்பூர்தி நிலையம் அருகில் குடியிருந்து வந்த என் வீட்டிற்கு திரு முருகையாத் தேவரும் அவரது மருமகன் திரு. சதாசிவ தேவரும் ஒருநாள் வருகை தந்து, திரு.சிங்காரவேலுக்கு என் தங்கை செல்வி சுமதியைப் பெண் கேட்டனர் !

 

திருமணம் முடிவாகியது:

முன்னறிவிப்பு ஏதுமின்றித் திடீரென்று வருகை தந்து பெண் கேட்டதால் நான் திணறிப் போனேன். இது நிகழ்ந்தது 1974 – ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதமாக இருக்கலாம் என்று கருதுகிறேன். வீட்டில் அம்மா, தங்கை, என் மனைவி மூவரையும் கலந்து பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று தெரிவித்து அவர்களை வழியனுப்பி வைத்தேன். பின்பு இரண்டொரு நாளில் மூவருடனும் கலந்து பேசி, திருமணத்திற்கு என் இசைவைக் கடிதம் மூலம் தெரிவித்தேன். திருமண நிச்சயதார்த்தம் 1974 – ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 – ஆம் நாள், நெடும்பலத்தில் என் மாமா வீட்டில் இனிது நடைபெற்றது !

 

சிங்காரவேலு – சுமதி திருமணம்:

நிச்சயதார்த்தம் நடந்து அடுத்த பத்தாம் நாள், அதாவது 1974-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், ஒன்றாம் தேதி திரு.சிங்காரவேலுசெல்வி சுமதி திருமணம் கருப்பம்புலத்தில் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. அதே நாளில் திரு.சிங்காரவேலுவின் அண்ணன் திரு.மு.கருணாநிதிசெல்வி இராஜம் ஆகியோரின் திருமணமும் அதே மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின் திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையர் இருவரும் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் தாத்தா திரு.கலிதீர்த்தா தேவர் பாதுகாப்பில் வாழ்ந்து வரலாயினர் !

 

சிங்காரவேலு – சுமதி இணையரின் குழந்தைகள்:

திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையருக்கு 1978 – ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 9 – ஆம் நாள் ( பிங்கள ஆண்டு, மாசி மாதம், 25 – ஆம் நாள், வியாழக்கிழமை) பெண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்தக் குழந்தைக்கு என் விருப்பப்படி கயல்விழி என்று பெயர் சூட்டப்பட்டது !

 

அடுத்ததாக இரண்டாண்டு இடைவெளியில், அதாவது, 1980 – ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9 – ஆம் நாள் நள்ளிரவு 1-00 மணிக்கு (ரௌத்திரி ஆண்டு, ஆடி மாதம், 25 – ஆம் நாள், சனிக்கிழமை) ஆண் குழந்தை பிறந்தது. இக்குழந்தைக்கு நெடுமாறன் என்று நான் பெயர் சூட்டினேன். ஆனால் பள்ளிப் பதிவுகளில் மணிமாறன் என்று பதிவாகியதால்மணிமாறன்என்னும் பெயரே நிலைபெற்று வழங்கி வருகிறது !

 

பெண் கயல்விழியின் திருமணம்:

பெண் குழந்தையான கயல்விழி வளர்ந்து 12 – ஆம் வகுப்பு வரைப் படித்த பின் மேற்படிப்புக்கு வெளியூருக்குச் செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்ததால், படித்தவரைப் போதும் என்று பெற்றோர் முடிவு செய்தனர். இந்த நிலையில் பஞ்சநதிக் குளம் நடுச்சேத்தியைச் சேர்ந்த திரு.இளவழகன் என்பவரது மகன் திரு.குலோத்துங்கன் என்பவருக்கு செல்வி கயல்வியை மணம் செய்து வைக்க பெற்றோரும், தந்தை வழித் தாத்தா குடும்பத்தினரும், தாய்மாமா என்ற முறையில் நானும் கலந்து முடிவு செய்தோம். இவர்கள் திருமணம் 2003 – ஆம் ஆண்டு சனவரி மாதம், 20 – ஆம் நாள் ஆயக்காரன்புலம் 2-ஆம் சேத்தி, வள்ளுவர் சாலை  காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது !

 

திரு.குலோத்துங்கன் அரியானா மாநிலத்தில் அம்பாலா என்னுமிடத்தில் ஒன்றிய அரசின் படைத்துறைக் காவல் பணியில் (MILITARY POLICE) பணி புரிந்து வருகிறார். திரு.குலோத்துங்கன்திருமதி கயல்விழி இணையருக்கு ஆகாஷ், அஜய்ராஜ் என இரு ஆண் மகவுகள் உள்ளனர். இவர்களில் திரு. ஆகாஷ் சென்னையில் பொறியியல் கல்லூரியொன்றில் நுட்பவியல் வாலை (B.TECH) படிப்பில் சேர்ந்து இரண்டாமாண்டுக் கல்வியைத் தொடர்ந்து வருகிறார். திரு.அஜய்ராஜ், நுட்பவியல் வாலை (B.TECH) படிப்பில் சேர ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறார் !

 

பிள்ளை மணிமாறன் படிப்பும் பணியும்:

திரு.சிங்காரவேலுதிருமதி சுமதி இணையரின் மகன் திரு.மணிமாறன், கருப்பம்புலம் வெங்கடசல தேவர் நினைவு அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்று பள்ளியிறுதி வகுப்பான 10 ஆம் வகுப்புத் தேர்வில் 500 –க்கு 405 மதிப்பெண்கள் (81%) பெற்று  பள்ளியிலேயே முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றார் ! அடுத்து நாகப்பட்டினம் வலிவலம் தேசிகர் பல்தொழிற் பயிற்சிக் கல்லூரியில் குளிர்பதனம் மற்று காற்றுப் பதனம் பட்டயப் படிப்பில் (DIPLOMA IN REFRIGERATION & AIR CONDITIONING) சேர்ந்து பயின்றார் !

 

பட்டயப் படிப்பு நிறைவடைந்த பின்பு, ஓசூரில் ஓரிரு நிறுவனங்களில்  ஓராண்டு காலம் அளவுக்குப் பணி புரிந்தார். அடுத்து கர்நாடக மாநிலம் அத்திப் பள்ளியை அடுத்த ஒரு இடத்தில் அமைந்துள்ள உடுவிடுதி (STAR HOTEL) ஒன்றில் பணி புரிந்து நிறைந்த அனுபவம் பெற்றார். இந்த அனுபவம் அவருக்கு  கோவா மாநிலத்தில் CLUB MAHENDRA என்னும் ஐயுடு விடுதியில் (5 STAR HOTEL) நல்ல பணியில் அமர உதவியது.!

 

ஓசூரில் இருக்கையில் வெளிநாடு செல்வதற்கான கடவுச் சீட்டினை திரு.மணிமாறனுக்கு வாங்கித் தந்திருந்தேன். கடவுச் சீட்டு இருந்தமையால், வளைகுடா நாடுகளில் அவருக்குப் பணி வாய்ப்புக் கிட்டியது. சவுதி, தமாம், துபாய் என அவரது பணியிடங்கள் மாறி மாறி அமைந்து இப்போது அபுதாபியில் THE RITZ-CARLTON என்னும் நிறுவனத்தில் முதன்மைப் பொறியாளராக (CHIEF ENGINEER)  பணி புரிந்து வருகிறார் !

 

மணிமாறன் – அமுதா திருமணம்:

திரு.மணிமாறனின் திருமணம் 2010 –ஆம் ஆண்டு மே மாதம், 23 – ஆம் நாள் நடைபெற்றது. கருப்பம்புலத்தைச் சேர்ந்த திரு. பன்னீர்ச்செல்வம், திருமதி சரோஜா இணையரின் மகள் அமுதா இவருக்கு வாழ்க்கைத் துணைவியானார். அமுதா  1985 –ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், 9 –ஆம் நாள், வெள்ளிக்கிழமை (குரோதன ஆண்டு, ஆடிமாதம், 25 – ஆம் தேதி) பிறந்தவர் ! இவர்  இப்போது ஆயக்காரன்புலம் அரசு ஆடவர் மேனிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார் !

 

மணிமாறன்- அமுதா இணையரின் குழந்தைகள்:

திரு. மணிமாறன்திருமதி அமுதா இணையருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இருவருள் மூத்த பெண்ணின் பெயர் வேதிகா. இவர் 2011 –ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், 13 – ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை (விக்ருதி ஆண்டு, மாசி மாதம், 1- ஆம் நாள்) பிறந்தார் !

 

இரண்டாவது பெண் இலக்ஷனா, 2014 – ஆம் ஆண்டு, சூன் மாதம், 23 – ஆம் நாள் திங்கள் கிழமை (ஜய ஆண்டு, ஆனி மாதம், 9 – ஆம் நாள்) இவர் பிறந்தார். இருவரும், கருப்பம்புலத்தை அடுத்த குரவப் புலத்தில் இயங்கி வரும் POINT CALIMERE INTERNATIONAL SCHOOl என்னும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டப் பள்ளியில் பயின்று வருகின்றனர் !

 

வேதிகா 7 – ஆம் வகுப்பிலும், இலக்‌ஷனா 3 – ஆம் வகுப்பிலும் ஆங்கில வழிக் கல்வி பயின்று வருகின்றனர். படிப்பில் இருவரும் படுசுட்டி என்பது இப்போதே நன்கு தெரிகிறது ! இருவருக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது !


இன்பத்தைத் தொடர்ந்து வந்த  துன்பம்:

திரு.சிங்காரவேலு அவர்களின்  அண்ணன் திரு. மு.கருணாநிதி தனது 60 -ஆம் அகவையில் (01-03-1945 - 29-09-2004) 2004 -ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 29 -ஆம் நாள்  மறைந்து போனார். அவர் மனைவி திருமதி இராஜமும் கடந்த ஆண்டு தனது 67 -ஆம் அகவையில் (10-05-1954 - 22-12-2020) மறைந்தார். திரு.சிங்காரவேலுவின்  தந்தையார் திரு.K.P.முருகையாத் தேவர் 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 20 –ஆம் நாள்  அன்று அகவை முதிர்வின் காரணமாக இப்பூவுலக வாழ்வை நீத்தார்!

 

தாயார் திருமதி செல்லமணி அம்மையாரும் கணவர் மறைந்த ஓராண்டுக் காலத்தில் அதாவது 2008 -ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29 -ஆம் நாள் (வைகாசி, 11) கண்களை மூடி நிரந்தரமாக உறங்கிப் போனார். திரு.சிங்காரவேலு அவர்களின் தம்பி,  திரு.குமரப்பா, ஓய்வு பெற்ற ஆசிரியர் 2019 – ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம், 24- ஆம் நாள் மீளாத் துயிலில் ஆழ்ந்தார் ! நேற்று இருந்தவர் இன்று இல்லை என்னும் பெருமை படைத்தது அல்லவா இவ்வுலகு !

 

திரு.சிங்காரவேலு அவர்களின் உடன்பிறப்புகள்:

திரு.சிங்காரவேலு அவர்களின் தம்பி திரு,சுந்தரமூர்த்தி மன்னார்குடியில் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். மூத்த தங்கை திருமதி மல்லிகா, கடிநெல்வயலில் தன் கணவர் திரு. சதாசிவ தேவர், அத்தை திருமதி பஞ்சவர்ணம் அம்மையார், மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார். இளைய தங்கை மலர்விழி, பஞ்சநதிக் குளத்தில் தன் கணவர் திரு. சிவராமன் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து வருகிறார் !

 

முடிவுரை:

தன் மகன் திரு.மணிமாறன் அபுதாபியில் பணிபுரிவதால், திரு.சிங்காரவேலு அவர்கள் தன் மனைவி திருமதி சுமதி, மருமகள் திருமதி அமுதா, பெயர்த்திகள் செல்வி வேதிகா, செல்வி இலக்ஷனா ஆகியோருடன் கருப்பம்புலம் தெற்குக் காட்டில் நலமுடன் அமைதியாக  வாழ்ந்து வருகிறார். அவரும் அவர் இல்லத்தினரும் அனைத்து வளங்களும் பெற்று நீடூழி  வாழ உளமார வாழ்த்துவோம் !


-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(vedarethinam76@gmail.com)

ஆட்சியர்,

“தமிழ் நட்பு” வலைப்பூ,

[வள்ளுவராண்டு: 2053, கடகம் (ஆடி) 29]

{14-08-2022}

-------------------------------------------------------------------------------------

மு. சிங்காரவேலு - வை.சுமதி.
(படம் எடுத்த ஆண்டு: 1974)

தாத்தாவும் பெயர்த்தியும்.
(
படம் எடுத்த நாள்: 22-6-2011)

முசிங்காரவேலுத் தேவர்
(
படம் எடுத்த நாள்: 9-7-2022)



சி. சுமதி 
(
படம் எடுத்த நாள்: 22-6-2011)

சி.சுமதி சிங்காரவேலு
(
படம் எடுத்த நாள்: 8-1-2018 )

சி.சுமதி சிங்காரவேலு 
(
படம் எடுத்த நாள்: 9-7-2022 )




சி. மணிமாறன் சிங்காரவேலு 




ம.அமுதா மணிமாறன்
(படம் எடுத்த நாள்: 8-1-2018)



K.P.முருகையாத் தேவர்.
(மறைவு நாள்:20-4-2007)



மணிமாறன், அமுதா, வேதிகா, இலக்‌ஷனா